Published:Updated:

மதராஸ் ஸ்டேட் `தமிழ்நாடு' ஆன கதை இதுதான்! #TamilnaduDay

தமிழ்நாடு

`பிரிட்டிஷார் தங்களுடைய ஆளுகைக்கு ஏற்ப 'மதராஸ் மாகாணம்' என ஒரு பகுதியை அழைத்ததாலேயே அதை அப்படியே தொடர வேண்டிய அவசியமில்லை, நம்முடைய அடையாளங்களை காக்க வேண்டியது முக்கியம், தமிழ்நாடு எனப் பெயர் மாற்றியே தீரவேண்டும்'

மதராஸ் ஸ்டேட் `தமிழ்நாடு' ஆன கதை இதுதான்! #TamilnaduDay

`பிரிட்டிஷார் தங்களுடைய ஆளுகைக்கு ஏற்ப 'மதராஸ் மாகாணம்' என ஒரு பகுதியை அழைத்ததாலேயே அதை அப்படியே தொடர வேண்டிய அவசியமில்லை, நம்முடைய அடையாளங்களை காக்க வேண்டியது முக்கியம், தமிழ்நாடு எனப் பெயர் மாற்றியே தீரவேண்டும்'

Published:Updated:
தமிழ்நாடு

`தமிழ்நாடு என்று பெயரை மாற்றுவதால் என்ன லாபத்தை அடையப்போகிறீர்கள்?''

``பார்லிமென்ட்டை 'லோக்சபா' என்றும்... கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸை `ராஜ்யசபா' என்றும் மாற்றியதால்... நீங்கள் என்ன லாபம் அடைந்துவிட்டீர்கள்!''

தமிழ்நாடு
தமிழ்நாடு

1963-ம் ஆண்டு அப்போதைய `மதராஸ் ஸ்டேட்' மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்திட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து, மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு கோபமாக பேரறிஞர் அண்ணா கொடுத்த பதிலும்தான் மேலேயுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு `தமிழ்நாடா'க இருக்கவில்லை. அப்போது அதன் பெயர் மதராஸ் ஸ்டேட்தான். இன்று நமக்கு நம்முடைய மாநிலத்தை 'தமிழ்நாடு' என்று குறிப்பிடுவதில் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. ஆனால் 63 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸுக்கு இருந்தது. 'மதராஸ் ஸ்டேட்' என்று அழைக்கப்படுவதையே அன்று ஆட்சி செய்துகொண்டிருந்த காங்கிரஸும் விரும்பியது.

``தமிழ்நாடு என்பது நமது நாடா அல்லது இந்தியா நமது நாடா? எப்படி இதையும் நமது நாடு அதையும் நமது நாடு என்று சொல்வது?" என முதலமைச்சர் பக்தவத்சலம் சட்டமன்றத்திலேயே கேள்வியெழுப்பினார்.

``இது பிரிவினையை முன்னிறுத்துகிற கோரிக்கை'' என்று காங்கிரஸ் அச்சப்பட்டது. ``தமிழ் பேசாத மற்ற மொழியினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்'' என்றார்கள். இப்படி`தமிழ்நாடு' பெயர் மாற்ற கோரிக்கையை ஆரம்பத்திலிருந்தே தவிர்த்தும் வந்தனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், 'நிர்வாக வசதிக்கென பிரிட்டிஷார் தங்களுடைய ஆளுகைக்கு ஏற்ப 'மதராஸ் மாகாணம்' என ஒரு பகுதியை அழைத்ததாலேயே அதை அப்படியே தொடர வேண்டிய அவசியமில்லை, நம்முடைய அடையாளங்களை காக்க வேண்டியது முக்கியம், தமிழ்நாடு எனப் பெயர் மாற்றியே தீரவேண்டும்' என்கிற குரல்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தன.

