Published:Updated:

``இதெல்லாம் என்கிட்டயே இல்லையே?'' - என்.பி.ஆர் கேள்வியும் எடப்பாடி ரியாக்‌ஷனும்!

எடப்பாடி
எடப்பாடி

"என்.பி.ஆர் பற்றி எடப்பாடிக்குத் தெரியவில்லை. எடப்பாடிக்கே பிறப்புச் சான்றிதழ் இல்லை" என எடப்பாடியைச் சந்தித்தவர்கள் வண்ணாரப்பேட்டை ஆர்ப்பாட்டத்தில் பேசி அதிர வைத்தார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் இந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பி.ஜே.பி மற்றும் அ.தி.மு.க அல்லாத மற்ற கட்சிகள் பலவும், இந்தப் போராட்டத்தை நடத்தியும் ஆதரவு அளித்தும் வருகின்றன. 23 முஸ்லிம் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கூட்டமைப்பும் இன்னொரு பக்கம் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன.

வண்ணாரப்பேட்டை போராட்டத்தில்...
வண்ணாரப்பேட்டை போராட்டத்தில்...

டெல்லி ஷகீன் பாக் ஏரியாவில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வரும் சூழலில், சென்னை வண்ணாரப்பேட்டையில் அதே போன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. `சென்னை ஷாஹின் பாக்' எனப் பெயரிடப்பட்ட அந்தப் போராட்டம் ஏற்படுத்திய பாதிப்பு தமிழகம் முழுவதும் போராட்டத்தை உக்கிரமாக்கியிருக்கிறது. வண்ணாரப்பேட்டை தடியடி சம்பவத்துக்குப் பிறகே இந்தப் போராட்டங்கள் வேகமெடுக்க ஆரம்பித்தன. `சென்னை ஷாகின் பாக்' போலவே தமிழகத்தின் முக்கிய நகரங்களின் பெயரைச் சூட்டி 'ஷாகின் பாக்' நடத்தி வருகிறார்கள்.

பெண்கள் தலைமையேற்று நடத்தும் வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்களும் முக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு வருகிறார்கள். அங்கே பேசியவர்களில் சிலர், "முதல்வர் எடப்பாடிக்கு என்.பி.ஆர் என்றாலே தெரியவில்லை'' என்றார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு முன்பு ஜனவரி 10-ம் தேதி என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

முஸ்லிம் கூட்டமைப்பினர் எடப்பாடியைச் சந்தித்த போது
முஸ்லிம் கூட்டமைப்பினர் எடப்பாடியைச் சந்தித்த போது
கூவத்தூர் ரிலீஸ்... ஸ்டாலின் சட்டை கிழிப்பு... பன்னீர் பவ்யம்... நான்காம் ஆண்டில் எடப்பாடி ஆட்சி!

23 முஸ்லிம் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் ஜனவரி 10-ம் தேதி சந்தித்தனர். அந்தச் சந்திப்பின் போது அமைச்சர் நிலோபர் கபில், முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவும் உடன் இருந்தார்கள். கூட்டமைப்பின் தலைவர் ஷாஜா மொஹிதீன், ஒருங்கிணைப்பாளர்கள் பஷீர் அகமது, முகமது அன்சூர், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ அபுபக்கர், எம்.எல்.ஏ கருணாஸ், மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி, இந்திய தவ்ஹித் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர், எஸ்.டி.பி.ஐ. உமர் பாரூக் உள்ளிட்டோர் அந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடியிடம் வைத்தார்கள்.

"தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்.பி.ஆர் என்பது மக்கள் தொகையைப் பதிவு செய்வது. என்.ஆர்.சி என்பது குடியுரிமையைப் பதிவு செய்வது” என உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னார். ஆனால், அப்படி இல்லை என்பதை எடப்பாடியிடம் கூட்டமைப்பு நிர்வாகிகள் விளக்கினார்கள். தேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் தயார் செய்த போது 15 கேள்விகள் கேட்கப்பட்டன. இப்போது 6 கேள்விகளைப் புதிதாகச் சேர்த்திருக்கிறார்கள். கடைசியாக நீங்கள் எங்கு வசித்தீர்கள்? உங்களது அப்பா, அம்மா எங்கு பிறந்தார்கள், ஓட்டுநர் உரிமம் எண், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றைக் கேட்கிறார்கள். இதை எல்லாம் ஏன் கேட்கிறார்கள் என நிர்வாகிகள் எடப்பாடியிடம் சொன்னார்கள்.

வண்ணாரப்பேட்டை போராட்டத்தில்..
வண்ணாரப்பேட்டை போராட்டத்தில்..

இப்போது வண்ணாரப்பேட்டைக்கு வருவோம். தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த பாத்திமா முசாபர் வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் பங்கேற்ற போது எடப்பாடியை ஒரு பிடி பிடித்தார். "முதல்வரே இங்கே வந்து பாருங்கள் இது வெறும் முஸ்லிம்கள் மட்டும் நடத்தும் போராட்டம் அல்ல. எத்தனை மாற்று மத சகோதரர்கள் இதில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என உங்களுக்குத் தெரியும். இவர்கள் எல்லாம் உப்பு போட்டுச் சாப்பிடுகிறவர்கள். நீங்களும் உப்பு போட்டுச் சாப்பிடுங்கள். இவர்கள் பாட்டில் வீசினார்கள் எனச் சொல்கிறீர்கள். இவர்கள் குடிக்கும் கூட்டம் இல்லை. அதனால் பாட்டிலை வீச மாட்டார்கள். போராட்டத்தில் தரப்படும் குடிநீர் பாட்டில்களைக்கூட சேகரித்து குப்பைத் தொட்டியில் போடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பாட்டிலை வீசினார்கள் எனக் குற்றம் சாட்டியிருக்கிறீர்கள்.

குடியுரிமைச் சட்டம் தொடர்பாக நாங்கள் முதல்வரைச் சந்தித்த போது என்.பி.ஆரில் ஆறு கேள்விகள் கேட்கிறார்கள். ஏன் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என அவரிடம் கேட்டோம். 'என்.பி.ஆரில் இதெல்லாமா கேட்கிறார்கள். எனக்குத் தெரியாது. விசாரித்துவிட்டுச் சொல்கிறேன்' என்றார். அவருக்கே என்.பி.ஆர். பற்றிப் புரிதல் இல்லை'' என்றார்.

பாத்திமா முசாபர்
பாத்திமா முசாபர்
``பொணத்துக்குக்கூட சாதி இருக்கா?''- கணவனின் சடலத்தோடு இரண்டு நாள்களாக அல்லாடும் இருளர் பெண்

மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரியும் வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். அவர் பேசும் போது, ''முதல்வர் சந்திப்பின் போது சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர் ஆகியவற்றால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி விளக்கமாகக் கருத்துகளை எடுத்து வைத்தோம். என் பெற்றோர், பாட்டனார் ஆகியோரின் பிறப்புச் சான்றிதழைக் கேட்கிறார்கள். இது எத்தனை பேரிடம் இருக்கும்? இதையெல்லாம் எப்படித் தர முடியும் என முதல்வருக்குச் சொன்னோம். உடனே அவர், 'எனக்கும் பிறப்புச் சான்றிதழ் கிடையாது. கேட்டாலும் தர முடியாது. பிறப்புச் சான்றிதழ்கள் எல்லாம் கேட்கிறார்களா..?' எனச் சொல்லி ஆச்சர்யப்பட்டார்.

முஸ்லிம் கட்சிகள், அமைப்புகளின் கூட்டமைப்பினரிடம் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.,ஆர் பற்றி விளக்கமாகக் கேட்டு ஆச்சர்யப்பட்ட எடப்பாடிதான் பிறகு சட்டசபையில் அதற்கு மாறாகப் பேசியிருக்கிறார்.

தமிமுன் அன்சாரி
தமிமுன் அன்சாரி
``நாங்கள் என்ன சாவர்க்கரா... நாங்கள் எல்லாம் பெரியாரே..." - வண்ணாரப்பேட்டை அதிர்வுகள்!

"குடியுரிமைச் சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டிருக்காங்க சொல்லுங்க. எந்தச் சிறுபான்மை மக்கள் பாதிச்சிருக்காங்க... நாங்கள் அவர்களுக்கு பதில் சொல்கிறோம்.. அதை விட்டுவிட்டு மக்களை ஏமாற்றி நாடகமாடி, தவறான அவதூறான செய்தியையே சொல்லி குந்தகம் ஏற்படும் நிலைக்கு ஆளாக்கியிருக்கிறீர்களே'' என எதிர்க்கட்சிகளைப் பார்த்துச் சீறினார்.

அடுத்த கட்டுரைக்கு