அலசல்
Published:Updated:

அணை பாதுகாப்பு மசோதா பாதுகாப்பானதா?

அணை பாதுகாப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
அணை பாதுகாப்பு

ஆகஸ்ட் 2-ம் தேதி, மக்களவையில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்மீது மக்களவையில் விவாதம் நடைபெற்றபோது பேசிய தி.மு.க உறுப்பினர் ஆ.ராசா,

‘‘மாநில அரசுகளின் உரிமைகளை, அணை பாதுகாப்பு மசோதா பறித்துவிடும்’’ என்று வாதிட்டார். கேரள மாநிலத்தின் கொல்லம் தொகுதி எம்.பி-யான பிரேமச்சந்திரனும் அணை பாதுகாப்பு மசோதா பற்றி கேள்வி எழுப்பினார். தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களின் எதிர்ப்புகளுக்கு இடையே, குரல் ஓட்டெடுப்பு மூலம் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா பற்றி விளக்கமளித்துள்ள ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ‘‘மாநிலத்தின் உரிமையைப் பறிக்கும் நோக்கம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை’’ என்று குறிப்பிட்டார். மசோதா நிறைவேறும்போதே பல சர்ச்சைகளையும் சேர்த்துக் கிளப்பியிருக்கிறது.

இதுபற்றிப் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன், ‘‘இந்தியாவில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், மாநில அரசுகளின் உரிமைகள் அனைத்தையும் எடுத்து தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்துக்குக் கொடுக்கும் பணியைத்தான் இந்தச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. ‘அனைத்துப் பிரச்னைகளுக்கும் தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் முடிவுகளே இறுதித் தீர்வாக இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியம், இதை உறுதிப்படுத்துகிறது.

சுந்தர்ராஜன், வீரப்பன்
சுந்தர்ராஜன், வீரப்பன்

மாநிலவாரியாக அமைக்கப்படும் அணை பாதுகாப்புக் குழுவிலும் மத்திய அரசின் சார்பில் இருவர் உறுப்பினர்களாக இருப்பார்கள், அவர்களை நியமிக்கும் அதிகாரம், மத்திய அரசின் நீர்வள ஆணையம் (central water commission) மற்றும் மத்திய மின்சார ஆணையம் (central electricity authority) ஆகிவற்றிடம்தான் இருக்கும். மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர்தான், தேசிய அணை பாதுகாப்பு குழுவின் தலைவர் என்பதை இங்கே நினைவில்கொள்ள வேண்டும்.

இந்தச் சட்டம், பல்வேறு மாநிலங்களுக்குப் பெருங்கேடு விளைவிப்பதாக உள்ளது. அதுவும் குறிப்பாக, தமிழகத்துக்கு. அருகில் உள்ள மாநில நிலப்பரப்பில் அணைகள் இருந்தாலும், தமிழகத்தின் கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பின்கீழ் அந்த அணைகள் இருந்தன. இனிமேல் அவ்வகை அணைகள் அனைத்தும் தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின்கீழ் கொண்டுசெல்லப்படும். தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தைச் சேர்ந்த ஒருவர், அணையை சோதனைசெய்யும் சமயத்தில், அந்த அணையின் காலம், தன்மை, பயன்பட்டால் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் மற்றும் பல தரவுகளைவைத்து, அந்த அணையின் செயல்பாட்டை நிறுத்தவோ அல்லது தேக்கக்கூடிய தண்ணீரின் அளவைக் குறைப்பதற்குரிய முடிவையோ எடுப்பார். ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால் உறுதித்தன்மை உறுதிசெய்யப்பட்டுள்ள முல்லை பெரியாறு அணைக்கு, இந்தச் சட்டம் பெரிய பாதிப்பை விளைவிக்கும். ஆணையம் தெரிவிக்கும் ஆலோசனைகளை மேற்கொள்ள அல்லது குறைபாடுகளை சரிசெய்ய, ஆணையம் அல்லது மாநில அரசின் அணை பாதுகாப்புக் குழு அங்கீகரிக்கும் நிபுணர்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அல்லது கொண்டுவர விருக்கும் மற்ற சட்டங்களை வைத்துப் பார்க்கும்போது, மாநில அரசுகளிடம் உள்ள நீர்மேலாண்மையை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கம் அப்பட்டமாகத் தெரிகிறது. மத்திய நிலத்தடிநீர் மேலாண்மைச் சட்டம், நீர்வழி பாதைச் சட்டம், அணை பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றின் மூலம், மாநில உரிமைகளை நொறுக்கி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, டெல்லியில் அதிகாரத்தைக் குவிப்பதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கமேயொழிய, அணைகளைப் பாதுகாப்பது என்பதெல்லாம் வெறும் வாய்வார்த்தைகள்தான்.

`ஒரு மாநிலத்துக்குள் இருக்கும் அணைகள், இனி அந்த மாநிலத்துக்கே சொந்தம்’ என அணை பாதுகாப்பு மசோதா சொல்கிறது. அப்படிப் பார்த்தால், தமிழகத்தின் பராமரிப்பில் இருக்கும் முல்லை பெரியாறு, பெருவாரிப்பள்ளம், பரம்பிக்குளம், சிறுவாணி உள்ளிட்ட அணைகள் விஷயத்தில் இனி தமிழகத்துக்கு உரிமையில்லை என்றுதான் அர்த்தம்கொள்ள வேண்டியிருக்கிறது.

தண்ணீரை தனியாருக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் ‘நீர்க்கொள்கையின் அடித்தளம்’ இந்தச் சட்டங்கள்தாம். இன்றைக்கு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் தண்ணீரை விநியோகிக்கும் உரிமை, சில பகுதிகளில் தனியாருக்குக் கொடுக்கப் பட்டுள்ளது. தண்ணீர்ப் பற்றாக்குறையால் அவதிப்படும் தமிழகத்தில் மட்டும், 3,299 தனியார் தண்ணீர் நிறுவனங்கள் உள்ளன. இவை, தண்ணீரை மட்டுமல்லாமல் குளிர்பானம் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடியவை. தமிழகத்தில் உள்ள எண்ணிக்கை, இந்தியா முழுவதும் உள்ள தனியார் தண்ணீர் விற்பனை செய்யும் நிறுவனங்களில் 18 சதவிகிதமாகும். அப்படியென்றால், தனியாரின் ஆக்டோபஸ் கரங்கள் எவ்வாறு நீண்டுள்ளன என்று நாமே கணக்கிட்டுக்கொள்ளலாம்.

அணை பாதுகாப்பு மசோதா பாதுகாப்பானதா?

இயற்கை நீதி பரிபாலனமுறைக்கு எதிராகவும் இந்தச் சட்டம் உள்ளது. இந்தச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்ய அல்லது நடவடிக்கை எடுக்க, மத்திய அணை பாதுகாப்பு ஆணையம் அல்லது மாநில அணை பாதுகாப்புக் குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இந்தச் சட்டத்தின்கீழ் விதிகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கும். மத்திய ஆணையத்தில் போதிய ஆள்கள் இல்லாமல் இருந்தாலும் இந்தச் சட்டவிதிகளை நடைமுறைப்படுத்துவதில் அல்லது ஆணையத்தின் ஆணைகளை நடைமுறைப்படுத்துவதில் எந்தக் குறுக்கீடும் இருக்காது என்கிறது இந்தச் சட்டம். இது மிகவும் அச்சுறுத்தக்கூடிய சட்டம். அரசின் பேச்சைக் கேட்கும் உறுப்பினர்களை மட்டும் வைத்துக்கொண்டு, வேறு உறுப்பினர்கள் இல்லாமல் அவர்கள் நினைக்கும் காரியங்களைச் செய்யவைக்க முடியும்’’ என்றார்.

