Published:Updated:

நிர்வாகப் பட்டியலில் தமிழகம் முதலிடம்... ஓர் அலசல்!

தமிழ்நாடு
தமிழ்நாடு

பொதுக் கட்டமைப்புகளும் மக்களின் அடிப்படைத் தேவைகளும் என்ற துறையில் முதலிடம் பிடித்து, பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தமிழகம் என்றுமே கில்லி என்பதை நிரூபித்துள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25-ம் தேதியை தேசிய நல்லாட்சி தினமாக 2014 ல் அறிவித்தார், மோடி. அதன்படி, சென்ற புதன்கிழமை, மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் வெளியிட்ட மாநிலங்களுக்கான சிறந்த நிர்வாகப் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்திருந்தது.

தரவுகளின் இருப்புநிலையையும், மக்கள் மையமாகவும் எளிதில் புரிந்துகொள்ளும்படியாகவும், அந்தந்தத் துறையின் வளர்ச்சி கருதியும் வரையறுக்கப்பட்டு, நீதி, பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், விவசாயம், மருத்துவ வசதி போன்ற 10 பிரிவுகள் பிரிக்கப்படும். ஒவ்வொன்றுக்கும் 1 மதிப்பெண் வழங்கி, அதை ஒன்று முதல் ஒன்பது அடிப்படை அம்சங்களாகக் கொண்டு மதிப்பெண்ணை புள்ளிவிகிதமாகப் பிரித்து, அவற்றுக்கு தனித்தனியாகச் செயல்பாடுகள் மூலம் மதிப்பிடப்படும். மொத்தமும் கூட்டி, வரும் மதிப்பெண்ணை வைத்து உருவாக்கப்படும் மாநிலங்களின் ஸ்கோர் கார்டுதான் GGI எனப்படும் நல்லாட்சி வழங்கும் மாநிலங்கள் பட்டியலின் வரையறைக் குறிப்பேடு. பெரிய மாநிலங்கள் என்று பிரிக்கப்பட்ட 18 மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இடம்பெற்றுள்ளது.

வாஜ்பாய்
வாஜ்பாய்

இதன்படிதான் தமிழ்நாட்டிற்கு அந்தப் பட்டியலில் முதலிடம் கிடைத்தது. அதைப் பற்றி விளக்குகிறது இந்தக் கட்டுரை.

விவசாயம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகள் எனும் முதல் நிர்வாகத் துறையில் ஆறு விதமான அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. அதில் பயிர்க் காப்பீடு, விவசாயம் மற்றும் அதன் துறை சார்ந்த வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவத்துடனும், உணவுப்பொருள்கள், தோட்டக்கலை தயாரிப்பு, பால் மற்றும் இறைச்சி ஆகியவற்றின் தயாரிப்பு வளர்ச்சி விகிதங்கள், குறைந்தபட்ச முக்கியத்துவத்துடன் இடம்பெற்றுள்ளன. வறட்சி, வெள்ளம், போன்ற இயற்கைப் பேரிடர்களிலிலிருந்து விவசாயிகளைக் காக்கவும், அதிக மகசூலுக்கான திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அதிக கவனத்தில் கொள்ளும் இத்துறையில், தமிழ்நாடு ஒன்பதாவது இடம்பிடித்துள்ளது. இதில், பரப்பளவில் பெரிய மாநிலங்களான மத்தியப்பிரதேசமும் ராஜஸ்தானும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

வணிகத்துறையில் பதினான்காவது இடம் பெற்றிருக்கிறது தமிழ்நாடு. வியாபாரம் செய்வதற்கு எளிய திட்டங்கள் வகுப்பதும், தொழிற்சாலை வளர்ச்சி விகிதங்களும், சிறு தொழிற்கூடங்களையும் கணக்கில் கொள்ளும் இந்தத் துறையில் தமிழகம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதில், முதல் இடத்தில் ஜார்க்கண்டும், இரண்டு மூன்றாம் இடங்களைத் தென்னிந்திய மாநிலங்களான ஆந்திராவும் தெலங்கானாவும் பிடித்துள்ளன. முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி நான்கு வருடம் ஆகிறது. இரண்டாம் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5.85 லட்சம் கோடி ரூபாய் போடப்பட்ட 402 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், இதுவரை எந்த முதலீடும் வராத நிலையில் இந்தத் துறையில் பெரிய அடி வாங்கியுள்ளது தமிழகம்.

தமிழ்நாடு
தமிழ்நாடு

வேலைவாய்ப்பை அதிகரித்த மாநிலங்கள் பட்டியலில், கோவா முதலிடமும் பஞ்சாப், ஹரியானா அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளன. இதில், ஐந்தாவது இடம் பிடித்திருக்கிறது தமிழ்நாடு. ஏற்கெனவே, நாங்குனேரியில் அமைத்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், எந்தக் கம்பெனியையும் இதுவரை கொண்டு வரவில்லை. ஜி.எஸ்.டி-யால் கோவையில் மட்டும் 5 லட்சத்திற்கு மேலானவர்கள் வேலையிழந்திருக்கிறார்கள் என்கிறது நிலவரம். இவற்றை நிவர்த்திசெய்து, சிறு குறு தொழிலாளர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு வழங்கியிருந்தால் இன்னும் முன்னேறியிருக்கலாம்.

உடல்நலத்துறையில் குழந்தை இறப்பு விகிதம், கர்ப்பத்திலேயே கருக்கலையும் விகிதம் அதிக முக்கியதுவத்துடனும், மொத்த கருவுறுதல் விகிதம், தடுப்பூசி போடப்படும் விகிதம், மருத்துவர்களின் எண்ணிக்கை, மருந்துக்கடை ஊழியர்கள், 24 மணிநேரமும் மருத்துவம்பார்க்கும் வசதிகளைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருப்பது, உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்.

மக்கள் நலனில் முக்கியமான இந்தத் துறையில், தென்னிந்தியா ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டிருந்தாலும், வட இந்தியாவின் பல மாநிலங்கள் இதில் இன்னும் பின்தங்கியே உள்ளன. போலியோவிலிருந்து முழுமையாக வெளிவந்த மாநிலங்கள் பல இருந்தாலும், உத்தரப்பிரதேசத்திலும் பீஹாரிலும் இன்னமும் போலியோ தாக்குதல்களுடன் வாழும் குழைந்தைகளை நாம் காண்கிறோம். இன்குபேட்டரில் குழந்தைகள் இறந்த உத்தரப்பிரதேச மாநிலம், 1-க்கு வெறும் 0.18 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழ்நாடு
தமிழ்நாடு

தமிழகம் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ள பொருளாதாரத்துறையில், மூன்று பிரிவுகள் அதி முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP), மாநில வரி வருமானத்திலிருந்து மொத்த வருமானம், மாநிலத்தின் கடன் ஆகியவை தலா 0.30 மதிப்பெண்களுடன் இடம்பெறுகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா இடந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. இந்தியாவின் GDP-யே சரிந்துகிடக்கும் நிலையில், தமிழகம் அதில் ஐந்தாவது இடம்பிடித்ததில் ஒன்றும் பெரிய ஆச்சர்யமில்லை.

சமூக நலன் மற்றும் வளர்ச்சியில் தமிழகம் ஏழாவது இடம் பெற்றுள்ளது. கிராம வேலைவாய்ப்பு நம்பிக்கைத்தன்மை, வேலையின்மை ஆகியவை இதில் முன்னிலைபெறுகின்றன. பிறப்பு பாலின விகிதம், சுகாதார காப்பீடு, அனைவருக்கும் வீடு, பெண்கள் முன்னேற்றம், சிறுபான்மையினர் முன்னேற்றம் ஆகியவை இடம்பெற்றுள்ள இந்தத் துறையில், தமிழகம் ஜஸ்ட் பாஸ் ஆகியுள்ளது.

இந்தியா
இந்தியா

சுற்றுச்சூழல் துறையில், காலநிலை மாறுதலுக்காக மாநில அளவிலான திட்டங்கள் மற்றும் காடுகளைப் பாதுகாப்பதற்கான திட்டங்களை முன்னிறுத்தும் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. பொதுக் கட்டமைப்புகளும் மக்களின் அடிப்படைத் தேவைகளும் என்ற துறையில் முதலிடம் பிடித்து தமிழகம், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் என்றுமே கில்லி என்பதை நிரூபித்துள்ளது. இதில், குஜராத்தும் பஞ்சாபும் அடுத்தடுத்த இடங்களை ஆக்கிரமிக்கின்றன.

ஒன்பதாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்தத் துறை மதிப்பெண்களில் அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது தண்ணீர் சேவைக்கு. வடமாநிலங்கள் அளவுக்கு இல்லையென்றாலும் சென்னை, ராமநாதபுரம் மற்றும் சில மாவட்டங்கள் ஆண்டுதோறும் கோடைகாலத்தில் தண்ணீர் வறட்சியில் இருந்துகொண்டுதான் இருக்கிறோம்.

விவசாயத்துக்கு பக்கத்து மாநிலங்களிடம் கையேந்தித்தான் நின்றுகொண்டிருக்கிறோம். கிராம, நகர, அடிப்படை முன்னேற்றம் மற்றும் அதற்குள்ளான தொடர்புகள், சுத்தமான சமையல் எரிவாயு உள்ளிட்டவைகளுக்கு இரண்டாம் பட்சமாக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. தடையில்லா மின்சார வசதி, தேவைக்கு அதிகமான மின்சார உற்பத்தி மற்றும் அதன்மூலம் கிடைக்கும் வருமானங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இவைகளில் தமிழகம் சிறந்துவிளங்குகிறதென்பது நமக்கு கண்கூடாகத் தெரிந்த உண்மை என்றாலும், இந்த வரையறுப்புகள் இந்த வருடத்திற்கான அளவீடுகள்தானா என்ற கேள்வியையும் எழுப்புகின்றன. ஏனென்றால், இதில் கூறப்பட்டுள்ள வளர்ச்சிகளெல்லாம் ஓராண்டில் வந்துவிடக்கூடியவை அல்ல. அதற்கான அடித்தளம் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டிருக்க வேண்டும் என்பது அதைப் படித்தாலே புரியும்.

எடப்பாடி
எடப்பாடி

தமிழகம் நிர்வாகத் திறனில் முதலிடம் பிடித்திருப்பது ஒருவிதத்தில் மகிழ்ச்சியை அளித்தாலும், இத்தனை வருடமாக நல்லாட்சி நாள் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், இந்த ஆண்டு மட்டும் இந்தப் பட்டியலை வெளியிடுவதற்குக் காரணம் என்ன? அதில், இந்த ஆண்டில் வந்த வளர்ச்சியை மட்டும் வைத்து ஏன் பட்டியல்கள் வரையறுக்கப்படவில்லை. தமிழக மக்களிடையே இப்படியான பிம்பத்தை ஏற்படுத்த, திடீரென இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழாமலில்லை. இதையெல்லாம் கடந்து, தமிழ்நாடு பாராட்டுப்பெறுவது மகிழ்ச்சியே!

- ஜான் ஜே ஆகாஷ்

தமிழ்நாடு தினம்... பிளாஸ்டிக் தடை... புதிய மாவட்டங்கள்... தமிழ்நாட்டில் 2019-ல் நடந்த மாற்றங்கள்!
அடுத்த கட்டுரைக்கு