Published:Updated:

தாராளமயத்தின் 30 ஆண்டுகள் - 2: பொருளாதார சீர்திருத்தத்தின் கனவு நனவானதா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
1991 பொருளாதார சீர்திருத்தங்கள்
1991 பொருளாதார சீர்திருத்தங்கள்

“இந்தியாவுக்கு நிறைய கடன், அந்நியச் செலாவணி பற்றாக்குறை போன்ற நெருக்கடிகள். எனவே உலக வங்கி, ஐ.எம்.எஃப் ஆகியவற்றில் கடன் வாங்குவதால் அவர்கள் சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்றார்கள்.”

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"தாராளமயமாக்கலின் அசுரப் பாய்ச்சலில் இந்தியா நிகழ்த்தியது பெரும் சாதனை. 1991-ம் ஆண்டு இருந்ததைவிட 2021-ம் ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துவிட்டது. இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார சக்தியாக வளர்ந்திருக்கிறது'' என்கிறார்கள் தாராளமயத்தை ஆதரிப்பவர்கள்.

1991-ம் ஆண்டு 88 கோடியாக இருந்த இந்திய மக்கள்தொகை இப்போது 138 கோடியாக உயர்ந்திருக்கிறது. இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை சமாளித்து, அனைவருக்கும் அடிப்படைத் தேவைகளை அளிப்பது பெரிய சவால். ஓரளவுக்கு அதை சாதித்திருக்கிறோம்.

தாராளமயத்தின் 30 ஆண்டுகள் - 1: நரசிம்ம ராவ் - மன்மோகன் சிங் கூட்டணியும், பொருளாதார சுதந்திரமும்!

1991-ல் வெளிநாடுகளுக்குத் தர வேண்டிய பணத்தைத் திரும்ப செலுத்த முடியாமல் தவித்தது இந்தியா. மூன்று வாரங்களுக்கான இறக்குமதிக்கே அந்நியச் செலாவணி கையிருப்பு இருந்தது. ஐ.எம்.எஃப் நிதி நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கித்தான் இந்தியா நெருக்கடியிலிருந்து மீண்டது. இப்போது இந்தியாவின் அந்நியச் செலவாணி கையிருப்பு கிட்டத்தட்ட 600 பில்லியன் டாலர்கள். இந்தியா பொருளாதார தாராளமயத்தை நோக்கிப் போவதற்கு, இப்படி ஏராளமான காரணங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தன.

இந்தியப் பொருளாதாரம்
இந்தியப் பொருளாதாரம்

1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, நேரு தலைமையில் அமைந்த இந்திய அரசாங்கம், பொருளாதார வளர்ச்சிக்காக, சோஷலிச மாடலான ‘திட்டமிட்ட பொருளாதாரம்’ என்ற பாதுகாப்பு அணுகுமுறையைக் கடைபிடிக்கத் தொடங்கியது. அன்றைக்கு வேளாண்மையை முதன்மைப்படுத்தியிருந்த இந்தியப் பொருளாதாரம், தொழில்துறை சார்ந்து மிகக் கடுமையான பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்துவந்தது. தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களும் இதே பாதுகாப்பு அணுகல் முறையைக் கடைப்பிடிக்க, 1980-களில் இந்தியப் பெருளாதாரத்தில் சிறிய அளவில் நெருக்கடிகள் ஏற்படத் தொடங்கின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் தொடர்ந்து கீழிறங்கத் தொடங்கிய இந்தியப் பொருளாதாரம், 1990-1991 காலகட்டத்தில் மிக மோசமான நிலையை எட்டியது. இந்திய அரசியல் ஸ்திரத்தன்மையை இழந்தது, சோவியத் யூனியன் சிதறியது உள்ளிட்ட சர்வதேச அரசியல் போக்குகளின் தாக்கம் ஆகியவற்றால், பெரும் பின்னடவைச் சந்தித்த இந்தியப் பொருளாதாரம், கிட்டத்தட்ட திவாலாகும் நிலைக்குச் சென்றது.

அப்போது இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற நரசிம்ம ராவ், நிதியமைச்சராக மன்மோகன் சிங்கை நியமித்து இந்தியப் பொருளாதாரத்தைச் சீரமைக்க புதிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தினார். அதுவரை இந்தியா கடைபிடித்துவந்த பாதுகாப்பு அணுகல் முறையிலிருந்து விலகி, தாராளவாதத்தை ஏற்றுக் கொண்டது.

நரசிம்ம ராவ்; மன்மோகன் சிங்
நரசிம்ம ராவ்; மன்மோகன் சிங்

91-ம் ஆண்டில் பாகிஸ்தான், பெனின், கோஸ்டாரிகா போன்ற 64 நாடுகளுக்கு நம்மைவிட அதிக அந்நிய முதலீடு வந்துகொண்டிருந்தது. 2020-ம் ஆண்டில் அதிக அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் நாடுகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. சிவப்பு நாடா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதால், அந்நியத் தொழில்நுட்பங்களை இந்திய நிறுவனங்கள் பயன்படுத்துவது எளிமையாகியுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்திய நிறுவனங்கள் செயல்படுவது சுலபமாகிவிட்டது. இன்று உலகின் தடுப்பூசி தலைநகராக இந்தியா மாறியதற்குப் பின்னணியில் இந்த முடிவுகளே இருக்கின்றன.

இன்னொரு பக்கம், பற்றாக்குறை தேசமாக இருந்த இந்தியா இதன்மூலம் போதுமான சாய்ஸ்களைப் பெற்றிருக்கிறது. வெறும் நான்கைந்து நிறுவனங்களின் கார்கள் ஓடிய சாலைகளில் இப்போது உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களின் கார்களும் ஓடுகின்றன. ஒரு ஃப்ரிட்ஜ் வாங்குவதென்றால்கூட நூற்றுக்கணக்கான சாய்ஸ்கள் கிடைக்கின்றன. 138 கோடி மக்களைக் கொண்ட இந்திய மார்க்கெட்டை அமேசான், வால்மார்ட் என அனைத்து நிறுவனங்களும் ஆர்வத்துடன் அணுகுகின்றன.

அந்நிய முதலீடுகள்
அந்நிய முதலீடுகள்

"ஐ.எம்.எஃப் நிதி நிறுவனத்திடமிருந்து வாங்கிய கடனை இரண்டே ஆண்டுகளில் அடைத்துவிட்டது இந்தியா. அதன்பிறகு பொருளாதார சீர்திருத்தங்களின் வேகம் குறைந்தது. ஒருவேளை கடனை அடைக்காமல் இருந்திருந்தால், இன்னும்கூட நிறைய சீர்திருத்தங்கள் வந்திருக்கும்'' என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

ஆனால், இடதுசாரிப் பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா இதில் முரண்படுகிறார்.

வெங்கடேஷ் ஆத்ரேயா
வெங்கடேஷ் ஆத்ரேயா

“1991 பொருளாதார சீர்திருத்தங்களை இன்றைக்கு நிறைய பேர் சிலாகிக்கிறார்கள். ஆனால், அது விமர்சனப்பூர்வமாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. அன்றைக்கு சீர்திருத்தங்களை முன்மொழிந்தபோது அரசு சொன்ன காரணம் 'வேறு வழியில்லை' என்பது. இந்தியாவுக்கு நிறைய கடன், அந்நியச் செலாவணி பற்றாக்குறை போன்ற நெருக்கடிகள். எனவே உலக வங்கி, ஐ.எம்.எஃப் ஆகியவற்றில் கடன் வாங்குவதால் அவர்கள் சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்றார்கள்.

1980-களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 6 சதவிகிதம் என்ற அளவில், திருப்திகரமாகவே இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அரசு நிறைய செலவுகளை மேற்கொண்டது; ஆனால் கடன் வாங்கி செலவு செய்தல், அந்நியச் செலவணி நெருக்கடி போன்ற காரணங்களால் பட்ஜெட் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து தாக்குபிடிக்க முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டன.

'மக்களுக்குக் கல்வி கொடுப்பது, ஆரோக்கியத்தைப் பேணுவது ஆகியவற்றில் அரசின் தலையீடு மிகவும் அதிகமாக இருக்கிறது; இது அரசின் பணியல்ல, அதைச் சந்தைக்கு விட்டுவிடுவோம்' என்றார்கள். ஆக, தாராளமயம் என்பது பெருமுதலாளிகளுக்குத் தான்; சாமானியர்களுக்கு அல்ல!
உலகமயமாக்கல்
உலகமயமாக்கல்

1980-கள் தொடங்கி 1990 காலகட்டம் வரை இறக்குமதிக் கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், உலக வர்த்தகத்தின் நிலைமை மாறிக்கொண்டு வரும்போது இறக்குமதி கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கினோம். 'உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் மூலப் பொருட்களைக் கொண்டுவரலாம். ஏற்றுமதியை மலிவாக்கி போட்டி போடலாம்' என்று வாதத்தை முன்வைத்து சரக்கு-சேவை ஆகியவற்றின் ஏற்றுமதி-இறக்குமதி இரண்டையுமே கட்டுப்பாடற்றதாக மாற்றவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

மேலும், வெளிநாடுகளிலிருந்து பணம் கொண்டுவருவோர், அந்தப் பணத்தை வைத்து எப்படி வேண்டுமானாலும் லாபம் ஈட்டலாம், ஈட்டிய லாபத்தை அவர்களே எடுத்துக் கொண்டும் போகலாம் என்ற வகையில் வரைமுறைகள் தளர்த்தப்பட்டன.

இதனால், அரசின் வரவு-செலவு கணக்குகளைப் பன்னாட்டு முதலாளிகளால் கூர்மையாகப் பார்க்க முடியும். அப்படியிருக்க, வரவு-செலவு பற்றாக்குறை, நாணய பலவீனம் போன்ற காரணங்களால் முதலீடுகள் வராது. அந்த அச்சத்திலேயே அரசு செலவைக் குறைக்கும். வரி விதித்தால் முதலாளிகளுக்கு ஊக்கம் குறைந்துவிடும் என்பதால், வரவைக் கூட்ட அரசு முயற்சிக்காது. செலவைக் குறைத்து பட்ஜெட் பற்றாக்குறையைச் சமாளிப்பது என்ற முயற்சியில் அரசு ஈடுபடும்போது அங்கு மக்களின் நலன்கள் இயல்பாகக் காவுகொடுக்கப்படும்; இதனால் சமூகநீதி உட்பட எல்லாம் பாதிப்புக்குள்ளாகும்.

சமூகநீதி
சமூகநீதி

உலகமயமாக்கலின் விளைவாக ஏராளமான உள்ளூர் மற்றும் அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்குள் வரும், உற்பத்தி அதிகரிக்கும், வேலைவாய்ப்பு பெருகும், வறுமை ஒழியும், நாட்டில் சுபிட்சம் ஓங்கும் என்பதெல்லாம் அவர்கள் முன்வைத்த கற்பனை. 30 ஆண்டுகளில் அவையெல்லாம் நடந்திருக்கின்றனவா?

2014-க்குப் பிறகான 7 ஆண்டுகளைக் கூட விட்டுவிடலாம்; இவை அதைவிட பயங்கரமான ஆண்டுகள். 1991-2013 காலகட்டத்தில், பிரமாதமான மாற்றங்கள் ஏற்பட்டனவா, வளர்ச்சி விகிதங்கள் அதிகரித்தனவா என்றால் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதே உண்மை.

பொருளாதார சீர்திருத்தத்தின் முதல் 5-6 ஆண்டுகளில் பெருமளவுக்கு அந்நிய முதலீடுகள் வரவில்லை. ஆனால், பொதுவிநியோக அமைப்பில் விற்கப்படுகின்ற தானியங்களின் விலையை இரட்டிப்பாக்கியது; உரத்துக்கான மானியத்தை 90 சதவிகிதம் வரை வெட்டி அதன் விலையை உயர்த்தியது ஆகிய நடவடிக்கைகளால், சாதாரண மக்கள், விவசாயிகளின் வாழ்வுதான் பாதிக்கப்பட்டது. விளைபொருள் விலைச் சரிவு, இடுபொருள் விலையேற்றம் ஆகியவற்றால் விவசாயிகளுக்கு இரண்டு பக்கமும் அடி. விவசாயி நெருக்கடி தொடங்கியது அப்போதுதான்; விவசாயிகள் தற்கொலைகள் தொடங்கியதும் இந்தக் காலகட்டத்தில் தான்.

விவசாயிகள் தற்கொலை
விவசாயிகள் தற்கொலை

அடுத்த கட்டமாக, 1998-2014 காலகட்டத்தில் வாஜ்பாய் ஆட்சியில் நிலைமை மிகமிக மோசமாக இருந்தது. காங்கிரஸ்தான் தாராளமயமாக்கலைக் கொண்டுவந்தது என்றாலும், இந்தக் கொள்கையிலிருந்து பா.ஜ.க வேறுபடவில்லை. இன்னும் சொல்லப் போனால், காங்கிரஸைவிட ஒருபடி மேலே போய், பா.ஜ.க தீவிரமாக இதை முன்னெடுத்தது. குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்கள் அதிகம் தனியார்மயமானது இந்தக் காலகட்டத்தில்தான்.

2004-ல் இடதுசாரிகளின் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோதுதான், இடதுசாரிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் போன்ற மக்களுக்குச் சாதகமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. பொதுத்துறையில், வேளாண்துறையில் முதலீடு செய்ய வேண்டும் என்று இடதுசாரிகள் வலியுறுத்தியன் விளைவாக அத்துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு, கடும் நெருக்கடியிலிருந்து வேளாண்துறை முன்னேறியது. இருந்தாலும் முழுமையான மீட்சி கிடைக்கவில்லை.

2008-ல் இடதுசாரிகள் ஆதரவை விலகிக் கொண்டார்கள்; அமெரிக்கப் பொருளாதாரத்தின் நெருக்கடி, உலகப் பொருளாதாரத்தின் நெருக்கடி இரண்டும் நம்மைப் பாதித்தன. என்றபோதிலும், இந்தியாவில் தாராளமய காலகட்டத்தில் பார்த்தோமென்றால் அதிக ஜி.டி.பி வளர்ச்சி இருந்தது 2004-2008 காலகட்டத்தில்தான்.

தாரளமயமாக்கலின் முதன்மை வாக்குறுதியான வேலைவாய்ப்பு என்ன ஆனது? அது இந்தக் காலகட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்பு, வறுமை ஆகியவை சார்ந்து பார்க்கும்போது, இந்தக் காலகட்டத்தில் வறுமை ரொம்பக் குறைந்துவிட்டது என்று கணக்கு காட்டுகிறார்கள். ஆனால், வறுமையைப் பற்றிய வரையறையை மாற்றி மாற்றி, அதைக் கணக்கிடுவதில் உள்ள பலவீனங்கள் காரணமாக வறுமை குறைந்ததாகக் காட்டப்படுகிறது. அது வறுமைக் கோடல்ல, சாகாக் கோடு - வாழவும் முடியாது, சாகவும் முடியாது” என்கிறார் ஆத்ரேயா.
வறுமை | Representational Image
வறுமை | Representational Image
Pixabay

இந்தியாவில் தாராளமயம் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த 30 ஆண்டுகளில், ஒட்டுமொத்தமாக இல்லையெனினும் குறிப்பிட்ட துறைகளின் வளர்ச்சி கணிசமான உயரத்தை எட்டியிருக்கிறது என்கிறார்கள் தாராளவாதிகள்.

30 ஆண்டுகளில் முன்னேறியிருக்கிறோமா?

தாராளவாதத்தைப் பற்றிய விவாதங்கள் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை மட்டுமே மையப்படுத்தியிருந்த நிலையில், இந்த 30 ஆண்டுகளில் அதன் எதிர்மறைத் தாக்கங்களாக உருவெடுத்திருக்கும் பொருளாதார சமத்துவமின்மை, பெருமுதலாளித்துவம், சூழலியல் பிரச்னைகள் இப்போது விவாதங்களில் அதிகம் இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன.

''சீர்திருத்தங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால், அதனால் ஏற்படும் வளர்ச்சி பெரும்பாலானோருக்கு நன்மை செய்வதாக இருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் சீர்திருத்தத்திற்கு அர்த்தமே இருக்காது'' என்கிறார் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன். அது உண்மை என்றே தோன்றுகிறது.

பொருளாதார தாராளமயமாக்கலால் ஏற்பட்ட சமூக மற்றும் அரசியல் மாற்றங்கள் என்னென்ன? அடுத்து பார்க்கலாம்...

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு