Published:Updated:

ஒன் நேஷன், ஒன் ரேஷன் திட்டம்... தமிழகத்துக்கு வரமா, சாபமா?

Ration Shop
Ration Shop

தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் ஓர் அங்கமான, 'ஒன் நேஷன்... ஒன் ரேஷன்’ திட்டம் 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் சாதக, பாதகங்கள் என்ன ?

ரேஷன் கடைகளை கணினிமயமாக்கும் பொருட்டு, மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொது விநியோக அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டதுதான் 'ஒருங்கிணைந்த மேலாண்மை பொது விநியோகத் திட்டம்.' இதன் மூலம், நாடு முழுவதுமுள்ள ரேஷன் கடைகள் அனைத்தும், ஒரே கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்படும்; ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருள்கள் வாங்கமுடியும்; போலி ரேஷன்கார்டுகளை ஒழிக்கவும் இந்த முறை பயன்படும்... இவையெல்லாம்தான் இந்தத் திட்டம் கொண்டுவரப்படுவதன் நோக்கமாக மத்திய அரசு அறிவித்தது.

Minister Kamaraj
Minister Kamaraj

தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு அங்கமாக, இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் அனைத்து மாநிலங்களிலும் இது செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், 'ஒன் நேஷன், ஒன் ரேஷன்' என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

அறிவிப்பு வந்த நாள் முதலாகவே அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மத்தியில் இத்திட்டத்துக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. 'தமிழ்நாடு இந்தத் திட்டத்தில் சேரக்கூடாது' எனப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், தமிழக உணவுத்றை அமைச்சர் காமராஜ், "தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டுவரும் பொது விநியோகத் திட்டத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்" என அறிவித்தார்.

தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக 34,773 நியாய விலைக் கடைகள் இருக்கின்றன. 2,05,05,221 குடும்ப அட்டைகளும், அதன் மூலம், 6,66,71,751 கோடி மக்களும் பயன்பெற்று வருகிறார்கள். தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு, மாதம், 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. சர்க்கரை, கோதுமை, பருப்பு, பாமாயில் போன்ற பொருள்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், தமிழகத்தில், 2016 நவம்பரில் அமலுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு 20 கிலோ அரிசியும் அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் கூடுதலாக, 5 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது. புதிய திட்டத்தால் மக்களுக்கு இதுவரை கிடைத்துவந்த ரேஷன் பொருள்கள் இனி முறையாகக் கிடைக்குமா, இல்லை அதில் ஏதும் பாதிப்பு ஏற்படுமா எனப் பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

''ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை எனும் இந்தத் திட்டத்தால் மக்கள் (நுகர்வோர்) ஏகப்பட்ட குழப்பத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். ரேஷன் கடைகளில் இப்போதே தேவையான பொருள்கள் சரியாகக் கிடைப்பதில்லை. யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்றால், மக்கள் இன்னும் சிரமத்துக்கு ஆளாவார்கள்'' என்கிறார் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் தலைவர் பால்பர்ணபாஸ்.

Ration Shop
Ration Shop

''இந்தப் புதிய திட்டத்தின்படி, ரேஷன் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். ரேஷன் அட்டையில் உள்ள குடும்பத் தலைவர் / தலைவி ரேஷன் கடைக்குச் சென்று கைரேகை வைத்தால்தான் பொருள்களைக் கொடுப்பார்கள். இந்தமுறை ஏற்கெனவே பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு, மிகப்பெரிய தோல்வியைத் தழுவியிருக்கிறது. வயதான பலரின் கைரேகைகள் அழிந்து போயிருப்பதே அதற்குக் காரணம். அதுபோன்ற ஒரு சிக்கல் நிகழ்ந்தால் அதற்கான முன்னெச்சரிக்கையும் தீர்வும் இங்கே ஏற்படுத்தப்பட வேண்டும்.

அதோடு, பிற மாநிலங்களில் இங்கு குடியேறுபவர்கள், இங்குள்ள ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க அனுமதிக்கக் கூடாது. மிலிட்டரி கேன்டீன், ரயில்வே கேன்டீன் இருப்பதைப்போல, வெளியில் இருந்து குடியேறுபவர்களுக்கென தனி கேன்டீன் நடத்தி, அதன் மூலம் பொருள்களை விநியோகம் செய்யவேண்டும். தமிழகத்தில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகளைக் கலந்தாலோசித்து, சாதக பாதகங்களை ஆய்வு செய்தே அமல்படுத்த வேண்டும்'' என்கிறார் பால்பர்ணபாஸ்.

Balparnabas
Balparnabas

தமிழக ரேஷன் கடைகளில் மாதந்தோறும், 3.17 லட்சம் டன் அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. அதில், அந்தியோதயா அன்னயோஜனா பிரிவில் 57,437 டன் அரிசியும் முன்னுரிமை குடும்பங்கள் பிரிவில் 1.36 லட்சம் டன் அரிசியும் கிலோ 3 ரூபாய் விலையில், இந்திய உணவுக் கழகத்திடமிருந்து வாங்கப்படுகிறது. தவிர, ஒரு லட்சம் டன் அரிசி 8.30 ரூபாய் விலையிலும், பற்றாக்குறை அரிசி கிலோ 25 ரூபாய்க்கும் வாங்கப்படுகிறது. இந்தியாவின் பிற மாநிலங்களைவிட, தமிழகத்தில்தான் அதிகளவு அரிசி இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. மத்திய அரசு வழங்கும் மானியத்தைவிட கூடுதலாக பல கோடி ரூபாய் மாநில அரசு செலவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

''உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி, இந்தியா முழுவதும் நகர்ப்புறங்களில் 50 சதவிகித மக்களுக்கும் கிராமப்புறங்களில் 75 சதவிகித மக்களுக்கும்தான் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அப்படி அல்ல. அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதனால், தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தைத் தொந்தரவு செய்யாமல் இந்தப் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் வரவேற்கலாம்.
பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்

மேலும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து மிக விரிவாக விளக்குகிறார் ஜெயரஞ்சன்,

''வெளிமாநிலங்களில் இருந்து குடியேறுபவர்கள் யாரும் குடும்பத்துடன் குடியேறுவதில்லை. ஆனால், ரேஷன் பொருள்கள் கொடுக்கப்படுவது குடும்பத்துக்காகத்தான். தனியாக வருபவர்கள் எப்படிக் குடும்பத்துக்கான பொருள்களைப் பெறமுடியும்? ஒருவேளை குடும்பத்துடன் வந்தாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இடத்தில் வேலை செய்வார்கள். அவர்களுக்கான பொருள்களை அந்தப் பகுதியில் இருக்கும் ரேஷன் கடைகளுக்கு எப்படிப் போய்ச்சேரும்?

Jeyaranjan
Jeyaranjan

ஒரு ரேஷன் கடையில், வழக்கமாக வாங்கும் 200 குடும்பத்துக்குத் தேவையான அரிசி வைத்திருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அந்தப் பகுதியில் புதிதாகப் பலர் குடியேறிவிட்டால் அவர்களுக்குத் தேவையான அரிசியை எப்படிப் பெறமுடியும்? புதிய ஆள்கள் முதலில் வந்து அரிசியை வாங்கிவிட்டால், வழக்கமாக வாங்குபவர்களுக்கு இல்லாமல் போகும். அந்தத் தட்டுப்பாட்டை எப்படிச் சரிசெய்வார்கள். வெளிமாநிலங்களில் இருந்து குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு வரும் தொழிலாளிகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்குவது நல்ல விஷயம்தான். ஆனால், அவர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் வேலை செய்வதில்லை. ஒவ்வொரு இடமாக நகர்ந்துகொண்டே இருப்பார்கள்.

எந்தெந்த மாநிலங்களில் இருந்து எவ்வளவு பேர் தமிழகத்துக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் தமிழகத்தின் எந்தப் பகுதியில் குடியேறியிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப அந்தந்த மாநிலங்களில் இருந்து பொருள்களைப் பெறவேண்டும். குடியேறிய மக்கள் தொகைக்கு ஏற்ப, மத்திய அரசு, வெளியேறிய மாநிலங்களுக்கு வழங்கும் மானியத்தைக் குறைத்து, குடியேறும் மாநிலங்களுக்கு அதிகப்படுத்த வேண்டும். அப்படி முறையாகத் திட்டங்களை வகுத்து செயல்படுத்தினால் மட்டுமே இத்திட்டம் வெற்றியடையும் - ஜெயரஞ்சன்.

இது ஒருபுறமிருக்க, இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், பிற மாநிலங்களில் இருந்து அதிகமான தொழிலாளர்கள் தமிழகத்தில் குடியேறிவிடுவார்கள். அதற்குப் பிறகு, தமிழகத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் எனவும் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொது விநியோகத் திட்டம், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் எனவும் சில கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. கூடுதலாக, ''உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் தொடர்ச்சியாகக் கொண்டு வரப்படும் இந்தப் புதிய திட்டம், ரேஷன் கடைகளை முழுவதுமாக மூடுவதற்கான தொடக்கம்தான்'' என்கிறார் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலளார் கி.வெங்கட்ராமன்.

North Indians
North Indians

''பிற மாநிலங்களைவிட ஒப்பீட்டளவில் தமிழகத்தில் ரேஷன் கடைகள் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. தமிழகத்தில் நான்கு வண்ணங்களில் ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. அதில் அரிசி இலவசமாக வழங்கப்படும் பச்சை வண்ணக் கார்டுகளைத்தான் 85 சதவிகிதம் பேர் வைத்திருக்கிறார்கள். புதிதாகக் கொண்டு வரப்படும் 'ஸ்மார்ட் கார்டு'கள் மூலம், இதில் பலரைக் கழித்துவிடும் வேலைகள் நடக்கும். ரேஷன் கடைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால், இவ்வளவு நாள் அதைச் செய்யமுடியவில்லை.

இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டால் ரேஷன் கடைகள் முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும். அப்போது, மக்களை மிக எளிதாக ரேஷன் பொருள்கள் பெறுவதில் இருந்து தகுதிநீக்கம் செய்வார்கள். காலப்போக்கில் ரேஷன் கடைகளையே இழுத்து மூடிவிடுவார்கள்.
கி.வெங்கட்ராமன்

அதுமட்டுமல்ல, யார் வேண்டுமானாலும், எந்த ரேஷன் கடையிலும் பொருள்கள் வாங்க முடியும் என்றால் பிற மாநிலங்களைச் சேர்ந்த பலர் தமிழகத்தில் குடியேறுவார்கள். அவர்கள் நிரந்தக் குடிமக்களாகி, தமிழகத்தின் அரசியலை நிர்ணயிக்கும் வாக்காளர்களாகவும் மாறுவார்கள். இப்போதே ஒவ்வொரு சட்டமன்றத்திலும் 20,000 பேருக்கும் மேல் வெளி மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கண்டிப்பாக பி.ஜே.பி, காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளுக்குத்தான் வாக்களிப்பார்கள். இதன் மூலம் மாநிலக் கட்சிகளின் அதிகாரம் முடிவுக்கு வரும். அதற்குதான் இந்தத் திட்டம் கைகொடுக்கும்'' என்கிறார் வெங்கட்ராமன்.

k.venkatraman
k.venkatraman

பிற மாநிலத் தொழிலாளர்கள் இங்கு வருவது தனியார் நிறுவனங்களின் வேலைகளுக்காகத்தான். தனியார் முதலாளிகள் லாபமடைய அரசுப் பணத்தில் அவர்களுக்கு ஏன் ரேஷன் பொருள்கள் வழங்க வேண்டும் எனவும் சில கூக்குரல்கள் எழுகின்றன.

இப்படி இந்தத் திட்டம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும், இது ஏழை மக்களின் நலனுக்காகக் கொண்டுவரப்படும் திட்டம் மட்டுமே என்கிறது ஆளும் தரப்பு,

''இந்தத் திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டுகள் அனைத்தும் எலெக்ட்ரானிக் கார்டுகளாக மாற்றம் பெறும். அதன் மூலம் யார் ஏழைகள் என சரியாக அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு சலுகைகள் சரியாகப் போய்ச்சேரும். இதன் மூலம் ஏழை மக்களின் பெயரைப் பயன்படுத்தி பணம் சம்பாதித்த இடைத்தரகர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வரும். போலி ரேஷன் கார்டுகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.''
வானதி சீனிவாசன்

''யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள்கள் வாங்கிக்கொள்ளலாம் என்பதில் வெளி மாநிலத்தவர்க்கு மட்டும் நன்மை இருப்பதாக சிலர் சித்திரிக்கிறார்கள். அது தவறு. தமிழகத்திலேயே, ஒரு மாவட்டத்தில் இருந்து, மற்றொரு மாவட்டத்துக்கு வேலைக்காகக் குடியேறும் அடிமட்டத் தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும். தமிழகத்தில் ரேஷன் கடைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்த ரேஷன் கடைகள் செயல்படுவதில் மத்திய அரசின் பங்கும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. ஒரு கிலோ அரிசி 25 ரூபாய்க்கு மாநில அரசு வாங்கினால், அதில் 22 ரூபாய் மத்திய அரசின் மானியம்தான்.

Vanathi srinivasan
Vanathi srinivasan

குடியேற்றம் என்பது காலத்துக்கேற்பவும் தேவைக்கேற்பவும் நிகழும் இயல்பான ஒரு விஷயம்தான். அதோட நம் மாநிலத்துக்கு அவர்கள் வருவது, நம் மாநில கட்டட வேலைக்காகவும் மற்ற வேலைகளுக்காகவும்தான். அவர்கள் தனியார் வேலைகளுக்காக வந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகத்தான் வேலை செய்கிறார்கள். அதை நாம் மறந்துவிடக் கூடாது. வெளிமாநிலங்களில் இருந்து குடியேறும் மக்களுக்கான மானியம் குறித்து இன்னும் முழுமையாகத் திட்டமிடப்படவில்லை. கூடுதலாக ஆகும் செலவை, மாநில அரசுகள் மத்திய அரசிடம் முறையிட்டுப் பெறலாம்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், எலெக்ட்ரானிக் முறையில் செயல்படுத்தப்படுவதால் அது விரைவில் சரிசெய்யப்படும்.'' என்கிறார் வானதி சீனிவாசன்.

அடுத்த கட்டுரைக்கு