Published:Updated:

“அமைச்சர் வேலுமணி பிடியில் கோவை தி.மு.க!”

அமைச்சர் வேலுமணி
பிரீமியம் ஸ்டோரி
News
அமைச்சர் வேலுமணி

உஷ்ணத்தில் உடன்பிறப்புகள்

‘‘கொங்கு மண்டலத்தில் தவறிழைத்தோர்மீது கடும் நடவடிக்கை எடுப்பேன். எவராவது சிபாரிசுக்கு வந்தால் அவர்கள்மீதும் நடவடிக்கை பாயும்’’ - சமீபத்தில் நடைபெற்ற தி.மு.க செயற்குழுவில், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கொதிப்புடன் உமிழ்ந்த வார்த்தைகள் இவை.

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பிடிக்க முடியாததற்கு, கொங்கு மண்டலத்தில் ஏற்பட்ட தோல்விதான் காரணம். இடையில் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்ற நிலையில், அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது தி.மு.கழகம். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அந்தக் கட்சிக்கு கொங்கு மண்டலத்தில் பின்னடைவு ஏற்பட்டிருப்பது அறிவாலயத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

இதுகுறித்து நம்மிடம் பேசினார்கள் கோவையைச் சேர்ந்த தி.மு.க உடன்பிறப்புகள் சிலர். “கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க பிரமுகர்களுக்கு ஸ்லீப்பர் செல்களாக வேலைபார்த்தது, சொந்த கட்சியினருக்கு எதிராக வேலைபார்த்தது, தேர்தலில் போட்டியிட குதிரைபேரம் நடத்தியது... என ஏராளமான புகார்கள் எழுந்தன. உச்சக்கட்டமாக, ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட, கட்சிக்காரர் ஒருவரிடம் ஒன்றியச் செயலாளர் தரப்பு 30 லட்சம் ரூபாய் கேட்ட ஆடியோவும் வெளியானது. அதில், கோவை புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், தலைமை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதனால், கோவை தி.மு.க-வில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உடன்பிறப்புகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. புகார் சொல்லப்பட்ட எந்த நிர்வாகியும் மாற்றப்படவில்லை. மாறாக, மாநகர் மாவட்டத்தை மாநகர் கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு ஸ்டாலின் கள ஆய்வு செய்த பிறகு, மாநகர் தெற்கு, வடக்கு என்றிருந்ததை ஒன்றிணைத்து கோவை மாநகர் மாவட்டமாக மாற்றினார். அப்போது, மாநகர் தெற்கு மாவட்டப் பொறுப் பாளராக இருந்த நா.கார்த்திக் வசமே முழு மாநகரப் பொறுப்பும் சென்றது. இப்போது மீண்டும் கோவை மாநகர் மாவட்டம் கிழக்கு, மேற்கு என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக முத்துசாமி நியமிக்கப் பட்டுள்ளார். இவர் 2018-ல் கலைக்கப்பட்ட மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப் பாளராக இருந்தவர் என்பதுதான் அதிருப்திக்குக் காரணம்’’ என்றவர்கள் தி.மு.க பிரமுகர்கள் அமைச்சரின் கைப்பிடிக் குள் இருப்பதையும் பகிர்ந்து கொண்டனர்.

கார்த்திக் - முத்துசாமி - தென்றல் செல்வராஜ்
கார்த்திக் - முத்துசாமி - தென்றல் செல்வராஜ்

‘‘கோவை தி.மு.க-வில் ஏற்கெனவே அமைச்சர் வேலுமணியின் ஸ்லீப்பர் செல்கள் ஏராளமானோர் பரவிக் கிடக்கின்றனர். அ.தி.மு.க அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்றில், கட்சி நிர்வாகி ஒருவரே அமைச்சருக்கு ஆதரவாக பகிரங்கமாகப் பேசினார். தி.மு.க வாட்ஸப் குழுக்களில் நடைபெறும் உரையாடல்களை ‘ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து, அதை அமைச்சர் தரப்பினருக்கு அனுப்பி விடுகின்றனர். இன்னொரு பக்கம் சாதி அரசியலின் ஆதிக்கமும் அதிகமாகிவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போதுகூட கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த எவரும் பொறுப்பில் இல்லை என்பதாலேயே முத்துசாமிக்குப் பதவி கொடுத்துள்ளனர். அதையும் முறையாகச் செய்யவில்லை. கார்த்திக்கு 71 வார்டுகளும், முத்துசாமிக்கு 29 வார்டுகளும் பிரித்துக் கொடுத்துள்ளனர். 29 வார்டுகளுக்கு எதற்காக தனி மாவட்டம்? அதையாவது சரியாகப் பிரித்தார்களா என்றால் அதுவும் இல்லை. முத்துசாமி குடியிருக்கும் தொண்டாமுத்தூர் தொகுதி கார்த்திக் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமைச்சர் வேலுமணிக்கும் கார்த்திக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு உள்ள நிலையில், எதற்காக இப்படிப் பிரித்தார்கள் எனத் தெரியவில்லை. தி.மு.க-வுக்கு இது மேலும் பின்னடைவைத் தான் ஏற்படுத்தும்’’ என்றனர் தி.மு.க தொண்டர்கள்.

அமைச்சர் வேலுமணி
அமைச்சர் வேலுமணி

‘இவற்றையெல்லாம் சரிசெய்யாமல் எத்தனை பிரஷாந்த் கிஷோர் வந்தாலும் கோவையில் தி.மு.க-வால் புத்துயிர் பெற முடியாது’ என்பதுதான் உடன்பிறப்புகளின் உள்ளக்குமுறல்.

‘‘கனவிலும் நடக்காது!’’

சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளருமான நா.கார்த்திக்கிடம் பேசியபோது, ‘‘தலைமை எடுத்த முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். தி.மு.க என்பது, சாதி-மதத்துக்கு அப்பாற்பட்ட இயக்கம். அமைச்சர் வேலுமணியின் முறைகேடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்திவருகிறேன். உளவியல்ரீதியாக என்னைத் தாக்கவே இப்படி தவறான செய்தியைப் பரப்பிக்கொண்டிருக்கின்றனர். அதைப் பற்றியெல்லாம் நான் கண்டுகொள்ள மாட்டேன். மத்தியில் பி.ஜே.பி-யும் மாநிலத்தில் அ.தி.மு.க-வும்தான் எங்களின் எதிரிகள். அ.தி.மு.க-வுடன் சமரசம் என்பதெல்லாம் கனவிலும் நடக்காத காரியம்’’ என்றார்.

கோவை புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், ‘‘அந்த ஆடியோ ஒரு விஷயமே அல்ல. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறோம். எங்கள் செயல்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதற்காக சிலர் அவதூறுகளைப் பரப்புகிறார்கள்” என்றார்.