Published:Updated:

எம்.ஜி.ஆரின் ஒளிவிளக்கு... எடப்பாடி பழனிசாமி ஏன் ஏற்படுத்தவில்லை மதுவிலக்கு?

டாஸ்மாக்
டாஸ்மாக் ( விகடன் )

'அம்மா வழியில் நடக்கும் அரசு' எனச் சொல்லிக்கொள்ளும் எடப்பாடி, 'படிப்படியாக மதுவிலக்கு' என்ற தன் தலைவியின் வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.

2016 ஏப்ரல் 9-ம் தேதி

அ.தி.மு.க தொண்டர்களால் நிரம்பியிருந்தது சென்னை தீவுத் திடல். 2016 சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை அங்கிருந்துதான் தொடங்கினார் ஜெயலலிதா. ''பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் என் கொள்கை. ஒரே கையெழுத்தில் அதைக் கொண்டு வர இயலாது. தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்’’ என ஜெயலலிதா சொன்னபோது கூட்டம் ஆர்ப்பரித்தது.

தீவுத் திடல் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா...
தீவுத் திடல் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா...
விகடன்

2016 சட்டமன்றத் தேர்தலின் பிரதான முழக்கமே மதுவிலக்குதான்! அதற்குப் பின்னணியும் இருந்தது. 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, கருணாநிதியைப்போலவே டாஸ்மாக்கை கொழுத்த கிடாவாக வளர்த்தார். வளம் கொழிக்கும் டாஸ்மாக்தான் அரசின் அட்சயப் பாத்திரம். கடனால் தள்ளாடிக் கொண்டிருக்கும் ஆட்சி சக்கரத்தை ஓட வைக்கும் அச்சாணி! மதுவால் குடும்பங்கள் தள்ளாடின. விளைவு மதுவிலக்கு போராட்டங்கள் உக்கிரமெடுத்தன.

சசிபெருமாள்
சசிபெருமாள்
விகடன்

முழு மதுவிலக்குக் கோரி 36 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார் காந்தியவாதி சசிபெருமாள். பள்ளிகளுக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி கன்னியாகுமரி உண்ணாமலையில் செல்போன் டவரில் ஏறிப் போராட்டம் நடத்தியபோது அவர் உயிரைவிட்டார். சசிபெருமாளின் மரணத்தைத் தற்கொலை எனக் கொச்சைப்படுத்தினார்கள்.

`ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்’ `மூடு டாஸ்மாக்கை மூடு’ எனப் பாடியதற்காகப் பாடகர் கோவனைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தார்கள். `மச்சி ஓப்பன் தி பாட்டல்’ பாடல் இடம் பெற்ற படத்துக்கு வரிவிலக்கு கொடுத்தார்கள். மதுவுக்கு எதிராகப் போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். திருவண்ணாமலையில் இளைஞர்கள், 4 வயதுச் சிறுவனுக்கு மதுவை ஊற்றிக்கொடுத்த கொடூரம் அதிர்வலையை உண்டாக்கியது.

கோவையில் ப்ளஸ் டூ மாணவி குடித்துவிட்டுப் போதையில் ரோட்டில் விழுந்து கிடந்தார். திருச்செங்கோட்டில் அரசுப் பள்ளியிலேயே மாணவிகள் மது அருந்தினார்கள். கரூர் பஸ் ஸ்டாப்பில் பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் மாணவர் போதையில் மயங்கிக் கிடந்தான். இது எல்லாமே முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் நடந்தவை.

பாடகர் கோவன்
பாடகர் கோவன்
விகடன்

மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டங்கள் வெடித்ததால்தான், 2016 சட்டசபைத் தேர்தலில் மதுவிலக்கு முக்கிய கோஷமாக எழுந்தது. 'மதுவிலக்கு கொண்டுவரப்படும்' என அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் தேர்தல் அறிக்கையில் அறிவித்தார்கள். தீவுத்திடல் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ''மதுவிலக்கை அறிவித்துவிட்டால் அதை எப்படியும் நிறைவேற்றுவேன் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். உறுதிமொழியைச் செயல்படுத்த முடியுமா? எனத் தெரிந்த பிறகுதான் ஜெயலலிதா வழங்குவார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்'' என நீட்டி முழங்கிவிட்டு, மதுவிலக்கு எப்படி அமல்படுத்தப்படும் என்பதையும் விவரித்தார்.

''முதலில் டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைக்கப்படும். பிறகு, கடைகளின் எண்ணிக்கை குறையும். பின்னர், பார்கள் மூடப்படும். குடிகாரர்களை மீட்பதற்கு மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மதுவிலக்கு என்னும் லட்சியத்தை அடைவோம்'' என்றார் ஜெயலலிதா.

தீவுத்திடல் கூட்டத்தில் ஜெயலலிதா பேசிய வீடியோ

அந்த லட்சியத்தை இந்த மூன்றரை ஆண்டு காலத்தில் எட்டவே இல்லை. ஜெயலலிதா சொன்ன வாக்குறுதி பலிக்காமல் பல் இளிக்கிறது. 'அம்மா வழியில் நடக்கும் அரசு' எனச் சொல்லிக் கொள்ளும் எடப்பாடி, தன் தலைவியின் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும் 500 டாஸ்மாக்குகளை மூடி, கடைகளின் நேரத்தை இரண்டு மணி நேரம் குறைத்து, முதல் கையெழுத்துப் போட்டார் ஜெயலலிதா. மதுவிலக்கு வருவதற்கான நம்பிக்கை கீற்று தென்பட்டது. அதற்குள் ஜெயலலிதா இறந்துபோக... எடப்பாடி முதல்வராகப் பதவியேற்றார். அவரும் ஜெயலலிதா ஸ்டைலிலேயே 500 மதுபானக் கடைகள் மூட ஆணையிட்டு, கோப்பில் முதல் கையெழுத்திட்டார்.

ஜெயலலிதா அறிவிப்பு
ஜெயலலிதா அறிவிப்பு

ஜெயலலிதா 500, எடப்பாடி 500 என மொத்தம் 1,000 கடைகள் 2016-2017-ல் மூடப்பட்டன. அப்போதுதான் ‘விபத்துகளைத் தடுக்க நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 'படிப்படியாக மதுவிலக்கு' என்கிற ஜெயலலிதாவின் லட்சியத்துக்கு உயிர் கொடுக்கும் வகையில் நெடுஞ்சாலை டாஸ்மாக்குகளை மூடியிருக்கலாம். ஆனால், மூட உத்தரவிட்ட கடைகளைத் திறக்க உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார்கள்.

டாஸ்மாக்
டாஸ்மாக்
விகடன்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 3,321 கடைகளை முதலில் மூடினார்கள். இதை ஈடுகட்டக் கொள்ளைப்புறம் வழியாக புதிய பாதை போட்டார்கள். மாநகராட்சி, நகராட்சி பகுதி மாநில தேசிய நெடுஞ்சாலைகள் வகை மாற்றம் செய்யப்பட்டு, 'குடி' மக்களைக் காத்தார் எடப்பாடி. கடைசியில் 1,300 கடைகள்தான் மூடப்பட்டன. ஆனாலும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையில் பெரிய சரிவு ஏற்படவில்லை.

டாஸ்மாக்
டாஸ்மாக்
விகடன்

'படிப்படியாக' மதுவிலக்குக் கொண்டு வர முயற்சிகளை எடுத்திருந்தால் டாஸ்மாக் வருவாய் குறைந்திருக்க வேண்டும். மாறாக அதிகரித்திருக்கிறது. 'படிப்படியாக மதுவிலக்கு' என ஜெயலலிதா திருவாய் மலர்ந்ததற்கு முந்தைய ஆண்டு, அதாவது 2015-2016-ல் டாஸ்மாக் வருவாய் 25,845 கோடி ரூபாய். அதன்பின் வருவாய் படிப்படியாக (!) உயர்ந்திருக்கிறது. 2016-2017-ல் 26,995 கோடியாகவும் 2018-2019-ல் 31,157 கோடியாகவும் உயர்ந்தது. 2018 - 2019-ம் நிதியாண்டில், கிடைத்த தொகை முந்தைய ஆண்டைவிட 4,360 கோடி ரூபாய் அதிகம்.

படிப்படியாக மது விலக்குக்கு வந்த மீம்ஸ்
படிப்படியாக மது விலக்குக்கு வந்த மீம்ஸ்

'பூரண மதுவிலக்கு' என்பதெல்லாம் தேர்தல் நேரத்து மத்தாப்புகள். ஜெயலலிதா மூன்று முறை முதல்வராக வந்து அமர்ந்தபோதே மதுவிலக்கை அமல்படுத்தியிருக்க முடியும். அப்போதெல்லாம் ‘மதுவிலக்கு’ பற்றிச் சிந்திக்காமல், 2016-ல் ‘தேர்தல் போதி மர’த்தில் ஞானோதயம் பெற்றார் ஜெயலலிதா. தனியார் விற்று வந்த மது விற்பனையை மாற்றி, அரசே நடத்தும் டாஸ்மாக் கடைகளுக்கு 2003-ம் ஆண்டு கடை விரித்தார். அடுத்த பரிணாம வளர்ச்சியாக நவீன வசதிகள் கொண்ட எலைட் கடைகள் அ.தி.மு.க ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டன.

போலி மதுபானம் விற்கப்பட்டு, அரசின் வருவாய் குறைந்துவிடக் கூடாது என்பதற்காகப் போலி மதுபானம் பற்றி தகவல்களைத் தெரிவிக்க 10581 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி சேவையை ஜெயலலிதாதான் கொண்டு வந்தார். பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தபோதெல்லாம் அவை குப்பைத் தொட்டிக்குப் போயின. மதுவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவி நந்தினியைக் காக்கிகள் ஒடுக்கினார்கள்

போதையில்... ரோட்டில்
போதையில்... ரோட்டில்
விகடன்

நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை மூடிவிட்டு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கடைகளை அமைக்க அரசு முயன்றபோது போராட்டம் வெடித்தது. டாஸ்மாக்குகளை பெண்கள் உடைத்து நொறுக்கினார்கள். போராடியவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியது போலீஸ். திருப்பூர், சாமளாபுரத்தில் போராடிய பெண்களைத் தாக்கினார் திருப்பூர் ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன். பெண்ணின் காதில் அறைந்து செவிடாக்கிய பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு கொடுத்து அழகு பார்த்தது அரசு.

பெண்ணைத் தாக்கும் பாண்டியராஜன்...
பெண்ணைத் தாக்கும் பாண்டியராஜன்...
விகடன்

கோயம்புத்தூர் கணுவாய்யைச் சேர்ந்த டாக்டர் ரமேஷின் மனைவி, குடிகாரனால் ஓட்டி வந்த வாகனத்தால் உயிரிழந்தார். மனைவியின் சடலத்தோடு நடுரோட்டில் போராட்டம் நடத்தி, உயிரிழக்கக் காரணமான கடையை மூட வைத்தார். மதுக்கடையை மூடுவதாக இருந்தால்கூட அதற்கு உயிர்ப்பலி கொடுக்கும் நிலையில்தான் எடப்பாடி ஆட்சி இருக்கிறது.

மனைவி உடலுடன் ரமேஷ் போராட்டம்
மனைவி உடலுடன் ரமேஷ் போராட்டம்

டாஸ்மாக்குகளை மூட வலியுறுத்தி எடப்பாடிக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு பாலத்தில் தூக்கில் தொங்கினான் நெல்லை மாணவன் தினேஷ். மது விற்ற ஆட்சியாளர்களுக்குக் கொஞ்சமும் கலக்கமில்லை. ஆனால். மதுவால் பாதிப்படைந்தவன்தான் உயிரை மாய்த்துக்கொள்கிறான்.

''வருவாயைப் பெருக்க மாற்று வழியை ஆராயாமல் அரசே மதுபானம் விற்பதா... மதுவால் நடக்கும் குற்றங்களுக்கு அரசை ஏன் பொறுப்பாக்கக் கூடாது... மதுவுக்கு அடிமையானவர்கள் தமிழகத்தில் அதிகம்... மதுக்கடைகளை மூடினால் அடுத்து வரும் இரண்டு தலைமுறையைப் பாதுகாக்கலாம்'' என்றெல்லாம் பல வழக்குகளில் அரசைக் குட்டியது சென்னை உயர் நீதிமன்றம். ஆனாலும், ஆட்சியாளர்களுக்கு உரைக்கவில்லை.

டாஸ்மாக்
டாஸ்மாக்
விகடன்

''படிப்படியாக மதுவிலக்கு'' என்று சொன்ன தலைவியின் தளகர்த்தாக்கள், இன்றைக்கு அந்த மதுவுக்கே பிரான்ட் அம்பாசிடர்களாக வலம் வருகிறார்கள். ''டாஸ்மாக் வருமானத்தில்தான் புதிய பள்ளிகள் கட்டப்படுகின்றன. ஆசிரியர்களுக்குச் சம்பளமும் தரப்படுகிறது'' என்கிறார் அமைச்சர் வீரமணி. கண்ணை விற்று சித்திரம் வாங்குவதுபோல, ''குடிமக்கள் குடித்தால்தான் ஆசிரியர்களுக்குச் சம்பளம்'' என்கிற மதிப்புமிக்க மந்திரிகளைத் தமிழ்நாடு பெற்றிருக்கிறது.

வீரமணி
வீரமணி
விகடன்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ, ''திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும். அதனால், மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது. உடனடியாகக் குடியை நிறுத்தச் சொன்னால், எப்படி ஒருவரால் நிறுத்த முடியும்? அதனால், ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருக்கிறது'' என்கிறார். குடிமக்கள் பக்கத்தில் இருக்க வேண்டிய மந்திரிகள், 'குடி'மகன்கள் பக்கத்தில் நிற்பதை எல்லாம் பார்க்க ஜெயலலிதா இப்போது உயிருடன் இல்லை.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
விகடன்

மது, அரசின் வருவாய் சம்பந்தமான விஷயம் மட்டுமல்ல. அதில் பிணைந்திருக்கும் அரசியலும் மதுவிலக்கை வரவிடாமல் தடுக்கிறது. டாஸ்மாக் பார்கள் அரசியல்வாதிகளின் பிடிக்குள்தான் இருக்கின்றன. அங்கே லட்சங்களில் பணம் கொட்டுகிறது. 'தமிழகத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வரும் 3,326 பார்களை மூட வேண்டும்' என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்றால், இதில் எந்த அளவுக்கு அரசியல் தலையீடு இருக்கிறது என்பதை அறிய முடியும்.

டாஸ்மாக் பார்
டாஸ்மாக் பார்
விகடன்

* கடந்தாண்டு தீபாவளியைவிட 130 கோடி ரூபாய் அதிகமாகி, 455 கோடி ரூபாய்க்குச் சரக்கு விற்கப்பட்டிருக்கிறது.

* டாஸ்மாக் மீதான புகார்களைத் தெரிவிக்க மாதம் இரண்டு நாள்கள் குறைதீர்ப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு.

* 3,000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை.

* மது, சைடிஷ், பார்கள் தொடர்பான புகார்களை அளிக்கக் கட்டணமில்லா தொலைபேசி எண்.

இவ்வளவும் இந்த ஆட்சியில் மது தொடர்பாக அரசு 'படிப்படியாக' எடுத்த ஆக்‌ஷன்கள். அம்மா சொன்ன பூரண மதுவிலக்குக்கான முன்னெடுப்புகள்.

மதுவிலக்கு
மதுவிலக்கு
விகடன்

''பொருள் வேண்டித் திருடச் செல்வாய்

பெண்ணைப் பெற வேண்டி விலையைச் சொல்வாய்

துணிவோடு உயிரைக் கொல்வாய்

எதற்கும் துணையாக மதுவைக் கொள்வாய்

கேட்டால் நான்தானே மனிதன் என்பாய்

தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா?''

எம்.ஜி.ஆர் பாடிய இந்தப். பாடல் வரிகள் இடம்பெற்ற படம் ஒளிவிளக்கு.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தியவர்கள் ஏற்படுத்தவில்லை மதுவிலக்கு!

அடுத்த கட்டுரைக்கு