Published:Updated:

5,909 கோடிக்குமேல் ஜி.எஸ்.டி பங்கு நிலுவை... மத்திய அரசுக்கு அஞ்சி நிற்கிறதா தமிழக அரசு!

இழப்பீட்டுத்தொகையை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்குவதாகக் கூறிய உறுதிமொழியை, மத்திய அரசு மீறிவிட்டதாக உச்ச நீதிமன்றத்தை 8 மாநில அரசுகள் நாடவுள்ளன.

GST
GST

ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி வருவாயில், மாநிலங்களுக்குத் தரவேண்டிய இழப்பீட்டுத் தொகையைக் கடந்த நான்கு மாதங்களாக மத்திய அரசு வழங்கவில்லை. அந்த இழப்பீட்டைப் பெறுவதற்காக, பா.ஜ.க ஆட்சியில் இல்லாத 8 மாநிலங்கள், உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடிவெடுத்துள்ளன.

ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி
ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் வசூலிக்கப்படும் தொகையில் மத்திய அரசும் பங்கெடுப்பதால், மாநிலங்களின் வரி வருவாய் பாதிக்கப்படுகிறது. அதை ஈடுகட்டும்விதமாக, ஆண்டுக்கு ஒருமுறை மாநில அரசுகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொகையை மத்திய அரசு திரட்டுவதற்காகவே, ஜிஎஸ்டி-யில் கூடுதலாக 'இழப்பீட்டு வரி' கொண்டுவரப்பட்டது.

டெல்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், இழப்பீட்டுத்தொகையைப் பெறுவதற்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.

இந்த இழப்பீட்டு வரி, மக்களின் உடல்நலத்துக்குக் கேடான பான்மசாலா, குட்கா, புகையிலை, மூக்குப்பொடி, சிகரெட், சுருட்டு, ஜர்தா புகையிலை மற்றும் அதிவேக கார்கள், அதிவேக மோட்டார் சைக்கிள்களுக்கான பொருள்களின் விற்பனையில் ஏற்கெனவே உள்ள ஜிஎஸ்டி வரிவிகிதத்தோடு, கூடுதலாக 3% முதல் 290% வரை வரிவிதிக்கப்படுகிறது. இப்படி விதிக்கப்படும் கூடுதல் வரிவசூல் தொகையிலிருந்துதான் இழப்பீட்டை மாநில அரசுகளுக்கு வழங்குகிறது.

ஜிஎஸ்டி இழப்பீடு
ஜிஎஸ்டி இழப்பீடு

மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகையை நிர்ணயம் செய்வதற்கு, முந்தைய ஆண்டில் வசூலான ஜிஎஸ்டி தொகையை அடிப்படையாகக்கொண்டு கணக்கிடுகிறார்கள். இப்படி வழங்கப்படும் ஜிஎஸ்டி தொகையை ஆண்டுக்கு ஒருமுறை கொடுப்பதற்கு, மாநில அரசுகள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தன. அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் ஓராண்டுக்கான வட்டி வருமானமும் மத்திய அரசையே சேரக்கூடும். எனவே, அந்த இழப்பீட்டை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்தது. அதன்படி, இழப்பீட்டை வழங்கிவந்த சூழலில், கடந்த ஆகஸ்ட் முதல் ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகையை மாநில அரசுகளுக்கு வழங்காமல் நிலுவையில் வைத்தது.

ஜிஎஸ்டி வரி வசூல் போதுமானதாக இல்லை. விரைவில், மாநிலங்களுக்கான நிலுவையிலுள்ள இழப்பீட்டுத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நிர்மலா சீதாராமன்

நிலுவையிலுள்ள இழப்பீட்டுத்தொகையை வழங்கும்படி, பா.ஜ.க அல்லாத மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கூட்டாகச்சென்று, மத்திய நிதியமைச்சரை அணுகிக் கேட்டபோது, ஜிஎஸ்டி வரி வசூல் போதுமானதாக இல்லையென்றும், விரைவில் நிலுவையிலுள்ள இழப்பீட்டுத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

ஆனால், மத்திய அரசின் பதிலில் நம்பிக்கை இல்லாததால், டெல்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், இழப்பீட்டுத்தொகையைப் பெறுவதற்காகப் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றன. இழப்பீட்டுத்தொகையை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்குவதாகக் கூறிய உறுதிமொழியை மத்திய அரசு மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தை நாடுவது குறித்தும் ஆலோசித்துவருவதாகத் தெரிகிறது. அப்படி உச்ச நீதிமன்றத்தை நாடினால், சட்டப்படி இழப்பீட்டுத்தொகையை மாநிலங்களுக்கு வழங்கும்படி மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடக்கூடும்.

ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி
ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி

ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகையாக சராசரி, மாதத்துக்கு ரூ.7,500 கோடியை மாநில அரசுகள் பெற்றுவந்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த இழப்பீட்டுத்தொகையை வழங்காமல் மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளது. இதன்படி மாநிலங்களுக்கு சுமார் 30,000 கோடி வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், மத்திய அரசு தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாகத் தெரிகிறது.

தமிழகத்துக்கு தரப்படவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகை ரூ.5,909 கோடி

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை திரும்பப் பெறுவது குறித்தும் தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காமலிருப்பது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவரது அறிக்கையில், 'தமிழக அரசின் 2019-20-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தமிழகத்துக்கு தரப்படவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகை ரூ.5,909 கோடிக்குமேல் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்

அந்த நிலுவைத்தொகை தரப்பட்டதா, ஜிஎஸ்டி வரிவிதிப்பால் இதுவரை தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு, நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு என்ற விவரங்களைத் தமிழக அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க மறுக்கிறது. டெல்லி, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில நிதியமைச்சர்கள், ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் வரையிலான இழப்பீட்டுத்தொகையைப் பெறுவதற்கு மத்திய நிதியமைச்சரை சந்தித்து முறையிட்டுள்ளனர். ஆனால், தமிழக அரசு அவர்களோடு இணைந்து முறையிடவில்லை. மத்திய அரசுக்குப் பயந்து கேள்வியெழுப்பாமல் உள்ளது’ எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜிஎஸ்டி பற்றாக்குறை ரூ.40,000 கோடியை சமாளிக்குமா மத்திய அரசு?