Published:Updated:

`அந்த அமைச்சர் என் கனவில் வந்தார்!’- அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் பேரவையில் சிரிப்பலை

கலிலுல்லா.ச

அமைச்சர் தங்கமணி என் கனவில் வந்தார் என தி.மு.க எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூற சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

தமிழக சட்டப்பேரவை மானியத்தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு துறை சார்ந்த மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். அந்தவகையில் இன்று மின்சாரம் மதுவிலக்கு உள்ளிட்ட துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய தி.மு.க எம்.எல்.ஏ, அன்பில் மகேஷ், ``இந்தியாவிலேயே இளைஞர் அணியை முதன்முதலாக கொண்டு வந்தது தி.மு.க தான். இன்று இளைஞர் அணிச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள என் ஆருயிர் நண்பன் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்
திமுக

மேலும், கஜா மற்றும் ஓக்கி புயலின்போது சிறப்பாக பணியாற்றிய மின்சார ஊழியர்களுக்கு நன்றி. மின்சாரத்துறை மீதான விவாதத்தில் நான் பேச வேண்டும் என நான் முடிவு செய்த நிலையில், நேற்று இரவில் என் கனவில் அமைச்சர் தங்கமணி வந்தார். அவர், ஆக்ரோஷமாக என்னுடன் விவாதித்தார்” என்றவுடன் அவையில் சிரிப்பலை எழுந்தது.

சிறிது நேரம் கழித்து இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, ``நான் அவையில் அரசின் கருத்துகளை அழுத்தந்திருத்தமாக கருத்துகளை முன்வைப்பேனே தவிர, ஆக்ரோஷமாக பேசியதில்லை” என்றார். இதையடுத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `அன்பில் மகேஷ் அமைதியாகவும், கன்னியமாகவும், பேசி பிரச்னையை மட்டும் பேசிப்பெறுபவர். அப்படியிருக்கும்போது, அமைச்சர் தங்கமணி தன்னுடயை கனவில் வந்ததாக கூறுவது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது” என்றார்.

தங்கமணி
தங்கமணி

முன்னதாக அவையில் நடந்த விவாதத்தின்போது, பேசிய முதல்வர், ` தி.மு.க உறுப்பினர் அவர்களது கட்சித் தலைவர்களைப் பற்றி பேசுவது தவறில்லை ஆனால், குனிந்து பதவியை பெற்றார்கள் என எங்களைப் பற்றி பேசக் கூடாது” என்றார். உடனே ஓ.பி.எஸ், `` செந்தில் பாலாஜி குனிந்து குனிந்து பதவி வாங்கிய படங்கள் என்னிடம் உள்ளன . காட்டட்டுமா ?” எனக் கூற, ஸ்டாலின், ``நீங்கள் தவழ்ந்து தவழ்ந்து பதவி வாங்கிய வீடியோக்கள் நிறைய என்னிடம் உள்ளன காட்டட்டுமா ?” என்று செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக கொதித்தார்.