Published:Updated:

மாநிலம், யூனியன் பிரதேசம், சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசம்... இவற்றின் அதிகாரம் என்ன?

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, `ஜம்மு காஷ்மீர்' தனியாகவும் `லடாக்' தனியாகவும் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் 2 யூனியன் பிரதேசங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன. அது என்ன வேறுபாடு, மாநிலம், யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் பொருள் என்ன?

New Map of Jammu Kashmir and Ladakh
New Map of Jammu Kashmir and Ladakh ( PIB India )

மீண்டும் மாறுதலுக்கு உள்ளாகியிருக்கிறது இந்திய வரைபடம். கடந்த ஆகஸ்ட் 5 அன்று, பி.ஜே.பி அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்ற `ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2019', அக்டோபர் 31 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ஜம்மு - காஷ்மீர் மாநிலம் `ஜம்மு காஷ்மீர்' தனியாகவும் `லடாக்' தனியாகவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பிரிக்கப்பட்டுள்ள இரண்டு நிலங்களும், யூனியன் பிரதேசங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கும் லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் வேறுபாடுகள் உள்ளன. அவற்றை அறிந்துகொள்ள, மாநிலம் - யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் வரைமுறைகளாக அரசியலமைப்பு எதைக் குறிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியாவை `ஒன்றியம்' (Union) என்று மத்திய அரசை வரையறுக்கிறது. இந்திய ஒன்றியத்துக்குட்பட்டு, மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இயங்கி வருகின்றன.

Political Map of India (New)
Political Map of India (New)
Source: PIB India
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாம் சட்டப்பிரிவு, இந்திய ஒன்றிய அரசுக்கு, தன் எல்லைக்குட்பட்ட நிலங்களை மாநிலங்களாகப் பிரிக்க, மாநிலங்களின் பரப்பளவை அதிகரிக்க அல்லது குறைக்க, மாநில எல்லைகளில் மாற்றம் ஏற்படுத்த, மாநிலங்களின் பெயர்களில் மாற்றம் செய்ய அதிகாரம் வழங்குகிறது.

1947-ம் ஆண்டு, காலனிய ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை செய்யப்பட்டபோது, பல்வேறு சிறிய சமஸ்தானங்கள் இந்தியா முழுவதும் இருந்தன. அந்தப் பிரதேசங்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்தது இந்திய ஒன்றிய அரசு. முதல் பிரிவில், பிரிட்டிஷ் இந்தியாவோடு ஒருங்கிணைந்து, பிரிட்டிஷ் கவர்னர் ஆட்சியில் இருப்பவையும் மற்றும் தனியாக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த மதராஸ், அஸ்ஸாம், பீகார், பாம்பே முதலான மாகாணங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. இரண்டாம் பிரிவு, அதற்கு முன்பு, அரசர்கள், குறுநில மன்னர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களான ஹைதராபாத், பாட்டியாலா, கிழக்கு பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான் முதலான மாகாணங்கள். இரண்டாம் பிரிவில் உள்ள பிரதேசங்களுக்கான ஆட்சித்தலைவரை இந்திய ஒன்றியத்தின் குடியரசுத் தலைவர் நியமித்தார்.

இந்திய வரைபடம் - பிரிவினைக்குப் பிறகு.
இந்திய வரைபடம் - பிரிவினைக்குப் பிறகு.

மூன்றாம் பிரிவில், முன்னாள் தலைமை ஆணையர்களும், குறுநில அரசர்களும் ஆளுகைசெய்த டெல்லி, அஜ்மீர், போபால், கூர்க், இமாசலப் பிரதேசம் முதலானவற்றைச் சேர்த்து, அந்தந்த பிரதேசங்களுக்குத் தலைமை ஆணையர் ஒருவரை நியமித்தார் இந்திய ஒன்றியத்தின் குடியரசுத் தலைவர். நான்காம் பிரிவில், அந்தமான் நிகோபார் தீவுகள் மட்டும் ஒதுக்கப்பட்டு, அதை நிர்வகிக்கத் துணைநிலை ஆளுநர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டார்.

1956-ம் ஆண்டு, மாநிலங்கள் மறுசீரமைப்பு மசோதா அமல்படுத்தப்பட்டு, இந்த நான்கு பிரிவுகளும் ஒழிக்கப்பட்டன; மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மாநிலங்கள் மறுசீரமைப்புக்காக அமைக்கப்பட்ட ஆணையம் பெரிய மாநிலங்களை மொழிவாரியாகவும், நிர்வாகம் செய்வதற்கு வசதியாகவும் பிரித்தது. எனினும் சில பகுதிகள், இந்திய ஒன்றிய மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் அமைக்கப்பட்டன. இந்தப் பகுதிகள் பொருளாதாரம், நிர்வாகம், அரசியல் ஆகியவற்றில் நிலையற்ற தன்மை கொண்டுள்ளதாக மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம் சுட்டிக் காட்டியது. இதன் மூலம் யூனியன் பிரதேசங்கள் உருவாகின.

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இடையிலான வேறுபாடு, அவற்றின் மீதான அதிகாரத்தைப் பொறுத்து வரையறை செய்யப்படுகிறது.
இந்திய வரைபடம் - மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு.
இந்திய வரைபடம் - மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு.
Maps of India

இந்திய ஒன்றியத்துக்குள் சுயாட்சி அதிகாரம் பொருந்திய பகுதி, மாநிலம். ஒரு மாநிலத்துக்குத் தனி அரசு உண்டு; அதை நிர்வகிக்க, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் இருப்பர். எப்படி இந்திய ஒன்றியம் தனிச்சட்டங்கள் உருவாக்கி, மொத்த பிரதேசத்தையும் ஆட்சிசெய்கிறதோ, அதைப்போல சில நிபந்தனைகளுக்குட்பட்டு, மாநிலங்களும் தனிச்சட்டம் உருவாக்கி ஆட்சி செய்ய உரிமையுண்டு. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் சட்டமன்றம், நிர்வாகம் ஆகிய அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரால் மாநிலங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. இந்தியக் குடியரசுத் தலைவர் மாநிலங்களின் ஆளுநர்களை நியமனம் செய்வார்.

மாநிலங்கள் சுயாட்சியோடு செயல்படுபவை; அதற்கு நேரெதிராக யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் இயங்கி வருபவை. யூனியன் பிரதேசங்களை நிர்வாகம் செய்ய, குடியரசுத் தலைவர் துணைநிலை ஆளுநர் ஒருவரை நியமிப்பார். டெல்லி, புதுச்சேரி, சண்டிகர், தாத்ரா & நகர் ஹவேலி, டாமன் & டையூ, அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத் தீவுகள் ஆகியன யூனியன் பிரதேசங்களாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் தற்போது ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் இணைந்துள்ளன.

குடியரசுத் தலைவர் இல்லம்
குடியரசுத் தலைவர் இல்லம்

யூனியன் பிரதேசங்கள் என்ற போதும், டெல்லி, புதுச்சேரி ஆகிய பகுதிகள், மற்றவையிலிருந்து வேறுபாடு உடையவை. டெல்லி, புதுச்சேரி ஆகியவை தனி சட்டமன்றங்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய பிரதேசங்கள். ஜம்மு காஷ்மீரும் தற்போது டெல்லி, புதுச்சேரி வரிசையில், தனிச் சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 3 யூனியன் பிரதேசங்களும் மாநிலங்கள்போல செயல்படும் தன்மைகொண்டவை.

மாநிலம், யூனியன் பிரதேசம், சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசம் ஆகியவற்றிற்கு இடையில் பல அரசியல் சிக்கல்கள் எழும் வாய்ப்புகள் உள்ளன. பல சிக்கல்களும் எழுந்துள்ளன. சமீபத்தில் டெல்லி, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுங்கட்சிக்கும், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநருக்கும் பிரச்னைகள் ஏற்பட்டன. இவை உச்சநீதிமன்றம் வரை சென்று, ``யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசால் நிர்வாகம் செய்யப்பட்டாலும், அவற்றிற்குத் தனித்தன்மை உண்டு" என நீதிமன்றத்தால் தீர்ப்பும் வழங்கப்பட்டது.

முந்தைய இந்திய வரைபடம்
முந்தைய இந்திய வரைபடம்
Maps of India

1947- ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாகத் ஒரு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக உடைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவற்றுடன் இந்தியா முழுவதும் 9 யூனியன் பிரதேசங்கள் உள்ளன; மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆகக் குறைந்துள்ளது.