மெட்ராஸ் மாகாணம்
மெட்ராஸ் மாகாணம்

சுதந்திரத்துக்குப் பிறகு, 1956, நவம்பர் 1 அன்று மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதுவரை `மதராஸ் மாகாணம்' என அழைக்கப்பட்டு வந்த பகுதியில், தமிழர்கள் வாழ்ந்த பகுதி மட்டும் `மதராஸ் ஸ்டேட்' ஆனது. இந்த மாற்றம் குறித்து முன்பே அறிந்திருந்த பெரியார், 1955 அக்டோபர் 10ம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அதில் ``தமிழ்நாட்டை விட்டு மலையாளிகள், ஆந்திரர்கள், கன்னடர்கள் பிரிந்து போன பின்பும் கூட தமிழகத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் இருக்கக்கூடாது எனச் சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள். அந்தப்பெயரை மறைத்து 'சென்னை நாடு' என்று பெயர் சூட்டவும் போகிறார்கள் என்று தெரிகிறது. தமிழ், தமிழ்நாடு என்ற பெயர் இந்த நாட்டுக்கு இல்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றிபெற்றுவிடக்கூடாது'' என்று எழுதினார். இதற்குப் பிறகு திராவிடர் கழகம் மட்டுமல்லாது, திராவிட முன்னேற்றக்கழகமும் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து அறிக்கைகள் வெளியிடத் தொடங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொட்டி ஶ்ரீராமுலு
பொட்டி ஶ்ரீராமுலு

1952-ல் பொட்டி ஶ்ரீராமுலு ஆந்திர மாநில கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்து உயிர்த்தியாகம் செய்தார். இது விருதுநகரைச் சேர்ந்த காந்தியவாதியான சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரலிங்கனாரை மிகவும் பாதித்தது. காந்தியோடு தண்டியாத்திரையில் கலந்துகொண்டவர். தன் சொத்துகளை மக்களுக்கே எழுதிவைத்தவர். பின்நாளில் விருதுநகரில் காந்தியைப் போலவே ஆசிரமம் அமைத்து வாழ்ந்துகொண்டிருந்தார். அவரும் பொட்டி ஶ்ரீராமுலுவைப் பின்பற்றி, 1956 ஜூலை 27ம் தேதி அன்று 12 கோரிக்கைகளை முன்வைத்து விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். இந்த 12 கோரிக்கைகளில் ஒன்று, 'தமிழ்நாடு' எனப் பெயர்மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை.

அன்றைய காங்கிரஸ் அரசோ சங்கரலிங்கனாரின் எந்தக் கோரிக்கையையும் ஏற்கவில்லை. இருப்பினும் விடாப்பிடியாக தன் உண்ணாவிரதத்தை வாரக்கணக்கில் தொடர்ந்தார் சங்கரலிங்கனார். இது எல்லாப் பக்கங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்கள் எல்லாம் பக்கம் பக்கமாக எழுதின. நாள்பட சங்கரலிங்கனார் கவலைக்கிடமானார். சங்கரலிங்கனாரின் உடல்நலம் கருதி அன்றைய மூத்த தலைவர்களான காமராசர், ம.பொ.சி, கக்கன், அண்ணா, ஜீவானந்தம் முதலான பலரும் அவரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

ஆனால், சங்கரலிங்கனார் விடாப்பிடியாக 75 நாள்கள் உண்ணாவிரதமிருந்து, 1956 அக்டோபர் 13ம் நாளில் உயிர்த்தியாகம் செய்தார். உயிர்விடுவதற்கு முன்பு சங்கரலிங்கனார் ஒரு கடிதத்தில் ``மக்களுடைய விருப்பத்திற்கு மாறாகச் செயல்படும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தே தீரும். அறிவுத்திறன் இருந்தால் திருத்திக்கொள்ளட்டும்'' என்று எழுதினார். பழுத்த காங்கிரஸ்வாதியான அவர் தன் உடலைக்கூட கம்யூனிஸ்ட்கட்சியைச் சேர்ந்த மாயாண்டி பாரதியிடம் ஒப்படைக்கும் படி சொல்லியிருந்தார்!

ஆனால், உயிர்பிரிந்த பின்னும் சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளில் எதையுமே அன்றைய காங்கிரஸ் நிறைவேற்றவில்லை. இதற்குப் பிறகு, தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கை என்பது பிரதானமான ஒரு பிரச்னையாக உருவெடுத்தது. அண்ணா தலைமையிலான தி.மு.க 1957ல் முதன்முறையாகச் சட்டமன்றத்தில் நுழைந்தபோது, `பெயர்மாற்றம்' கோரிக்கையை முன்வைத்து சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. ஆனால், அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 42 வாக்குகளே பதிவாயின. எதிர்ப்பாக 127 வாக்குகள் பதிவாகின. ஆனாலும் தொடர்ந்து தமிழ்நாடு கோரிக்கையை தி.மு.க முன்னெடுத்தே வந்தது.

