Published:Updated:

வழிபாட்டுத்தலங்களில் ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி பெற கெடு! - மகாராஷ்டிரா அரசு

உத்தவ் தாக்கரே

`மகாராஷ்டிரா வழிபாட்டுத்தலங்களில் இருக்கும் ஒலிபெருக்கிகளுக்கு வரும் மே 3-ம் தேதிக்குள் அனுமதி பெறாவிடில் அவை அகற்றப்படும்’ என்று அரசு தெரிவித்துள்ளது.

வழிபாட்டுத்தலங்களில் ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி பெற கெடு! - மகாராஷ்டிரா அரசு

`மகாராஷ்டிரா வழிபாட்டுத்தலங்களில் இருக்கும் ஒலிபெருக்கிகளுக்கு வரும் மே 3-ம் தேதிக்குள் அனுமதி பெறாவிடில் அவை அகற்றப்படும்’ என்று அரசு தெரிவித்துள்ளது.

Published:Updated:
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே, மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகள் குறித்து அரசியல் அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். கடந்த மாதம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ராஜ் தாக்கரே இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்தார். இந்தச் சந்திப்புக்கு பிறகுதான் ராஜ் தாக்கரே தூக்கத்திலிருந்து எழுந்தவர்போல, ஒலிபெருக்கி பிரச்னையைக் கிளப்பிவிட்டிருக்கிறார். வரும் மே 3-ம் தேதிக்குள் மகாராஷ்டிரா முழுவதும் இருக்கும் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று ராஜ் தாக்கரே மாநில அரசுக்குக் கெடு விதித்திருக்கிறார்.

ராஜ் தாக்கரே மக்களை எளிதில் கவரும் தலைவராக இருக்கிறார். அவர் சொன்னால் உடனே செய்வதற்கு அவரது கட்சியில் ஆட்கள் இருக்கின்றனர். கடந்த இரண்டாம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜ் தாக்கரே ஒலிபெருக்கிக்கு எதிராக மசூதிகளுக்கு வெளியில் ஹனுமான் பாடல்களைப் பாடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார். அன்றே அவரது மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சித் தொண்டர்கள் மும்பையில் மசூதிகளுக்கு வெளியில் ஹனுமான் பாடல்களைப் பாடி, கைதுசெய்யப்பட்டனர். தற்போது மே 3-ம் தேதிக்குள் மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசுக்கு ராஜ் தாக்கரே கெடு விதித்திருப்பதால் மாநிலத்தில் ஒருவிதப் பதற்றம் நிலவிவருகிறது.

ராஜ்தாக்கரே
ராஜ்தாக்கரே

இந்த நிலையில், தற்போது அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் இருக்கும் ஒலிபெருக்கிகளுக்குக் கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரேயுடன், மாநில உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பாட்டீல் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. மே 3-ம் தேதிக்குள் ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. ராஜ் தாக்கரே சொன்ன அதே தேதியை அரசும் கெடுவாக விதித்திருக்கிறது. எனவே அனுமதி பெறாத ஒலிபெருக்கிகளை மே 3-ம் தேதிக்குப் பிறகு அகற்றிவிடுவோம் என்று அரசு எச்சரித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

ஏற்கெனவே நாசிக்கில் போலீஸ் கமிஷனர் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் உடனே ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். அதோடு நாசிக் போலீஸ் கமிஷனர் தீபக் பாண்டே வெளியிட்டுள்ள உத்தரவில் ஹனுமான் சாலிசா, பஜனை பாடுவதற்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும், மசூதிகளின் அஷானுக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு அல்லது பின்பு பஜனை பாடக் கூடாது. மசூதியிலிருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் இது போன்ற செயல்கள் அனுமதிக்கப்படாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கமிஷனர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் விரைவில் மாநகராட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. எனவேதான் ஒலிபெருக்கி பிரச்னையை ராஜ் தாக்கரே கையில் எடுத்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

சமூக வலைதளங்களில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தகவல்களைக் கண்டுபிடித்து அகற்றுவதற்காக மும்பை போலீஸார் சோஷியல் மீடியா லேப் ஒன்றை அமைத்திருக்கின்றனர். அந்த லேப் மூலம் இது வரை 3,000 சமூக வலைதளப் பதிவுகள் கண்டறியப்பட்டு, அகற்றப்பட்டுள்ளன. அதோடு ராம நவமியை ஒட்டி மத வன்முறையில் ஈடுபட்டதாக 61 பேரை மும்பை போலீஸார் கைதுசெய்துள்ளனர். வரும் நாள்களில் மத வன்முறைச் சம்பவங்கள் அதிக அளவில் தலைதூக்க வாய்ப்பிருப்பதால் அவற்றைக் கட்டுப்படுத்த மாநில போலீஸார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism