Published:Updated:

அரசியல் சார்பு, மதம், சாதி... ஹெல்த் ID-யில் இவை எதற்காக? புது வரைவில் என்ன இருக்கிறது?

ஹெல்த் ஐ.டி
ஹெல்த் ஐ.டி ( ndhm.gov.in )

சுகாதாரத் தரவு மேலாண்மை கொள்கை வரைவு, ஹெல்த் ஐ.டி-க்காக பர்சனல் மற்றும் சென்சிடிவ் தகவல்களைச் சேகரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்சிட்டிவ் டேட்டா (Sensitive Data) எனும் பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள விஷயங்கள்தான் இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய வளம் Data (தகவல்கள்). தேர்தல் வாக்குகள் முதல் ஆன்லைன் வியாபாரங்கள் வரை இன்றைய உலகம் இந்த 'data'-வை கொண்டுதான் இயங்குகிறது. தனிநபரின் பெயர், வயது முதல் தனிப்பட்ட விருப்பங்கள் வரை இந்தத் தகவல்கள் அரசாங்கத்தாலும், பல நிறுவனங்களாலும் சேகரிக்கப்படுகின்றன. தம் நாட்டு மக்களின் தகவல்களைச் சேகரிப்பது, பாதுகாப்பது என இரண்டும் இன்றைய அரசாங்கங்களின் முக்கிய பணியாக இருக்கிறது.

தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன்
தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன்
ndhm.gov.in

அவ்வகையில், தனிநபர்களின் உடல்நலம் தொடர்பான தகவல்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்கத் தேவையான சுகாதாரத் தரவு மேலாண்மை கொள்கை வரைவை அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது. தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன் (என்.டி.எச்.எம்) திட்டத்தின் கீழ் மத்திய சுகாதாரத்துறை இந்த வரைவை வெளியிட்டுள்ளது. இந்த தேசிய டிஜிட்டல் சுகாதார குழு இந்தியாவின் மருத்துவத் துறை மற்றும் அது சார்ந்த தரவுகளைக் கணினி மையமாக மாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. சுகாதார அடையாள அட்டை, தனிநபர் உடல்நலன் குறித்த தரவு, இணையவழி மருத்துவர், மருத்துவ சேவை வசதி எவ்வளவு இருக்கிறது என்பதற்கான பதிவு, டெலிமெடிசன், இ- பார்மஸி என பல்வேறு வசதிகள் இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும்.

பிரதமர் மோடி, இவ்வாண்டின் சுதந்திர தின உரையில் தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை அறிமுகப்படுத்தினார். "நாட்டு மக்கள் அனைவருக்கும் தனித்தனியே சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும்" என்று அவர் தன் உரையில் குறிப்பிட்டார். அடையாள அட்டை வழங்கத் தேவையான தரவுகளை மக்களிடமிருந்து சேகரிக்கும் அரசு, அதன் ரகசியத்தன்மையைப் பாதுகாப்பது அவசியம். அதைச் செயல்படுத்துவதற்கான முதல் படியாக, இந்த வரைவு கொள்கை வெளியிடப்பட்டு உள்ளது.

தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம்
தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம்
ndhm.gov.in

தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம், இதன் கீழ் தன்னிச்சையாகப் பதிவு செய்து கொள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் ஓர் அடையாள அட்டையும், அந்த நபருக்கென ஒரு பிரத்யேக அடையாள எண்ணும் வழங்கப்படும். அடையாள அட்டையில், குறிப்பிட்ட நபரின் உடல்நிலை தொடர்பான அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு முறை சிகிச்சைக்காகச் செல்லும் போதும் அந்த எண்ணைக் கொண்டு சிகிச்சை விவரங்கள் அப்டேட் செய்யப்படும். ஒருவர் தன்னுடைய ஆதார், தொலைபேசி எண் போன்ற விபரங்களைக் கொடுத்து இந்த அடையாள அட்டைக்காகப் பதிவு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் ஆதார் கட்டாயமாக்கப்படவில்லை, ஆதார் இல்லாமலும் சுகாதார அடையாள அட்டை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல, இந்த சுகாதார அடையாள அட்டை இல்லாமலும் ஒருவர் சிகிச்சை பெற முடியும் என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அடையாள அட்டை பெற்ற ஒரு தனிநபர் எப்போது வேண்டுமானாலும் இந்தத் திட்டத்திலிருந்து விலகிக்கொள்ளலாம். தன்னுடைய தகவல்களைப் பயன்படுத்துவதையும் தடுக்கலாம். ஒரு தனிநபருக்கு தன்னுடைய தகவல்கள் மீதான முழு உரிமையும் அளிக்கிறது இந்த வரைவு.

தனிநபர் போலவே மருத்துவத் துறை சார்ந்த பணியாளர்களுக்கு (மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள்) இத்திட்டத்தின் கீழ் தனி அடையாள அட்டை வழங்கப்படும். அதேபோல மருத்துவமனைக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்.
Doctor
Doctor

சுகாதார அடையாள அட்டையில் குறிப்பிடப்படும் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படும். எந்தவொரு தனிப்பட்ட தரவும் தனிநபர்களின் ஒப்புதலின் பேரில் மட்டுமே சேகரிக்கப்பட முடியும். அதேபோல அதை பயன்படுத்துவத்துவதற்கும் சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

எந்தவொரு நேரத்திலும், தன்னுடைய தகவல்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது, யாருக்கெல்லாம் பகிரப்பட்டுள்ளது என்ற தகவல்களை அறிந்துக் கொள்ளும் முழு உரிமையும் தனிநபர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில், சுகாதாரத் துறையின் டிஜிட்டல் சூழலில் இணைந்திருக்கும் அனைவருக்கும் தங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான முயற்சியே இந்த வரைவு எனக் கூறியுள்ளது தேசிய டிஜிட்டல் சுகாதார குழு (NDHM). அரசின் ஆயுஷுமான் பாரத் திட்டம் இதற்குக் கீழ்தான் வருகிறது. இந்தியாவில் சுகாதார சேவைகளின் செயல்திறன் மற்றும் வெளிப்படைத் தன்மையை என்.டி.எச்.எம் கணிசமாக மேம்படுத்தும் என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுவரை எல்லாம் சரிதான், ஆனால் 'definitions' எனும் பிரிவில், வரைவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அங்குதான் சிக்கல் இருக்கிறது.

Personal Data
Personal Data

இந்த வரைவு, மருத்துவ அடையாள அட்டைக்காக பர்சனல் மற்றும் சென்சிடிவ் தகவல்களைச் சேகரிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. அதில் பர்சனல் டேட்டா (Personal Data) என்பது அடிப்படைத் தகவல்கள், இருப்பிடம் பற்றிய தகவல்கள், குடும்பம் மற்றும் உறவினர்கள் பற்றிய தகவல்கள், தொலைப்பேசி, முகவரி போன்ற தகவல் தொடர்பு சார்ந்த விஷயங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்சிடிவ் டேட்டா (Sensitive Data) எனும் பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள விஷயங்கள்தான் இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

அதாவது, மருத்துவ அடையாள அட்டை பெறுவதற்கு சென்சிடிவ் டேட்டா எனும் பெயரில் நீங்கள் கீழ்க்கண்ட தகவல்களை அரசிடம் பகிர நேரிடலாம்.

(i) வங்கி கணக்கு, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தகவல்கள்

(ii) உடல், உடலியல் மற்றும் உளவியல் ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள்.

(iii) தாம்பத்திய வாழ்க்கை

(iv) பாலியல் விருப்பம்

(v) தனிநபர் மருத்துவ தரவுகள் மற்றும் வரலாறு

(vi) பயோமெட்ரிக் தகவல்கள்

(vii) மரபியல்/பரம்பரை பற்றிய தகவல்கள்

(viii) மூன்றாம் பாலினத்தவர் விபரம்

(ix) மாற்றுப் பாலினத்தவர் (இன்டெர்செக்ஸ்) விபரம்

(x) சாதி/இனம்

(xi) மதம் மற்றும் அரசியல் நம்பிக்கை/அரசியல் சார்பு

ஆல் க்ளியர் அரியர், 10 கோடி பப்ளிசிட்டி, ஆன்லைன் அலப்பறைகள்!

மருத்துவத் தகவல்கள் அடங்கிய ஓர் அடையாள அட்டையில் இத்தகைய தகவல்கள் ஒருவேளை கேட்கப்பட்டால், அத்தகைய அடையாள அட்டையின் நோக்கம் வெறும் மக்களுக்கு மருத்துவ வசதி அளிப்பதற்கானதாக மட்டும் இருக்காது எனப் பலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே, உலகம் முழுக்க பொதுமக்களின் தகவல்கள் திருடப்படுவதும், அது தேர்தல்கள், வியாபாரம் உள்ளிட்ட நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுவதும் தெரிந்ததே. அத்தகைய நிலையில், நாம் பகிர்ந்துகொள்ளும் ஒவ்வொரு தகவல் குறித்தும் நாம் கவனத்தோடு செயல்பட வேண்டியது அவசியம்.

இந்தத் தகவல்களின் பாதுகாப்பு குறித்து வெளியிடப்பட்டிருக்கும் இந்த வரைவு மற்றும் மருத்துவ அடையாள அட்டை பற்றி சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் பேசினோம்.

டாக்டர் ரவீந்திரநாத்
டாக்டர் ரவீந்திரநாத்

"பல்வேறு முரண்பாடுகளை உள்ளடக்கியிருக்கிறது இந்தத் திட்டம். முதலில் டேட்டா என எந்தெந்த தகவல்களைச் சேகரிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. அரசு வெளியிட்டிருக்கும் வரைவில், சாதி மதம் அரசியல் சார்பு எல்லாம் கேட்கக் கூடும் என்பதாகப் பொருள் இருக்கிறது. அப்படிச் செய்யப்பட்டால் அதற்கு அரசியல் நோக்கம் அன்றி வேறு இருக்க முடியாது. இரண்டாவது, இந்தத் திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும் தகவல்கள் எல்லாம் இணையத்தில் யார் சேகரித்து, பராமரிக்கப் போகிறார்கள் என்பதில் தெளிவில்லை. ஒருவேளை இந்த பணியைத் தனியார் அமைப்பிடம் கொடுத்தால், அது பாதுகாப்பை உறுதி செய்யாது. அரசே இதைக் கையாளும் பட்சத்தில், அந்த டேட்டா ஹேக் செய்யப்பட்டுத் திருடப்படும் வாய்ப்புகள் அதிகம்.

தொழில்நுட்பத்தில் மிகவும் வளர்ந்த வல்லரசுகளில் கூட இது நடக்கிறது. மூன்றாவது, இந்த அடையாள அட்டை கட்டாயமில்லை என்று சொல்லும் அதே வேளையில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் இதன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படி ஏழை, நடுத்தர தட்டு மக்கள் அரசின் சலுகைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு அடையாள அட்டை வேண்டும். இவ்வகையில், இந்த அட்டை மறைமுகமாக கட்டாயப்படுத்தப்படும். நான்காவது, மருத்துவம் மற்றும் சுகாதாரம் மாநில அரசின் அதிகாரத்திற்குள் வரும். இதில் மத்திய அரசு தலையீடு என்பது மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் விஷயம்.

மோடியின் கணக்கை முடக்கியது யார்? ஓயாத ட்விட்டர் சர்ச்சை! #ModiTwitter

மத்திய அரசு மாநில அரசுகளின் திட்டங்களுக்கு நிதி உதவி செய்வதே கூட்டாட்சி தத்துவத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும். ஐந்தாவது, வெறும் அடையாள அட்டை மட்டுமே மக்களுக்கான மருத்துவ வசதிகளை மேம்படுத்தாது. அதற்கு அரசு வலுவான ஒரு மருத்துவ கட்டுமானத்தை தேசம் முழுக்க உருவாக்க வேண்டும். இதுதான் முக்கியமானது" எனச் சொல்கிறார் டாக்டர் ரவீந்திரநாத்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு