Published:Updated:

என்.ஐ.ஏ விவகாரத்தில் இரட்டை வேடம்... எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் ஸ்டாலின்?

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க-வின் இரட்டை வேடத்தை சுட்டிக்காட்டுகிறார் ஸ்டாலின். ஆனால், என்.ஐ.ஏ விஷயத்தில் அவரே இரட்டை வேடம்தான் போட்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு ஓங்கி ஒலிக்கிறது.

Stalin
Stalin

''மக்களை ஏமாற்றுவதற்குப் பதிலாக ஓ.பி.எஸ்.ஸும், ஈ.பி.எஸ்.ஸும் பா.ஜ.க-வில் சேர்ந்துவிடலாம்''.

''இனி உங்களுக்கு அ.தி.மு.க என்ற பெயர் எதற்கு?''

'‘பி.ஜே.பி-யின் மறுபதிப்பாக அ.தி.மு.க மாறிவிட்டது.’'

“பதவிக்காக எதையும் செய்வதா?”

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

- இவையெல்லாம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் உதிர்த்த முத்துகள். 'முத்தலாக்’ மசோதாவில் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு மாறியபோது வெளியிட்ட அறிக்கையில், இப்படிக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் ஸ்டாலின்.

''அ.தி.மு.க-வின் இரட்டைத் தலைமையின் இரட்டை வேடம்'' என அந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார். அதோடு, வேலூர் தேர்தல் பிரசாரத்திலும் இதனை முழங்கியிருக்கிறார். அப்படிச் சொல்ல ஸ்டாலினுக்குத் தகுதி இருக்கிறதா என்று கேட்கிறார்கள் ஆளும்கட்சியினர். ஏன் எழுகிறது இந்தக் கேள்வி?

என்.ஐ.ஏ.
என்.ஐ.ஏ.

'முத்தலாக்' விவகாரத்தில் இரட்டைவேடம் போடும் அ.தி.மு.க-வை வெளுத்துவாங்கிய ஸ்டாலின், தேசியப் புலனாய்வு முகமை என்கிற என்.ஐ.ஏ விஷயத்தில் செய்தது என்ன... அதுவும் அப்பட்டமான இரட்டை வேடம்தான்.

''வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற அமைப்புகளை அரசியல் மயமாக்கியதுபோல், என்.ஐ.ஏ-வையும் பா.ஜ.க அரசு தனது கட்சி அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துவதை தி.மு.க கண்டிக்கிறது'' என்று சொல்லியிருக்கிறார், ஸ்டாலின். பழைய வரலாறுகளை ஸ்டாலின் மறந்துவிட்டாரா அல்லது மறைத்துவிட்டாரா எனத் தெரியவில்லை. அப்போது என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியில் தொடர்ச்சியாக பத்தாண்டுகள் தி.மு.க அங்கம் வகித்தது. அமைச்சரவையிலும் பங்கேற்றது. அந்தக் காலகட்டத்தில்தான், என்.ஐ.ஏ-வை உருவாக்குவதற்காக 2008-ம் ஆண்டு சட்டம் இயற்றினார்கள். 'இந்தியாவில் எங்கு சென்றும் விசாரணை நடத்தலாம்' என்கிற அதிகாரம் என்.ஐ.ஏ-வுக்கு வழங்கப்பட்டு, 2009-ம் ஆண்டில் என்.ஐ.ஏ அமைக்கப்பட்டது. இந்தச் சடங்குகள் நடக்கும்போதெல்லாம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த தி.மு.க, அதை ஆதரித்துக்கொண்டிருந்தது.

அப்போது, தமிழகத்தில் தி.மு.க ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. கருணாநிதி முதல்வராகவும் ஸ்டாலின் துணை முதல்வராகவும் இருந்தார்கள். அப்போது, என்.ஐ.ஏ தமிழகத்தில் நுழைந்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தது. என்.ஐ.ஏ-வின் செயல்பாட்டை இன்றைக்கு விமர்சிக்கும் ஸ்டாலின், அன்றைக்கு மௌனமாக இருந்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
விகடன்

அந்த ஸ்டாலின் இப்போது என்ன சொல்கிறார்... ‘‘தமிழகத்தில் உள்நாட்டு பாதுகாப்பிற்கு எனத் தனியாக ஒரு பிரிவு டி.ஜி.பி அலுவலகத்தில் இருக்கிறது. அதோடு, 'க்யூ பிராஞ்ச்' என்கிற தனிப்பிரிவும் இருக்கிறது. இவை முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஆனால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் துறையையும் மீறி, என்.ஐ.ஏ-வைத் தமிழகத்தில் அனுப்பி, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்து, இஸ்லாமியர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் போல் சித்தரிக்கும் அபாயகரமான போக்கை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்'' என்று சொல்கிறார் ஸ்டாலின்.

பத்தாண்டுகளுக்கு முன்பு மட்டுமல்ல... இப்போதும்கூட என்.ஐ.ஏ விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டிருக்கிறது தி.மு.க. என்.ஐ.ஏ சட்டத்தில் நான்கு திருத்தங்களைச் செய்வதற்காகச் சட்ட மசோதா சில நாள்களுக்கு முன்பு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை தி.மு.க முழுமையாக ஆதரித்ததோடு நிற்காமல், அந்த சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களிக்கவும் செய்தது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

நாடாளுமன்றத்தில் என்.ஐ.ஏ-வுக்கு ஆதரவாக வாக்களிக்கச் சொல்லிவிட்டு, ''தமிழகத்தில் என்.ஐ.ஏ-வை அரசியலுக்காகப் பயன்படுத்துவது தொடர்ந்தால், நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்கள் உரிய வகையில் கடுமையான முறையில் ஜனநாயக வழிகளில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்'' என்கிறார், ஸ்டாலின். ஸ்டாலினிடமிருந்து இப்படி அறிக்கை வெளியானதற்குக் காரணம், வேலூர் தேர்தல் காய்ச்சல்தான். வேலூர் தொகுதி தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகள் பறிபோய்விடும் என்கிற பதற்றம்தான் இப்படி ஸ்டாலினைப் பேசவைத்திருக்கிறது.

என்.ஐ.ஏ சட்டத் திருத்தத்துக்கு, ஆளும் பி.ஜே.பி-யைவிட தி.மு.க.தான் தீவிரமாக வக்காலத்து வாங்கியது. அந்த சட்டத் திருத்தத்தை ஆதரித்துப் பேசியதற்கான காரணத்தை தி.மு.க குறிப்பிட்டபோது, ''என்.ஐ.ஏ சட்டம் புதிதாக இப்போதுதான் கொண்டுவரப்படுவது போலவும் மாநில உரிமைகள் பறிக்கப்படுவது போலவும், சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமைகளை மறுக்கும் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது போலவும், கொடூரமான வரம்பற்ற அதிகாரங்கள் காவல் அதிகாரிகளுக்குப் புதிதாக அளிக்கப்பட்டுள்ளது போலவும், வேண்டுமென்றே திரித்து செய்திகளைப் பரப்புவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என்றது.

‘ஸ்டாலின் - கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு!’ - வேலூரில் மீண்டும் தேர்தலை நிறுத்த திட்டமா?

''தமிழகத்தில் பி.ஜே.பி எப்படியாவது காலூன்றி அரசியல் செய்ய விரும்பினால், மக்களின் மேலான ஆதரவைப் பெறுவதற்கு நேர்மையான ஜனநாயக வழிகள் பல திறந்தே இருக்கின்றன. அதைத் தவிர்த்து, சிறுபான்மை சமுதாயத்தினரை ஒட்டுமொத்தமாகப் பயங்கரவாதிகளாகச் சித்திரித்து, அதன் மூலம், பா.ஜ.க-வை விதைக்கலாம் என்ற நோக்கில் தமிழகத்தில் என்.ஐ.ஏ-வைப் பயன்படுத்துவது மத்திய அரசுக்கு எவ்விதத்திலும் அழகல்ல'' என்று சொல்கிறார் ஸ்டாலின்.

என்.ஐ.ஏ சட்டத்தைக் கொண்டுவந்தபோதும் அது உருவாக்கப்பட்டபோதும் அமைதியாக இருந்துவிட்டு, என்.ஐ.ஏ சட்டத் திருத்தத்தையும் ஆதரித்துவிட்டு, இப்போது எதிர்த்து அறிக்கைவிடுவதும்கூட ஸ்டாலினுக்கு அழகல்ல.

முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு பற்றி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டபோது, கடைசி பாராவில் சொன்ன விஷயம், அப்படியே ஸ்டாலினுக்குப் பொருந்தும்.

''தமிழகத்தில் ஒரு நாக்காகவும், நாடாளுமன்றத்தில் இன்னொரு நாக்காகவும் செயல்பட்டு, தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமியையும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில், இந்த இரட்டையரின் கபடவேடங்களைப் பார்க்கும் எவருக்கும், இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்று 'மலைக்கள்ளன்' திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் பாடிய பாடல் நிச்சயம் நினைவுக்கு வரும்''.

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?