Published:Updated:

``மத்திய அரசு, இலவச மின்சாரத்தை தடை செய்யவில்லை!''- விளக்குகிறார் எஸ்.ஆர்.சேகர்

விவசாய நிலம்

மின்சார சட்டத்திருத்த மசோதா குறித்துப் பேசுகையில், ''எதிர்க் கட்சியினர் கூறுவதுபோல், தனியார் மயம் என்பது கெட்ட வார்த்தை இல்லை'' என்கிறார் பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

``மத்திய அரசு, இலவச மின்சாரத்தை தடை செய்யவில்லை!''- விளக்குகிறார் எஸ்.ஆர்.சேகர்

மின்சார சட்டத்திருத்த மசோதா குறித்துப் பேசுகையில், ''எதிர்க் கட்சியினர் கூறுவதுபோல், தனியார் மயம் என்பது கெட்ட வார்த்தை இல்லை'' என்கிறார் பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

Published:Updated:
விவசாய நிலம்

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மத்திய பா.ஜ.க அரசு, மீண்டும் தடாலடி சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளத் தயாராகிவிட்டது. இம்முறை மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கொதித்தெழுபவர்கள், விவசாயப் பெருமக்கள்.

ஏற்கெனவே, 'விவசாய விளைபொருள்கள் மற்றும் கால்நடை விற்பனைச் சட்ட'த்தில் மாற்றத்தைக் கொண்டுவந்த மத்திய அரசு, அதை நிறைவேற்றுமாறு தற்போது மாநில அரசுகளை நிர்பந்தித்துவருவதாகக்கூறி, 'அகில இந்திய விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்கள் சங்க'த்தினர், வரும் 22-ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தவிருக்கின்றனர். கொரோனா தொற்றால் விவசாயிகளின் வாழ்க்கையே பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், அவர்களது வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்துக்காக மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துவருவதாகக் குற்றம் சாட்டுகிறது இவ்வமைப்பு.

விவசாயிகள்
விவசாயிகள்

'கொரோனா காலகட்டத்தில் வருமானமின்றித் தவித்துவரும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சியில் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியிருக்கிறார் 'தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க'த்தின் தலைவர் அய்யாகண்ணு. மேலும், ''விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்துசெய்து, நிதி மந்திரி அறிவிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அப்படி எந்த அறிவிப்பையும் அவர் அறிவிக்காதது, ஏற்கெனவே வருமானமின்றி நொந்துகிடக்கும் விவசாயிகளை வேதனையில் தள்ளியுள்ளது'' என்றும் கூறியுள்ளார் அய்யாகண்ணு.

இதற்கிடையே, 'மின்சார சீர்திருத்தச் சட்ட மசோதா' மூலம் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளுக்கும் 'ஷாக்' கொடுத்திருக்கிறது மத்திய அரசு. 'மின்சார சீர்திருத்த மசோதா 2020 நிறைவேறினால், தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும். எனவே, இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்' எனக்கோரி 'தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு', வரும் ஜூன் மாதம் 5-ம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசும் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், ''மத்திய அரசு கொண்டுவரும் இந்த மின்சார சீர்திருத்த வரைவு மசோதா பொதுமக்கள் நலனுக்கு எதிரானது. குறிப்பாக, தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுவரும் 'விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்துசெய்ய வேண்டும்' என்ற உள்நோக்கத்தோடே இது திட்டமிட்டு கொண்டுவரப்படுகிறது.

நம் மாநிலத்தில், ஏழை - எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் 100 யூனிட் மின்சார கட்டணச் சலுகை, விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் என அனைத்துச் சலுகைகளும் இம்மசோதாவால் பாதிக்கப்படும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட உயரிய திட்டம்தான் 'விவசாயத்திற்கு இலவச மின்சார திட்டம்.' ஆனால், இதை ரத்து செய்யும் உள்நோக்கத்தோடு, 'மின் பயன்பாட்டிற்கான கட்டணத்தை விவசாயிகள் செலுத்திய பின் அதற்கான மானியத்தை பின்னேற்பு மானியமாக மாநில அரசு வழங்கும்' என்று சொல்கிறது. இந்த மின்சார சீர்திருத்தச் சட்டம் சுற்றிவளைத்து இலவச மின்சாரத்தையே ரத்துசெய்வதற்கான திட்டம்தான். எனவே, தமிழக அரசு இதை ஏற்கக்கூடாது.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

வட மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழகம் 25 ஆண்டுகள் முன்னோக்கி உள்ளது. இதற்கான அடிப்படைக் காரணம் இங்கேயுள்ள திராவிடப் பாரம்பர்யம்தான்! அடுத்ததாக, இந்திய அரசின் பொருளாதார வருவாயில் 35 சதவிகிதத்துக்கும் மேல் ஈட்டித் தருவது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள்தான். இதில், விவசாய உற்பத்தி, சாலை மேம்பாடு, மின்சார வசதி, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அனைத்திலும் முதன்மை மாநிலமாகத் திகழ்வது தமிழ்நாடு. எனவே, 'பொருளாதார சீர்திருத்தம்' என்ற பெயரில், தமிழகத்தை பின்னுக்குத் தள்ள அவசர சட்டங்களைக் கொண்டு வருகிறது மத்திய அரசு.

மாநில அரசுகளை மக்களிடமிருந்து பிரித்து, அனைத்து அதிகாரத்தையும் மத்திய அரசின் கைகளுக்கே கொண்டுசேர்க்கும் இந்த முயற்சி, கூட்டாட்சித் தத்துவத்தையே குழிதோண்டிப் புதைத்துவிடும்'' என்று எச்சரிக்கிறார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கினால் வருமானமின்றி பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்காக, '100 நாள் வேலை' திட்டத்துக்கான நாள்களையும் கூலியையும் அதிகப்படுத்தக்கோரி, நேற்று (19-5-2020) 'தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம்' சார்பில், கறுப்புக்கொடி ஆர்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து 'அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க'த்தின் அகில இந்தியத் தலைவர் நா.பெரியசாமி பேசும்போது,

''உடல் உழைப்பு மட்டுமே வாழ்வாதாரம் என்றிருக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு, 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்' மற்றும் திட்டப்பணிகள்தான் முதன்மையான வாழ்வாதாரம். எனவேதான் இந்தத் திட்டத்தின் நாள்களையும் ஊதியத்தையும் அதிகப்படுத்தக் கோரி, தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

நா.பெரியசாமி
நா.பெரியசாமி

நாடு முழுக்கவே, விவசாயத் தொழில் நலிவடைந்து கொண்டிருக்கும் சூழலில், மத்திய பா.ஜ.க அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் விவசாயத்தை முற்றிலும் அழித்துவிடுவதாகவே அமைந்துவருகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலான சட்டப் போராட்டத்துக்குப் பிறகுதான், 'காவிரி மேலாண்மை ஆணையம்' அமைத்தோம். இதிலேயேகூட பல்வேறு பின்னடைவுகள் நமக்கு இருந்துவந்தது. ஆனாலும் இத்தனை ஆண்டுகள் நடத்திய சட்டப் போராட்டத்துக்குக் கிடைத்த பலனாக இதை எண்ணினோம். தமிழகத்துகான நீராதார உரிமைகள் ஓரளவாவது இந்த ஆணையத்தின் வழியே கிடைக்கும் என்றும் நம்பியிருந்தோம்.

ஆனால், திடீரென ஒற்றை அறிவிப்பால், இந்த ஆணையத்தையே மத்திய நீர்வளத்துறை (ஜல்சக்தி) யின் கீழ் இணைத்து, நமது நம்பிக்கைகளையெல்லாம் பொய்யாக்கிவிட்டது மத்திய அரசு. காவிரி பாசனப் பகுதியை 'சிறப்பு வேளாண் பாதுகாப்பு மண்டலம்' என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில்தான், விவசாயத்துக்கு உயிர் ஆதாரமாக விளங்கக்கூடிய நீர்ப்பாசனத்தையே பறிக்கிற விதமாக இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது மத்திய அரசு.

அடுத்து, மின்சார சட்டத் திருத்தம் கொண்டுவந்து, விவசாயிகளின் இலவச மின்சாரத்தையும் பறித்துவிட்டார்கள். விவசாயிகள் மட்டுமல்லாது, குடிசை வீடுகளுக்கான ஒற்றை விளக்கு இலவச மின்சாரம், கைத்தறி நெசவாளர்களுக்கான 300 யூனிட் இலவச மின்சாரம் என அனைத்து தொழிலாளர்களுக்கான சலுகைகளையும் பறித்துவிட்டார்கள். ஒட்டுமொத்தத்தில், தமிழ்நாட்டை திட்டமிட்டு வஞ்சிக்கும் விதமாகவே இந்தத் திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசால் கொண்டுவரப்படுகிறது!'' என்கிறார் கொதிப்புடன்.

விவசாய சங்கங்கள், மத்திய பா.ஜ.க அரசின்மீது சுமத்துகிற குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, தமிழக பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பேசினோம்... ''தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொடுக்கிற அறிக்கைகளை மட்டும் படித்துவிட்டு, மத்திய அரசுக்கு எதிராக விவசாய சங்கங்கள் போராடுகின்றன. '2020 மின்சார சட்டத்திருத்த மசோதா' என்ன சொல்கிறது என்றும் படித்துப் பார்த்தால், இந்தப் போராட்டங்களே தேவையிருக்காது.

விவசாயத் தொழிலாளர் போராட்டம்
விவசாயத் தொழிலாளர் போராட்டம்

இலவசங்களை அந்தந்த மாநில அரசுகள்தான் கொடுத்துவருகின்றன. அந்த வகையில், விவசாயிகள் - குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரத்தை தமிழ்நாடு மாநில அரசுதான் கொடுத்துவருகிறது. இந்த சட்டத்திருத்த மசோதாவில், இலவச மின்சாரத்தை கொடுக்க வேண்டாம் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. வழக்கம்போல், மாநில அரசே கொடுத்துவரலாம். அதில் எந்தத் தடையும் இல்லை. எனவே, இலவசத்தை கொடுப்பதோ அல்லது மறுப்பதோ மாநில அரசு சம்பந்தப்பட்டதுதானே தவிர, மத்திய அரசுக்கு இதில் பங்கு இல்லை.

இலவசத் திட்டங்களில் நடைபெறும் ஊழல்களைத் தடுக்கும் விதமாகத்தான் அனைத்துத் திட்டங்களின் மானியங்களும் பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கே நேரடியாகப் போய்ச்சேரும் விதத்தில், 'ஜன்தன் கணக்கு, விவசாயிகளுக்கான உதவித்தொகை' என மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்த வகையில்தான் தற்போதைய மின்சார சட்டத்திருத்த மசோதாவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்துவந்த மாநில அரசுகளின் முறைகேட்டைத் தடுத்து, மக்களுக்கு நியாயமான விலையில் மின்சாரம் கிடைக்க வேண்டும். இதற்காக, 'மத்திய - மாநில அரசுகள் மற்றும் தனியார் மின் உற்பத்தியாளர்'கள் தங்களுக்குள் செய்துகொள்கிற உடன்படிக்கையாகவே மசோதா அமைந்திருக்கிறது. எனவே, மின்சார விலை மற்றும் கட்டணங்களைத் தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றாற்போன்று நிர்ணயித்துவிட முடியாது. எனவே, 'தனியார் மயம்' என்பது எதிர்க் கட்சியினர் சொல்வதுபோன்று கெட்ட வார்த்தையோ அல்லது தேச விரோதமோ அல்ல.

எஸ்.ஆர்.சேகர்
எஸ்.ஆர்.சேகர்

அடுத்ததாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், தற்போது சம்பளம் 182 ரூபாயிலிருந்து 202-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மேற்கொண்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களில், இதற்கென 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, இனி கூடுதல் பலன் கிடைக்கும்.

சி.பி.ஐ., ஆர்.டி.ஐ போன்ற சுயாதீன அமைப்புகளும்கூட மத்திய அரசின் உள்துறை மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ்தான் செயல்பட்டுவருகிறது. இதனால், அந்த அமைப்புகளின் செயல்பாடுகளில் என்ன பின்னடைவு ஏற்பட்டுவிட்டது? இதேபோல், காவிரி மேலாண்மை ஆணையத்தை, மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டுவந்ததால், தமிழகத்துக்குக் கூடுதல் நன்மைதான் கிடைக்கப்போகிறதே தவிர, எந்த நட்டமும் இல்லை!'' என்கிறார் உறுதியாக.