Published:Updated:

அ.தி.மு.க - வில் சலசலப்பு இல்லை; கலகலப்புதான்!”

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

அதிரடியாகப் பேசி கவனம் ஈர்க்கும் அமைச்சர்களில் முக்கியமானவர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

அ.தி.மு.க - வில் சலசலப்பு இல்லை; கலகலப்புதான்!”

அதிரடியாகப் பேசி கவனம் ஈர்க்கும் அமைச்சர்களில் முக்கியமானவர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

Published:Updated:
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

‘மோடிதான் எங்களுக்கு டாடி’, ‘இந்தியாவின் ஸ்டன்ட் மாஸ்டர், மோடி’ என்பதுபோன்ற நகைச்சுவைகளுக்கு மத்தியில், ‘கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும்’, ‘நாங்களும் கையை வெட்டுவோம்’ என்று அவ்வப்போது டெரர் முகமும் காட்டிவருபவரை நேரில் சந்தித்தேன்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு அ.தி.மு.க அரசு காரணமா, பி.ஜே.பி-யுடனான கூட்டணி காரணமா?’’

“இரண்டுமே கிடையாது. இது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசுக்கு மக்கள் விடுத்திருக்கிற ஓர் எச்சரிக்கை மட்டுமே. ஏனெனில், தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி தொடர்வதற்கு எத்தனை இடங்கள் தேவையோ அந்த அளவுக்குச் சட்டமன்ற இடைத்தேர்தலில், மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள். எனவே தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சிதான் தொடரவேண்டும் என்பதில், மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘`நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க படுதோல்வி அடைந்திருப்பது மக்களின் நம்பிக்கையை அக்கட்சி இழந்துவிட்டதைத்தானே காட்டுகிறது?’’

‘`அப்படியல்ல... தி.மு.க-வினர் மக்களை சீட்டிங் செய்துவிட்டனர். ஒவ்வொரு பாமரனும் விவசாயக்கடன், நகைக்கடன், கல்விக்கடன் என்று ரெண்டு லட்சம், மூணு லட்சம் கடன் சுமையில் இருக்கிறான். இந்தச் சமயத்தில் ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்துவிடுவோம்’ என்று தி.மு.க பரப்பிய பொய்யான வாக்குறுதிகளைக் கேட்டு ஏமாந்து வாக்களித்துவிட்டான். எனவே இது, தி.மு.க மக்களை ஏமாற்றிப் பெற்ற வெற்றி.

ஒவ்வொரு தொகுதியிலும் கடன் வாங்கிய அட்டையை வைத்துக்கொண்டு மக்கள் காத்திருக்கிறார்கள். இதற்கு பயந்துகொண்டுதான், வெற்றிபெற்ற தி.மு.க எம்.பி-க்கள் யாரும் நன்றி தெரிவிக்கக்கூடத் தொகுதிக்குள் போகாமல், டெல்லியில் உட்கார்ந்து புரோட்டாவுக்கு மாவு பிசைந்துகொண்டிருக்கிறார்கள்.’’

‘`அ.தி.மு.க ஆட்சியில், மக்களைக் கடன் வாங்கும் நிலைமையில்தான் வைத்திருக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?’’

‘`ஏழ்மையும் வளமையும் எப்போதும் உண்டு. உலகையே ஆட்டிப்படைத்த இங்கிலாந்து, அமெரிக்காவில்கூட ஏழ்மை நிலையிலான மக்கள் இருக்கிறார்கள்தான். ஆனால், மக்களின் இந்த ஏழ்மையைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி ஓட்டுகள் வாங்கி ஜெயிக்கிற வெற்றி, வெற்றியே அல்ல.’’

‘` ‘முதல் இந்து தீவிரவாதி’ என்று பேசிய ‘கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும்’ என்று ஆவேசம் காட்டுகிற நீங்கள், மகாத்மா காந்தி உருவ பொம்மையைச் சுட்டு வன்மத்தைப் பரப்பும் இந்து அமைப்பினர் குறித்து ஆட்சேபம்கூடத் தெரிவிக்கவில்லையே?’’

‘`தமிழ்நாட்டில் நடக்கிற பிரச்னைகளைப் பற்றித்தான் நான் பேசுகிறேன். மற்றபடி வட இந்தியாவில் நடைபெற்றதாக நீங்கள் கூறும் விஷயம் பற்றி நான் அறியவில்லை... அப்படி நடந்திருந்தால், நிச்சயம் அது தவறுதான்.’’

‘`மத விவகாரங்களில், முன்வந்து நீங்கள் தெரிவிக்கும் கருத்துகள் குறிப்பிட்ட மத ஆதரவாளர் என்ற அடையாளத்தை ஏற்படுத்திவிடாதா?”

‘`நம் நாட்டில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், இந்த இந்து மதத்தை மட்டுமே குறிவைத்து தி.மு.க., தி.க உள்ளிட்ட இயக்கங்கள் தொடர்ந்து விமர்சித்துவருகின்றன. இதுகுறித்து யாரும் கேள்வி கேட்பதுவும் கிடையாது. காரணம்... மற்ற மதத்தினரைப்போல இவர்களுக்குள் ஒற்றுமை இல்லை.

அ.தி.மு.க - வில் சலசலப்பு இல்லை; கலகலப்புதான்!”

இப்போதுகூட அத்திவரதரை தரிசிக்க லட்சக் கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். தி.மு.க-வினரைப்போல், தேர்தல் சமயத்தில் மட்டும் சாமி கும்பிடுகிறவர்கள் அல்லர் நாங்கள். தேவாலயம், பள்ளிவாசல், கோயில் என்று எல்லா இடங்களிலும் எப்போதும் வழிபடுகிறவர்கள் நாங்கள். அதே சமயம் ‘நாங்கள் இந்து’ என்ற அடையாளத்தையும் ஒருபோதும் மறைத்துக்கொண்டது கிடையாது.’’

‘`திராவிடச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட கட்சியைச் சேர்ந்த அமைச்சரான நீங்கள், இதுபோன்று...?’’

(கேள்வியை இடைமறித்துப் பேசுகிறார்)

‘`நாங்கள் எல்லாம் எம்.ஜி.ஆரைப் பார்த்துத்தான் கட்சிக்குள் வந்தோம். எனவே, எங்களுக்குத் தலைவர் எம்.ஜி.ஆர்தான். அவருக்குப் பின்னர் ஜெயலலிதா. இப்போது எடப்பாடியார். இவர்கள் எல்லோருமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான். அதனால், ‘கடவுள் இல்லை’ என்றெல்லாம் நான் ஒருநாளும் சொல்லமாட்டேன்.’’

‘`சமீபகாலமாக, ‘இந்து அறநிலையத்துறையைக் கலைத்துவிட்டு, கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும்’ என்ற குரல்கள் ஒலித்துவருகின்றனவே. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?’’

“இந்து மதக் கோயில்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை இந்துக்களிடமே ஒப்படைப்பதென்றால், யாரிடம் ஒப்படைப்பது என்கிற பிரச்னை ஏற்படும். தற்போது இந்து அறநிலையத்துறை சிறப்பாகத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எங்கோ ஒரு கோயிலில் ஒருசில தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால், இந்துக்களைப் பிடிக்காத சில இயக்கத்தினர்தான் இதைப்பற்றி பூதாகரமாகப் பேசி பிரச்னையை ஏற்படுத்துகிறார்கள்.

தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால், இந்துக் கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைத்தால்கூட சந்தோஷம்தான். ஏனெனில், தேவாலயங்களும் மசூதிகளும் அந்தந்த மதத்தவரின் கட்டுப்பாட்டில்தானே இருந்துவருகின்றன.’’

‘`புதிய கல்விக்கொள்கையிலுள்ள குளறுபடிகள் குறித்து நடிகர் சூர்யா எழுப்பியுள்ள கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல், ‘அரைவேக்காட்டுத்தனமாகப் பேசுகிறார்’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துப் பேசியது சரிதானா?’’

‘`சூர்யா என்ன பேசியிருக்கிறார் என்பது பற்றிய பத்திரிகைச் செய்தியை நான் ஆழமாகப் படித்தறியவில்லை. மேலோட்டமாகத்தான் படித்துப் பார்த்தேன். கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடமும் இதுகுறித்து விசாரித்தேன். ‘மக்களுக்கு விரோதமான எந்தவொரு நடவடிக்கையையும் அ.தி.மு.க அரசு நடைமுறைப்படுத்தாது’ என்றார்.

சூர்யா ஒரு பிரபலமான நடிகர். அவர் அப்பா சிவகுமார் நல்ல ஆன்மிகவாதி. அவர்களது குடும்பமே ஒரு தன்மையான குடும்பம். அதனால், சூர்யா கூறிய கருத்துகளில் உள்ள நியாயங்களை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்தான்.’’

‘`நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்துத் தமிழக அரசு அனுப்பிய 12 கடிதங்களுக்கும் காரணம்கூடச் சொல்லாமல் திருப்பி அனுப்பிவிட்டது மத்திய பா.ஜ.க அரசு. மத்திய அரசோடு அ.தி.மு.க அரசு கொண்டுள்ள இணக்கத்துக்கு இதுதான் மதிப்பா?’’

‘`நீட் தேர்வு வருவதற்குப் பிள்ளையார் சுழி போட்டது யார்? தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போதுதானே இதற்கு வாஸ்து பண்ணினார்கள். அது படிப்படியாக வளர்ந்து இப்போது பெரிய பில்டிங்காக உருமாறி, வாடகைக்கு வந்து நிற்கிறது.’’

‘`தி.மு.க செய்த தவறுகளைத் திருத்தி நல்லாட்சி செய்வீர்கள் என்றுதானே மக்கள், அ.தி.மு.க-வுக்கு வாக்களித்தார்கள்... நீங்கள், ஏழு வருடங்களுக்கு முன்பு ஆட்சியில் இருந்த தி.மு.க-வை இன்னும் குற்றம் சொல்லிக்கொண்டிருப்பது சரியா?’’

‘`தி.மு.க-வினர் பலமாக அஸ்திவாரம் அமைத்து வாஸ்து பார்த்து பில்டிங் எழுப்பிவிடுவார்கள். அப்புறம் நாங்கள் வந்து அவற்றையெல்லாம் இடித்துத் தள்ளவேண்டும் என்றால், அது எப்படி? மோடி, எங்கள்மீது நம்பிக்கை வைத்துள்ளார். எங்களையெல்லாம் நண்பர்களாக, சகோதரர்களாகப் பார்க்கிறார். ஆனால், எல்லாப் பிரச்னைகளுக்கும் மத்திய அரசுக்கு எதிராகத் தீர்மானம் இயற்றி, மத்திய பா.ஜ.க அரசை நாங்கள் பகைத்துக்கொள்ள வேண்டுமாம்... இந்த இடைவெளியில், இவர்கள் (தி.மு.க) மத்திய அரசோடு சேர்ந்துகொண்டு மந்திரியாகிவிடுவார்களாம். நாங்கள் என்ன இளித்தவாயர்களா?’’

‘`மும்மொழிக்கொள்கை, தபால் தேர்வு என ஒவ்வொரு விஷயத்திலும் மத்திய அரசுக்கு எதிராகத் தமிழகத்தின் எதிர்க் கட்சிகள் மட்டும்தானே குரல் கொடுக்கின்றன. ஆளும் அ.தி.மு.க அரசு எதிர்க்கருத்து சொல்லக்கூட பயந்து பதுங்குகிறதே?’’

‘`கோட்டைக்கு வெளியே நின்றுகொண்டு தி.மு.க போடும் கூக்குரலையெல்லாம் மத்திய அரசு காதுகொடுத்துக்கூடக் கேட்பதில்லை. அதிகாரத்தில் இருக்கிற நாங்கள்தான் அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பி அமித்ஷா, மோடியைச் சந்தித்துப் பேசி தபால் தேர்வு, இந்தி மொழித் திணிப்புப் பிரச்னைகளையெல்லாம் முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறோம்.’’

‘`உயர்சாதியினருக்கான இட ஒதுக்கீட்டு விஷயத்தில் அ.தி.மு.க தனது கருத்தைச் சொல்ல மறுப்பது ஏன்? மத்திய அரசின் சட்டத்தைத் தனியே எதிர்க்க பயந்துதானே அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது?’’

‘`என்னுடைய கருத்தை வேண்டுமானால் சொல்கிறேன். 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல், 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் என்பதே என் கருத்து. உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று சொல்லும் இந்தக் கட்சிகள் எல்லாம், தேர்தல் நேரத்தில், உயர் சாதியினர் ஓட்டுகள் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்வார்களா?’’

‘`தண்ணீரின்றித் தமிழகமே தவித்துக்கொண்டிருக்கும் சூழலில், ‘ஊடகம்தான் தண்ணீர்ப் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறது, தட்டுப்பாடெல்லாம் இல்லை’ என்றெல்லாம் உண்மையை மறைத்துப் பேசுவது மக்களின் கோபத்துக்கு வழிவகுத்துவிடாதா?’’

‘`போனவருடம் வெள்ளம் வந்தது ‘வெள்ள நிவாரண நிதி’ கொடுத்தோம். இந்த வருடம் வறட்சி... ‘வறட்சி நிவாரண நிதி’ கொடுக்கிறோம். இதைத்தான் ஓர் அரசாங்கம் செய்யமுடியும். மற்றபடி மழை இல்லாமல் போனதற்கும் எடப்பாடியார் ஆட்சிதான் காரணம் என்று சொன்னால் என்ன அர்த்தம்?’’

‘`வரவிருக்கிற மழையைச் சேகரிக்கும் முயற்சியாக ஏரி, குளம் தூர்வாருதல் போன்ற பணிகளைச் செய்யாமல், யாகம் வளர்ப்பதுதான் ஓர் அரசாங்கத்தின் பணியா?’’

‘`ஏரி, குளம் தூர்வாருதல், நீர்வரத்துக் கால்வாய் மற்றும் கண்மாய் செப்பனிடும் பணி என அனைத்துப் பணிகளும் பலகோடி ரூபாய் செலவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

யாகம் என்பது ஒருவகை கூட்டுப் பிரார்த்தனை. அதற்கு இறைவனின் ஆசி உண்டு. எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்குப் போராடியபோது, மத வேற்றுமை பாராமல் அனைத்து மக்களும் கூட்டுப் பிரார்த்தனை செய்தோம். எம்.ஜி.ஆரும் இறைவன் அருளால் உயிர்பிழைத்து வந்தார். எனவே, யாகத்துக்கென்று ஒரு சக்தி இருக்கிறது. எனவே, மழை வேண்டி யாகம் வளர்ப்பதில் எந்தத் தப்பும் இல்லை!’’

‘` ‘அ.தி.மு.க-வில் ஒற்றைத்தலைமை வேண்டும்’ என்ற பேச்சு எழுந்திருப்பதுவே கட்சிக்குள் சலசலப்புகள் ஆரம்பித்துவிட்டன என்பதற்கான அடையாளம்தானே?’’

‘`அப்படியெல்லாம் அ.தி.மு.க-வுக்குள் எந்தச் சலசலப்பும் இல்லை; கலகலப்புதான் இருக்கிறது.’’

‘`படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் எனக் கூறிக்கொண்டே, வருடம்தோறும் டாஸ்மாக்கின் விற்பனை இலக்கைக் கூட்டிக்கொண்டிருக்கிறீர்களே... நியாயம்தானா?’’

‘`கடந்த இரண்டு தலைமுறைகளாக மக்களைக் குடிக்கவைத்துச் சீரழித்தது தி.மு.க-தான். நாட்டில் இன்றைக்கு 80 சதவிகிதம்பேர் குடிப்பழக்கத்துக்கு அடிமைதான். கல்யாணம் என்றாலும் பார்ட்டி, குழந்தை பிறந்தாலும் பார்ட்டி, யார் செத்தாலும் பார்ட்டி... இப்படி எல்லா நாளிலும் குடிக்கப் பழகிவிட்டார்கள். இதையெல்லாம் தடுப்பதற்கு நாங்கள் போராடுகிறோம். ஆனால் அதைக் கெடுப்பதற்குத்தான் ஸ்டாலின் வந்து நிற்கிறார். இன்றைக்கே மதுவிலக்கை அமல்படுத்தினாலும் கூட நாளைக்குக் கள்ளச்சாராயம் குடித்து யாராவது செத்துப்போனால், அப்போதும் ‘இந்த அ.தி.மு.க ஆட்சியில் கள்ளச்சாராய சாவு; ஆட்சியைக் கலைக்க வேண்டும்’ என்று அப்படியே மாற்றிப் பேசுவார் ஸ்டாலின்.’’

‘`ஜெயலலிதாவைவிடவும் முதல்வர் எடப்பாடி சிறப்பாகச் செயல்படுகிறார் என்கிறாரே அமைச்சர் தங்கமணி?’’

‘`ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர்தானே எடப்பாடியார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு சேவல் சின்னத்தில், எடப்பாடியில் நின்று ஜெயித்த, கட்சியின் மூத்த தலைவர். அவரது கடுமையான உழைப்புக்கும் விசுவாசத்துக்கும்தான் முதல்வர் பதவியே அவரைத் தேடி வந்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் எப்படி வேகத்துடனும் விவேகத்துடனும் செயல்பட்டாரோ அதே வழியில் எடப்பாடியாரும் திறம்படப் பணியாற்றி வருகிறார். அப்படிப்பட்ட முதல்வர் எடப்பாடியார்மீதுள்ள பற்றின் காரணமாகத் தங்கமணி அப்படிக் கூறியிருக்கிறார்.

வீட்டில் நம் பிள்ளைகளைப் பார்த்து, ‘என்னைவிடக் கெட்டிக்காரனாக இருக்கிறாயே’ என்று நாம் சொல்வது இல்லையா... அதுபோல்தான் இதுவும். இப்படிச் சொல்வதாலேயே, ‘நாம் கெட்டிக்காரன் இல்லை’ என்று அர்த்தமாகிவிடுமா என்ன. ஒருவரது உழைப்பை, தைரியத்தைப் பாராட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைதான் அது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism