Published:Updated:

`முப்படைகளுக்கும் ஒரே தளபதி'- கோரிக்கை முதல் செயல்பாடு வரை நடந்த பின்னணி!

முப்படைகளுக்கும் ஒரே தளபதி
முப்படைகளுக்கும் ஒரே தளபதி

முப்படைகளுக்கும் ஒரே தளபதி உருவாக்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். தற்போது அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. முப்படைகளுக்கும் ஒரு தளபதி என்றால் என்ன என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

ஓய்வு பெறவிருக்கிற ராணுவத் தளபதி பிபின் ராவத், புதிதாக உருவாக்கப்படவுள்ள முப்படைத் தளபதி (Chief of Defence Staff - CDS) பொறுப்புக்கு நியமிக்கப்பட இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. முப்படைத் தளபதி என்றால் என்ன? ராணுவத் தலைமை எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பார்ப்போம்.

`முப்படைகளுக்கும் ஒரே தளபதி (Chief of Defence Staff - CDS) என்கிற பதவி உருவாக்கப்படும் எனப் பிரதமர் மோடி தன்னுடைய சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார். பிரதமரின் இந்த அறிவிப்பு, முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.

மோடி
மோடி
Police warned a young boy and his family over a theft case! |Crime

நீண்டகாலத்துக்குப் பிறகு பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் முக்கியமான மாற்றமாக இது உள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிக்கையில், காங்கிரஸ் கட்சியும் CDS உருவாக்கப்படும் என அறிவித்திருந்தது. பிரதமரின் சுதந்திர தின அறிவிப்பை, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்ட பிரதான காங்கிரஸ் கட்சித் தலைவர்களுமே வரவேற்றிருந்தனர்.

முப்படைகளுக்கும் ஒரே தளபதி கோரிக்கை எப்படி வந்தது?

கார்கில் போருக்குப் பிறகு, பாதுகாப்புத்துறையில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆராய, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அரசால் கே.சுப்ரமணியன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், `முப்படைகளுக்கும் ஒரே தளபதி' உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சுப்ரமணியன் கமிட்டியின் பரிந்துரைகளை ஆராய, பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி தலைமையில் அமைச்சர்கள் குழு அப்போது உருவாக்கப்பட்டது.

கார்கில்
கார்கில்

`CDS உருவாக்குவது தொடர்பான விஷயத்தை, அனைத்து அரசியல் கட்சிகளையும் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்தை உருவாக்கிய பின், பார்த்துக்கொள்ளலாம்' என அப்போது அமைச்சர்கள் குழு தெரிவித்திருந்தது. அதன் பின்னர் பாதுகாப்புத்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட நரேஷ் சந்திரா கமிட்டி மற்றும் ஷேகட்கர் கமிட்டி `முப்படைகளுக்கும் ஒரே தளபதி’ உருவாக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியிருந்தது.

இருப்பினும், CDS உருவாக்கம் தொடர்பாகப் பலமுறை விவாதிக்கப்பட்டிருந்தாலும், அரசியல் கட்சிகளிடையே இது தொடர்பாக ஒருமித்த கருத்து எட்ட முடியவில்லை என்பதால் அது செயல்வடிவம் பெறாமலே இருந்துவந்தது. பிரதமர் மோடியின் அறிவிப்பு, இதுதொடர்பான விவாதங்களை மீண்டும் உருவாக்கியது.

கார்கில் போர் சமயத்தில் உளவுத்துறையின் தோல்வியால் தொடக்கத்தில் இந்தியப் படைகள் பின்னடைவைச் சந்தித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் தொடர்ச்சியாக பாதுகாப்புப் படைகளில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களுக்காக கே.சுப்ரமணியன் கமிட்டி அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

சுப்ரமணியன் கமிட்டி பரிந்துரைகளில் மிகவும் முதன்மையானது `முப்படைகளுக்கும் ஒரே தளபதி (Chief of Defence Staff - CDS)’ உருவாக்குவது. தற்போது ராணுவம், கடற்படை, விமானப்படைக்கு ஆகிய முப்படைக்கும் தனித்தனியான தளபதி உண்டு.

பாதுகாப்பு படைகள்
பாதுகாப்பு படைகள்

தற்போது வரை இவர்களை உள்ளடக்கி ’Chiefs of Staff Committee’ என்கிற வாரியம் செயல்படும். இதில் மூன்று படைத் தளபதிகளும் உறுப்பினராக இருப்பர். மூவருள் பணியில் மூத்தவர் ஓய்வுபெறுகிற காலம்வரையில் அந்த வாரியத்தின் தலைவராக (Chief of Army Staff - COAS) இருப்பார். தேவைக்கேற்ப முப்படைகளுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தின் மூலம் முடிவுகள் எடுக்கப்பட்டு உத்தரவுகள் வழங்கப்படும். முப்படைத் தளபதி பதவியை உருவாக்க பாதுகாப்பு விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான குழு இதற்கான பணிகளை வடிவமைக்க உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது முப்படைகளுக்கும் ஒரே தளபதி உருவாக்கப்படுவதன் மூலம் முப்படைத் தனித்தளபதிகளின் நிலையில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை. முப்படைத் தளபதி என்பது புதிதாக உருவாக்கப்படும். மற்ற மூன்று தளபதிகளும் அப்படியேதான் இருப்பர். 'முப்படைத் தளபதி' இவர்களுக்கு மேலான நிலையில் இருப்பார். முப்படைகளுக்கும் தொடர்புப் புள்ளியாக அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைத்து, அரசுக்கும் பிரதமருக்கும் பாதுகாப்பு, போர் தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதில் முதன்மையானவராக இருப்பார். முப்படைத் தளபதி நான்கு ஸ்டார் அந்தஸ்தில் இருப்பார். ராணுவத்தின் உயரிய பதவியான ஃபீல்ட் மார்ஷல் (ஐந்து ஸ்டார் அந்தஸ்து கொண்டது). அதற்கு அடுத்த நிலையிலான பதவி இது.

அடுத்த கட்டுரைக்கு