Election bannerElection banner
Published:Updated:

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை; மிரளவைக்கும் விலை ஏற்றம் - உரிய நேரத்தில் மக்களுக்குக் கிடைக்குமா?

கோவாக்ஸின் தடுப்பூசி
கோவாக்ஸின் தடுப்பூசி

``கொரோனா தடுப்பூசி பதுக்கல் நடைமுறைகளால் மருந்துகளின் விலை இன்னும் பல மடங்கு உயரும். எனவே, தடுப்பூசிகள் என்பது ஏழை மக்களுக்கு எட்டாத விஷயமாகிவிடும்'' என்கிறார் மருத்துவர் சாந்தி.

கொரோனா நோய்த் தொற்றின் 2-வது அலையின் தாக்கம் தீவிரமாகிவரும் இந்த வேளையில், `கொரோனா தடுப்பூசி'களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு மக்களை அச்சத்தில் ஆழ்த்திவருகிறது.

கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வோடு செயல்பட்ட இஸ்ரேல் போன்ற சில நாடுகள், தங்கள் குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி, `கொரோனா பாதிப்பிலிருந்து விடுதலை' பெற்றிருப்பதாகச் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதையடுத்து, தடுப்பூசி மற்றும் நோய்த் தொற்றைத் தடுக்கும் மருந்துகளுக்கான விலையையும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அதிகரித்துவருகின்றன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொள்ளை நோயான கொரோனாவுக்குத் தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட போது, அதைப் போட்டுக்கொள்ள மக்கள் மத்தியில் சிறிது தயக்கம் இருந்தது. அதையும் தாண்டி தற்போது மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனால், கெடுவாய்ப்பாக மருத்துவமனைகள்தோறும் தொங்கிக்கொண்டிருக்கும் `தடுப்பூசி இருப்பு இல்லை' என்ற அறிவிப்பு போர்டுகள் மக்களை விரக்தி மனநிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. இந்தநிலையில், அண்மையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடியும் `கொரோனா தடுப்பு விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்தால், ஊரடங்கு உத்தரவு தேவை இல்லை' என்று பேசியது ஆறுதல் செய்தியாக இருக்கிறது.

ஆனால் மற்றொருபுறம், `இந்தியாவின் தடுப்பூசி தேவைகளை கருத்தில்கொள்ளாமல், உள்நாட்டுத் தயாரிப்பு மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த மத்திய அரசின் அலட்சியமே, இன்றைக்கு நாட்டை மிகப்பெரிய அபாயத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தடுப்பூசிகளின் விலையும் ஏழைகளுக்கு எட்டாதவகையில் உயர்ந்துவருகிறது' என்று அரசியல்ரீதியாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுவருகின்றன.

இந்தநிலையில், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் செயலாளரும், மருத்துவருமான சாந்தி ரவீந்திரநாத்திடம், `தடுப்பூசி தட்டுப்பாடு, விலையேற்றம் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்' என்ற கேள்வியைக் கேட்டபோது, ``உலக நாடுகளோடு ஒப்பிடுகையில், தடுப்பூசி தயாரிப்பில் மிகச்சிறந்த மருத்துவக் கட்டமைப்புகளைக்கொண்ட நாடு இந்தியா. ஆனால், இன்றைய சூழலில், தன் நாட்டு மக்களுக்குத் தேவையைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடுகிற நிலைதான் இருந்துவருகிறது.

கடந்த மாதம் வரையிலும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஒரு மாதத்தில் ஆறு கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளைத் தயார் செய்தது. அதேபோல், பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில், மாதத்துக்கு ஒரு கோடி கோவாக்ஸின் தடுப்பூசிகளும் தயாராகிவந்தன.

கொரோனா சிகிச்சையில் மருத்துவர்கள்
கொரோனா சிகிச்சையில் மருத்துவர்கள்

நாட்டில் மொத்தம் 130 கோடி மக்கள் உள்ளனர். இவர்களில் அரசு கணக்கீட்டின்படி 12 கோடிப் பேர் ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக்கொண்டுவிட்டனர். மீதமுள்ள மக்கள்தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று 100 கோடி பேர் இருந்தால், அவர்களுக்கான இரண்டு டோஸ் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை என்பது 200 கோடியாக இருக்கிறது.

தடுப்பூசிகளில் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு பணி என்பது மிக விரைவாக நடைபெறக்கூடியது. அதுவே கோவாக்ஸின் மருந்து தயாரிப்பு என்பது அதிக நேரம் எடுத்துக்கொள்ளக்கூடியது.

கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியிலேயே கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து மத்திய அரசுக்குத் தெரிந்துவிட்டாலும்கூட, தடுப்பூசி மருந்து தயாரிப்பில் உரிய ஒப்பந்தங்களைச் செய்து அக்கறைகாட்டியிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், நாட்டு மக்களுக்குத் தேவையான மருந்துகளை நாமே உற்பத்தி செய்திருக்க முடியும். ஆனால், மத்திய அரசு இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்துவிட்டதனாலேயே இப்போது பொதுமக்கள் அல்லாடிக்கொண்டிருக்கின்றனர்.

அண்மையில்தான் கோவாக்ஸின் தடுப்பூசி தயாரிப்பில் வேறு சில நிறுவனங்களுக்கும் அனுமதி அளித்திருப்பதாக பிரதமர் சொல்கிறார். இதையடுத்து கோவாக்ஸின் மருந்துத் தயாரிப்பில் ஈடுபடும் சம்பந்தப்பட்ட நிறுவனம் 'வருடத்துக்கு 70 கோடி டோஸ் மருந்துகளைத் தயாரிக்க முடியும்' என்று உறுதி அளித்திருக்கிறது. இதேபோல், வெளிநாட்டு மருந்து நிறுவனமான ஸ்புட்னிக்கும் இந்தியாவில் ஐந்து இடங்களில் மருந்துத் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு, வருடத்துக்கு 85 கோடி டோஸ் மருந்துகளை உற்பத்தி செய்துவிட முடியும் என்று அறிவித்திருக்கிறது.

கோவிஷீல்டு தடுப்பூசி
கோவிஷீல்டு தடுப்பூசி

தனியார் நிறுவனங்களே இப்படி வருடத்துக்கு 150 கோடி டோஸ் மருந்துகளைத் தயார் செய்ய முடிகிறபோது, நம் நாட்டில் தடுப்பூசி மருந்துகளைத் தயாரிப்பதற்கென உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் இதைவிடவும் அதிகமான எண்ணிக்கை மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும்.

உதாரணமாக, சென்னையில் கிங் இன்ஸ்டிட்யூட், செங்கல்பட்டில் 'ஹெச்.எல்.எல்.பயோடெக் நிறுவனம்', குன்னூரிலுள்ள அரசு மருந்து உற்பத்தி மையம்... இது போன்று நாடு முழுக்க உள்ள பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்து தயாரிப்புத் திறனோடு காத்திருக்கையில், மத்திய பா.ஜ.க அரசோ, தடுப்பூசி மருந்து தயாரிப்பில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துக்கொண்டிருக்கிறது. அப்படியென்றால், இன்றைக்குத் தடுப்பூசிகளுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடுகளுக்கு மத்திய அரசின் அலட்சியமும், நிர்வாகத் திறமையின்மையும்தான் காரணம்.

மருந்து தயாரிப்பு உரிமையை மட்டுமல்லாது, விலை நிர்ணயத்தையும் தனியார் நிறுவனங்களுக்கே மத்திய அரசு கொடுத்திருப்பது மிக மிகத் தவறு. இது போன்று பெருந்தொற்று காலங்களில் மக்களின் உயிரைக் காத்துக்கொள்ளும் வகையிலாக மருந்து உற்பத்தி, விநியோகம், விற்பனை உள்ளிட்ட விஷயங்களை மத்திய அரசே முழுக் கட்டுப்பாடுகளையும் எடுத்துக்கொண்டு செயல்படலாம் என்று சட்டம் சொல்கிறது. எனவே, இந்தியாவில் ஒப்பந்தம் செய்துகொள்ளும் வெளிநாட்டு மருந்து நிறுவனங்களையும்கூட இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

ஆனால், இவை எதையுமே செய்யாத மத்திய அரசு, மாறாக தனியார் மருந்து நிறுவனங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக சுமார் 4,500 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருப்பதோடு, விலை நிர்ணயத்தையும் தனியார் கைகளிலேயே ஒப்படைத்துவிட்டது. எனவே, தனியார் நிறுவனங்களும் `மத்திய அரசுக்கு 150 ரூபாய் விலைக்கு கொடுக்கும் மருந்தை, மாநில அரசுகளுக்கு 400 ரூபாய் என்ற அளவிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் என்ற வகையிலுமாக பல மடங்குகள் விலை ஏற்றி விற்பனை செய்கின்றன.

கிங் இன்ஸ்டிட்யூட்
கிங் இன்ஸ்டிட்யூட்

இதனால், சாமான்ய மக்கள் தடுப்பூசி கிடைக்காமல் அவதியுறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வெண்ணெயைக் கையில் வைத்துக்கொண்டு நெய்யிக்கு அலைந்த கதையாக, பொதுத்துறை நிறுவனங்கள் இத்தனை இருக்கும்போது, தனியார் துறைக்கு அனைத்து வாய்ப்புகளையும் திருப்பிவிடுவதென்பது மக்கள் மீது துளியும் அக்கறையில்லாததையே காட்டுகிறது. இதற்கிடையே கோவிஷீல்டு மருந்து தயாரிப்பு நிறுவனம், தங்களது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் மருந்துகளை அளிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களின் உதவியோடு அரசு செயல்பட்டிருந்தால், பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கும். ஆனால், தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதால், லாபத்தின் அடிப்படையிலும் தனிப்பட்ட விருப்பின் அடிப்படையிலுமே மருந்து விநியோகம் நடைபெறுவது வேதனையானது. இதேநிலை நீடித்தால், அடுத்தகட்டமாக மருந்துகள் கிடைப்பதில் செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்துவார்கள். இது போன்ற பதுக்கல் நடைமுறைகளால் மருந்துகளின் விலை இன்னும் பல மடங்கு விலை உயரும். எனவே, தடுப்பூசிகள் என்பது ஏழை மக்களுக்கு எட்டாத விஷயமாகிவிடும்.

கொள்ளை நோயான கொரோனாவை ஒழித்துக்கட்டுவதில், தடுப்பூசிகளுக்கு எவ்வளவு பெரிய பங்கிருக்கிறது என்ற அறிவியல் உண்மையை நம் மத்திய பா.ஜ.க அரசு இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லை என்றே தெரிகிறது. கொரோனாவுக்கு எதிராகக் கைதட்டுவதையும் 'கோ கொரோனா' சொல்வதையும் மட்டுமே அரசு நம்பிக்கொண்டிருக்கிறது என்பது தடுப்பூசிகளுக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறை மூலம் நிரூபணமாகியிருக்கிறது.

இன்றைய புள்ளிவிவரப்படி, ஒரு நாளில் 3.14 லட்சம் பேருக்கு தொற்று ஏற்படுகிறது. இதில் இறப்புவிகிதம் என்பது 3,600 பேர் என்று அரசுத் தரப்பு கணக்கு சொல்கிறது. ஆனால், உண்மை நிலவரம் இதைவிடவும் அதிகமாகவே இருக்கும். இந்தநிலையில், வருகிற மே மாதம் 3-வது வாரம் கொரோனா 2-வது அலை உச்சம் தொடும். அப்போது நோய் பாதிப்பும் அதையொட்டிய இறப்புவிகிதமும் நாம் எதிர்பாராத எண்ணிக்கையை எட்டிவிடும். தடுப்பூசி கிடைக்காமல், பெருமளவில் பாதிக்கப்படப்போவது நாட்டின் ஏழை மக்கள்தான்!'' என்கிறார் வருத்தத்தோடு.

மருத்துவர் சாந்தி - குமரகுரு
மருத்துவர் சாந்தி - குமரகுரு

கொரோனா தீவிரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதாக மத்திய பா.ஜ.க அரசு மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான குமரகுருவிடம் பேசினோம்... ``பிரதமர் ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று சந்தேகம் எழுப்பிய எதிர்க்கட்சிகள், பின்னர் பிரதமர் ஊசி போட்டுக்கொண்ட பிறகும்கூட, `நாங்கள் என்ன வெள்ளை எலிகளா...' என்று கேள்வி எழுப்பினர். இப்படியெல்லாம் தடுப்பூசி குறித்த எதிர்மறையான பிரசாரங்களால்தான், பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த பயம் ஏற்பட்டது. இதன் விளைவாகத்தான் நாடு முழுக்க 45 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தாமல் வீணடிக்கப்பட்டிருக்கின்றன.

ஆக, 'தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்' என்று மத்திய அரசு சொன்னபோது, மக்கள் மருத்துவமனைகளுக்கு வருவதற்கே தயங்கி நின்றனர். இப்போது நோய்த்தொற்றின் தீவிரம் அதிகமாகி வரும்போது, 'தடுப்பூசிக்கு தட்டுப்பாடு' என்கிறார்கள். வங்கியில் பணம் போட்டிருக்கும் அனைவரும் ஒரே நாளில், போட்ட பணத்தையெல்லாம் திருப்பிக் கொடுங்கள் என்று வங்கி வாசலில் போய் நின்றால், அது சாத்தியம்தானா... இதற்காக வங்கியைக் குறை சொல்ல முடியுமா?

சென்னை: `வன்கொடுமைச் சட்டத்தில் புகாரளிப்பேன்' - இன்ஷூரன்ஸ் நிறுவன ஊழியரைக் கடத்திய பெண்

அடுத்து மருந்து தயாரிப்பில், தனியார் நிறுவனங்களை ஏன் மத்திய அரசு ஊக்குவிக்கிறது என்று கேட்கிறார்கள். தடுப்பூசி மருந்து தயாரிப்புக்கென அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும்கொண்ட நிறுவனங்களிடம்தான் அரசு ஒப்பந்தம் செய்துகொள்ள முடியும். 'மோடி எதிர்ப்பு' என்ற கலர் கண்ணாடியை அணிந்துகொண்டே எல்லா விஷயங்களையும் பார்ப்பவர்கள்தான், 'பொதுத்துறை நிறுவனங்களோடு ஏன் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை' என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். இவர்கள் சொல்வதுபோல், தனியார் நிறுவனங்களோடு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துகொள்ளாமல் இருந்திருந்தால், 'கொரோனா பலியைத் தவிர்க்க தனியாரோடும் அரசு ஒப்பந்தம் செய்திருக்க வேண்டுமல்லவா...' என்று அப்போதும் கேள்வி எழுப்புவார்கள்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

இது போன்ற பெருந்தொற்றுக் காலங்களில், 130 கோடி மக்கள்தொகையைக்கொண்ட இந்தியா, தனியார் பங்களிப்பு இல்லாமலேயே எப்படி மீண்டுவர முடியும்? ரயில், விமானம், செல்போன் என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் தனியாரின் பங்களிப்பு இல்லாமல், நமது தேவையைப் பூர்த்திசெய்யவே முடியாது.

இது போன்ற பேரிடர் காலங்களில் மத்திய அரசோடு இணைந்து மக்களைக் காக்க கைகோக்காமல், 'அதானிக்கு கொடுத்துவிட்டார்கள், அம்பானிக்கு கொடுத்துவிட்டார்கள்' என்று தொடர்ச்சியாகப் புகார்களை மட்டுமே எதிர்க்கட்சியினர் வைத்துக்கொண்டிருக்கின்றனர். என்ன அரசியல் இது... ஒவ்வொரு தடுப்பூசிக்கும் ஒரு ரூபாய், 2 ரூபாய் என்று பிரதமர் வாங்கிக்கொள்ளப்போகிறாரா என்ன? அரசு மருத்துவமனைகள் எங்கும் தடுப்பூசி கிடைக்கவில்லை. தனியார் மருத்துவமனைகளில் மட்டும் 10 ஆயிரம் ரூபாய் விலையில் தடுப்பூசி கிடைக்கிறது என்ற சூழல் நிலவினால், நீங்கள் மத்திய அரசைக் கேள்வி கேட்கலாம். அரசு மருத்துவமனையோ, தனியார் மருத்துவமனையோ மக்கள் விரும்புகிற இடங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றுதானே மத்திய அரசு சொல்கிறது...

`தீவிர கோவிட் நோய்க்கு எதிராக கோவாக்ஸின் 100% பயனளிக்கிறது!' - பாரத் பயோடெக்

'மாநில அரசுகள் தாங்களே தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ள உரிமை இல்லையா' என்று முதலில் கம்யூனிஸ்ட்டுகள் கேள்வி எழுப்பினார்கள். வசதி வாய்ப்புள்ள மாநிலங்கள் அதிக அளவிலான டோஸ்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டால், அது ஏழ்மை நிலையிலுள்ள மற்ற மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று மத்திய அரசு விளக்கம் கூறியது. ஆனாலும் மாநில அரசின் உரிமை குறித்தே தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்தனர். இப்போது, 'மத்திய அரசு 50% தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளும். மாநில அரசுகளும் தனியாரும் மீதமுள்ள 50% தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளலாம்' என்று மத்திய அரசு அறிவித்துவிட்ட பிறகு, 'ஏன் மாநில அரசுக்கு மட்டும் 400 ரூபாய் விலை...' என்கிறார்கள்.

நடிகர் விவேக்
நடிகர் விவேக்

நடிகர் விவேக் மரணத்தின்போதும் இப்படித்தான் தடுப்பூசி குறித்த தேவையற்ற வதந்திகளை இங்குள்ள எதிர்க்கட்சிகள், மக்கள் மத்தியில் பரப்பிவந்தன. தடுப்பூசி தயாரிப்பில், இந்தியாவின் சாதனையை உலக நாடுகள் அனைத்தும் வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்கின்றன. விரைவில் இந்தியாவும் கொரோனாவை முற்றிலுமாக ஒழித்துக்கட்டி வெற்றிகரமாக நடைபோடும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்!'' என்கிறார் உறுதியாக.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு