அலசல்
அரசியல்
கார்ட்டூன்
Published:Updated:

“ரத்தம் சிந்திப் பெற்ற உரிமைகள்... பறிப்பது தகுமோ?”

தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள்

இந்தச் சட்டத்தால் நம் நாட்டில் நிரந்தர தொழிலாளர்களே இல்லாத நிலை ஏற்பட்டுவிடும் ஆபத்து உள்ளது.

ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் ரத்தம் சிந்தப் போராடிப் பெற்ற உரிமைகளை ஒழித்துக்கட்டுவது நியாயமா என்ற கேள்வி, மத்திய பா.ஜ.க அரசை நோக்கி வீசப்படுகிறது.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை ஒழித்துக்கட்ட மத்திய பா.ஜ.க அரசு முயற்சி செய்வதாக எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் கடந்த சில ஆண்டுகளாகக் குற்றம்சாட்டிவந்தன. இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன், தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளில் முழுவீச்சாக இறங்கியுள்ளது மோடி அரசு. இந்தச் சட்டங்கள் ஒன்றும் சும்மா வந்துவிடவில்லை. எண்ணிலடங்கா போராட்டங்கள், வேலையிழப்புகள், உயிர்த் தியாகங்கள் என மிகப்பெரிய ரணங்களைச் சுமந்துதான் இந்தச் சட்டங்கள் வந்தன.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆலைத் தொழிலாளர்களுக்கு பணி வரைமுறை எதுவும் கிடையாது. இந்தியாவில் இயங்கிய மற்ற எல்லா ஆலைகளையும்போலவே, சென்னையில் இயங்கிவந்த பின்னி ஆலையிலும் கடுமையான உழைப்புச் சுரண்டல் இருந்தது. பிரிட்டிஷ் ராணுவத்தி னருக்குத் தேவையான சீருடைகள் பின்னி ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டன. தொழிலாளர்களுக்கு முறையான வேலைநேரமோ, முறையான ஊதியமோ, வார விடுமுறையோ கிடையாது. இரவு, பகல் பாராமல் வேலைசெய்ய அவர்கள் நிர்பந்திக்கப் பட்டனர். அதனால், கடும் கொந்தளிப்பான மனநிலையில் தொழிலாளர்கள் இருந்தனர். கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்று ஒரு தொழிலாளி கேட்டபோது, அனுமதி மறுக்கப் பட்டது. வேறுவழி இல்லாமல் பணியிடத் திலேயே அவர் மலம் கழித்துவிட்டார். ஆத்திர மடைந்த நிர்வாகம், அந்தத் தொழிலாளியை வைத்தே மலத்தை அள்ள வைத்தது. அந்தச் சம்பவம், தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை அதிகரித்தது.

பல தொழிற்சாலைகளில், உரிமைகள் மறுக்கப்பட்ட தொழி லாளர்கள் அவ்வப்போது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தச் சமயத்தில் 1917-ல் ஏற்பட்ட ரஷ்யப் புரட்சி, இந்தியத் தொழிலாளர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது. ஆசியாவிலேயே முதல் தொழிற்சங்கமான ‘சென்னை தொழிலாளர் சங்கம்’ 1918-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1919, 1920 ஆகிய ஆண்டுகளில் பின்னி ஆலைத் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர். காவல்துறை துப்பாக்கிச்சூடு வரை போனது. அதில், இரு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

தொழிலாளர் சட்டங்களில்  மாற்றங்கள்
தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள்

அந்தக் காலகட்டத்தில் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன. பல இழப்புகளையும் தாக்குதல் களையும் தொழிலாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்தப் போராட்டங்களின் விளைவாகத்தான், 1926-ம் ஆண்டு இந்தியத் தொழிலாளர் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து வார விடுமுறைச் சட்டம் (1942), குறைந்தபட்ச கூலிச் சட்டம் (1948), போனஸ் சட்டம் (1965) உள்பட தொழிலாளர் நலன்களுக்கான பல சட்டங்கள் அடுத்தடுத்து கொண்டு வரப்பட்டன.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இந்தச் சட்டங்களைத் திருத்துவதற்கு, 2014-ல் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க முயற்சி மேற்கொண் டது. எட்டு மணி நேரம் என இருக்கும் வேலைநேரத்தை, ஒன்பது மணி நேரமாக மாற்றப்போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. அது, தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. ‘தொழிலாளர் நலச் சட்டங்களை பா.ஜ.க அரசு ஒழித்துக்கட்ட முயற்சி செய்கிறது’ என்று குற்றம்சாட்டிய தொழிற்சங்கங்கள், போராட்டக் களத்தில் குதித்தன.

இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, தொழிலாளர் சட்டங்களைத் திருத்தும் நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளது மோடி அரசு. ஊதியம், தொழில் உறவுகள், சமூகப்பாதுகாப்பு, பணிச்சூழல் மற்றும் சுகாதாரம் என்று தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாகச் சுருக்கி, திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதைக் கண்டித்து இடதுசாரி எம்.பி-க்கள் நாடாளு மன்றத்தில் வெளிநடப்பு செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து தொழிற்சங்கத் தலைவர்களிடம் பேசினோம்.

“ரத்தம் சிந்திப் பெற்ற உரிமைகள்... பறிப்பது தகுமோ?”

‘‘தொழிலாளர் சட்டங்களில் மத்திய அரசு கொண்டுவரும் மாற்றங்கள், தொழிலாளர்களையும் தொழிற்சங்கங்களையும் கடுமையாகப் பாதிக்கும்’’ என்ற அச்சத்துடன் பேச ஆரம்பித்தார் சி.ஐ.டி.யூ சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன்.

‘‘இந்தச் சட்டத்தால் நம் நாட்டில் நிரந்தர தொழிலாளர் களே இல்லாத நிலை ஏற்பட்டுவிடும் ஆபத்து உள்ளது. இன்னோர் ஆபத்து என்னவென்றால், `100-க்கும் குறைவான தொழிலாளர் களைக் கொண்ட நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யவோ, நிறுவனங் களை மூடவோ அரசின் அனுமதியைப் பெற தேவையில்லை’ என்று தற்போது சட்டம் உள்ளது. இதையும் மாற்ற முயற்சி செய்கிறார்கள். அதாவது, 100 என்ற அந்த எண்ணிக்கையை 300 ஆக அதிகரிக்கிறார்கள். இது மிகப்பெரிய ஆபத்து. இதை, அரசு அறிவிப்பாணை மூலமாகவே செய்து கொள்ளலாம் என்று கொண்டுவருவது இன்னும் மோசம். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நாடாளுமன்றத்தில்தான் திருத்த வேண்டும். ஆனால், வெறும் அறிவிப்பாணை மூலமே திருத்த முடியும் எனக் கொண்டுவருவது, நாடாளுமன்ற ஜனநாயக முறையையே கேலிக்கூத்தாக்கும் விஷயம்” என்றார் ஏ.கே.பத்மநாபன்.

இதன் இன்னொருபுறத்தையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. தொழிலாளர் சட்டங் களை மாற்றுவதற்கு முந்தைய பா.ஜ.க ஆட்சியில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது கொண்டுவர உத்தேசிக்கப்பட்ட பல திருத்தங்களை மத்திய அரசு தற்போது கைவிட்டுள்ளது. இது தங்கள் போராட்டங் களுக்குக் கிடைத்த வெற்றி என்று தொழிற் சங்கங்கள் கருதுகின்றன.

“ரத்தம் சிந்திப் பெற்ற உரிமைகள்... பறிப்பது தகுமோ?”

இடதுசாரி தொழிற் சங்கத் தலைவரான ஆர்.இளங்கோவன், ‘‘ஒரு நிறுவனத்தில் 240 நாள்களுக்கு ஒருவர் பணியாற்றினால், அவரை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று தற்போது இருக்கும் சட்டத்தை மாற்றுகிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளராக வைத்துக்கொள்ளலாம் என்று கொண்டு வருகிறார்கள். இது, மிக மோசமான தொழிலாளர் விரோத நடவடிக்கை. அதேநேரம் நிரந்தரமான தொழிலாளிக்கு என்ன ஊதியமோ, என்ன பணியோ, என்ன சலுகைகளோ, அவை அப்படியே ஒப்பந்தத் தொழிலாளிக்கும் வழங்க வேண்டும் என்று இப்போது கொண்டு வருகிறார்கள். கெட்டதிலும் ஒரு நல்லது என்று இதைப் பார்க்கலாம். தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பதற்கு இதுவரை சட்டமே கிடையாது. அதற்கு இப்போது சட்டம் கொண்டு வருகிறார்கள். இது வரவேற்கக்கூடிய விஷயம்.

ஒரு நிறுவனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட சங்கங்கள் இருந்தால், அவற்றில் 75 சதவிகித உறுப்பினர் பதிவு எந்தச் சங்கத்துக்கு இருக்கிறதோ அந்தச் சங்கத்துக்குத்தான் நிர்வாகத்துடன் பேசுகிற உரிமை உண்டு என்று கொண்டுவருகிறார்கள். இதில், சங்கங்களின் உறுப்பினர் பதிவைச் சரிபார்ப்பது குறித்து அரசு முடிவுசெய்யும் என்கிறார்கள். இந்த முறையில் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, தொழிற்சங்களுக்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்தும் முறையை சட்டரீதியாகக் கொண்டுவர வேண்டும்.

முதல் ஐந்தாண்டுகால மோடி அரசு, தொழிலாளர் சட்டங்களை ஒழித்துக்கட்டுவதற்குத் தீவிரமாக முயற்சி மேற்கொண்டது. நாசகரமான அந்த நடவடிக்கைகளை தொழிலாளர்கள் தங்களின் உறுதிமிக்கப் போராட்டங்களால் தடுத்து நிறுத்தியுள்ளனர்’’ என்றார்.

தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஓரளவு பலன் கிடைத்துள்ளது. அதேநேரத்தில், தொழிலாளர் சட்டங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் திருத்தங்களால் உருவாகும் பிரச்னைகளை அவர்கள் எப்படி எதிர் கொள்ளப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

தொழிலாளர்களைச் சுரண்டும் தலைவர்கள்!

தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதுதான் தொழிற்சங்கத்தின் முதல் நோக்கம் என்றாலும், தொழிற்சங்கப் பெயரைப் பயன்படுத்தி, சுயலாபம் பார்ப்பவர்களும் இங்கு உண்டு. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆறுமுக நயினாரிடம் பேசினோம்.

‘‘தொழிலாளர் நலன்களைப் பாதுகாப்பதும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதும்தான் தொழிற்சங்கத்தின் முக்கியமான கடமை. இதற்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் தொழிற்சங்கங்கள் உள்ளன. அதேநேரத்தில், தொழிற்சங்கம் என்ற பெயரில் சக தொழிலாளர்களைச் சுரண்டுகிற, வேலை செய்யாமல் இருக்கிற தொழிற்சங்கத் தலைவர்களும் உண்டு. மத்திய, மாநில அரசுத்துறைகள், பொதுத்துறைகளில் பரவலாக இதைப் பார்க்க முடியும். குறிப்பாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் அரசியல் அதிகாரம் இருக்கிற தொழிற்சங்கத்தினரின் நடவடிக்கை மிக மோசம். எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்தக் கட்சியின் தொழிற்சங்கத்தினர் வேலை செய்வதில்லை. முன்பெல்லாம் மாநில அளவிலான, மாவட்ட அளவிலான முக்கிய தலைவர்கள்தான் அப்படி இருந்தனர். இப்போது, ஒவ்வொரு பஸ் டெப்போவின் ஆளுங்கட்சித் தொழிற்சங்க நிர்வாகிகளும் அப்படி ஆகிவிட்டார்கள்.

ஆளுங்கட்சியின் தொழிற்சங்கத்துக்கு ஜால்ராபோடும் சிறிய தொழிற்சங்கத்தினரும் வேலை செய்வதில்லை. அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் மட்டுமே இப்படி சுமார் 5,000 பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு ‘ஆன் டியூட்டி’ என்று நிர்வாகம் அனுமதி கொடுத்துவிடும். வேலை வாங்கித்தருவதாக, டிரான்ஸ்ஃபர் வாங்கித்தருவதாக சக தொழிலாளர்களிடம் பணம் வாங்குவார்கள். இப்படி பல முறைகேடுகளில் ஈடுபடும் இவர்களால் தொழிற்சங்கத்தின் நற்பெயருக்கு களங்கத்தையும் ஏற்படுத்துகிறார்கள். ஆகவேதான், தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலை ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்த வேண்டும் என்று எங்களைப் போன்றோர் சொல்லிவருகிறோம்’’ என்றார்.