Published:Updated:

`தி.மு.க-வுக்கு ஜாதகம் சரியில்லை!’ - சட்டப்பேரவையில் கலாய்த்த எடப்பாடி பழனிசாமி

`தி.மு.க-வுக்கு ஜாதகம் சரியில்லை’ எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கிண்டலாகப் பேசினார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டப்பேரவைக்கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒரு மாதகாலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு துறை ரீதியான மானியக்கோரிக்கைகள் விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்படும். அந்த வகையில் இன்று, கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. பேரவையில் மானியக்கோரிக்கையின்போது பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, கதை ஒன்றைக்கூறினார். `10 பொருத்தங்களில் 8 பொருத்தம் சரியாக இருக்கும் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யபட்டது.

துரைமுருகன்
துரைமுருகன்

அவருக்கு சொல்புத்தி, செயல்புத்தி இல்லாததால் அந்தத் திருமணம் நடைபெறாமல் நின்றுபோனது. அந்த வகையில். எல்லா பொருத்தங்களும் சரியாக இருக்கும் அ.தி.மு.க-தான் 100 ஆண்டுகள் ஆட்சியிலிருக்கும்” என்று கூறி அந்தக் கதையை முடித்தார். அப்போது இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், `10 பொருத்தமும் சரியாக இருந்தால், அந்தத் திருமணம் ஈடேறாது. அப்படியிருந்தால் குடும்பத்திலிருக்கும் ஒருவர் இறந்துவிடுவாராம்’ என்று அ.தி.மு.க-வை கலாய்த்தார். அப்போது இதற்குப் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``எங்களுக்கு ஜாதகம் நன்றாக இருப்பதால்தான் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். தி.மு.க-வுக்கு ஜாதகம் சரியில்லை. நாங்கள் ஜாதகத்தை நம்புவதால்தான் நன்றாக இருக்கிறோம், நீங்கள் ஜாதகத்தை நம்பாததால்தான் இப்படி இருக்கிறீர்கள்” என்று கிண்டலாகப் பேசினார்.