Published:Updated:

திருப்பத்தூர்: '4 நோயாளிகள் மரணம்; ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமா?'- அரசு மருத்துவமனை விளக்கம்

திருப்பத்தூர்
திருப்பத்தூர்

`எங்கள் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இருப்பு உள்ளது. இரண்டு ஆக்ஸிஜன் டேங்க்குகள் இருக்கின்றன. நேற்றுகூட அதில் ஆக்ஸிஜன் நிரப்பியிருக்கிறோம்.’

திருப்பத்தூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்தநிலையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை ஒரு பெண் உட்பட நான்கு நோயாளிகள் அடுத்தடுத்து மரணமடைந்துள்ளனர். இவர்களின் மரணத்துக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடுதான் காரணம் என்று உறவினர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோவிட் வார்டு
கோவிட் வார்டு

இந்தப் புகாருக்கு மருத்துவமனை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திலீபன், ‘‘ஆக்ஸிஜன் தட்டுப்பாடால் நான்கு நோயாளிகளும் மரணமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி உண்மைக்குப் புறம்பானது. எங்கள் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இருப்பு உள்ளது. இரண்டு ஆக்ஸிஜன் டேங்க்குகள் இருக்கின்றன. நேற்றுகூட அவற்றில் ஆக்ஸிஜன் நிரப்பியிருக்கிறோம். மருந்து தட்டுப்பாடும் ஏற்பட்டதில்லை. கோவிட் தொற்றாளர்கள் மட்டும் 216 பேர். 160-க்கும் மேற்பட்ட படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது, உயிரிழந்த நான்கு நோயாளிகளும் கொரோனா நெகட்டிவ் உள்ளவர்கள்.

ஆக்ஸிஜன் டேங்க்குகள்
ஆக்ஸிஜன் டேங்க்குகள்

மூளைப் பிரச்னை, மாரடைப்பு போன்ற வெவ்வேறு காரணங்களால் அவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள். ஒரே நேரத்தில் அவர்கள் இறக்கவில்லை. கொரோனா பாசிட்டிவ் கேஸிலும் உயிரிழப்புகள் குறைவாகத்தான் இருக்கின்றன. நான்கைந்து நாள்கள் தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றுவிட்டு, உடல்நிலை மிக மோசமான பிறகு இங்கு அழைத்துவரப்படும் நோயாளிகளையும் அனுமதித்து உரிய சிகிச்சைகளை அளிக்கிறோம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு