Election bannerElection banner
Published:Updated:

அறநிலையத்துறைக்கு கடிவாளமிட்ட அமைப்புகள்... பாதுகாக்கப்பட்ட கோயில் நிதி!

இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் வரும் 47 கோயில்களின் உபரிநிதியில் இருந்து முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 10 கோடி ரூபாய் நிதியளிக்க வேண்டும் என்ற சுற்றறிக்கை வாபஸ் பெற்றுள்ளது.

தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஏறத்தாழ 42,000 கோயில்கள் வருகின்றன. இவற்றை சுமார் 600 செயல் அலுவலர்கள் நிர்வகிக்கின்றனர். கொரோனா அச்சுறுத்தலால் பொது தரிசனத்துக்கு கோயில்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இறைவனுக்கு மட்டும் ஆகமவிதிப்படி கால பூஜைகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22-ம் தேதி இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பனீந்திர ரெட்டி, பழனி தண்டாயுதபாணி கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட 47 கோயில்களுக்கு சுற்றறிக்கை (ந.க.எண்.18104/2020/ஜி2) ஒன்றை அனுப்பினார்.

அதில், ஏழைகளுக்கு உணவளிப்பதற்காக வைத்திருக்கும் கோயிலின் உபரிநிதியில் இருந்து குறிப்பிட்ட தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு உடனடியாக காசோலையாக வழங்குமாறு கூறியிருந்தார். பிரபலமான கோயில்களுக்கு 35 லட்சமும் குறைவான வருமானம் ஈட்டும் கோவில்களுக்கு 10 லட்சமும் தொகை நிர்ணயிக்கப்பட்டு, மொத்தமாக 10 கோடி ரூபாயை யார் யார் எவ்வளவு தர வேண்டுமென ஒரு பட்டியலும் அனுப்பப்பட்டது. இந்தச் சுற்றறிக்கை இந்துக்களின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, கோயில்களின் அன்னதான திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, முதல்வரின் நிவாரண நிதிக்காக எப்படி அளிக்கலாம்? இதுபோல மற்ற மதத்தினரின் வழிபாட்டு தலத்திலும் தமிழக அரசால் கைவைக்க முடியுமா? என இந்து அமைப்புகளும் போர்க்கொடி தூக்கின. விவகாரம் வீரியமாவதை உணர்ந்த எடப்பாடி அரசு, இந்தச் சுற்றறிக்கையைத் தற்போது வாபஸ் பெற்றுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்த, ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷிடம் பேசினோம். ``2011-ம் முதல் பல்வேறு கோயில்களில் பரம்பரை அறங்காவலர் இடங்களை நிரப்பாமல், இந்து அறநிலையத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளே கோயில் தக்காராகப் பணிபுரிகின்றனர். பழநி தண்டாயுதபாணி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்களில் செயல் அலுவலர்களே தக்காராக இருக்கும் கொடுமையெல்லாம் நடக்கின்றன. இந்தத் தற்காலிக ஏற்பாட்டைக்கூட மூன்று மாதங்களுக்கு மட்டுமே கடைப்பிடிக்க முடியும். அதற்குள் அறங்காவலரை நியமிக்க வேண்டும். ஆனால், அப்படி எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் இவ்வளவு வருடமும் சட்டத்துக்குப் புறம்பாகத் தக்காரை மட்டுமே வைத்து கோயில் நிர்வாகத்தை நடத்துகின்றனர்.

டி.ஆர்.ரமேஷ்
டி.ஆர்.ரமேஷ்

அறநிலையத்துறை விதிப்படி தக்காராக இருப்பவர்களுக்கு கோயிலின் பூஜை, புனஸ்காரங்கள், அன்னதானம், கோயில் நகை பூட்டு ஆகிய விவகாரங்களைக் கையாள மட்டுமே அதிகாரம் உண்டு. கோயில் நிதியை அறங்காவலர்தான் கையாள முடியும். கோயில் நிதியை மற்றொரு திட்டத்துக்கு அறங்காவலர் மாற்ற வேண்டுமென்றால், முதலில் அறநிலையத்துறை ஆணையருக்கு கடிதம் எழுத வேண்டும். இதனடிப்படையில் பிரபலமான தமிழ் நாளேட்டில் விளம்பரம் செய்து, ஆட்சேபனை ஏதும் வராதபட்சத்தில் நிதியை மடைமாற்றலாம்.

இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை
இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை

அதுவும்கூட கோயிலின் அன்னதான திட்டத்துக்கு மட்டுமே கோயில் நிதியை மாற்ற முடியுமே தவிர, பிரதமர், முதல்வர் நிவாரண நிதிக்கெல்லாம் கோயில் நிதியை மாற்ற முடியாது. இதையெல்லாம் குறிப்பிட்டு இந்து அறநிலையத்துறைக்கு எங்கள் கண்டனத்தைத் தெரிவித்தோம். இன்று உயர் நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தாங்கள் அனுப்பிய கொரோனா நிதி சுற்றறிக்கையைக் கடந்த மே 1-ம் தேதியே வாபஸ் வாங்கிவிட்டதாக இந்து அறநிலையத்துறையினர் கூறியுள்ளனர். இதை வரவேற்கிறேன். இது இந்துக்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி” என்றார்.

ஆன்மிக இந்து மதக் கட்சியின் தலைவர் ஜெயம் எஸ்.கே.கோபி கூறுகையில், ``கடந்த 50 ஆண்டுக்கால தமிழக அரசியல் வரலாற்றில் இந்துக்களுக்கு கிடைத்திடாத ஒருவெற்றி, கொரோனா நிதி சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டது மூலமாகக் கிடைத்துள்ளது. இதை வரவேற்கும் அதேநேரத்தில், கொரோனா காலகட்டம் முடிந்த பிறகு கோயில்களில் சிறப்புக் கட்டண நடைமுறையை சிறிதுகாலம் ரத்து செய்வது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும். கொரோனாவால் தனிநபர் வருமானம் பெருமளவு சரிவை சந்தித்துள்ள நிலையில், கோயில்களில் சிறப்புக் கட்டணம் வசூலித்து பக்தர்களை மேலும் சிரமத்துக்கு உள்ளாக்குவது ஏற்புடையதல்ல. அரசு இதைப் பரிசீலிக்க வேண்டும்” என்றார்.

ஜெயம் எஸ்.கே.கோபி
ஜெயம் எஸ்.கே.கோபி

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், “கோயில் சொத்துகளைப் பராமரிக்கத்தான் இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளதே தவிர, இப்படி கோயில் நிதியை நிவாரண நிதிக்கு மாற்ற எந்த அதிகாரமும் இல்லை. இன்றுவரை பல கோயில்களில் அறங்காவலர் குழு நியமிக்கப்படவில்லை. பல கோயில்களின் கட்டுப்பாட்டில் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் செயல்படுகின்றன. உபரிநிதியாக இருப்பதை இவற்றின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம்.

இதை இப்படியே விட்டுவிட்டால், பிற்பாடு கோயில் சொத்து கபளீகரம் ஆனதுபோல கோயில் நிதியும் ஆகிவிடும்.
கே.டி.ராகவன், தமிழக பா.ஜ.க

கல்வி கற்கவும், கலைகள் வளர்க்கவும், மருத்துவம் பார்க்கவும் பண்டைய காலத்தில் அரசர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு தலம்தான் கோயில்கள். ப்ளேக் நோய், அம்மை நோய்கள் வந்த காலத்தில் மாரியம்மன் கோயிலின் வேப்பில்லைதானே மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. இப்போது மூடியிருக்கும் கோயில்களைத் திறந்து, ஏழை எளியோருக்கு அன்னதானம் இடவும், மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கவும் யார் தடை சொல்லப் போகிறார்கள். இதைவிடுத்து, போகிற போக்கில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி கோயிலின் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மடைமாற்றும் அதிகாரத்தை இந்து அறநிலையத்துறைக்கு யார் கொடுத்தது?

அர்ஜுன் சம்பத்
அர்ஜுன் சம்பத்

உலமாக்களுக்கு 19,000 ரூபாய் வரையில் சம்பளம் அளிக்கும் இந்த அரசு, இந்து கோயில் அர்ச்சகர்களுக்கு மட்டும் 6,000 ரூபாய்க்கு மேல் அளிப்பதில்லை. மசூதிகளில் நோன்பு கஞ்சி காய்ச்ச டன் கணக்கில் அரிசி அளிக்கிறார்கள். இதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், இந்து கோயில்களுக்கு இந்த அரசு என்ன செய்தது? கோயில் நிதியில் இருந்தே பணத்தை எடுத்து, இலவச அன்னதான திட்டத்தை உருவாக்கி, முதலமைச்சரின் அன்னதான திட்டம் எனப் பெயர் சூட்டிக்கொண்டார்கள். உண்மையில் இது பக்தர்களின் பணம், அரசாங்க பணமல்ல. இதற்காகத்தான் இந்து கோயில்களை நிர்வகிக்க தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டுமென்று கோருகிறோம்” என்றார் தெளிவாக.

பா.ஜ.க. மாநில செயலாளர் கே.டி.ராகவனிடம் பேசினோம். “கோயில் சொத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கே பட்டா கொடுத்துவிடலாம் என நீதிமன்றத்தில் தமிழக அரசு யோசனை அளித்தபோது, அதைக் கடுமையாக எதிர்த்தோம். அதுபோல, கோயில் நிதியை மடைமாற்றி நிவாரண நிதிக்கு வழங்க உத்தரவிட்ட சுற்றறிக்கையையும் ஆரம்பித்தில் இருந்தே கடுமையாக எதிர்த்து வருகிறோம்.

கொரோனா நெருக்கடியால் ஏறத்தாழ 35,000 கோயில்களில் பணிபுரியும் பணியாளர்களின் பொருளாதாரம் கடும் பின்னடவைச் சந்தித்துள்ளது. அவர்களுக்கே எதுவும் செய்ய முடியவில்லை. இந்நிலையில், எந்த அதிகாரமும் இல்லாமல் கோயில் நிதியை நிவாரண நிதிக்கு மடைமாற்றியது தவறு. இதை இப்படியே விட்டுவிட்டால், பிற்பாடு கோயில் சொத்து கபளீகரம் ஆனதுபோல கோயில் நிதியும் ஆகிவிடும். இந்துக்களின் தொடர் எதிர்ப்பால் தற்போது அந்தச் சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது” என்றார்.

கே.டி.ராகவன்
கே.டி.ராகவன்

இறுதியாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சுற்றறிக்கை குறித்து பேசினோம். விவகாரம் முடிந்துவிட்டதால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாது என்று ஒதுங்கிவிட்டனர். இந்துக்களின் ஒற்றுமையான எதிர்ப்புக் குரலால், கோவில்களின் நிதி பாதுகாக்கப்பட்டிருப்பதற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகளும் குவிகின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு