Published:Updated:

மக்கள் தவிக்கும் நேரத்தில் சுங்கக் கட்டணம் உயர்த்துவது நியாயமா? மத்திய அரசு மறுபரிசீலனை செய்யுமா?

மணவாசி சுங்கச்சாவடி
மணவாசி சுங்கச்சாவடி

உணவின்றி கோடிக்கணக்கான மக்கள் அல்லாடிக்கொண்டிருக்கும் சூழலில், சுங்கச்சாவடிகளைத் திறந்துவிட்டு, கட்டணங்களை உயர்த்தியிருப்பதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சுங்கச்சாவடிகள் மூடப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைகளில் இயக்கப்பட்ட சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஏப்ரல் 20-ம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்டது. அதனால், நாடு முழுவதும் மூடப்பட்டிருந்த சுங்கச் சாவடிகள் திறக்கப்பட்டன. மேலும், சுங்கக் கட்டணங்கள் தற்போது உயர்த்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 48 சுங்கச்சாவடிகளில், 26 சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணங்கள் உயர்வு உள்ளது. இந்திய அளவில் அதிகமாக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தற்போது சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பதால், அத்தியாவசிய பொருள்களின் விலை உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் கணியூர் சுங்கச்சாவடி.
சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் கணியூர் சுங்கச்சாவடி.

ஊரடங்கு காரணமாக தேசம் முடக்கப்பட்டுக்கிடக்கும் நிலையில், கோடிக்கணக்கான மக்கள் வேலையில்லாமல், உணவில்லாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அரிசி, எண்ணெய், பருப்பு மற்றும் மளிகைப் பொருள்களின் விலைகள் உயர்ந்துவருகின்றன. தற்போது சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பதால் உணவுப்பொருள்களின் விலைகள் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, சுங்கக் கட்டண வசூலை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகளிடம் பேசியபோது, ``ஆண்டுதோறும் மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். சுங்கக் கட்டண நிர்ணயம் மற்றும் வசூல் குறித்த விதி 2008-ன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த உயர்வு அறிவிக்கப்படும். ஊரடங்கு அமலில் இருந்ததால், கட்டண உயர்வை அமல்படுத்த முடியவில்லை. சுங்கக் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு ஏப்ரல் 17-ம் தேதி அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து, கட்டண உயர்வு இப்போது அமல்படுத்தப்பட்டுள்ளது” என்றனர்.

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க-வின் செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம். ``1998-ம் ஆண்டு, வாஜ்பாய் ஆட்சியில் தங்க நாற்கரச் சாலைகள் அமைக்கப்பட்டன. அவற்றில் 70 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை அரசினால் அமைக்கப்பட்ட சாலைகள். மீதி 20 சதவிகிதம் தனியாருக்கு ஒப்பந்தத்தில் கொடுக்கப்பட்டவை. தனியாருக்கு ஒப்பந்தம் என்பது 5 ஆண்டுகள் அல்லது ஆறு ஆண்டுகள்தான். ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரே கட்டணம்தான். ஆனால், காங்கிரஸ் ஆட்சி வந்த பிறகு, நான்கு வழிச்சாலைகள் என்பது ஆறுவழிச் சாலைகளாகவும் மாற்றப்பட்டன. அதற்கு, பல விதமான ஒப்பந்தங்கள் போடப்பட்டன. தனியாருக்கு அதிகமாக ஒப்பந்தம் தரப்பட்டது. தனியார் சாலைகள் அமைத்து, அந்தச் சாலைகளை அவர்களே பராமரிப்பார்கள். அதன்மூலம் வரக்கூடிய சுங்கக் கட்டணங்களை வைத்து வங்கிக்கடன்களைத் திருப்பிச் செலுத்துவார்கள்.

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று இருந்தது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில், 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டனர். மேலும், ஒவ்வோர் ஆண்டும் மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலும், பணவீக்கத்தின் அடிப்படையிலும் கட்டணங்களை மாற்றிக்கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போட்டுள்ளன.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

2008 சட்டத்தின் கீழ் வருகிற 26 சுங்கச்சாவடிகளில்தான் தற்போது கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இங்கு வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் எப்ரல் 1-ம் தேதி கட்டண உயர்வு அமலுக்கு வரும். ஏப்ரல் 1-ம் தேதி ஊரடங்கு இருந்த காரணத்தால், இப்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. தற்போதுள்ள சிரமமான சூழலில், மனிதாபிமான அடிப்படையில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று சொல்வதில் தவறில்லை. வீட்டுக்கடன் வாங்கிவிட்டு பாதியில் கட்டமுடியாது என்று எப்படிச் சொல்ல முடியாதோ, அதுபோலத்தான் இதுவும். இதிலுள்ள பிரச்னைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் த.லெனினிடம் பேசினோம். ``நம் நாட்டில் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூல்செய்வது, கிட்டத்தட்ட ஒரு வழிப்பறி போல நடந்துவருகிறது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும்போது, சுங்கக் கட்டணம் வசூலிப்பது ஏழை எளிய மக்களை கடுமையாகப் பாதிக்கும். அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் கட்டணச் சாலைகள் மக்களுக்கு எதிரானவை என்பதை உணர்ந்து, கட்டணமில்லா சாலைகளாக மாற்றியுள்ளன.

லெனின்
லெனின்

நம் நாட்டில், வாகனங்களை வாங்கும்போதே அதன் முழு ஆயுளுக்கும் சேர்ந்து சாலை வரி வசூலிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையில் ஒவ்வொரு லிட்டருக்கும் சாலை வரி விதிக்கப்படுகிறது. இவ்வளவுக்கும் மேல் சுங்கக் கட்டணம் என்று வசூலிப்பது பெரும் அநியாயம். ஒவ்வோர் ஆண்டும் 5 சதவிகிதம் முதல் 12 சதவிகிதம் வரை சுங்கக் கட்டணங்களை உயர்த்துகிறார்கள். அதேநேரம், இந்தச் சாலைகளைப் பராமரிப்பதே இல்லை. ஒவ்வோர் ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை அதிரிக்கிறது. அதனால், வசூலும் அமோகமாக நடக்கிறது.

ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் அரசு போக்குவரத்துக் கழகங்கள், பெரும் தொகையை சுங்கக் கட்டணமாகச் செலுத்துகின்றன. ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 கோடி சுங்கக் கட்டணமாக நம் மாநில அரசுப் பேருந்துகளுக்காக செலுத்தப்படுகின்றன. நம்முடைய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கித்தான் இந்த தேசிய நெடுஞ்சாலைகளை தனியார் நிறுவனங்கள் அமைக்கின்றன. 15 ஆண்டுகளுக்கு மட்டுமே சுங்கக் கட்டணங்களை அந்த நிறுவனங்கள் வசூலிக்க வேண்டும். ஆனால், 15 ஆண்டுகள் கடந்தும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சட்ட மீறலை ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதே இல்லை.

கள்ளக்குறிச்சி மாண்டூர் சுங்கச்சாவடி
கள்ளக்குறிச்சி மாண்டூர் சுங்கச்சாவடி

இப்போது, ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் மக்கள் நொந்துபோய் கிடக்கும்போது, சுங்கக்கட்டணங்களை உயர்த்துவதற்கு மத்திய பா.ஜ.க அரசு அனுமதி கொடுத்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சுங்கக் கட்டணங்களை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும்” என்றார்.

அரசு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சலாமா?

அடுத்த கட்டுரைக்கு