Published:Updated:

அயோத்தி தீர்ப்பு... தி.மு.க வரவேற்றதா... ஏற்றுக் கொண்டதா? சர்ச்சையாகும் ஸ்டாலின் அறிக்கை!

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கை, இந்துக்களின் வாக்குகளைப் பெறும் முயற்சியா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

அயோத்தி வழக்கு
அயோத்தி வழக்கு

பல ஆண்டுகளாக நடந்துவந்த, அயோத்தி வழக்கில் 'சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம்' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உட்பட ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் கடந்த சனிக்கிழமையன்று தீர்ப்பளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் அதிக நாள்கள் விசாரணைக்கு உட்படுத்தபட்ட இரண்டாவது வழக்காக அயோத்தி வழக்கு இருந்துள்ளது.

கேசவானந்த பாரதி வழக்குதான் இதுவரையில் நடந்த நீதிமன்ற விசாரணைகளிலேயே அதிகமான நாள்கள் விசாரிக்கப்பட்டு வந்த வழக்காக இருந்தது. இதற்கு அடுத்தபடியாக நாடே எதிர்பார்த்த முக்கிய வழக்காக இருந்த அயோத்தி வழக்கு 40 வேலை நாள்களில் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு அதன் பின்னர் தீர்ப்பு வெளிவந்த வழக்காக இருக்கிறது.

அயோத்தி வழக்கு
அயோத்தி வழக்கு

இந்தத் தீர்ப்புக்கு ஆதரவுக்குரல்களும் எதிர்ப்புக்குரல்களும் ஒருசேர எழுந்தன. தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க ஆகிய கட்சிகள் தீர்ப்பை வரவேற்காவிட்டாலும் ஏற்றுக் கொண்டுள்ளன. வி.சி.க, நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சியினர் தீர்ப்புக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் இந்தத் தீர்ப்பை ஏற்கும் விதத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஸ்டாலினின் அறிக்கை குறித்து பலர் தங்களுடைய அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர்.

இந்தத் தீர்ப்பு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. அரசியல் சாசன சட்டத்தின் படி வெளியான தீர்ப்பாக அல்லாமல் மத சாஸ்திரங்களின் அடிப்படையில் வெளியான தீர்ப்பாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.
தொல்.திருமாவளவன்.

ஸ்டாலினின் அறிக்கை குறித்து, பத்திரிகையாளர் ஆர்.கே ராதாகிருஷ்ணன் பேசும்போது,

''அயோத்தி தீர்ப்பு தொடர்பான ஸ்டாலின் அறிக்கையை முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காமல் வெளியிடப்பட்ட அறிக்கையாகவே பார்க்கவேண்டியுள்ளது. பள்ளிவாசல் கட்டிக்கொள்ள அனுமதி கேட்டோ அல்லது அதற்கு நிலம் கேட்டோ உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம் தரப்பினர் மேல்முறையீடு செய்யவில்லை. மாறாக எந்த இடம் சர்ச்சைக்குரிய இடமாக இருக்கிறதோ அந்த நிலம் தங்களுக்குச் சொந்தமான நிலம் என்று கூறியே மேல்முறையீடு செய்தனர். இப்படி இருக்கும்போது முஸ்லிம்களின் வாக்குகளை நம்பி இருக்கக்கூடிய தி.மு.க, முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குறைந்தபட்சம் தீர்ப்பில் உள்ள சில பிழைகளையாவது தி.மு.க குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கலாம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி தவிர்த்து மற்ற முக்கியமான எந்தக் கட்சியும் முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து அறிக்கை வெளியிடவில்லை. இந்தத் தீர்ப்பை வரவேற்பதன் மூலமாக தி.மு.க இந்துக்களின் வாக்குகளைப் பெற முயற்சி செய்வதாகத் தெரிகிறது.

தி.மு.க மட்டுமல்ல; காங்கிரஸ் கட்சியும் இந்தத் தீர்ப்பை வரவேற்று இருக்கிறது. கேரளாவில் சபரிமலை விஷயத்தில் காங்கிரஸ் கட்சி நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகச் செயல்பட்டது. இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு இங்கே தி.மு.க முயற்சி செய்வது போல கேரளாவில் காங்கிரஸ் முயற்சி செய்தது. சபரிமலை தீர்ப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் பா.ஜ.கவுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதே அளவிலான பங்கு காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கிறது.

1992 டிசம்பர் 6 -ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது ஆட்சியில் காங்கிரஸ் கட்சி இருந்தது. ஆனால், பாபர் மசூதி இடிப்பைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் இருந்த காங்கிரஸ் அதைச் செய்யவில்லை.

