Published:Updated:

``இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு கருத்துரிமை கிடையாதா'' - சட்டம் சொல்வது என்ன?

குடியுரிமை திருத்தச் சட்டம் மிகப்பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது. இந்த நிலையில், இலங்கைத் தமிழர்களுக்கு இதைப்பற்றி கருத்து தெரிவிக்க, கருத்துரிமை இருக்கிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள்
இலங்கைத் தமிழர்கள்

ஒரு மனிதன் கௌரவமாக வாழ்வதற்கான உரிமைகளை, அடிப்படை உரிமைகள் வழங்குகின்றன. ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றவாறு அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்டங்கள் இருக்கின்றன. அமெரிக்கா போன்ற வெகு சில நாடுகள் மட்டுமே கட்டுப்பாடுகளற்ற கருத்துச் சுதந்திரத்தை வழங்குகின்றன. சர்வதேச சட்டங்கள், உடன்படிக்கைகள் அனைத்துமே கருத்துரிமைக்கு நியாயமான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

constitution
constitution
jagran gosh

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் மிகவும் நீளமானது. நீண்ட விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு, தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 12 முதல் பிரிவு 35 வரை அடிப்படை உரிமைகளைப் பற்றி பேசுகின்றன. கருத்துரிமைக்கான கட்டுப்பாடுகளும் அதில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுமானால், ஒருவரின் கருத்துரிமையைப் பறிக்கும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம்:

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதைக் குறிக்கும் பிரிவு 14, உயிர் வாழ்வது மற்றும் தனிநபர் சுதந்திரத்தைக் குறிக்கும் பிரிவு 21, மத சுதந்திரத்தைக் குறிக்கும் பிரிவு 25 ஆகியவை அனைத்தும் நபர்களையும் குறிக்கின்றன. இவையெல்லாம் குடிமக்கள், குடிமக்கள் அல்லாதவர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.

இதுவே கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றைக் குறிக்கும் பிரிவு 19-ல் குடிமக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அரசியலமைப்புச் சட்டப்படி குடிமக்களுக்கு மட்டுமே கருத்துரிமை தொடர்பான அடிப்படை உரிமைகள் பொருந்தும் என்கிற விவாதம் இருக்கிறது. 

ஆனால், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் போன்ற உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்டங்கள் கருத்துரிமை என்பது அனைவருக்கும் பொருந்தும் என வரையறுக்கின்றன.

UDHR
UDHR

ஒருநாட்டின் மக்கள், மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுவர். குடிமக்கள், அகதிகள் (குடியுரிமை இல்லாமல் ஒரு நாட்டில் வசித்துவருபவர்கள்), சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள். இந்தியா, ஐ.நாவின் அகதிகள் உடன்படிக்கையில் கையெழுத்திடாததால், இங்குள்ள அனைவரும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகத்தான் பதிவு செய்யப்பட்டுள்ளனர். எனவே, இந்தியாவில் அகதி என்கிற அந்தஸ்தே கிடையாது என்பதே உண்மைநிலை.

அமெரிக்கா – ஈரான் போர்மேகம்...

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் சேர்க்கப்படாதது இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை கோரிக்கையை மீண்டும் உயிர்பெறச் செய்தது. குடியுரிமைச் சட்டம் தொடர்பாக முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களின் கருத்துகளைக் கேட்கச் சென்ற விகடன் நிருபர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் உள்ளவர்கள், அரசின் கண்காணிப்பிலேயே இருப்பதால், அவர்களின் கருத்துகளைக் கேட்க அரசின் முன்அனுமதி பெற வேண்டும் என்று சொல்லப்பட்டது.

இலங்கைத் தமிழ் மக்கள்
இலங்கைத் தமிழ் மக்கள்
Times of india

இலங்கைத் தமிழ் மக்களின் நிலை என்ன?

இந்தியாவில் வசித்துவரும் இலங்கைத் தமிழ் மக்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகத்தான் இந்திய அரசால் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு கருத்துரிமை இருக்கிறதா இல்லையா என்பது சமீபத்தில் விவாதப் பொருளாகியிருக்கிறது. 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இலங்கைத்  தமிழர்களுக்கு கருத்துரிமை என்பது சட்டப்பூர்வமாகக் கிடையாது. ஆனால், சர்வதேச சட்டங்களின்படி அவர்களுக்கு கருத்துரிமை இருக்கிறது. இந்த முரண்பட்ட சூழ்நிலையில், எது சரியானது என்கிற கேள்வி எழுந்துள்ளது.

`தேச விரோத முழக்கங்களை எழுப்புபவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்!’ - எச்சரிக்கும் அமித் ஷா

இதுபற்றி முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் அவரகள் பேசுகையில், "குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் கருத்துரிமை இருக்கிறது எனச் சர்வதேச சட்டங்கள் சொன்னாலும், அதை இந்தியா உட்பட எந்த நாடும் சரியாகப் பின்பற்றுவதில்லை என்பதே உண்மை. சர்வதேச சட்டங்களை உள்நாட்டில் சட்டப்பூர்வமாகச் செயல்படுத்த முடியுமா என்கிற கேள்வியும் அந்தச் சமயங்களில் எழும். இலங்கைத் தமிழர்கள் விஷயத்தைப் பொறுத்த வரை கருத்துரிமை அடிப்படையில் இதை எடுத்துக்கொள்ளாவிட்டாலும், அவர்களின் குடியுரிமை, இலங்கைக்கு திரும்பிச்செல்வது போன்ற கேள்விகள் தற்போது விவாதிக்கப்படுகின்றன. இது, அவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. எனவே, பிரிவு 21-ன் கீழாவது அவர்களின் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான உரிமை இருக்கிறது. இது, மிக நீண்ட விவாதத்துக்குட்பட்டது. சட்டப்பூர்வமாக இதைத் தீர்க்க வேண்டும். இல்லையென்றால் கருத்துரிமை தொடர்பான சிக்கல்கள் எழுந்துகொண்டே இருக்கும்" என்றார்.

அரிபரந்தாமன் -  ராமு மணிவண்ணன்
அரிபரந்தாமன் - ராமு மணிவண்ணன்

சென்னைப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் ராமு மணிவண்ணன் பேசுகையில், "இலங்கைத் தமிழர்களின் கருத்துரிமை இந்தியாவில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது கிடையாது. இதற்குப் பல விளக்கங்கள் கொடுப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. இந்திய அரசியலமைப்பில் உரிமைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தாலும், அதைப் பறிப்பதற்கான ஆயுதங்களும் அரசிடமே இருக்கின்றன. சட்டப்பூர்வமாக இல்லையென்றாலும் மனிதாபிபான அடிப்படையிலாவது அவர்களின் கருத்துரிமை என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடுபவர்களையே தேசத்துக்கு எதிரானவர்கள் என அரசு சொல்லிவருகிறது. இந்த அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?" என்றார்.