Published:Updated:

``மது விலக்கு விஷயத்தில், சட்டத்தால் ஒன்றும் செய்யமுடியாது''- விளக்குகிறார் மேனாள் நீதியரசர் சந்துரு

சந்துரு

''மது விலக்கு என்பதே, அரசின் கொள்கை முடிவாக இருக்கும்போது, 'மது விலக்குக் கோரி' பொதுநல மனுத்தாக்கல் செய்வதென்பதே, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல்தான்!'' என்கிறார் மேனாள் நீதியரசர் சந்துரு.

``மது விலக்கு விஷயத்தில், சட்டத்தால் ஒன்றும் செய்யமுடியாது''- விளக்குகிறார் மேனாள் நீதியரசர் சந்துரு

''மது விலக்கு என்பதே, அரசின் கொள்கை முடிவாக இருக்கும்போது, 'மது விலக்குக் கோரி' பொதுநல மனுத்தாக்கல் செய்வதென்பதே, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல்தான்!'' என்கிறார் மேனாள் நீதியரசர் சந்துரு.

Published:Updated:
சந்துரு

மதுப் பிரியர்கள் மீண்டும், 'சியர்ஸ்' கொண்டாட வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு. கொரோனா ஊரடங்கு நேரத்தில், டாஸ்மாக் கடைகளைத் திறந்து சர்ச்சைக்குத் திரி கிள்ளியது தமிழக அரசு என்றால், கடைவாசலில் கட்டுக்கடங்காமல் குவிந்து 'ஓப்பன் தி பாட்டில்' என உற்சாகக் குரலில் கொண்டாடித் தீர்த்தது குடிமகன்களின் உபயம். விளைவு.... மீண்டும் கடைகளை இழுத்து மூடி பூட்டு போட்டது உயர் நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

பதறிப்போன தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, 'மீண்டும் கடை திறக்கும் உரிமை'யைப் பெற்றுவந்திருக்கிறது. இதற்கிடையே, தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக, 'டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது' என்று பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தவர்களைக் கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், 'விளம்பர நோக்கத்தில் தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்குகளால், நீதிமன்ற நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது' எனக்கூறி அபராதத் தொகையும் விதித்துள்ளதுதான் இந்தப் பிரச்னையின் ஹைலைட்.

இதையடுத்து, 'மதுக் கடைகளைத் திறக்கவேண்டாம்' என்ற கோரிக்கை பொதுநலன் வழக்கு இல்லையா?

இது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறதா?

இதற்காக அபராதம் செலுத்தவேண்டுமா?... என்பதுபோன்ற அடுக்கடுக்கான கேள்விகள் சாமான்யனுக்குள் அலையடித்து எழுகின்றன.

இந்தக் கேள்விகளுக்கு விடை தேடி, சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதியரசர் கே.சந்துருவிடம் பேசினோம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''சட்டபூர்வமாக மது விலக்கை சாத்தியப்படுத்திய தமிழகம், இன்று 'டாஸ்மாக்' பிடியில் சிக்கித் தவிப்பது அவமானம் அல்லவா?''

ராஜாஜி
ராஜாஜி

''1937-ல் ராஜாஜி, மது விலக்குச் சட்டம் கொண்டுவந்தபோது, அதை நிறைவேற்றுவதற்கு ரொம்பவே சிரமப்பட்டனர். மது விலக்கினால் ஏற்பட்ட வருமான இழப்பை ஈடுகட்டும் விதமாகத்தான் விற்பனை வரியையும் கொண்டுவந்தார்கள். அதன்பிறகு, தொடர்ந்து 35 வருடங்கள் (1971 வரை) தமிழகத்தில் 'மது விலக்கு' அமலில் இருந்து வந்தாலும்கூட, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது 'மது விலக்கு' என்பது தோல்வியடைந்த ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது.

அதனால்தான் ஒருகட்டத்தில், 'மது விலக்கு'க்கே விலக்களித்து சாராயக் கடை, கள்ளுக் கடைகளுக்கு லைசென்ஸ் முறை கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு இந்த இரண்டு கடைகளுமே வேண்டாம் என்று வெளிநாட்டு மது பானங்களை, தமிழக அரசே மொத்த விற்பனை செய்யும் உரிமையைக் கொண்டுவந்தார்கள். இதிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்ததையடுத்து 2003-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் சில்லறை மது விற்பனையையும் அரசே முழுமையாக எடுத்து நடத்துகிற 'டாஸ்மாக்' (தமிழ்நாடு வாணிபக் கழகம்) திட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.

ஆக, இந்த மாறுதல்கள் அனைத்துமே 1937-ல் ராஜாஜி கொண்டுவந்த 'மது விலக்கு'ச் சட்டத்தின் கீழ்தான் துணை விதிகளாக உருவாக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில்தான் மது வகைகளுக்கான விலை நிர்ணயம், விலை உயர்வு மற்றும் மது குடிப்பவர் வயது நிர்ணயம் என அனைத்து விதிகளுமே உருவாக்கப்பட்டுள்ளன. இதுவே வெட்கக்கேடான விஷயம்தான்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''தமிழ்நாட்டில், மீண்டும் 'மது விலக்கை' அமல்படுத்துவதில் உள்ள சட்டச் சிக்கல்கள்தான் என்ன?''

''அரசியல் அமைப்புச் சட்டத்தின் 47-வது பிரிவில், 'முழு மது விலக்கை' அமல்படுத்துவது அரசின் நெறிமுறைக் கொள்கையாகவே கூறப்பட்டிருக்கிறது. எனவே, 'மது விலக்கு' அமல்படுத்தப்பட வேண்டுமானால், மாநிலங்கள்தான் அதற்கான சட்டத்தை இயற்றவேண்டும். அடுத்ததாக மது விலக்கு என்பதே கொள்கைப் பிரச்னையா அல்லது உரிமைப் பிரச்னையா என்ற கேள்வி எழுந்தபோதெல்லாம் 'மது விலக்கு என்பது கொள்கைப் பிரச்னைதான்' என்று ஏற்கெனவே தீர்ப்புகள் வெளிவந்துள்ளன.

இந்தவகையில், சட்டப்படி மது விலக்கை அமல்படுத்திக்கொண்டிருக்கிற ஒரே மாநிலம் குஜராத் மட்டும்தான். நம் மாநிலத்திலும்கூட, 'டாஸ்மாக் கடைகளை மூடிவிடலாம்' எனத் தெளிவான ஒரு சட்டத்தைக் கொண்டுவரலாம். ஆனால், அப்போதும்கூட 'தனியார் மதுபானக் கடைகளைத் திறந்துவிடலாமா....' என்ற கேள்வி எழும். 'அரசு, தனியார் என இருவருமே மதுவை விற்கவேண்டாம்' என்றால், கொள்கை ரீதியாக மாநில அரசுதான் 'மது விலக்கு' சட்டத்தைக் கொண்டுவரவேண்டும். ஆனால், அதற்கான எந்தவொரு முயற்சியும் இங்கே எடுக்கப்படவேயில்லை. மாறாக, 'பக்கத்து மாநிலங்களில் மது விற்பனை நடைபெறும்போது, இங்கே மது விலக்கு சாத்தியம் இல்லை' என்று காரணம் சொல்லிவிடுகிறார்கள்.

எனவே, இந்தச் சூழலில், விதிமுறைகளை மீறுகின்ற குறிப்பிட்ட மதுக் கடைகளை மட்டுமே சட்ட ரீதியாக மூட முடியும். அதாவது, பள்ளியிலிருந்து 150 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே அமைந்திருக்கும் கடைகளை, விதிகளை மீறியதன் அடிப்படையில் மூட உத்தரவிட முடியும். ஆனால், இதிலும்கூட மந்தைவெளியில் இருக்கிற ஒரு கடையை மயிலாப்பூருக்கு மாற்றிவிட்டால், சட்டத்தால் ஒன்றும் செய்யமுடியாது.

உயர் நீதிமன்ற நீதிபதியாக நான் இருந்த காலகட்டத்தில், விதிகளை மீறிய 26 கடைகளை மூட உத்தரவிட்டிருக்கிறேன். மேலும் 'பொதுமக்களுக்குத் தொந்தரவு அளிக்கும் வகையில் அமைந்திருக்கும் மதுக் கடைகளை மூடலாம்' என்றும் உத்தரவிட்டிருந்தேன். ஆனால், அதையும்கூட மேல்முறையீடு சென்று ரத்து வாங்கிவந்துவிட்டார்கள்.''

''மது விலக்கு கோரும் பொதுநல வழக்குகள்கூட, 'நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாகக் கூறி தள்ளுபடி செய்யப்படுகின்றனவே...?''

''இன்றைய தேதியில், 'மதுவிலக்கு வேண்டுமா, வேண்டாமா' என்ற பிரச்னையை நீதிமன்றம் எடுத்துக்கொள்ளாது. அடுத்து, 'டாஸ்மாக் என்ற பெயரில், அரசே மது விற்கலாமா...' என்று கேட்டாலும், 'அது அரசின் கொள்கை முடிவு' என்று நீதிமன்றம் சொல்லிவிடும். மூன்றாவதாக, 'கொரோனா காலகட்டத்தில் மது விற்கலாமா...' என்று வழக்கு தாக்கல் செய்தால், 'கூட்டத்தைக் கட்டுப்படுத்துங்கள்' என்றுதான் நீதிமன்றம் உத்தரவிட முடியும். அல்லது 'இணையம் வழியே விற்பனை செய்யுங்கள்' என்று ஆலோசனைதான் வழங்க முடியும். எனவே, 'அரசே மது விற்கலாமா...' என்றெல்லாம் கேட்டு யார் வழக்கு தொடுத்தாலும் அது நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாகத்தான் முடியும்.''

டாஸ்மாக்
டாஸ்மாக்

''மது விற்பனை குறித்த அரசின் கொள்கை முடிவில் தலையிடமுடியாத நீதிமன்றம், 'ஆன்லைன் வழியே மது விற்பனை' என்ற அறிவுறுத்தலை அரசுக்குத் தருவது சரிதானா?''

''ஆன்லைன் வழியே மது விற்பனை செய்துகொள்ளுங்கள் என்ற உத்தரவே சரியானது அல்ல. இது கொள்கைப் பிரச்னையிலும் ஒரு நடைமுறைப் பிரச்னையை நீதிமன்றமே தானாக முன்வந்து எடுத்துக்கொள்வதாக இருக்கிறது. அதாவது, 'கொரோனா காலகட்டத்தில், மது விற்பனை கூடாது' என்று நீதிமன்றம் உத்தரவிடலாம். அல்லது குறிப்பிட்ட நிபந்தனைகளோடு விற்பனை செய்யலாம் என்றும் உத்தரவிடலாம். ஆனால், 'எப்படி விற்க வேண்டும்' என்று நீதிமன்றம் சொல்லக்கூடாது. வியாபாரத்தை அனுமதித்துவிட்டால், எப்படி விற்க வேண்டும் என்பதை வியாபாரிதான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றம் முடிவு செய்யக்கூடாது.''

''மது வாங்க 'ஆதார் கார்டு' கட்டாயம் இல்லை என்பது மது விற்பனையை ஊக்குவிக்கும்தானே?''

''முதல் விஷயம். ஆதார் கார்டு இதற்காக உருவாக்கப்பட்டது அல்ல. அப்படி ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டால், கார்டு இல்லாத புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள் மது அருந்துகிற உரிமை தடைபடுமே.

'மதுக் கடைகளை நடத்தலாமா - கூடாதா' என்ற முதன்மையான கேள்வியிலேயே, 'கொரோனா காலத்தில் மதுக் கடைகளைத் திறக்கலாமா - கூடாதா' என்ற உட்கேள்வி வந்துவிட்டது. இதில், 'மது விலக்கு' என்ற முதன்மையான விஷயத்தில் தோற்றுவிட்டோம். அடுத்து, 'அரசே மதுவை விற்கலாமா...' என்ற அடுத்த கட்டத்திலும் தோற்றுவிட்டோம். இப்போது 'கொரோனா காலகட்டத்தில் மது விற்கலாமா' என்ற கேள்வியை எழுப்பினால், இதற்காக புதிய சட்டத்தையா உருவாக்க முடியும்?... எனவேதான், இப்படியொரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறபோதே, 'இதற்கு அபராதம் விதிக்கப்படும்' என்று கூறியிருந்தேன்.''

நீதித்துறை
நீதித்துறை

''பொதுமக்கள் நலன் சார்ந்த 'மது விலக்கு' கோரிக்கையை 'இது விளம்பர நோக்கிலானது; பொது நல வழக்கு இல்லை' என்று எந்த அடிப்படையில் நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது?''

''அரசியல் கட்சி வழக்கறிஞர்கள் சிலர், இதுபோன்ற பொது நல வழக்குகளைத் தொடுக்கிறார்கள். நேரடியாக தங்களது கட்சி பெயரில் இவ்வழக்குகளை இவர்கள் தொடுப்பது இல்லை. ஏனெனில், வழக்கு வெற்றி பெற்றால், கட்சிக்குக் கிடைத்த வெற்றியாக செய்தி பரப்புவதும், தோற்றுவிட்டால், தனிப்பட்ட நபரின் முயற்சியாக சுருக்கிவிடுவதும்தான் இதன் பின்னணி. அடுத்ததாக, இப்போது வழக்கு தாக்கல் செய்வதற்கு நீதிமன்றத்துக்கு நேரில் செல்லவேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஆன்லைன் வழியாகவே வழக்கைத் தாக்கல் செய்துவிட முடிகிறது. எனவேதான், 'இந்தக் கொரோனா காலகட்டத்தில், உங்களுக்கு வேறு வேலை எதுவும் இல்லையா... இப்படி நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்களே...' என்ற கேள்வியோடு மனுவைத் தள்ளுபடி செய்து, அபராதமும் விதிக்கிறது உச்ச நீதிமன்றம்.''

''அப்படியென்றால், நீதிமன்றத்தின் பார்வையில், மதுப் பழக்கம் தீமையானது இல்லையா?''

''மதுவினால் ஏற்படும் தீங்கு என்பது பொதுப் பிரச்னை. தாய்மார்களுக்கு இது பிடிக்கவில்லை; குடும்ப ரீதியாக பல்வேறு இன்னல்கள் வருகின்றன என்பதெல்லாம், இந்தக் கொரோனா காலகட்டத்தில் மட்டுமே இருக்கக்கூடிய பிரச்னை அல்ல. இதற்குப் பிறகும் இந்தப் பிரச்னை தொடரத்தானே செய்யும். மற்றபடி, இந்தக் கொரோனா காலகட்டத்தில் மதுக் கடைகளைத் திறக்கலாமா கூடாதா என்பதில் சட்டப் பிரச்னை எதுவும் இல்லை. அரசியலைமைப்புச் சட்டத்திலும் பிரச்னை இல்லை. எனவே, பொதுநலத்துக்குக் கேடு என்றவகையில் வழக்கு தொடுப்பதற்கு இதில் எந்த முகாந்திரமும் இல்லை, என்பதுதான் நீதிமன்றத்தின் பார்வை.''

சந்துரு
சந்துரு

''இன்றைய சூழலில், மதுவை ஒழிக்கச் சட்டத்தின் வழியே தீர்வு தேடித்தருகிற நிலையில் நீதிமன்றம் இல்லை என்கிறீர்களா?''

'' 'வீடுதோறும் ரேஷன் பொருள்களை வழங்குவோம்' என்று சில ஆண்டுகளுக்கு முன்பு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சொன்னபோது, 'இது சாத்தியம் இல்லாதது' என்று அனைவரும் கேலி பேசினார்கள். ஆனால், மாறியிருக்கும் இன்றைய காலச்சூழலில், 'டோர் டெலிவரி' பற்றி எல்லோருமே பேசுகிறார்கள். எனவே, பிரச்னைகள் மாறும்போது அதற்கான தீர்வுகளும் மாறத்தான் செய்யும். இது பொதுச் சமுதாயம் வழியாக நடைபெறவேண்டிய மாற்றமேயொழிய, நீதிமன்றத்தால் எதுவும் செய்ய இயலாது.

அண்மையில், காஷ்மீர் விவகாரத்தில் நீதிமன்றம் என்ன செய்தது...? இப்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னைகளில்தான் நீதிமன்றம் என்ன தீர்வு தேடித்தர முடிந்தது. ஒன்றும் செய்ய இயலாமல் வாய்மூடித்தானே இருக்கிறது?''

''நீட் தேர்விலிருந்து விலக்களிக்கவேண்டும் என்ற தமிழக அரசின் தீர்மானத்தைக் கவனத்தில்கொள்ளாத உச்ச நீதிமன்றம், மது விலக்குப் பிரச்னையில் மட்டும், 'அரசின் கொள்கை முடிவில் தலையிடமுடியாது' என்று ஒதுங்கிக்கொள்வது ஏற்புடையதுதானா?''

''ஒரு விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றபிறகு, அங்கே சட்டத்தைப் பற்றி மட்டும்தான் பேச முடியுமே தவிர, நியாயத்தைப் பேசமுடியாது. 'நீட்' தேர்வைப் பொறுத்தவரையில், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு முடிவை எடுத்துவிட்டது. ஆனால், இங்கேயுள்ள மாநில அரசு, இங்கிருக்கும் அழுத்தங்களால் ஒரு தீர்மானம் நிறைவேற்றுகிறபோது, அதைத் தள்ளுபடிதான் செய்யமுடியும். '7 பேரை விடுதலை செய்யவேண்டும்' என்றும்தான் தீர்மானம் போட்டோம். உச்ச நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்துவிட்டதே.

டாஸ்மாக்
டாஸ்மாக்

பொதுநலன் என்ற பெயரில் வழக்கு தொடுப்பதற்கு, அரசியல் சட்டம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. வெறுமனே பேப்பர் செய்தியைத் தெரிந்திருந்தாலே போதும். அதனால்தான், 'ஆங்கில மருத்துவத்துக்கு அலோபதி மருத்துவம் என்ற பெயர் வைக்கக்கூடாது', 'மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்குப் பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய போலீஸையும் படகில் அனுப்பவேண்டும்', 'ஐ.பி.எல் மேட்சில், சியர்ஸ் கேர்ள்ஸ் கைகளை ஆட்டுவது கூடாது' என்றெல்லாம்கூட பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதற்கெல்லாம் சட்டத்தில் இடமிருக்கிறதா என்பதையெல்லாம் இவர்கள் பார்ப்பதே கிடையாது.

அடுத்ததாக, மது விஷயத்தை வாழ்வின் ஓர் அங்கமாகப் பார்க்கிறார்கள் வட இந்தியர்கள். ஆனால், நாமோ அதை ஒரு குற்றமாகப் பார்க்கிறோம். இதற்குக் காரணம், இங்கே 1937-லிருந்தே 'மது விலக்கு' என்பது ஓர் அரசியல் பிரசாரமாகவே இருந்து வந்திருக்கிறது. அதனால், இங்குள்ள பெரும்பான்மையான மக்களுக்கு இந்த விஷயம் சென்டிமென்ட் சார்ந்த ஒரு விஷயமாகவே இருக்கிறது!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism