Published:Updated:

`அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் கோரிக்கையை ஏற்கத்தயார்!’ - காங்கிரஸ் புதிய திட்டம்

கலிலுல்லா.ச

`கர்நாடக காங்கிரஸிலிருக்கும் அதிருப்தி எம்.எல்,ஏ-க்களின் கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றத்தயார்’ எனக் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

சிவகுமார்
சிவகுமார் ( ANI )

கர்நாடகா காங்கிரஸில் உச்சக்கட்ட குழப்பம் நிலவியது. அங்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வர் குமாரசாமிக்கு எதிராக 12 எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷிடம் தங்கள் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர். சபாநாயகர் கடிதத்தை ஏற்கவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தை நாடினர். பின்னர் சபாநாயகர் ராஜினாமா கடிதம் குறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.

நாகராஜ்
நாகராஜ்
ANI

இதனிடையே அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஈட்டுபட்டு வந்தனர். அவர்கள் முயற்சியின் விளைவாக ராஜினாமா கடிதம் அளித்த 16 எம்.எல்.ஏ-க்களில் ஒருவர் மட்டும், தான் தொடர்ந்து காங்கிரஸில் இருக்க விரும்புவதாகவும் தன் ராஜினாமாவைத் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.டி.பி நாகராஜன் என்பவர்தான் தன் ராஜினாமா அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவகுமார் நாகராஜன் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன் முடிவில்தான் தன் ராஜினாமா அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார் நாகராஜன். இந்தநிலையில் கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சிவகுமார், எம்.எல்.ஏ-க்கள் கோரிக்கையை ஏற்கத் தயார் என்று அறிவித்திருக்கிறார். இதுகுறித்துப்பேசிய சிவக்குமார்,``அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் கோரிக்கையை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்கள் இந்த ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும். சட்டம் தெளிவாகக் கூறியிருக்கிறது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் காங்கிரஸூக்கு எதிராக அவர்கள் வாக்களித்தால், சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிடுவார்கள். எம்.எல்.ஏ-க்கள் மீது எனக்கு நம்பிக்கையுள்ளது.

நாகராஜ் எம்.எல்.ஏ
நாகராஜ் எம்.எல்.ஏ
ANI

அவர்கள் காங்கிரஸிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள், அவர்கள் நீண்டநாள்களுக்கு இங்கே இருப்பார்கள். களத்தில் சிங்கத்தைப்போல செயல்படுவார்கள். நல்லது நடக்கும் என நம்புகிறேன். நாங்கள் திறந்த மனதுடன் அவர்கள் கூறுவதைக் கேட்க உள்ளோம். அவர்கள் எங்கள் ஆட்கள். நிச்சயமாக ஏதோ ஒரு புள்ளியில் உண்மையை உணர்ந்து அவர்கள் திரும்ப வருவார்கள்” என்றார்.