அலசல்
சமூகம்
Published:Updated:

ஒன் பை டூ

சசிகாந்த் செந்தில், கரு.நாகராஜன்
News
சசிகாந்த் செந்தில், கரு.நாகராஜன்

“பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பிரதமர் தனது பணக்கார நண்பர்களின் பொருளாதாரத்தை அதிகரிக்கத் திட்டமிட்டு மேற்கொண்ட நடவடிக்கை” என்ற ராகுல் காந்தியின் விமர்சனம்

சசிகாந்த் செந்தில், மாநில ஒருங்கிணைப்பாளர், காங்கிரஸ்

``உண்மையைப் பேசியிருக்கிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது ஆண்டாண்டு காலமாக இருக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால், ஒரு நாட்டின் பணத்தை, அரசே திரும்பப்பெற வலுவான காரணம் வேண்டும். ‘கறுப்புப் பணத்தை ஒழிப்பது, கள்ள நோட்டுகளை ஒழிப்பது, ஊழலை ஒழிப்பது ஆகிய மூன்று நோக்கங்களுக்காகவே இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கை’ என்றும், ‘நாட்டு மக்கள் தற்காலிகமாக சில இன்னல்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்’ என்றும் அப்போது சமாளித்தார் பிரதமர் மோடி. ஆனால், அவர் சொன்ன எதுவும் நடக்கவில்லை. ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளில் வரிசையில் நின்று, பலர் உயிரையேவிட்டார்கள். ஆனால், இந்தத் திட்டத்தின் தோல்வி குறித்து, பிரதமர் வாய் திறந்தாரா... இந்தியாவில் பெரும்பான்மையான வேலை வாய்ப்பை ஏற்படுத்தியது சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தான். இந்த நடவடிக்கையின் மூலம் அந்த நிறுவனங்களைச் சிதைத்து, நாடெங்கும் வேலையில்லா திண்டாட்டத்தை உண்டாக்கியிருக்கிறார்கள். நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் அடித்தளத்தை நாசமாக்கியிருக்கிறார்கள். அதேவேளையில், மோடியின் நண்பர்களான சில பணக்காரர்கள், பெரும் உலகப் பணக்காரர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை!’’

சசிகாந்த் செந்தில், கரு.நாகராஜன்
சசிகாந்த் செந்தில், கரு.நாகராஜன்

கரு.நாகராஜன், மாநில துணைத் தலைவர், பா.ஜ.க

``வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார். பண மதிப்பிழப்பு என்ற ஒற்றை நடவடிக்கையால் நாட்டிலிருந்த மொத்த கறுப்புப் பணமும், ஹவாலா பணமும் ஒழிக்கப்பட்டிருக்கின்றன. வருமான வரி செலுத்துவோரின் விகிதம் 1.5 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகிதமாக மாறியிருக்கிறது. 62 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஜி.எஸ்.டி பதிவுசெய்திருக்கின்றன. ஏறத்தாழ 70 ஆண்டுகளாக யாருமே செய்ய முடியாததை, பிரதமர் மோடி சாதித்துக் காட்டியிருக்கிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்த ஏழையும் பாதிக்கப்படவில்லை. அவர்களின் பணம் அனைத்தும் அவர்களுக்குத் திரும்பக் கிடைத்துவிட்டது. கொரோனா பேரிடரில், பெரும் வல்லரசு நாடுகளின் பொருளாதாரமே ஆட்டம் கண்டிருக்கும் நிலையில், உலகப் பொருளாதார நிபுணர்கள் ஆச்சர்யத்தில் இந்தியாவை வியந்து பார்க்கும் நிலை உருவாகியிருக்கிறது. நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தியிருக்கிறோம். பண விரயத்தைக் கட்டுப்படுத்தி வருவாயை அதிகரித்திருக்கிறோம். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் ராகுல் காந்தி தொடர்ந்து பொய் பேசிவருகிறார். அவர் சொல்வதை யாரும் நம்பத் தயாராக இல்லை.’’