Published:Updated:

அதிரடித் திருப்பங்கள்... ஜனாதிபதி ஆட்சி... மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?

மகாராஷ்டிராவில் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாத சூழல் நீடித்துவந்த நிலையில், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

பால் தாக்கரே, உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே
பால் தாக்கரே, உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே

தங்கள் கட்சிக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை அளிக்க வேண்டும் என்கிற ‘50:50 ஃபார்முலா’வை நிபந்தனையாக முன்வைத்தது சிவசேனா. 50:50 ஃபார்முலாவை பா.ஜ.க விரும்பவில்லை. அதனால், அந்தக் கூட்டணி முறிந்தது. அதையடுத்து, 105 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட தனிப்பெரும் கட்சியான பா.ஜ.க-வை ஆட்சியமைக்க கடந்த சனிக்கிழமை அழைப்பு விடுத்தார் ஆளுநர் பகத்சிங் கோஷியாரி. ஆனால், ஆட்சியமைப்பதற்குத் தங்களுக்குப் போதிய பெரும்பான்மை இல்லை என்று ஆளுநரிடம் பா.ஜ.க தெரிவித்துவிட்டது.

ஆதித்யா தாக்கரே
ஆதித்யா தாக்கரே

ஆட்சியமைக்க பா.ஜ.க முன்வராததால், இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவுக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்தார் ஆளுநர். அப்போது, 'ஆட்சியமைக்கத் தேவையான எம்.எல்.ஏ-க்கள் உங்களிடம் உள்ளார்களா?' என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று சிவசேனாவிடம் ஆளுநர் கூறினார். ஆனால், அதற்கு 48 மணி நேரம் அவகாசம் வேண்டுமென்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்தது சிவசேனா இளைஞரணித் தலைவர் ஆதித்யா தாக்கரே தலைமையிலான குழு. அதை ஆளுநர் ஏற்கவில்லை.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி மேற்கொண்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோருடன் சிவசேனா தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சிவசேனா ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான உறுதியான வாக்குறுதியை அவர்கள் அளிக்கவில்லை. அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இந்நிலையில், மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர்.

அமித் ஷா
அமித் ஷா

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆளுநரைச் சந்தித்தனர். அவர்களிடம், ஆட்சியமைக்கப் போதிய எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணி வரை அவகாசம் அளிப்பதாக ஆளுநர் தெரிவித்தார். எனவே, ஆட்சியமைப்பது குறித்து காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகச் செய்திகள் வெளியாகின. 288 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தில், ஆட்சியமைப்பதற்கு 145 எம்.எல்.ஏ-க்கள் தேவை. ஆனால், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுக்கு 98 எம்.எல்.ஏ-க்களே உள்ளன. எனவே, எப்படி அவர்கள் பெரும்பான்மையை நிரூபிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது.

ஆட்சியமைக்க யாரும் முன்வரவில்லை என்றாலோ, யாராவது முன்வந்தாலும் போதிய எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை என்றாலோ, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதைக் காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. அதை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான அசோக் சவான் வெளிப்படையாகவே சொன்னார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மேலும், பா.ஜ.க-வை மதவாதக் கட்சி என்று எதிர்க்கும் காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும், பா.ஜ.க-வுடன் கொள்கை ரீதியில் எந்த வித்தியாசமும் இல்லாத சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பார்களா என்பதும் கேள்வியாக எழுந்தது. கோவா உட்பட பல மாநிலங்களை ஒருசில எம்.எல்.ஏ-க்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடித்த அமித் ஷா தலைமையிலான பா.ஜ.க-வால், மகாராஷ்டிராவில் 105 எம்.எல்.ஏ-க்கள் வைத்திருந்தும் ஏன் ஆட்சியமைக்க முடியவில்லை என்று எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

இந்நிலையில், பெரும்பான்மையைத் தாங்கள் நிரூபிப்பதற்கு ஆளுநர் போதிய அவகாசம் அளிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று மதியம் திடீரென்று மனுத்தாக்கல் செய்தது சிவசேனா. அதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்குமாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயைச் சந்தித்து முறையிடவும் சிவசேனா திட்டமிட்டது.

ராம்நாத் கோவிந்த்
ராம்நாத் கோவிந்த்

இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு முக்கியத்துவம்வாய்ந்த மகாராஷ்டிராவில், தாங்கள் ஆட்சியமைப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ள போதிலும், பிரதமர் மோடியோ, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ அது பற்றி எதுவும் பேசாமல் இருந்தனர். அவர்களின் மௌனத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வியூகம் என்ன என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்தது.

போதிய எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்களா என்பதை நிரூபிக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இன்று இரவு 8.30 மணி வரை ஆளுநர் அவகாசம் அளித்திருந்தார். திடீரென அவர், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு பரிந்துரைப்பதற்கான கடிதத்தை டெல்லிக்கு அனுப்பினார். அதையடுத்து மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி உடனடியாக அமல்படுத்தப்பட்டது. மோடியும், அமித் ஷாவும் மௌனம் காத்தது இதற்குத்தானா?!