Published:Updated:

'மில்லியன் டு பில்லியன்... இந்தியா-சீனா வியாபாரங்களின் ஆச்சர்யங்கள்! - சோம வள்ளியப்பன்

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் நடந்துகொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், இந்திய - சீனத் தலைவர்களின் இந்த சந்திப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

மோடி - ஜின்பிங்
மோடி - ஜின்பிங்

`சீனா' தற்போது அதிக இந்தியர்களால் பேசப்படும் நாடாக உருவெடுத்திருக்கிறது. பொருளாதாரத்தில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடு. மக்கள்தொகையில் முதல் பெரிய நாடு. பொருளாதார வளர்ச்சி வேகத்தில் கடந்த பல ஆண்டுகளாக உலகத்தில் முதல் நிலையில் இருந்த நாடு. ஒரு சீன அதிபர் 63 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்திருக்கிறார். குறிப்பாகத் தமிழகம். அதிலும் சென்னைக்கு அருகில் இருக்கும் மாமல்லபுரத்துக்கு வருகை தந்திருக்கிறார். மோடியும், ஜி ஜின்பிங்கும் 6 மணிநேரம் பேசியிருக்கிறார்கள்.

மோடி மற்றும் ஜின்பிங்
மோடி மற்றும் ஜின்பிங்

தமிழக, இந்திய ஊடகங்கள் மட்டுமல்ல. உலகத்தில் இருக்கிற முக்கிய ஊடகங்களில் எல்லாம் இதைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது. இப்படி ஒரு சந்திப்புக்கு சீன அதிபர் ஒப்புக்கொண்டது, இந்திய ராஜதந்திரத்துக்கு, வெளியுறவுத் துறைக்கு, அரசாங்கத்துக்கு, பிரதமருக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லலாம். குறிப்பாக இந்தியப் பொருளாதாரத்தில் சுணக்கம் வருமோ என்று அச்சப்படுகிற சூழ்நிலையில் இப்படி ஓர் ஏற்றுமதி வாய்ப்பை உருவாக்கவல்ல சந்திப்பு என்பது, கோடையில் வந்த மழைபோல.

அமேசானை பற்றவைத்த அமெரிக்கா - சீனா 
வர்த்தகப் போர்!

இந்த நிகழ்வுக்கு பலமான எதிர்பார்ப்பு இருப்பது இயற்கையே. சீனாவின் நிலையை யோசித்துப் பார்த்தால், கடந்த 10, 20 ஆண்டுகளாக அமெரிக்க சந்தையை கைக்கொண்டு, வியாபாரம் செய்துவந்த அந்நாட்டுக்கு, அதிக வரி விதிப்புகள் செய்து, வர்த்தகத்தைக் குறைத்து, பெரும் குழப்பம் உண்டாக்கியிருக்கிறார் ட்ரம்ப். இந்தச் சூழ்நிலையில், அருகில் இருக்கும் இந்தியா என்ற மிகப்பெரிய சந்தை சீனாவின் கண்ணில் படாமல் இருக்குமா?

இந்திய-சீன வர்த்தகம் தொடங்கி பல ஆண்டுகளாகிவிட்டது. `நீ அவல் கொண்டு வா. நான் உமி கொண்டு வருகிறேன். இருவரும்  ஊதி ஊதிச் சாப்பிடலாம்’ என்பது போல சீனா அதிகமாக ஏற்றுமதி செய்துகொண்டும் இந்தியா அதிகமாக இறக்குமதி செய்துகொண்டும் வர்த்தகம் நடந்துகொண்டிருக்கிறது.

2017-18-ம் ஆண்டில் இந்தியாவின் இறக்குமதி, அது செய்யும் ஏற்றுமதியைவிட 60 பில்லியன் டாலர்கள் அதிகம். ஆனால், 2018-19-ம் நிதியாண்டில் டிரேட் டெஃபிசிட், 53 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அது சற்று குறைந்து தற்சமயம் 39.99 பில்லியன் டாலராக இருக்கிறது. ஆண்டு இறுதியில் அதிகரிக்கும்.
இந்தியா-சீனா
இந்தியா-சீனா

இந்தியாவின் மொத்த வர்த்தக பற்றாக்குறையில் சீனாவுடன் இருப்பது மட்டுமே மூன்றில் ஒரு பங்கு. இந்த நிலையில்தான் சீன - இந்தியப் பிரதமர்களின் சந்திப்பு நடந்திருக்கிறது. இந்தியாவுக்கு அதிக ஏற்றுமதி வாய்ப்பு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு இந்த சந்திப்பின் மூலம் உறுதியாகியிருக்கிறது. ஏற்கெனவே டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற இந்திய அரசின் திட்டங்களில், சீனா 8 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்ததும், நடந்துகொண்டிருப்பதும்!

1984-ம் ஆண்டு மோஸ்ட் பாவர்ட் நேஷன் என்கிற தகுதியை இந்தியாவும் சீனாவும் பரிமாறிக்கொண்டு வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டன. 1992-ல் இருநாடுகளுக்கும் இடையே விரிவான இரு நாட்டு வர்த்தக ஒப்பந்தம், `பை லாட்டரல் டிரேட் அக்ரிமென்ட்' போடப்பட்டது.

1994-ல் இரு நாடுகளுக்கும் இடையே இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இப்படியாக மெள்ள மெள்ள வளர்ந்த இந்திய-சீன வர்த்தகம், தற்சமயம் இந்தியா மிக அதிக அளவில் வெளிநாட்டு வர்த்தகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்துக்கு வந்துவிட்டது. ஆண்டுக்கு 105 பில்லியன் அமெரிக்க டாலர். கடந்த 10 ஆண்டுகளில் 4 மடங்கு வளர்ச்சி. 

Vikatan

வர்த்தகம் என்றால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி. இந்தியா சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யும் சீனப் பொருள்களின் மதிப்பு அதிகம். இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பு குறைவு. எனவே டிரேட் டெஃபிசிட், 2019-ல் கிட்டத்தட்ட 60 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது. இது மிக அதிகம்.

இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலிடத்தில் இருக்கிறது சீனா. ஆனால், இந்தியா ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில்தான் சீனா. அதாவது அதிகம் அனுப்பி, குறைவாகப் பெற்றுக்கொள்ளும் நாடு.

2006-ம் ஆண்டு இந்தியா மிக வேகமாக பல்வேறு நாடுகளுடன் ப்ரீ டிரேட் அக்ரிமென்ட்(FTA) கையொப்பமிட்டது. ஆனால், இவற்றால் எவ்வளவு பலன் என்று பெரிதாகச் சொல்ல முடியாது. காரணம், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 25 விழுக்காடு மட்டுமே இந்த FTA கையொப்பமிட்ட நாடுகளுக்குப் போகிறது. ஆனால், இதே நாடுகள் இந்தியாவுக்குள் தள்ளும் பொருள்களின் மதிப்பு மிக அதிகம். FTA -வில்  இறக்குமதியும் அனுமதிக்க வேண்டும் என்பதால், அந்த நாடுகளிலிருந்து உலோகங்கள், பால் பொருள்கள், மிளகு, ஏலக்காய், தேங்காய் எண்ணெய் போன்றவை குறைந்த விலைகளில் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி

அசோசியேஷன் ஆஃப் சவுத் ஏசியன் நேஷன் (ஏசியான்) என்ற அமைப்பில், புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் இருக்கின்றன. இந்த ஏசியான் நாடுகள் தவிர, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளையும் சேர்த்து ஓர் அமைப்பாக்கி, இந்த நாடுகளுக்குள் FTA போல, வரிகள் மற்றும் தடைகள் இல்லா வர்த்தகம் ஏற்றுமதி, இறக்குமதி செய்துகொள்ள முயற்சி நடக்கின்றது. அதன் பெயர், Regional Comprehensive Economic Partnership (RCEP).

இந்த ஏற்பாட்டை முனைந்து செய்வது சீனா. இந்த நாடுகளுடன் ஏற்கெனவே இந்தியா செய்துவரும் ஏற்றுமதி இறக்குமதியில் 63 மில்லியன் டாலர்கள் அளவுக்கு டிரேடு டெஃபிசிட் இருக்கிறது. இந்த நாடுகளுக்கு நாம் செய்யும் ஏற்றுமதி என்பது நமது மொத்த ஏற்றுமதியில் 20 சதவிகிதம்தான். ஆனால், இந்த நாடுகளில் இருந்து நாம் செய்துகொள்ளும் இறக்குமதி என்பது நமது மொத்த இறக்குமதியில் 35 சதவிகிதம். 

Vikatan

இந்தியாவை இந்த அமைப்புக்குள் இழுக்க முயற்சிகள் நடக்கிறது. இந்தியப் பிரதமர் அவ்வளவு சுலபமாக விட்டுக் கொடுக்கக் கூடியவராக தெரியவில்லை. இந்தியா இதுவரை இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஏற்றுக்கொண்டுவிட்டால், பிளாஸ்டிக் பொருள்கள், கெமிக்கல்ஸ், இரும்பு, இன்ஜினீயரிங் பொருள்கள், பால் பொருள்கள் போன்றவை இந்தியாவுக்குள் மேலும் அதிகமாக வரும் என்ற அச்சத்தை இந்திய வர்த்தக சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா-சீனா
இந்தியா-சீனா
அடுத்த 5 ஆண்டுகளில் ஏனைய உலக நாடுகளிலிருந்து சீனா மொத்தம் 3 லட்சம் கோடி டாலர்கள் அளவுக்குப் பொருள்களையும், 100 பில்லியன் டாலர் அளவுக்கு சேவைகளையும் இறக்குமதி செய்யப்போகிறது.

இதனால் இந்தியாவுக்குப் பல ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ் துறையில் வேகமாக முன்னேறி வருகிறது. சீனாவுக்குக் கல்வி நிறுவனங்கள் தேவை. மேலும், சீனாவுக்கு மென்பொருள் பொறியாளர்கள் தேவை. இந்தத் துறைகளில் இந்தியா கூடுதலாக ஏற்றுமதி செய்ய முயல்கிறது. அண்மையில் மாமல்லபுரத்தில் நடந்த இந்தச் சந்திப்பிலும் ஏற்றுமதி-இறக்குமதி திட்டங்கள் குறித்துப் பேசப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. 

இந்தியா-சீன உறவுகள் மேம்படட்டும்!