Published:Updated:

உபா சட்டத்திருத்தம்: காங்கிரஸின் திட்டத்தை பா.ஜ.க செயல்படுத்துகிறது!

மோகன் இ

"துப்பாக்கியால் தீவிரவாதம் உருவாவதில்லை, அது தீவிரவாதத்தைத் தூண்டுகிற இலக்கியங்களால், கொள்கைகளால்தான் இளைஞர்கள் மத்தியில் பரவுகிறது!” - அமித் ஷா

உபா சட்டத்திருத்தம்
உபா சட்டத்திருத்தம்

'ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 23 ஆண்டுகள் விசாரணைக் கைதியாக இருந்தவர் நிரபராதி என விடுதலை’ - இது சமீபத்திய செய்தி. `தடா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 11 முஸ்லிம் சிறைவாசிகள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, நிரபராதிகள் என நாசிக் நீதிமன்றத்தால் விடுதலை’ - இது மார்ச் மாதம் வந்த செய்தி. விசாரணைக் கைதிகளாக இந்தியச் சிறைகளில் நாள்களைக் கழிப்பவர்களின் நிலைமை உலகறிந்த துயரம். இது ஒருபுறமிருக்கட்டும்.

அமித் ஷா
அமித் ஷா

மறுபுறம், தற்போது பதவியேற்றுள்ள பி.ஜே.பி ஆட்சியின் முதலாவது நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே ஆர்.டி.ஐ சட்டத்திருத்தம், என்.ஐ.ஏ சட்டத்திருத்தம் ஆகியவற்றின் வரிசையில் சமீபத்தில் சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (1967) அல்லது உபா சட்டத்திருத்தம் வந்துள்ளது (Unlawful activities prevention act amendment). நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் உ.பா சட்டத்திருத்தம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, செலக்ட் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த காங்கிரஸ் கட்சி, உ.பா சட்டத்திருத்தத்தின் மீதான வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க, 147 - 42 என்கிற எண்ணிக்கையில் உபா சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு தற்போது ஜனாதிபதி ஒப்புதல்பெற காத்துக்கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

1967-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உபா சட்டம் 2004-ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் திருத்தப்பட்டது. 2004-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பொடா சட்டத்தின் கூறுகளை உபா சட்டத்தில் சேர்க்கவே இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக விமர்சிக்கப்பட்டது. உபா சட்டத்தின் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிற அமைப்புகளைச் சட்டவிரோதமானது என அறிவிக்கலாம். சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் தண்டனை வழங்கலாம்.

துப்பாக்கியால் தீவிரவாதம் உருவாவதில்லை. அது தீவிரவாதத்தைத் தூண்டுகிற இலக்கியங்களால், கொள்கைகளால்தான் இளைஞர்கள் மத்தியில் பரவுகிறது.
அமித் ஷா

உபா சட்டத்தின் 35 - 40 வரை உள்ள பிரிவுகள் தீவிரவாத அமைப்புகள் தொடர்பானது. இந்தப் புதிய சட்டத்திருத்தத்தின் மூலம் அமைப்பு (organization) என்பதுடன் தனிநபர் (individual) என்பதையும் சேர்த்து அமைப்பு/தனிநபர் (organisation/individual) எனத் திருத்தியுள்ளனர். முன்னர் ஒரு தனிநபர் தீவிரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருந்தாலோ, தொடர்புகொண்டிருந்தாலோ சட்ட விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தற்போது அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள அமைப்புகளுடன் எந்த விதத்திலும் தொடர்பு இல்லையென்றாலும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்கிற குற்றச்சாட்டோ/சந்தேகமோ ஏதாவது தனிநபர் மீது இருப்பதாக அரசு நம்பினாலே விசாரணையேயின்றி அவரைத் தீவிரவாதி என அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கான அதிகாரத்தை இந்தச் சட்டம் மத்திய அரசுக்கு வழங்கியிருக்கிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இந்தப் புதிய சட்டத்திருத்தத்தை அறிமுகப்படுத்தி நாடாளுமன்றத்தில் பேசுகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "துப்பாக்கியால் தீவிரவாதம் உருவாவதில்லை, அது தீவிரவாதத்தைத் தூண்டுகிற இலக்கியங்களால், கொள்கைகளால்தான் இளைஞர்கள் மத்தியில் பரவுகிறது” என்றார். இந்தப் புதிய சட்டத்திருத்தம் சமூக, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் விவாதப் பொருளாகியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சிதான் இதில் முக்கியக் குற்றவாளி. இத்தகைய சட்டங்களை அறிமுகப்படுத்தியது அவர்களே. அதை, பி.ஜே.பி மேலும் பரவலாக்குகிறது.
ஒவைசி, நாடாளுமன்ற உறுப்பினர்

புதிய சட்டத்திருத்தத்தின் மூலம் ஒருவர் தீவிரவாதி என அறிவிக்கப்படுகிறார் என்றால், அவர் அரசிடம் அறிவிப்பைப் பின்வாங்க மேல்முறையீடு செய்யலாம். அரசு அந்த மேல்முறையீட்டை நிராகரிக்குமேயானால் அரசால் நியமிக்கப்படும் மறுஆய்வுக் குழுவில் மேல்முறையீடு செய்யலாம். பின்னர், அந்தக் குழுவும் மேல்முறையீட்டை நிராகரிக்குமேயானால் பின்னர் நீதிமன்றம் சென்றுதான் விலக்கு பெற முடியும்.

அசாதுதின் ஒவைசி
அசாதுதின் ஒவைசி

நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்த்துப் பேசிய அசாசுதீன் ஒவைசி, "விடுதலைக்குப் பிறகு இந்தியாவில் தனிநபருக்குச் சுதந்திரம் மட்டுமல்லாமல் முறையான சட்ட நடைமுறை இருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் தீர்மானித்தனர். தற்போதைய அரசு அதைத் தகர்க்கிறது. நீதிமன்றம் என்னை விசாரித்து குற்றவாளி என அறிவித்தால் மட்டுமே நான் தீவிரவாதியாக முடியும். ஆனால், தற்போது நீதிமன்றத்தின் அதிகாரத்தை அரசே கையில் எடுத்துக் கொள்கிறது. முறையான விசாரணையின்றி யாரையும் குற்றவாளியென அறிவிப்பது சட்டவிரோதம் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் ஒருமுறை கூறியுள்ளது. அதற்கு எதிராக இந்தப் புதிய சட்டத்திருத்தம் உள்ளது. அரசு தனது விருப்பத்துக்கு யாரையும் தீவிரவாதியென அறிவித்தால் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டிய சுமை குற்றம்சாட்டப்பட்டவரின் மீது விழுகிறது. காங்கிரஸ் கட்சிதான் இதில் முக்கியக் குற்றவாளி. இத்தகைய சட்டங்களை அறிமுகப்படுத்தியது அவர்களே. அதை, பி.ஜே.பி மேலும் பரவலாக்குகிறது!” என்றார்.

பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்துப் பேசுகிற பல எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் இவர்கள் அனைவரும் எந்த அமைப்பையும் சார்ந்து இருப்பதில்லை.
திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

மே 17 அமைப்பைச் சேர்ந்த திருமுருகன் காந்தி பேசுகையில், “முறைப்படியான விசாரணை செய்ய வேண்டும் என்பது சர்வதேச மனித உரிமை. சர்வதேச மனித உரிமைச் சட்டங்களில் கையெழுத்திட்டுள்ள இந்தியா, அதற்கு எதிராக இந்தப் புதிய சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்துப் பேசுகிற பல எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் இவர்கள் அனைவரும் எந்த அமைப்பையும் சார்ந்திருப்பதில்லை. தங்களுடையஅரசியல் எதிரிகளை அல்லது சித்தாந்தரீதியாக விமர்சிப்பவர்களைக் குறிவைக்கத்தான் இந்தச் சட்டத்திருத்தம் எனப் பா.ஜ.க எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகவே அறிவித்தனர். மனித உரிமைச் செயற்பாட்டாளர்களைக் குறிவைக்கவே இந்தச் சட்டத்திருத்தம். வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பாலஸ்தீனத்ததுக்கு ஆதரவாகப் பேசியதாக என்மீது உபா சட்டம் போடப்பட்டது. ஆனால், எஃப்.ஐ.ஆரில் அவர்கள் குறிப்பிட்டிருந்த தேதியில் நான் சிறையில் இருந்தேன். இவ்வாறுதான் வழக்குகளைக் கையாள்கின்றனர்.

திருமுருகன்
திருமுருகன்

அப்பாவிகளைக் குறிவைத்ததாக மிகப்பெரிய எதிர்ப்புகள் கிளம்பியதால்தான் தடா சட்டத்தை நீக்க வேண்டியதாயிற்று. குற்றத்தைத் தடுக்க ஏற்கெனவே உள்ள சட்டங்கள், அமைப்புகளை எல்லாம் அர்த்தமற்றதாக்கி, சட்டம் - ஒழுங்கு என்பதையே மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் கொண்டு வருவதற்குத்தான் இந்தப் புதிய சட்டத்திருத்தம். என்.ஐ.ஏ மற்றும் உ.பா என இரண்டு சட்டங்களையும் சேர்த்துத்தான் பார்க்க வேண்டும். இதற்கு எதிராகத் தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஓர் அணியை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யத் தவறிவிட்டன. மக்கள் விரோதச் சட்டங்களை அனைத்துக் கட்சிகளும் அரசுகளும் கையாண்டுதான் வந்துள்ளன. இதனால் எந்த அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்படப்போவதில்லை. அரசு தனக்கு எதிரியென நினைப்பவர்களை முடக்குவதற்குத்தான் பயன்படும்” என்றார்.

குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்பதை 'Guilty until proven innocent' என நிரபராதியே நிரூபிக்கும் வரை குற்றவாளி என்பது சட்ட விசாரணையின் அடிப்படையையே மாற்றுவதாக அமைகிறது.
அரிபரந்தாமன், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி

"தனிநபர் சுதந்திரத்துக்கு மட்டுமல்ல அடிப்படை உரிமைகளுக்குமே எதிரானது இந்தச் சட்டம்" என விமர்சித்த முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், மேலும் அவர் பேசுகையில், "உபா சட்டத்தில் பதிவுசெய்யப்படுகிற வழக்குகளில் பெயில் பெற முடியாது. ஒரு குற்றச்சாட்டு எழுந்தால் விசாரணை அமைப்பு விசாரித்து, நீதிமன்றம் தீர்ப்பளிப்பதுதான் நடைமுறை. அதைத் தலைகீழாக அரசு மாற்றுகிறது. இதில் காங்கிரஸ் - பி.ஜே.பி மட்டுமல்லாமல் இதை ஆதரித்த அல்ல எதிர்ப்பு தெரிவிக்காத அனைத்து அரசியல் கட்சிகளுமே குற்றவாளிகள்தான். குரல் வாக்கெடுப்பில் தங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை அரசியல் கட்சிகள் உறுதியாக அறிவித்திருக்க வேண்டும்.

நீதிபதி அரிபரந்தாமன்
நீதிபதி அரிபரந்தாமன்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தேசத் துரோகப் பிரிவை நீக்கப்போவதாகப் பேசியதெல்லாம் போலியானதா? மக்கள் விரோத சட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே பக்கத்தில்தான் உள்ளன. முஸ்லிம் கட்சிகள் மற்றும் உறுப்பினர்கள் மட்டுமே இந்தச் சட்டத்தை எதிர்ப்பதான பிம்பத்தை உருவாக்குவதில் இவர்களுக்கும் பங்குண்டு. சகல அதிகாரங்களையும் அரசு தன்வயப்படுத்துவது ஆபத்தான போக்கு. இது, மாற்றுக்கருத்து கொண்ட யாரையெல்லாம் அரசு தனக்கு எதிரியாக நினைக்கிறதோ, அவர்களை ஒடுக்கவே பயன்படும். நாளை நீங்கள்கூடத் தீவிரவாதியென முத்திரை குத்தப்படலாம். அதை விசாரிக்கும் மறுஆய்வுக் குழுவுக்கான உறுப்பினர்களையும் அரசே நியமிக்கும் என்பது பிரச்னையை மேலும், சிக்கலுக்குரியதாக்குகிறது. இந்நிலையில் அரசே தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு செயல்படுவது அரசியலமைப்பின் அதிகாரப் பகிர்வைச் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்பதை 'Guilty until proven innocent' என நிரபராதியே நிரூபிக்கும் வரை குற்றவாளி என்பது சட்ட விசாரணையின் அடிப்படையையே மாற்றுவதாக அமைகிறது” என்றார்.

இந்தப் புதிய சட்டத்திருத்தத்தைப் பற்றி பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கே.டி.ராகவன், "1967-க்குப் பிறகு நிறைய சட்டத்திருத்தங்கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தைப் பார்த்து தீவிரவாதிகள்தான் பயப்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் ஏன் பயப்படுகிறார்கள் என்பது தெரியவில்லை.

கே.டி.ராகவன்
கே.டி.ராகவன்

நாட்டுக்கு எதிராகச் செயல்படக்கூடியவர்களைத் தீவிரவாதிகள் என அறிவிப்பதில் என்ன தவறு இருக்கிறது? சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படாது என உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் உத்தரவாதம் தந்திருக்கிறாரே. அதை நம்ப வேண்டும். நாட்டின் பாதுகாப்பு அவசியமானது; அதற்கெதிராகச் செயல்படும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதற்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது” என்றார்.