Election bannerElection banner
Published:Updated:

``எம்.பி அவருதான்: ஆனா சின்னம் என்னுது!’’ சின்ன(ம்) புத்தி அரசியல்வாதிகள்

symbol
symbol

தேர்தல் கமிஷன் அளித்த சின்னங்களை இன்னொரு கட்சிக்கு மடைமாற்றம் செய்கின்ற அரசியல் கட்சிகள். உதயசூரியன் சின்னத்தில் வென்ற 4 எம்.பி-க்கள் வெற்றி நியாயமானதுதானா?

வீட்டின் உரிமையாளர் ஒருவர், தன் வீட்டை ஒருவருக்கு வாடகைக்கு விடுகிறார். அப்படிக் குடியேறுகிறவர் வாடகைதாரர்தான். அவர் வீட்டின் உரிமையாளர் ஆக முடியாது. வீட்டை மேல் வாடகைக்கும் விட உரிமையும் கிடையாது.

Electronic Voting Machine
Electronic Voting Machine

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் ஆணையம்தான் சின்னங்களை ஒதுக்குகிறது. அப்படி ஒதுக்கப்பட்ட சின்னங்களைப் பெற்ற கட்சிகள் அதைத் தனது கட்சி வேட்பாளர்களுக்குத்தான் அளிக்க முடியும். அதை இன்னொரு கட்சியின் வேட்பாளருக்கு உள் வாடகைக்கு விட முடியாது. ஆனால், அந்த வேலையைத்தான் அரசியல் கட்சிகள் இன்றைக்குச் செய்துகொண்டிருக்கின்றன. தேர்தலுக்குத் தேர்தல் சந்தி சிரிக்கும் `இரவல் சின்னம்' விவகாரம் மீண்டும் நீதிமன்ற படியேறியிருக்கிறது. `தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்ற 4 எம்.பி-க்களின் வெற்றி' செல்லாது எனத் தொடரப்பட்ட வழக்குதான் அது.

`ஒரு கட்சியில் இருந்துகொண்டு மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிடச் சட்டத்தில் இடமில்லை. தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற 4 எம்.பி-க்களின் வெற்றி செல்லாது' என அறிவிக்கக் கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறார். 'நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்ற ம.தி.மு.க-வை சேர்ந்த கணேசமூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த சின்ராஜ், இந்திய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பாரிவேந்தர் ஆகியோர் தி.மு.க-வின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி-க்கள் ஆகியிருக்கிறார்கள்.

Ganesa moorthy, Ravikumar, Sinraj, Paarivendhar
Ganesa moorthy, Ravikumar, Sinraj, Paarivendhar

இவர்களின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்' என மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் எம்.எல்.ரவி. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இப்படியான வழக்குகள் கடந்த காலங்களிலும் தொடரப்பட்டு, நீர்த்துப்போயிருக்கின்றன. அதில் ஒன்றுதான் காதர் மொய்தீன் வழக்கும். அந்த வழக்கின் ஃபிளாஷ்பேக்கை பார்ப்போம்.

பதிவு செய்யப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சி வேறொரு அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தப்பட்டு வருவது ஜனநாயக சாபக்கேடு. அப்படித்தான் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் கட்சியை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தார்கள். வேலூர் தொகுதியில் போட்டியிட்டார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன். தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் முஸ்லிம் லீக் வெற்றி பெற்றது. வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்ட நேரத்தில், காதர் மொய்தீன் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என சர்ச்சை எழுந்தது. ''தி.மு.க-வின் உறுப்பினர் நான்'' எனச் சொல்லி, கட்சியின் அடையாள அட்டையைத் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்தார் காதர் மொய்தீன். முஸ்லிம் லீக் கட்சியில் இருந்து போட்டியிட்டு வென்றபோதும் தேர்தல் ஆணையம், நாடாளுமன்ற ஆவணங்களின்படி காதர் மொய்தீன் தி.மு.க எம்.பி-யாகவே கருதப்பட்டார்.

Kader Mohideen
Kader Mohideen

'இரவல் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற காதர் மொய்தீனின் வெற்றி செல்லாது' என அறிவிக்கக் கோரி அன்றைக்கு வழக்கு தொடரப்பட்டது. 'காதர் மொய்தீன் முஸ்லிம் லீக் உறுப்பினர் இல்லை. அவர் தி.மு.க உறுப்பினர்தான்' எனச் சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இந்த வழக்கு இப்போது போடப்பட்டிருக்கும் வழக்குக்கு நிறைய முன்னுதாரணங்களை அளிக்கக் கூடும்.

'வேறு அரசியல் கட்சிகளிலோ சாதி, மத சங்கங்களிலோ உறுப்பினராக உள்ளவர்கள் கழகத்தின் உறுப்பினராக ஆவதற்குத் தகுதியுடையோர் அல்லர்' என்கிறது தி.மு.க கொள்கை மற்றும் குறிக்கோள் சட்ட திட்டங்கள் விதி 5 பிரிவு 2. இதே விதி அனைத்து அரசியல் கட்சிகளின் சட்ட திட்ட விதிகளில் கண்டிப்பாகக் குறிப்பிட்டிருப்பார்கள். அதே போலத்தான், 'முஸ்லிம் லீக் உறுப்பினராக உள்ளவர்கள் வேறு அரசியல் கட்சிகளிலோ அரசியல் சம்பந்தப்பட்ட வேறு இயக்கத்திலோ, உறுப்பினராகவே இருக்கவோ கூடாது' என்கிறது முஸ்லிம் லீக் சட்ட திட்ட விதி.

காதர் மொய்தீனின் தி.மு.க. உறுப்பினர் சீட்டு
காதர் மொய்தீனின் தி.மு.க. உறுப்பினர் சீட்டு

'ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகளில் உறுப்பினராக இருக்க முடியாது' என்பதுதான் நிஜம். இதை இன்னொரு கோணத்திலும் பார்க்க முடியும் . ஒருவர் அரசியல் கட்சி ஒன்றில் சேரும்போது, அதற்காகப் பூர்த்தி செய்து அளிக்கும் விண்ணப்ப பாரத்தில், 'நான் வேறு எந்த அரசியல் கட்சியிலும் இயக்கத்திலும் உறுப்பினராக இல்லை என்று உறுதி கூறுகிறேன்' என்கிற வாசகம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். அந்த உறுதிமொழியில் கையெழுத்துப் போட்டால்தான் கட்சியில் ஒருவராகச் சேர முடியும்.

காதர் மொய்தீன் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், 'தமிழ்நாடு மாநில இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் கட்சியல்ல. அது ஒரு சமூக அமைப்பு' என 1.10.2005 அன்று உயர் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார் முஸ்லிம் லீக் கட்சியின் அன்றைய பொதுச் செயலாளர் ஹக்கிம் சையத் சத்தார். தி.மு.க-வும் தன் பங்குக்கு காதர் மொய்தீனுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.

'காதர் மொய்தீன் தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர். 2004 ஏப்ரலில் காதர் மொய்தீன் தி.மு.க-வில் உறுப்பினராகச் சேர்ந்தார்' என 23.02.2006 அன்று உயர் நீதிமன்றத்தில் சொன்னார் தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்.

Madras High Court
Madras High Court

இப்படி நீதிமன்றத்தில் இரண்டு கட்சிகளும் அளித்த விளக்கத்தின்படி தீர்ப்பும் எழுதப்பட்டது. 'வேட்புமனுவில், தான் சார்ந்த கட்சியைப் பற்றி காதர் மொய்தீன் தவறான தகவல் அளித்தாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. வேட்புமனு தாக்கல் செய்யும்போதும் வேட்புமனு பரிசீலனையிலும் காதர் மொய்தீன் தி.மு.க உறுப்பினராக இருந்திருக்கிறார் என்பது உறுதியாகிறது. எனவே, உதயசூரியனில் வெற்றி பெற்ற காதர் மொய்தீனின் வெற்றி செல்லும்' எனச் சொல்லி வழக்கை 28.03.2006 அன்று தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். மேல் முறையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றமும் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.

இரவல் சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள் அனைத்தையும் அரசியல் கட்சிகள் அப்பட்டமாக ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன. இப்போது தொடரப்பட்ட வழக்கு, காதர் மொய்தீன் வழக்கைப் போலவே பிசுபிசுத்துப் போகலாம். இப்படிப் பெரிய சட்டப் போராட்டம் நடத்தி, பதவியைத் தக்க வைத்த அனுபவத்தால் என்னவோ முஸ்லிம் லீக் கட்சி அதன் பிறகு தனி சின்னத்தில்தான் போட்டியிட்டு வருகிறது. 2016 சட்டசபைத் தேர்தலிலும் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க கூட்டணியில் ஏணி சின்னத்தில் போட்டியிட்டது முஸ்லிம் லீக்.

DMK and ADMK head offices.
DMK and ADMK head offices.

''தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும். தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாகச் செயல்படக் கூடாது'' எனத் தேர்தலுக்குத் தேர்தல் முழங்கும் அரசியல் கட்சிகள் நேர்மையோடு நடக்கிறதா? கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கிவிட்டு, அவர்களைத் தங்கள் கட்சியின் சார்பில் நிற்கச் சொல்லி வற்புறுத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இந்த அரசியல் அசிங்கத்தை தி.மு.க, அ.தி.மு.க அரங்கேற்றி வருகிறது. அப்படி வெற்றி பெறும் கூட்டணிக் கட்சி எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-கள் வெளியில் அந்தக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் என மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால், நாடாளுமன்றத்திலோ சட்டமன்றங்களிலோ அவை எந்தச் சின்னத்தில் வெற்றி பெற்றதோ அந்தக் கட்சியைச் சேர்ந்தவராகத்தான் அதிகாரபூர்வமாகக் கணக்கில் கொள்ளப்படுவார்கள்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்குத் தேர்தல் ஆணையம் சின்னத்தைத் தூக்கிக் கொடுத்துவிடாது. அந்தக் கட்சியின் தலைவர், 'இவருக்குச் சின்னத்தை ஒதுக்குங்கள்' எனக் கையெழுத்துப் போட்டு அளிக்கும் ஃபார்ம் B படிவத்தை வேட்புமனுவோடு அளித்தால் மட்டுமே அந்தக் கட்சியின் வேட்பாளருக்குச் சின்னம் ஒதுக்கப்படும்.

Thaniyarasu, Karunas, Tamimun Ansari
Thaniyarasu, Karunas, Tamimun Ansari

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரியும் தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசும் முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸும் அந்தந்தக் கட்சிகளின் தலைவர்கள். ஆனால், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால், அவர்கள் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள். எப்படி ஒரு கட்சிக்குத் தலைவராகவும் இன்னொரு கட்சிக்கு எம்.எல்.ஏ-வாகவும் இருக்க முடியும். இவர்களுக்குச் சின்னம் ஒதுக்க ஃபார்ம் B கொடுத்தவர்களும் அதை ஏற்றுக்கொண்ட தொகுதியின் தேர்தல் அதிகாரிகளும் தேர்தல் ஆணையமும் குற்றவாளிகள்தாம். சின்னங்கள் இரவல் தரப்படுவது வாக்காளர்களுக்கு மட்டுமல்ல தேர்தல் ஆணையத்துக்கும் தெரியும். ஆனால், சட்டத்தின் சந்து பொந்துகளில் அரசியல் கட்சிகள் புறப்பட்டு, தேர்தல் ஆணையத்துக்குப் பட்டை நாமம் சூட்டுகின்றன.

ம.தி.மு.க-வின் கணேசமூர்த்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமாரும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் சின்ராஜும் இந்திய ஜனநாயகக் கட்சியின் பாரிவேந்தரும் அதிகாரபூர்வமாகத் தி.மு.க எம்.பி-க்கள்தான். அவர்களுக்கு சீட் கொடுத்து பெருந்தன்மை காட்டிவிட்டு, அவர்களைத் தன் கட்சியின் கணக்குக்குள் கொண்டு வருவது எல்லாம் அப்பட்டமான கிரிமினல் அரசியல். தேர்தல் ஆணையம் கொடுத்த சின்னத்தை இன்னொரு கட்சிக்கு மடைமாற்றுவது அக்மார்க் மோசடி.

Election commission of India
Election commission of India
விகடன்

'தேர்தல் சின்னங்கள் (இடஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு) ஆணை - 1968'-ன்படி ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறவர் அந்தக் கட்சியில் உறுப்பினராகவும் கட்சியின் உறுப்பினர் படிவத்தில் அவருடைய பெயரும் இருக்க வேண்டும் என்கிறது.

தேர்தல் ஆணையத்தில் ஒரு கட்சியைப் பதிவு செய்ய வேண்டும் என்றால் சில விதிமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வேறு கட்சிகளில் உறுப்பினராக இல்லை என்கிற விஷயத்தைப் பிரமாண பத்திரமாக இணைக்க வேண்டும். இதைச் சேர்க்காவிட்டால் அந்தக் கட்சியைப் பதிவு செய்ய முடியாது.

இந்த இரண்டு விஷயங்களும் சொல்லும் செய்தி இதுதான். தேர்தல் நடத்தை விதிகளின்படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்தக் கட்சியில் இருந்து விலகாமல் மற்றொரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது. அப்படிப் போட்டியிட்டால் அது சட்டவிரோதம். ஒரு கட்சியில் இருந்துகொண்டு மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிடச் சட்டத்தில் இடமில்லை எனத் தெளிவாகத் தெரிந்தும் சட்டத்தை மீறுகின்றன அரசியல் கட்சிகள்.

காதர் மொய்தீனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் காதர் மொய்தீனும் தி.மு.க. தலைமையும் நீதிமன்றத்தில் அளித்த விளக்கமும் பிரமாண பத்திரமும்தான் வழக்கு தள்ளுபடி ஆவதற்கு அடிப்படை காரணங்களாக அமைந்தன. அன்றைக்கு என்ன செய்தார்களோ அதைத்தான் அறிவாலயமும் கணேசமூர்த்தியும் ரவிக்குமாரும் சின்ராஜும் பாரிவேந்தரும் செய்வார்கள்.

ஆனால், அரசியல்வாதிகள் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரம் 'ஜனநாயக படுகொலையைத் தடுத்து நிறுத்துவோம்.'

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு