அலசல்
சமூகம்
Published:Updated:

‘பணி அமர்த்து... பாதியில் துரத்து...’ - அரசுப் பணி தனியார்மயம்... மூடி மறைக்கும் அரசு!

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

தமிழக அரசு தனது அரசாணைகளை பகிரங்கமாக வெளியிடாமல் தொடர்ந்து மறைத்துவருகிறது. இது மிகவும் ஆபத்தான போக்கு.

ராணுவத்துக்கு தற்காலிக வீரர்களைத் தேர்வுசெய்யும் மத்திய அரசின் ‘அக்னிபாத்’ திட்டத்துக்கு ஒப்பான, ஒரு திட்டத்துக்கு அரசாணையைப் பிறப்பித்திருக்கிறது தமிழ்நாடு அரசு’ என்று சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன எதிர்க்கட்சிகளும், சங்கங்களும். அவர்களின் வலிமையான எதிர்ப்பைப் பதிவுசெய்து அந்தத் திட்டத்தை ஆரம்பகட்டத்திலேயே முடக்கிவிட்டன என்றாலும் இன்னும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை!

அரசாணை 115

தமிழ்நாட்டின் 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில், அரசுப் பணிகளுக்கு `அவுட்சோர்ஸிங்’ எனப்படும் வெளிமுகமை மூலமாக, தற்காலிகப் பணியாளர்களை நிரப்புவதற்கு ‘மனிதவள சீர்திருத்தக்குழு’ ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். அதன்படி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.எஃப்.பரூக்கி தலைமையில் ஐந்து பேர்கொண்ட குழுவை அமைத்து, கடந்த 18.10.2022 அன்று அரசாணை 115-ஐ வெளியிட்டது தமிழக அரசு.

குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் துறை அமைச்சர் பி.டி.ஆர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றதாக நவம்பர் 4-ம் தேதி அறிவிப்பு வெளியான பிறகுதான், இப்படி ஒரு குழு அமைக்கப்பட்டதே தெரியவந்தது. இதையடுத்துதான், அரசாணை 115 மீதான எதிர்ப்பு கிளம்பியது. அந்த அரசாணையில், அரசுப் பணிக்கு அவுட்சோர்ஸிங் மூலமாக ஆட்களை நியமிப்பது குறித்தும், அவர்களுக்கு வேலைத்திறன் அடிப்படையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு வழங்கலாமா என்பது குறித்தும் இந்தக் குழு ஆராயும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுமா என்பது குறித்த தெளிவில்லை.

‘பணி அமர்த்து... பாதியில் துரத்து...’ - அரசுப் பணி தனியார்மயம்... மூடி மறைக்கும் அரசு!

சமூகநீதிக்குச் சாவுமணி!

எனவே, இந்த அரசாணை வெளியானதும் தி.மு.க., பா.ஜ.க-வைத் தவிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும், சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. “அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு முறையே ஒழிக்கப்பட்டுவிடும். இந்தத் திட்டம் சமூகநீதிக்குச் சாவுமணி அடித்துவிடும்” என்பது அவர்களது குற்றச்சாட்டு. இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, “மனித வள சீர்திருத்தக்குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்துசெய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் கூறுகையில், “அரசாணை 115-ல் பணியாளர்களின் பணித்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஆட்சேர்ப்பு தொடர்பான ஆய்வு வரம்புகள் அனைத்தும் பணியாளர் விரோத நடவடிக்கைகள்தான். வருணாசிரம சனாதனப் பிடியிலிருந்து தமிழக மக்கள் தற்போதுதான் மெல்ல மெல்ல விடுபட்டு, முதல் தலைமுறையாக அரசுப் பணியில் சேர்ந்துவருகிறார்கள். இந்த நிலையை மாற்றி 69% இட ஒதுக்கீட்டுக்கு மொத்தமாக வேட்டுவைப்பதோடு, டி.என்.பி.எஸ்.சி-க்கும் மூடுவிழா நடத்த வழித்தடம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆய்வு வரம்புகள் ரத்துசெய்யப்படும் என்ற முதல்வர் உத்தரவு இந்த பிரச்னைக்குத் தற்காலிகத் தீர்வுதான். வெளிமுகமை மூலம் ஆட்தேர்வு என்ற எண்ணத்தையே கைவிட்டால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்” என்றார்.

வெங்கடேசன்
வெங்கடேசன்

மறைக்கப்பட்ட மற்றோர் அரசாணை!

அரசுப் பணியிடங்களை அவுட்சோர்ஸிங் மூலமாக நிரப்புவதற்குச் சாத்தியக்கூறுகளை ஆராய குழு அமைக்கப்பட்ட அதேநேரத்தில், அவுட்சோர்ஸிங் முறையில் 3,417 இடங்களை நிரப்ப, சத்தமில்லாமல் அரசாணை 158-ஐ வெளியிட்டிருக்கிறது நகராட்சி நிர்வாகத்துறை. இந்த அரசாணையையும் துறை இன்னும் வெளியிடவே இல்லை. அதன்படி, சென்னையைத் தவிர 20 மாநகராட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர், காவலர், தட்டச்சர், வரி வசூலர், எழுத்தர் உள்ளிட்ட பணிகளில் தற்போது பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், அந்தப் பணியிடங்களுக்கு நிரந்தர அடிப்படையில் பணி நியமனம் செய்யக் கூடாது. அவுட்சோர்ஸிங் மூலமாக மட்டும்தான் நிரப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வம் கூறுகையில், “தமிழக அரசு தனது அரசாணைகளை பகிரங்கமாக வெளியிடாமல் தொடர்ந்து மறைத்துவருகிறது. இது மிகவும் ஆபத்தான போக்கு. இரண்டாவதாக, மனித வள சீர்திருத்தக் குழுவின் தலைவர், உறுப்பினர்களின் பின்னணி பல சந்தேகங்களை எழுப்புகிறது. குறிப்பாக, அவர்கள் எல்லோரும் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் தலைவராகவும், இயக்குநர்களாகவும் பணியாற்றியிருக்கிறார்கள். அவர்கள் பணியிலிருந்த காலகட்டத்தில் அந்த நிறுவனங்களிலெல்லாம் தொழிலாளர் நலன் முறையாகப் பின்பற்றப்பட்டிருக் கிறதா என்பதை அரசு ஆராய்ந்ததா... இல்லை. நிலைமை இப்படி இருக்க, கார்ப்பரேட் மூளை கொண்டவர்கள் பணியில் சேருபவர்களின் உழைப்பைச் சுரண்டி கொத்தடிமைகளாக வைக்கவே கொள்கை வகுப்பார்களே தவிர, ஊழியர்களை மனிதர்களாகக்கூட மதிக்க மாட்டார்கள்.

செல்வம்
செல்வம்

அரசாணையை ரத்து செய்!

ஆட்சியாளர்கள், ‘வேலைக்கு அமர்த்து... பாதியிலேயே துரத்து...’ என்ற எண்ணத்திலேயே அரசை நடத்துகிறார்கள். தமிழக அரசின் இந்தத் திட்டம் மத்திய அரசின் ‘அக்னிபாத்’ திட்டத்தைத்தான் நினைவுபடுத்துகிறது. அடிமட்ட ஊழியர்களுக்கான குரூப் சி, டி-யில் இன்று அவுட்சோர்ஸிங் நடைமுறையை அமல்படுத்தும் இந்த அரசு, நாளை எல்லாப் பணியிடங்களுக்கும் இதே நடைமுறையைப் பின்பற்றாது என்பதற்கு என்ன உத்தரவாதம்... அதேபோல, மாநகராட்சிகளில் அவுட்சோர்ஸிங் முறையில் ஆட்தேர்வு செய்யும் அரசாணையை அரசு ரத்துசெய்ய வேண்டும்” என்று கொதித்தார்.

‘தமிழகத்திலுள்ள பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் ஆகியவற்றிலுள்ள காலிப் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி மூலமாக நிரப்பப்படும்’ என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது, இளைஞர்களின் வரவேற்பைப் பெற்றது. இப்போது அதே அரசு, ‘அவுட்சோர்ஸிங் மூலமாக ஆட்கள் தேர்வு’ என்று அரசாணை வெளியிட்டு, அந்த இளைஞர்களின் நம்பிக்கையை உடைத்திருக்கக் கூடாது!