Published:Updated:

மெட்ரோ ரயில் நிலையங்கள்... தனியார்மயமும் அதன் தாக்கங்களும்!

ஆ.பழனியப்பன்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (சி.எம்.ஆர்.எல்) பல்வேறு பணிகளைத் தனியாரிடம் கொடுக்கும் வேலையைப் படிப்படியாகச் செய்துவருகிறது. தற்போது மெட்ரோ ரயில்நிலையங்களை நிர்வகிக்கும் பணியிலிருந்து நிரந்தர ஊழியர்கள் கழற்றிவிடப்பட்டு, தனியார் நிறுவன ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

Chennai Metro Rail
Chennai Metro Rail

சென்னை சென்டரல் முதல் திருமங்கலம் வரையிலான அண்ணா நகர் டவர், பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், நேரு பூங்கா உள்ளிட்ட ஆறு மெட்ரோ ரயில்நிலையங்களில் நிலையத்தை இயக்கும் பணி தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.

Metro Rail
Metro Rail

இது குறித்து நம்மிடம் சி.எம்.ஆர்.எல் ஊழியர்கள் சிலர் பேசினர். “ஏற்கெனவே ரயில் ஓட்டுநர் பணிகளைத் தனியாருக்குக் கொடுத்துவிட்டார்கள். பயிற்சியில்லாத நபர்களைவைத்து ரயில்களை இயக்கினார்கள். அதனால் ரயில்கள் பழுதாகி நின்றன. அப்போது ‘ஸ்டேஷன் இன்சார்ஜ்’ பணியில் இருந்த நிரந்தர ஊழியர்கள்தான் உதவிசெய்தார்கள்.

ரயில் ஓட்டுநர் பணி தனியாருக்குக் கொடுக்கப்பட்ட பிறகு, ‘ஸ்டேஷன் இன்சார்ஜ்’ பணியில் மட்டுமே நிரந்தர ஊழியர்கள் இருந்தனர். இப்போது அதையும் காலிசெய்துவிட்டார்கள். இனிமேல் அந்த இடத்தில், ‘ஸ்டேஷன் இன்சார்ஜ்’ என்ற பெயரில் தற்காலிகப் பணியாளர்கள் இருப்பார்கள். இந்தியாவில் வேறு எந்த மெட்ரோ ரயிலிலும் நடக்காத வகையில், நிரந்தரப் பணிகளில் தனியார் ஊழியர்களை நியமிக்கிறார்கள்.

chennai metro rail
chennai metro rail
சென்னை மெட்ரோ ரயில் - அறிந்ததும் அறியாததும்!

நிரந்தரப் பணியாளர்கள் அனைவரும் பல மாதங்கள் டெல்லியில் போய் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு இங்கு பணியமர்த்தப்பட்டார்கள். ஆனால், எவ்வித அனுபமும், உரிய பயிற்சிகளும் இல்லாத தனியார் ஊழியர்களை வைத்து இனி ரயில் நிலையங்களை இயக்கப்போகிறார்கள். இது, மிகவும் ஆபத்தானது. இதனால் விபத்துகள் நிகழுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

மேலும் இதே பணிக்கு 2016-ம் ஆண்டு 41 காலிப் பணியிட அறிவிப்பை வெளியிட்டு தேர்வுசெய்யப்பட்டவர்களை நியமிக்காமல், அவசரகதியில் தனியார் ஊழியர்களை நியமிக்கிறார்கள். இதில் சமூகநீதியும் கிடையாது. தனியார் ஊழியர்கள் கொத்தடிமைகளைப்போல வேலைவாங்கப்படுவார்கள்” என்று எச்சரித்தனர்.

Metro rail
Metro rail

இதுகுறித்து சி.எம்.ஆர்.எல் அதிகாரிகளிடம் கேட்டபோது, “‘ஆபரேஷன்ஸ்’ பணிகளை முழுமையாகத் தனியாரிடம் கொடுக்கவில்லை. நிலையப் பொறுப்பாளர் பணிக்கு, தனியார் நிறுவன ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருமங்கலம் முதல் சென்னை சென்ட்ரல் வரை ஆறு மெட்ரோ நிலையங்களில் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில், மேலும் 10 மெட்ரோ நிலையங்களில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த நிலையப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

அவர்களுக்கு விரிவான பயிற்சிகள் அளிக்கப்படும். பணி வழங்குவதற்கு முன்பாக உரிய சோதனைகள் நடத்தப்பட்டு, அதன் பிறகே அவர்களுக்குச் சான்றிதழ் அளிக்கப்பட்டு, அதன் பிறகு அவர்களுக்குப் பணி வழங்கப்படும். மொத்தம் 32 நிலையங்கள் உள்ளன. அவற்றில் 16 நிலையங்களைத் தனியார் நிறுவன ஊழியர்கள் இயக்குவார்கள். அவர்கள் ‘ஸ்டேஷன் இன்சார்ஜ்’ என்று குறிப்பிடப்படுவார்கள். தற்போது ‘ஸ்டேஷன் கன்ட்ரோலர்’ எனப்படும் நிரந்தர ஊழியர்கள் செய்துவரும் அதே பணிகளை இவர்கள் மேற்கொள்வார்கள்.

`அவர்களால் மக்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லை; பயிற்சியும் இல்லை!’-தனியார்மயமாக்கப்படுகிறதா மெட்ரோ?

தற்போது ‘ஸ்டேஷன் கன்ட்ரோலர்’ தவிர, மற்ற ஊழியர்கள் அனைவரும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களே. பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கும் நோக்கம், செலவுகளைக் குறைப்பதுதான். ‘ஸ்டேஷன் கன்ட்ரோலர்’ எனப்படும் நிரந்தர ஊழியரின் மாதச் சம்பளம் ரூ.45,000-ரூ.50,000. அதே பணியை மேற்கொள்ளும் ‘ஸ்டேஷன் இன்சார்ஜ்’ என்கிற தனியார் ஊழியரின் மாதச்சம்பளம் ரூ.22,000-ரூ.25,000. மேலும், நிரந்தர ஊழியர்கள் தங்கள் பணி குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களுக்கு மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேறு பணிகள் வழங்கப்படும்” என்றனர்.

ஏற்கெனவே ஓட்டுநர் பணி தனியாருக்குக் கொடுக்கப்பட்டபோது, அதை எதிர்த்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.