மூத்த பொறியாளர் வீரப்பனிடம் பேசியபோது, ‘‘இந்தியாவில் ஏறத்தாழ 5,200 பெரிய அணைகள் உள்ளன. 450 அணைகள் புதிதாகக் கட்டப்பட்டும் வருகின்றன. இவை தவிர, ஆயிரக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர அணைகளும் உள்ளன. இவை அனைத்தின் பாதுகாப்புக்கும் ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்க, தேசிய அணை பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படுவதாகச் சொல்கிறது மத்திய அரசு.

நாட்டில் உள்ள பெரும்பாலான அணை களையும், அனைத்து மாநிலங்களும் பிரித்து நிர்வகித்துவருகின்றன. இப்போது மத்திய அரசின் மூன்று ஆணையங்கள் மூலமாக அணைகளை நிர்வகிக்கப்போகிறது. அனைத்து மாநிலங்களும் பிரித்துப் பராமரிக்கும் பொறுப்பை, மூன்று ஆணையங்களால் எப்படிச் செய்ய முடியும்? அதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் இதற்காக மூன்று கமிஷன்கள் அமைக்கப்படும். ஆனால், மாநிலம் சொல்லும் அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அணை பாதுகாப்பு ஆணையம் நிறைவேற்றிவிடாது. இது, மொத்தமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான வேலைதான்.

`ஒரு மாநிலத்துக்குள் இருக்கும் அணைகள், இனி அந்த மாநிலத்துக்கே சொந்தம்’ என அணை பாதுகாப்பு மசோதா சொல்கிறது. அப்படிப் பார்த்தால், தமிழகத்தின் பராமரிப்பில் இருக்கும் முல்லை பெரியாறு, பெருவாரிப்பள்ளம், பரம்பிக்குளம், சிறுவாணி உள்ளிட்ட அணைகள் விஷயத்தில் இனி தமிழகத்துக்கு உரிமையில்லை என்றுதான் அர்த்தம்கொள்ள வேண்டியிருக்கிறது. இனி முல்லை பெரியாற்றில் தண்ணீர் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என மத்திய அரசுதான் தீர்மானிக்கும். அதேபோல ஏற்கெனவே உள்ள 142 அடியை 136 அடியாக மத்திய அரசும் கேரள அரசும் குறைக்கும் வாய்ப்பும் இருக்கிறது’’ என்றார்.

‘‘இந்தியாவில் அணை பாதுகாப்பு குறித்த சட்டபடியான அமைப்புரீதியிலான நிறுவனங்கள் இல்லாததால், அணை பாதுகாப்பு கவலையளிக்கும் பிரச்னையாக உள்ளது. பாதுகாப்பற்ற அணைகள் ஆபத்தானவை. அணை உடைப்பால் பேரிடர்கள் ஏற்பட்டு, உயிரிழப்பும் சொத்து இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்காகத்தான் இதை முன்மொழிகிறோம்’’ என்கிறது மத்திய அரசு. ஆனால், மாநிலங்களின் உரிமையில் இந்த மசோதா நேரடியாகத் தலையிடுகிறது எனக் குற்றம்சாட்டுகின்றன பல்வேறு மாநில அரசுகள்.

மசோதா என்ன சொல்கிறது?

நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், ஒரே சீரான அணை பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க இந்த மசோதா உதவும். அணைகளிலிருந்து பயன்களைப் பெறும்வகையில், அவற்றின் பாதுகாப்பை இது உறுதிசெய்கிறது. இந்தியாவின் முன்னணி நிபுணர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்களுடன் விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகே, இந்த மசோதாவின் வரைவு இறுதி செய்யப்பட்டதாகச் சொல்கிறது மத்திய அரசு.

அணை பாதுகாப்பு மசோதாவையொட்டி, தேசிய அணை பாதுகாப்புக் குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழு, அணை பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்கி, இதற்கென தேவைப்படும் வரைமுறைகளைப் பரிந்துரை செய்யும். தவிர, மாநில அரசுகள், மாநில அணை பாதுகாப்புக் குழுக்களை அமைத்துச் செயல்படவும் மசோதா வகைசெய்கிறது.