கட்டுரைகள்
Published:Updated:

கொரோனா ஒழியட்டும்... மதுவிலக்கு தொடரட்டும்!

போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
போராட்டம்

மதுவால் குடும்பங்கள் தள்ளாடின. விளைவு மதுவிலக்குப் போராட்டங்கள் உக்கிரமெடுத்தன.

கருணாநிதி முடியாது என்றார்; ஜெயலலிதா முடியாது என்றார்; எடப்பாடி பழனிசாமி முடியாது என்றார். இவர்களால் முடியாததை கொரோனா சாதித்துக்காட்டியிருக்கிறது. ஆம், இப்போது தமிழ்நாடு முழு மதுவிலக்கு மாநிலம். கொஞ்சம் ஃப்ளாஷ்பேக் போகலாமா?

2016 ஏப்ரல் 9 தேதி...

அ.தி.மு.க தொண்டர்களால் நிரம்பியிருந்தது சென்னைத் தீவுத்திடல். 2016 சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை அங்கிருந்துதான் தொடக்கினார் ஜெயலலிதா. ‘`பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் கொள்கை. ஒரே கையெழுத்தில் அதைக் கொண்டு வர இயலாது. தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப் படும்’’ என ஜெயலலிதா சொன்னபோது ஒட்டுமொத்தக் கூட்டமும் கைதட்டி ஆர்ப்பரித்தது.

மதுவிலக்கு ஒழிப்பு போராட்டம்
மதுவிலக்கு ஒழிப்பு போராட்டம்

2016 சட்டமன்றத் தேர்தலின் பிரதான முழக்கமே மதுவிலக்குதான்! அதற்குப் பின்னணியும் இருந்தது. 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, கருணாநிதியைப் போலவே டாஸ்மாக்கைக் கொழுத்த கிடாவாக வளர்த்தார். வளம் கொழிக்கும் டாஸ்மாக்தான் அரசின் அட்சயப் பாத்திரம். கடனால் தள்ளாடிக்கொண்டிருக்கும் ஆட்சி சக்கரத்தை ஓட வைக்கும் அச்சாணி! மதுவால் குடும்பங்கள் தள்ளாடின. விளைவு மதுவிலக்குப் போராட்டங்கள் உக்கிரமெடுத்தன.

மதுவிலக்கு ஒழிப்பு போராட்டம்
மதுவிலக்கு ஒழிப்பு போராட்டம்

முழு மதுவிலக்குக் கோரி 36 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார் காந்தியவாதி சசிபெருமாள். பள்ளிகளுக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடையை மூடச்சொல்லிக் கன்னியாகுமரியில் செல்போன் டவரில் ஏறிப்போராட்டம் நடத்தியபோது அவர் உயிரை விட்டார். சசிபெருமாளின் மரணத்தைத் தற்கொலை எனக் கொச்சைப்படுத்தினார்கள். ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ எனப் பாடியதற்காகப் பாடகர் கோவனைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தார்கள். மதுவுக்கு எதிராகப் போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். திருவண்ணாமலையில் இளைஞர்கள், நான்கு வயதுச் சிறுவனுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்த கொடூரம் அதிர்வலையை உண்டாக்கியது. கோவையில் ப்ளஸ் டூ மாணவி குடித்துவிட்டு போதையில் ரோட்டில் விழுந்து கிடந்தார். திருச்செங்கோட்டில் அரசுப் பள்ளியிலேயே மாணவிகள் மது அருந்தினார்கள். கரூர் பஸ் ஸ்டாப்பில் பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் மாணவர் போதையில் மயங்கிக் கிடந்தான். இவை எல்லாமே முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் நடந்தவை.

மதுவிலக்கை வலியுறுத்திப் போராட்டங்கள் வெடித்ததால்தான், 2016 சட்டசபைத் தேர்தலில் மதுவிலக்கு முக்கிய கோஷமாக எழுந்தது. ‘மதுவிலக்கு கொண்டுவரப்படும்’ என அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் தேர்தல் அறிக்கையில் அறிவித்தார்கள். தீவுத்திடல் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ‘`மதுவிலக்கை அறிவித்துவிட்டால் அதனை எப்படியும் நிறைவேற்றுவேன் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். உறுதிமொழியைச் செயல்படுத்த முடியுமா எனத் தெரிந்த பிறகுதான் ஜெயலலிதா வழங்குவார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்’’ என நீட்டி முழங்கிவிட்டு, மதுவிலக்கு எப்படி அமல்படுத்தப்படும் என்பதையும் விவரித்தார். ‘`முதலில் டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைக்கப்படும். பிறகு கடைகளின் எண்ணிக்கை குறையும். பின்னர் பார்கள் மூடப்படும். குடிகாரர்களை மீட்பதற்கு மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மதுவிலக்கு என்னும் லட்சியத்தை அடைவோம்’’ என்றார் ஜெயலலிதா.

மதுவிலக்கு ஒழிப்பு போராட்டம்
மதுவிலக்கு ஒழிப்பு போராட்டம்

ஆனால், ஜெயலலிதா உயிருடன் இருந்த இரண்டாவது ஆட்சிக்காலத்திலும் சரி, எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகும் சரி, அதை நோக்கி ஓர் அடிகூட எடுத்துவைக்கப் படவில்லை. ஜெயலலிதா 500, எடப்பாடி 500 என மொத்தம் 1,000 கடைகள் மூடப்பட்டது உண்மைதான். அப்போதுதான் ‘விபத்துகளைத் தடுக்க நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ‘`படிப்படியாக மதுவிலக்கு’’ என்கிற ஜெயலலிதாவின் லட்சியத்துக்கு உயிர் கொடுக்கும் வகையில் நெடுஞ்சாலை டாஸ்மாக்குகளை மூடியிருக்கலாம். ஆனால், மூட உத்தரவிட்ட கடைகளைத் திறக்க உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியது தமிழக அரசு.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி 3,321 கடைகளை முதலில் மூடினார்கள். இதனை ஈடுகட்டக் கொல்லைப்புறம் வழியாக புதிய பாதை போட்டார்கள். மாநகராட்சி, நகராட்சிப் பகுதி மாநில தேசிய நெடுஞ்சாலைகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டதால் கடைசியில் 1,300 கடைகள்தான் மூடப்பட்டன. ஆனாலும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையில் பெரிய சரிவு ஏற்படவில்லை. 2015-2016-ல் டாஸ்மாக் வருவாய் 25,845 கோடி ரூபாய். அதன்பின் 2016-2017-ல் 26,995 கோடியாகவும் 2018-2019-ல் 31,157 கோடியாகவும் உயர்ந்தது. 2018 - 2019-ம் நிதியாண்டில், கிடைத்த தொகை முந்தைய ஆண்டைவிட, 4,360 கோடி ரூபாய் அதிகம்.

மதுவிலக்கு ஒழிப்பு போராட்டம்
மதுவிலக்கு ஒழிப்பு போராட்டம்

‘பூரண மதுவிலக்கு’ என்பதெல்லாம் தேர்தல் நேரத்து மத்தாப்புகள். டாஸ்மாக்கின் பரிணாம வளர்ச்சியாக நவீன வசதிகள் கொண்ட எலைட் கடைகள் அ.தி.மு.க ஆட்சியில்தான் உருவாக்கப் பட்டன. போலி மதுபானம் விற்கப்பட்டு, அரசின் வருவாய் குறைந்துவிடக் கூடாது என்பதற்காகப் போலி மதுபானம் பற்றித் தகவல்களைத் தெரிவிக்க 10581 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி சேவையை ஜெயலலிதாதான் கொண்டு வந்தார். பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தபோதெல்லாம் அவை குப்பைத்தொட்டிக்குப் போயின. மதுவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சட்டக்கல்லூரி மாணவி நந்தினியைக் காக்கிகள் ஒடுக்கினார்கள்.

மதுவிலக்கு ஒழிப்பு போராட்டம்
மதுவிலக்கு ஒழிப்பு போராட்டம்

நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை மூடிவிட்டு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கடைகளை அமைக்க அரசு முயன்றபோது போராட்டம் வெடித்தது. டாஸ்மாக்குகளைப் பெண்கள் உடைத்து நொறுக்கினார்கள். போராடியவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியது போலீஸ். திருப்பூர், சாமளாபுரத்தில் போராடிய பெண்களைத் தாக்கினார் திருப்பூர் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன். பெண்ணின் காதில் அறைந்து செவிடாக்கிய பாண்டியராஜனுக்குப் பதவி உயர்வு கொடுத்து அழகு பார்த்தது அரசு.

கொரோனா ஒழியட்டும்... மதுவிலக்கு தொடரட்டும்!

கோவை, கணுவாயைச் சேர்ந்த டாக்டர் ரமேஷின் மனைவி, குடித்துவிட்டு ஓட்டி வந்த வாகனம் மோதி உயிரிழந்தார். மனைவியின் சடலத்தோடு நடுரோட்டில் போராட்டம் நடத்தி, உயிரிழக்கக் காரணமான கடையை மூட வைத்தார் சமூகப் போராளியான ரமேஷ். மதுக்கடையை மூடுவதாக இருந்தால்கூட அதற்கு உயிர்ப்பலி கொடுக்கும் நிலையில்தான் எடப்பாடி ஆட்சி இருந்தது.

கொரோனா ஒழியட்டும்... மதுவிலக்கு தொடரட்டும்!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ, ‘`திடீரெனக் குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும். அதனால், மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது. உடனடியாகக் குடியை நிறுத்தச் சொன்னால், எப்படி ஒருவரால் நிறுத்த முடியும்? அதனால், ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருக்கிறது’’ என்றார்.

இன்று..? ராஜேந்திர பாலாஜி சொன்ன வார்த்தைகள் தூக்கிக் கடாசப்பட்டிருக்கின்றன. ‘படிப்படியான மதுவிலக்கு’ என்ற ஜெயலலிதாவின் பொய் வாக்குறுதிக்கும் டாஸ்மாக்குக்கு ஆதரவான எடப்பாடி பழனிசாமியின் தில்லாலங்கடி வேலைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது கொரோனா.

அண்டைமாநிலமான கேரளாவில் மது கிடைக்காமல் நான்குபேர் தற்கொலை செய்துகொண்டார்கள். ‘மருத்துவர்களின் அனுமதியுடன் குடி நோயாளிகளுக்கு மது வழங்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். தமிழ்நாட்டிலோ இப்படியான நிலை இல்லை. 21 நாள்கள் டாஸ்மாக் இல்லாமல் தமிழகம் இருக்க முடியும் என்றால் எஞ்சிய நாள்களில் மட்டும் இருக்கமுடியாதா என்ன?

கொரோனா ஒழியட்டும்... மதுவிலக்கு தொடரட்டும்!

‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று கோவன் சொன்னபோது கேட்காதவர்கள் கொரோனா சொன்னபோது கேட்டிருக்கிறார்கள். ‘கொரோனா ஒழியவேண்டும். ஆனால் டாஸ்மாக் பூட்டு தொடரவேண்டும்’ என்பதுதான் தமிழர்களின் விருப்பம்.