Published:Updated:

ஆர்.கே.சுரேஷ், தீனா... பிரபலங்கள் பா.ஜ.க-வில் இணைகிறார்களா... இணைக்கப்படுகிறார்களா?

ராதாரவி, பொன்.ராதாகிருஷ்ணன், தீனா
ராதாரவி, பொன்.ராதாகிருஷ்ணன், தீனா

இசையமைப்பாளர் தீனா பா.ஜ.க-வில் இணைந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த நடிகர் ராதாரவியும் இருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இயக்குநர் பாலாவின் ‘தாரைதப்பட்டை’ படத்தில் வில்லனாக நடித்தவர் ஆர்.கே.சுரேஷ். திரைத்துறையில் விநியோகஸ்தராக அடியெடுத்த வைத்த இவர், பல படங்களைத் தயாரித்துள்ளார். பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துவருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.க-வில் அவர் இணைந்தார்.

அடுத்த சில நாள்களில் இசையமைப்பாளர் தீனா பா.ஜ.க-வில் இணைந்தார். சித்தி, அண்ணாமலை, மெட்டி ஒலி உட்பட பல தொலைக்காட்சித் தொடர்களுக்கும், திருடா திருடி, திருப்பாச்சி உட்பட ஏராளமான திரைப்படங்களுக்கும் இசையமைத்திருப்பவர் தீனா. இவர், தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். விஜயதசமியன்று தி.நகரில் உள்ள பா.ஜ.க-வின் மாநிலத் தலைமையகமான கமலாலயம் சென்று பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார் தீனா.

பா.ஜ.க-வில் தீனா இணைந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நடிகர் ராதாரவியும் இருந்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. தி.மு.க-வில் இருந்துவந்த ராதாரவி சில மாதங்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா பற்றி ஒரு கமென்ட் அடித்தார் என்று சர்ச்சை எழுந்தது. அதனால், தி.மு.க-விலிருந்து அவரை நீக்குவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அதன் பிறகு அ.தி.மு.க-வில் இணைந்தார் ராதாரவி. தற்போதும் அவர் அ.தி.மு.க-வில்தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீனா
தீனா

“திடீர்னு அரசியல் பிரவேசத்துக்கு என்ன காரணம்?” என்ற கேள்வியை இசையமைப்பாளர் தீனா முன்பாக வைத்தோம். “எனக்குள் இருந்த அரசியல் சிங்கம் முழிச்சிருச்சு...” என்று ஜாலியாகப் பேச ஆரம்பித்தார்.

“இந்துக்களுக்கு மிகவும் மரியாதை கொடுக்கிற கட்சி என்பதால், எப்போதுமே பி.ஜே.பி மீது எனக்கு மரியாதை உண்டு. சமீபத்தில், பி.ஜே.பி-யில் இணையுமாறு எனக்கு அழைப்பு வந்தது. அது மரியாதைக்குரியதாகவும் இருந்தது. திரைத்துறையில் இசையமைப்பாளராக இருக்கும் எனக்கு, தேசத்தை ஆளக்கூடிய, அதுவும் நான் மதிக்கிற ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆகவே, பி.ஜே.பி-யில் சேருவது என்று முடிவுசெய்தேன்.

பொன்னார் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் பேச்சுகளை நிறைய கேட்டிருக்கிறேன். அத்திவரதர் பற்றி அவர் எழுதிய பாடல் ஒன்று வைரலாகியிருந்தது. எனக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்துவிட்டது. நான் காஞ்சிபுரம் சென்று அத்திவரதரைச் சந்தித்துவிட்டு வந்த சமயத்தில், பொன்னார் அவர்கள் என்னை போனில் தொடர்புகொண்டு பேசினார். பா.ஜ.க-வுக்கும் எனக்குமான உறவு மேலும் அதிகரித்தது.

தீனா
தீனா

விஜயதசமியன்று கட்சியில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். அதேபோல, பா.ஜ.க தலைவர்களும் நினைத்திருக்கிறார்கள். இதிலும் எங்களுக்கு ஒரே சிந்தனை இருந்திருக்கிறது. விஜயதசமியன்று கமலாலயம் சென்றேன். வெளியே வந்து என்னை பொன்னார் வரவேற்றார். அது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. நான் அலுவலகத்துக்குள் போனபோது அங்கு ராதாரவி சார் இருந்தார். அங்கு அவரைப் பார்த்தது எனக்கு சர்ப்பரைஸாக இருந்தது.

சமூகத்துக்கு நிறைய சேவைகள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். தனிமனிதராகச் செய்வதைவிட பா.ஜ.க மாதிரியான ஒரு பெரிய அரசியல் இயக்கத்தில் இணைந்ததால், அதை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நம்புகிறேன்” என்றார் தீனா.

பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.க-வில் தீனா இணைந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ராதாரவியும் இருந்ததைக் கண்டு, ‘பா.ஜ.க-வில் ராதாரவி இணைந்துவிட்டார்’ என்ற கிசுகிசு பரவியது.

ராதாரவி
ராதாரவி

இந்நிலையில், கராத்தே தியாகராஜனின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய ராதாரவி, ‘அன்புச் சகோதரர் ரஜினி முதல்வரானால் நான் அவருக்குப் பின்னால் நிற்கத் தயார்’ என்று பேசினார். இந்தப் பேச்சு அ.தி.மு.க-வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து நடிகர் ராதாரவியிடம் கேட்டோம். “பொன்னார் அவர்கள் எனக்கு நல்ல நண்பர். அவரை நான் அடிக்கடி சந்திப்பது உண்டு. அது வழக்கமான ஒன்றுதான். பா.ஜ.க-வில் இசையமைப்பாளர் தீனா இணைந்தபோது, எதேச்சையாக அங்கு நான் இருந்தேன். சகோதரர் ரஜினிகாந்த் குறித்து நான் பேசியதைப் பொறுத்தவரையில், நான் அ.தி.மு.க என்றால் அவர் பா.ஜ.க. இரண்டும் ஒரே கூட்டணிதானே...” என்றார்.

பா.ஜ.க-வில் இணைந்துள்ள நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் பேசினோம். “என் அப்பா சிவசேனாவின் மாநிலத் தலைவராக இருந்தவர். அவரைப் பார்த்து வளர்ந்ததால் எனக்கும் அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டது. எல்லா கட்சிகளின் தலைவர்களுடனும் நன்றாகப் பழகக்கூடியவன் நான். பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, அது என் கொள்கை சார்ந்து ஒரு கட்சி. எனவே, அதில் என்னை இணைத்துக்கொண்டேன். எனக்கு 38 வயதாகிறது. இதுதான் அரசியலில் துடிப்புடன் செயல்படுவதற்கான காலம்.

பா.ஜ.க-வில் இணைந்த ஆர்.கே.சுரேஷ்
பா.ஜ.க-வில் இணைந்த ஆர்.கே.சுரேஷ்

பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவை, கிராமங்கள் வரை போய்ச்சேர்ந்துள்ளன. ஆனால், அந்த விஷயம் வெளியே தெரியாமல் மறைக்கப்படுகிறது. ஆகவே, திரையுலகத்தைச் சேர்ந்த என்னைப் போன்றவர்கள் அவற்றை எடுத்துச்சொன்னால் மக்களிடம் போய்ச்சேரும் என்று நம்புகிறேன்” என்றார்.

பா.ஜ.க தேர்தல் அறிக்கை: செய்த ஐந்தும், செய்யப்போகும் ஐந்தும் செய்யவேண்டிய பத்தும்! #BJPManifesto2019
அடுத்த கட்டுரைக்கு