ம பொ சிவஞானம் தமிழரசு கட்சி
ம பொ சிவஞானம் தமிழரசு கட்சி

1961ல் அப்போதைய சோஷலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சின்னதுரை மீண்டும் தமிழ்நாடு பெயர்மாற்ற தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் முன்னெடுத்தார். இதையொட்டி ம.பொ.சியின் தமிழரசு கட்சி, தமிழகம் முழுக்கப் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. காமராஜர், பெயர்மாற்றம் சாத்தியமில்லை என்று அறிவிக்காமல், "அரசின் கடிதப்போக்குவரத்தில் மட்டும் தமிழ்நாடு என்று குறிப்பிடலாம்" என்று சமாதானம் பேசினார். ஆனால், அதை ஒப்புக்கொள்ள யாரும் தயாராக இருக்கவில்லை.

மீண்டும் அதே ஆண்டில் மாநிலங்களவையில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் புபேஷ் குப்தா, தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கையை முன்வைத்து தனிநபர் மசோதாவைக் கொண்டுவந்தார். மாநில அரசு இதற்கான சட்டத்தை நிறைவேற்றாவிட்டாலும் மத்திய அரசு இதற்கான ஒப்புதலை அளிக்கலாம் என்று விவாதித்தார். அதே சமயத்தில் அவையில் உறுப்பினராக இருந்த அண்ணாவும் ``வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்” என்ற தொல்காப்பிய வாசகத்தையும், ``இமிழ்கடல் வேலியை தமிழ்நாடாக்கின” என்ற சிலப்பதிகாரப் பாடலையும் சுட்டிக்காட்டி பேசினார். இருந்தும் புபேஷ் குப்தாவின் மசோதா தோல்வியைத் தழுவியது!

ஜோதி பாசு (இடது) பூபேஷ் குப்தா (வலது)
ஜோதி பாசு (இடது) பூபேஷ் குப்தா (வலது)

இப்படி தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக மத்தியிலும் மாநிலத்திலும் இந்தக் கோரிக்கை தோல்வியைத் தழுவினாலும் விடாப்பிடியாகப் போராட்டம் தொடர்ந்தது. 1963 ஜூலை 23ம் தேதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்த இராம.அரங்கண்ணல் சட்டமன்றத்தில் பெயர்மாற்றத்தை வலியுறுத்தி தீர்மானத்தை நிறைவேற்றினார். இந்தச் சமயத்திலும் காங்கிரஸ் ஆட்சிதான். ஆனால் முதல்வராக காமராஜருக்கு பதில் பக்தவத்சலம் இருந்தார்.

``பேரை மாற்றினால் ஒப்பந்தங்களை ஆவணங்களை எல்லாம் மாற்ற வேண்டும்'' என்று மறுத்தார் ஆர்.வெங்கட்ராமன். ``கோல்ட்கோஸ்ட் என்று பெயர் கொண்ட நாடு கானா என மாறிவிட்டதே, அங்கே இந்தச் சிரமங்கள் எல்லாம் இல்லையே'' என்று சுட்டிக்காட்டி தி.மு.க எதிர்ப்பு தெரிவிக்க... மீண்டும் தீர்மானம் தோல்வியடைந்தது!

தமிழ்நாடு
தமிழ்நாடு

அதிகாரத்தின் இரும்புக் கதவுகளை உடைக்க தி.மு.கவேதான் அதிகாரத்திற்கு வரவேண்டியிருந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு 1967 ஜூலை 18ம் தேதி 'மதராஸ் ஸ்டேட்' என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கு அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்” என்கிற தீர்மானம் அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணாவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்திலும் இதற்கான சட்ட முன்முடிவு 1968 நவம்பர் 1ல் நிறைவேறியது.

அதிகாரபூர்வமாக 1968ம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி பாலர் அரங்கத்தில் பெயர்சூட்டுவிழா நடைபெற்றது. பத்தாண்டுகளாக இந்தக் கோரிக்கைக்காக இறுதிவரை போராடிய அண்ணா உடல் நலிவடைந்த நிலையிலும் உற்சாகமாக விழாவில் கலந்துகொண்டார். ஒட்டுமொத்த தமிழர்களும் உணர்வுபூர்வமாக அந்த நாளைக் கொண்டாடினார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism