Published:Updated:

'காஷ்மீர் வளர்ச்சியடையவில்லை!' - அமித் ஷா சொன்னதும்.. இந்திய அரசின் தரவுகள் சொல்வதும்!

நாடாளுமன்றத்தில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை நீக்கி மசோதா நிறைவேற்றியபோது, 'காஷ்மீர் வளர்ச்சியடையவில்லை' எனக் கூறினார், மத்திய அமைச்சர் அமித் ஷா. வளர்ச்சியில் இந்திய சராசரியோடும், மற்ற மாநிலங்களோடும் ஒப்பிடுகையில், காஷ்மீருக்கு என்ன இடம்?

நாடாளுமன்றத்தில் அமித் ஷா
நாடாளுமன்றத்தில் அமித் ஷா
ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியன பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளன. மக்களுக்கு, ஜனநாயகம் முழுமையாக போய்ச் சேராததால், ஊழல் அதிகரித்திருக்கிறது. அதனால் ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியடைவில்லை.
அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர்.
Vikatan Fact check
Vikatan Fact check

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த 370-வது சட்டப்பிரிவும், 35ஏ சட்டப்பிரிவும் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு நீக்கப்பட்டன. பி.ஜே.பி-யினரும் பல்வேறு தரப்பினரும் இந்த நடவடிக்கையை ஆதரித்துவந்தாலும், காஷ்மீர் மக்கள், எதிர்க்கட்சியினர், இடதுசாரி இயக்கங்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்துவருகின்றனர்.

எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்த அமித் ஷா, ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சியைப் பற்றி கேள்வி எழுப்பினார். ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்துவரும் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்டதாகக் கூறினார்.

சட்டப்பிரிவு 35ஏ ஆதரவாளர்களே, பதில் கூறுங்கள். நிலம் வாங்க முடியாத, வாக்கு செலுத்த முடியாத காஷ்மீருக்கு, சிறந்த தனியார் மருத்துவர்கள் எப்படிச் செல்வார்கள்? சட்டப்பிரிவு 370 அமலில் இருந்ததால்தான், ஜம்மு-காஷ்மீருக்கு தனியார் கல்வி நிறுவனங்களோ சிறந்த கல்வியோ சென்று சேரவில்லை. எங்களுக்கு 5 ஆண்டுகள் கொடுங்கள். ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சியில் மிகச்சிறந்த மாநிலமாக மாற்றிக்காட்டுகிறோம்.
அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர்.

ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியடையாததால், சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியன நீக்கப்பட்டதாக அமித் ஷா கூறியதால், மற்ற மாநிலங்களோடும் இந்திய சராசரியோடும் ஒப்பிட்டுப் பார்த்தோம்.

இந்திய அரசு வெளியிடும் தகவல்களின் அடிப்படையில், சில முக்கியமான பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளை ஆராய்ந்தோம். அதன்படி, சில முடிவுகள் கிடைத்தன.

ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி ஒப்பீடு
ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி ஒப்பீடு
Vikatan Infographics

ஒரு குழந்தை பிறக்கும்போது, அது பிறக்கும் இடத்தின் மருத்துவ வசதிகள், புறச் சூழல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வாழ்நாள் எதிர்பார்ப்பு கணக்கிடப்படுகிறது. இதில், இந்திய சராசரியாக 67.9 ஆண்டுகள் எனக் கூறப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர், இந்திய சராசரியைவிட அதிகமாகப் பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், ஜம்மு -காஷ்மீரில் பிறக்கும் குழந்தைகளின் வாழ்நாள் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

தற்போதைய பி.ஜே.பி ஆட்சியின்மீது முன்வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டு, வேலையின்மை. இந்தியா முழுவதும் 6 சதவிகிதம் பேருக்கு பணியில்லை. ஜம்மு-காஷ்மீரில் 5.4சதவிகிதம் வேலையின்மை நீடிக்கிறது. இது, இந்திய சராசரியைவிடவும் தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைவிடவும் குறைவு.

இந்தியா முழுவதும் ஏறத்தாழ 22 சதவிகித மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். காஷ்மீர், தமிழ்நாடு முதலான மாநிலங்களில் வறுமையில் வாழ்பவர்கள் 8 சதவிகித மக்கள் மட்டுமே. இந்தி பேசும் மாநிலங்களான பீகார், உத்தரப்பிரதேசம் முதலானவற்றில் அதிகமான மக்கள் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.

1,000 பேருக்கு 1 மருத்துவர் இருக்க வேண்டும் என்பது வளர்ச்சிக்கான அறிகுறி என்கின்றன, உலக சுகாதார நிறுவனங்கள். இந்தியா முழுவதும் மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு நிலவிவருகிறது. காஷ்மீரும் இதில் விதிவிலக்கல்ல.

எத்தனை பேருக்கு ஒரு மருத்துவர்?
எத்தனை பேருக்கு ஒரு மருத்துவர்?
Vikatan Infographics

இந்தியா முழுவதும் ஏறத்தாழ 11 ஆயிரம் பேருக்கு 1 மருத்துவர் மட்டுமே இருக்கிறார். மற்ற மாநிலங்களோடும், இந்திய சராசரியோடும் ஒப்பிட்டால், ஜம்மு-காஷ்மீரில் 3 ஆயிரம் பேருக்கு 1 மருத்துவர் மட்டுமே இருப்பது வளர்ச்சியையே குறிப்பதாக உள்ளது.

குழந்தைகள் இறப்பு விகிதம், பிறப்பு விகிதம் முதலானவற்றிலும் ஜம்மு-காஷ்மீர் இந்திய சராசரியைவிட சிறப்பாகச் செயலாற்றி, வளர்ந்த மாநிலங்கள் பட்டியலில் இடம்பெறுகிறது. பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, ஜம்மு-காஷ்மீரின் ஆண்டு வருவாய் குறைவாக இருப்பது தெரிகிறது. மிகக்குறைவான உற்பத்தி செய்யும் மாநிலங்கள் பட்டியலில், ஜம்மு-காஷ்மீர் இடம்பெற்றுள்ளது.

உலக வங்கி ஆண்டுதோறும் கணக்கிடும் மனித வளர்ச்சிக் குறியீட்டில், ஜம்மு-காஷ்மீர் இந்திய சராசரியைவிட அதிகமாகப் பெற்றுள்ளது. இந்தி பேசும் மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டிற்குப் பின் நிற்கிறது, ஜம்மு-காஷ்மீரின் மனித வளர்ச்சிக் குறியீடு.

இந்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. எனினும், உள்துறை அமைச்சரின் இந்தப் பேச்சுக்கான காரணத்தை தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசையின் பேச்சோடு ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளலாம்.

ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ முதலானவை வளர்ச்சிக்கான திட்டங்கள்.
தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பி.ஜே.பி தலைவர்.

பி.ஜே.பி-யின் மத்திய தலைவரும் தமிழ் மாநிலத் தலைவரும், ஜம்மு-காஷ்மீரில் அமல்படுத்தப்படவுள்ள வளர்ச்சித் திட்டங்களும், தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படவுள்ள வளர்ச்சித் திட்டங்களும் ஏறத்தாழ ஒன்றே என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.