இந்த விஷயத்தில் பிரச்னையைப் பெரிதாக்க தி.மு.க விரும்பாமல்தான் தீர்ப்பை ஏற்றிருக்கிறது என்கிறார்கள். நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் ஏற்றுதான் ஆகவேண்டும். ஆனால் ஏற்பது வேறு; அதை முழுவதுமாக அங்கீகரிப்பது வேறு. நீதிமன்றத் தீர்ப்பில் உள்நோக்கம் கற்பிப்பதுதான் தவறே ஒழிய, தீர்ப்பில் இருக்கக்கூடிய பிழைகளைச் சுட்டிக்காட்டுவது தவறில்லை. அவர் வெளியிட்ட அறிக்கையில் குறைந்த பட்சம் அந்தத் தீர்ப்பின் குறைகளையாவது சுட்டிக் காட்டியிருக்கலாம். அதை ஸ்டாலின் செய்யாமல் தவிர்த்ததை இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சியாகவே பார்க்க முடிகிறது'' என்றார்.

இதுகுறித்து, வி.சி.க பொதுச்செயலாளர் வன்னி அரசிடம் பேசினோம்...

"பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது முஸ்லிம்களுக்கு இருந்த மன வேதனையைக் காட்டிலும் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பெரும் மனவேதனையை அளித்திருக்கிறது. இந்தச் சூழலில் தி.மு.க இந்தத் தீர்ப்பை வரவேற்றிருப்பது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது.

வன்னி அரசு
வன்னி அரசு

இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, இந்த விவகாரத்தில் தி.மு.க பின்வாங்கியிருப்பதாக நான் கருதவில்லை. தி.மு.கவை இந்துக்களுக்கு எதிரான கட்சியாக அடையாளப்படுத்த பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகள் தொடர்ந்து முயன்று வருகின்றன.

அந்தத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் இம்மாதிரியான முடிவுகளை எடுத்துவிட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனால் வி.சி.க இந்தத் தீர்ப்பு வெளிவந்த சில நிமிடங்களில் தீர்ப்பின் பிழைகளைச் சுட்டிக் காட்டியது. தி.மு.கவின் அறிக்கைக்கு மாற்றாகத்தான் எங்களுடைய அறிக்கை இருந்தது. இந்த விவகாரத்தில் முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை'' என்றார்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > https://bit.ly/2KccySR

காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸிடம் பேசினோம்...

``ஒரு தீர்ப்பை ஏற்றுக்கொள்வதற்கும் அதை வரவேற்பதற்கும் வேறுபாடு உள்ளது. இந்தத் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது. ஆனால் வரவேற்கவில்லை. இந்த நாட்டின் மேன்மையான உறுதியான இறுதியான தீர்ப்பை வழங்கும் இடத்தில் இருக்கக் கூடிய உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கும் பொழுது அந்தத் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்வதை போல மக்களும் ஏற்கவேண்டும் என்றே வலியுறுத்தியுள்ளோம்.

ஏதாவது ஒரு கட்டத்தில் நாம் கடந்த காலத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும். அந்த வாய்ப்பை உச்சநீதிமன்றம் உருவாக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. இந்த நாட்டில் முஸ்லிம்கள் பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். சச்சார் கமிட்டியின் அறிக்கையின் படி பட்டியலின மக்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் முஸ்லிம்கள் இருக்கின்றனர். அதிலிருந்து எவ்வாறு மீண்டு வரலாம் என்பதைப் பற்றியெல்லாம் முஸ்லிம்களைச் சிந்திக்க விடாமல் இது மாதிரியான பிரச்னைகளைத் தொடர்ந்து அவர்களுக்குள்ளே ஏற்படுத்தி சமூக அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய வேலைகளை பா.ஜ.கவினர் செய்து வருகிறார்கள். அவர்களை சமூக அளவில் உயர்த்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி கருதுவதால் இந்த மாதிரியான நிலைபாட்டை நாங்கள் எடுத்துள்ளோம்.'' என்றார்.

அவரிடம், ''தீர்ப்பை வரவேற்கவில்லை என்றால் விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகளை போல அந்தத் தீர்ப்பில் உள்ள பிழைகள் குறித்து விளக்கியிருக்கலாமே?'' என்றோம்.

''வி.சி.க, நாம் தமிழர் கட்சிகளைப் போல காங்கிரஸ் கட்சி இல்லை. அந்தக்கட்சிகளின் சூழல்களும் காங்கிரஸ் கட்சியின் சூழலும் வெவ்வேறு மாதிரியானது. இந்தத் தீர்ப்பில் இருக்கக்கூடிய பல பிழைகள் குறித்து விவாதிக்க, விளக்கம் கூற இன்னும் நாள்கள் இருக்கின்றன. தீர்ப்பு வெளியான அன்று காங்கிரஸ் கட்சி இவ்வாறு அறிக்கை வெளியிடுவதற்கான காரணம் இந்தத் தீர்ப்பின் மூலமாக சமூக அமைதிக்குப் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பது தானே ஒழிய, அந்தத் தீர்ப்பின் குறைகளைக் சுட்டிக்காட்டக் கூடாது என்பதல்ல. தொடர்ந்து, இது குறித்து நடைபெறக்கூடிய பொதுத் தளவிவாதங்களில் காங்கிரஸ் கட்சி தங்களின் வலிமையான கருத்துகளை மக்களின் முன் வைக்கும். இந்தத் தீர்ப்பில் எனக்கு பல மனக்குறைகள் இருக்கவே செய்கின்றன.

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்

இனியும் இதுமாதிரியான வழிபாட்டுத் தலங்களின் மீதான தாக்குதல்கள் நடைபெறக்கூடாது என்பதனை கடுமையாக வலியுறுத்தி இருக்க வேண்டும்.'' என்றார் பீட்டர் அல்போன்ஸ்.

தி.மு.கவின் செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டைன்டன் ரவீந்திரனிடம் பேசினோம்...

''இந்தத் தீர்ப்பை முழுமையாக ஏற்று தி.மு.க அறிக்கை வெளியிடவில்லை. அந்தத் தீர்ப்பில் எங்களுக்கும் சில முரண்பாடுகள் இருக்கலாம். அதே சமயம் பிரச்னைக்குச் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் பொழுது முடிந்த பிரச்னையை மீண்டும் தூண்டிவிடக்கூடிய வேலையை எப்படி தி.மு.க செய்ய முடியும்... அது சரியான முறையாக இருக்குமா? சமூகநீதி என்பது சமூக மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுதானே ஒழிய இரு சமூகங்களுக்கு இடையே பிரச்னையை மீண்டும் உருவாக்குவதோ தூண்டி விடுவதோ அல்ல.

இந்தத் தீர்ப்புக்குப் பிறகு, ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ‘மக்கள் விருப்பு வெறுப்புக்கு இதை உட்படுத்தாமல் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று கூறியிருப்பதைக் கவனிக்க வேண்டும். இந்தத் தீர்ப்பை விரும்பி ஒரு சமூக மக்கள் கொண்டாடுவதையோ அல்லது அதை வெறுத்து மற்றொரு சமூகமக்கள் செயல்படுவதையோ தவிர்த்து தீர்ப்பை ஏற்று அமைதியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் அவர் முன்வைத்திருக்கிறார்.

அ.தி.மு.க இந்தத் தீர்ப்பில் எவ்வித ஆதரவும் எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக இருந்ததைப் போல எங்களால் இருக்க முடியாது. இந்தத் தீர்ப்பு குறித்து வி.சி.க மாதிரியான கட்சிகள் தங்களின் அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளன. அது அவர்களின் நிலைப்பாடு. அவர்களும் எங்கள் நிலைப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என எந்த நிர்பந்தமும் இல்லையே. இந்தத் தீர்ப்பின் பிழைகள் குறித்து எதிர்காலத்தில் பேசவேண்டிய சூழல் ஏற்பட்டால் கட்டாயம் தி.மு.க இது குறித்து விவாதிக்கும்.

ரவீந்திரன்
ரவீந்திரன்

நீதிமன்றம் வழங்கக்கூடிய தீர்ப்புகளிலும் சில பிழைகள் ஏற்படலாம் என்பதால்தான் நீதிமன்றங்களில் பல்வேறு படிகள் இருக்கின்றன. தீர்ப்புகளில் சில தவறுகள் இருக்கலாம். ஆனால் அதை இரு தரப்பும் ஏற்கும்போது ஏன் தேவையற்ற சலசலப்பை ஏற்படுத்த வேண்டும்...சமூக அமைதியை அடிப்படையாகக் கொண்டே இப்படியான அறிக்கையை தி.மு.க வெளியிட்டது.

பிழைகளைச் சுட்டிக்காட்டுவதால் என்ன நடந்துவிடப்போகிறது... இந்தத் தீர்ப்பு வெளிவருவதற்கு முன்னர் பெரும்பான்மை முஸ்லிம் அமைப்புகள் தீர்ப்பு எப்படி வெளிவந்தாலும் எந்தப் பிரச்னைகளும் இல்லாமல் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதைத்தான் தி.மு.க-வும் தீர்ப்புக்குப் பின்னர் வெளியிட்டது. சமூக அமைதியை வலியுறுத்தி ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டாரே தவிர, எந்தச் சமூக மக்களின் வாக்குகளையும் பெறும் நோக்கில் வெளியிடவில்லை'' என்றார்.

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னும் பொதுவெளியில் அதிகளவிலான வாதங்கள் தொடர்வது அயோத்தி தீர்ப்பில்தான்!

அயோத்தி தீர்ப்பு: மத்திய, மாநில அரசியல் தலைவர்களின் கருத்து!