Election bannerElection banner
Published:Updated:

பி.ஜே.பியைச் சுற்றும் தேர்தல் நிதிப் பத்திர விவகாரம்... நடந்தது என்ன?

ஸ்டெர்லைட்
ஸ்டெர்லைட்

2018-ல் பி.ஜே.பி என்ன செய்தது தெரியுமா? FCRA சட்ட விதிகளை முன் தேதியிட்டுத் திருத்தும் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து, அதை காங்கிரஸ் ஆதரவுடன் நிறைவேற்றியது. இதன்மூலம் ஸ்டெர்லைட் நன்கொடைகள் `புனிதத்துவம்' அடைந்தன.

தேர்தல் நிதிப் பத்திர விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ``தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் முறைகேடுகளைச் செய்துவிட்டது பி.ஜே.பி'' எனக் கொதிக்கிறார்கள் எதிர்க்கட்சியினர். 2017-ம் ஆண்டு வரையில் அரசியல் கட்சிகளுக்கு நேரடியாகவோ பணமாகவோ காசோலையாகவோ, அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்கிலோ நிதியுதவி அளிக்கலாம். பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்த நடைமுறையை மாற்ற, தேர்தல் நிதிப் பத்திர (Electoral Bonds) திட்டத்தைக் கொண்டு வந்தது மோடி அரசு. ``தேர்தல் நிதிப் பத்திரம் மூலம் கறுப்புப் பணம் ஒழிக்கப்படும்'' எனச் சொன்னது பி.ஜே.பி. இந்தப் புதிய முறையின்படி பாரத ஸ்டேட் வங்கிகளில் நிதிப் பத்திரங்கள் வழங்கப்படும். அவற்றை வாங்கி கட்சிகளின் கணக்குகளில் நிதியாகச் செலுத்த முடியும்.

தேர்தல் நிதிப் பத்திரம்
தேர்தல் நிதிப் பத்திரம்

பழைய முறையில் ஒரு நபரோ, நிறுவனமோ அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்தால் 20,000 ரூபாய்க்கு மேல் நிதி அளிப்பவர்களின் விவரத்தைத் தேர்தல் கமிஷனுக்குத் தெரிவிக்க வேண்டும். கட்சிகளின் ஒவ்வோர் ஆண்டும் வரவு செலவு அறிக்கையைத் தேர்தல் கமிஷனில் கட்சிகள் தெரிவிக்கும்போது இந்த நிதி விஷயம் வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிய வரும்.

ஆனால், தேர்தல் நிதிப் பத்திர முறையில் நிதி அளிப்பவரின் விவரம் வங்கிகளால் ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது. கட்சிகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதை மக்கள் தெரிந்துகொள்ள முடியவில்லை. தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெறும் நிதிக்கு அரசியல் கட்சிகள் வருமான வரி விலக்கு பெற முடியும். இப்படியான தேர்தல் பத்திரங்கள்தான் இப்போது சர்ச்சைக்கு விதை போட்டிருக்கின்றன.

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி-க்கள் போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி-க்கள் போராட்டம்
`ஆறு பைசா'-வுக்குள் அரசியல் ஆயிரம்: ஜியோ யுத்தமும் பி.ஜே.பி `பின்னணி'யும்!

``கறுப்புப் பணத்தைக் கட்சிக்குள் கொண்டு வரவே ரிசர்வ் வங்கியின் விதியையும் மீறி, பி.ஜே.பி அரசு தேர்தல் பத்திரங்களை வெளியிட்டுள்ளது'' எனக் குற்றம்சாட்டி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியது காங்கிரஸ். தேர்தல் பத்திரம் திட்டத்தை பி.ஜே.பி ஏன் கொண்டு வந்தது? அதற்குப் பின்னணியும் இருக்கிறது. அது 2014-ம் ஆண்டு அரங்கேறியவை. அதன் ஃபிளாஷ்பேக்கை பார்ப்போம்.

டெல்லி அசோகா ரோட்டில் உள்ள பி.ஜே.பி தலைமை அலுவலகச் செயலாளர் அருண் குமார் ஜெயின், தலைமைத் தேர்தல் கமிஷனுக்கு 20.12.2014 அன்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். 2013 ஏப்ரல் முதல் 2014 மார்ச் வரையில் பி.ஜே.பி-க்கு நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலை அந்தக் கடிதத்துடன் இணைத்திருந்தார். 20,000 ரூபாய்க்கும் மேல் நன்கொடை பெறுகிறவர்களின் பெயர் விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்கிற அடிப்படையில், 2013-2014 நிதியாண்டில் பி.ஜே.பி பெற்ற நன்கொடை விவரங்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.

ஸ்டெர்லைட் பி.ஜே.பி-க்கு அளித்த நிதி விவரம்
ஸ்டெர்லைட் பி.ஜே.பி-க்கு அளித்த நிதி விவரம்
விகடன்

அந்த ஆண்டில் 20,000 ரூபாய்க்கும் மேல் பி.ஜே.பி-க்கு நன்கொடை கொடுத்தவர்கள் மட்டும் 1,480 பேர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பி.ஜே.பி-க்கு நன்கொடை அளித்த விவரம் அதில் இடம்பெற்றிருந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் 837331 என்ற எண் கொண்ட ஒரு காசோலையின் மூலம் ரூ.4 கோடியும் 837332 என்ற எண் கொண்ட காசோலை மூலம் ரூ.3.5 கோடியும் பி.ஜே.பி-க்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறது ஸ்டெர்லைட் நிறுவனம். இப்படி, மொத்தமாக பி.ஜே.பி-க்கு அளிக்கப்பட்ட நன்கொடை 7.5 கோடி ரூபாய். மேலும், STERLITE INDUSTRIES INDIA LTD என்ற பெயரில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் இரண்டு காசோலைகள் மூலம் மேலும் ரூ.4.5 கோடி, ரூ.3 கோடி ரூபாய் பி.ஜே.பி-க்கு அளிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக, ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து 15 கோடி ரூபாய் பெற்றிருக்கிறது பி.ஜே.பி.

நன்கொடை அளிக்கப்பட்ட காலகட்டம் முக்கியமானது. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இந்தத் தொகைகள் தரப்பட்டுள்ளன. `பி.ஜே.பி ஆட்சிக்கு வரும்’ என்கிற நம்பிக்கையில் நன்கொடையை அளித்திருக்கிறது ஸ்டெர்லைட் நிறுவனம். பி.ஜே.பி-க்கு மட்டுமல்ல, காங்கிரஸுக்கும் கோடிகளை அள்ளிக்கொடுத்திருக்கிறது ஸ்டெர்லைட். 2004-ம் ஆண்டு முதல் பி.ஜே.பி, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுக்கும் அதிக அளவில் நன்கொடை கொடுத்தது இந்த நிறுவனம்தான். 2013-ம் ஆண்டுக்குப் பிறகுதான் இந்தப் பெருமை வேறு நிறுவனங்களுக்குப் போனது. இங்கிலாந்தில் இருக்கும் வேதாந்தா ரிசோர்சஸ் என்ற குழுமத்தின் துணை நிறுவனம்தான் ஸ்டெர்லைட். இதேபோல Sesa Goa என்ற நிறுவனமும் அவர்களுடையதே! 2004 முதல் 2015 வரை ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ.6 கோடியும், சேச கோவா நிறுவனம் ரூ.2.78 கோடியும் காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடை அளித்துள்ளன.

பி.ஜே.பி
பி.ஜே.பி

இந்த விவகாரங்கள் வெளியில் வரக் காரணமாக இருந்தது, டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு வந்த ஒரு வழக்கு. Association of Democratic Reforms (ADR) என்ற அமைப்பு சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குப் போட்டது. `அரசியல் கட்சிகள் வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெறுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதை மதிக்காமல் பி.ஜே.பி-யும் காங்கிரஸும் வேதாந்தா குழுமத்தின் நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்றுள்ளன. இந்தக் கட்சிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பதே அந்த வழக்கு. `Foreign Contribution (Regulation) Act எனப்படும் FCRA சட்டப்படி இந்தக் கட்சிகள் செய்தது தவறு’ என்பது அந்த வழக்கில் வைக்கப்பட்ட வாதம்.

ஆனால், `வேதாந்தா குழுமம் வெளிநாட்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். அதை நடத்தும் அனில் அகர்வால் இந்தியக் குடியுரிமை பெற்றவர்தான். நன்கொடை கொடுத்த ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில்தான் செயல்படுகின்றன. எனவே, இது அந்நிய நன்கொடை இல்லை’ என இந்தக் கட்சிகள் வாதிட்டன. ஆனால், `வேதாந்தா குழுமத்தில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக அந்நிய முதலீடு இருப்பதால், இது வெளிநாட்டு நன்கொடைதான்’ எனத் தீர்ப்பளித்தது டெல்லி உயர் நீதிமன்றம். 2014 மார்ச் 18-ம் தேதி இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம், `ஆறு மாதங்களுக்குள் இந்தக் கட்சிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை
Vikatan

அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸும் ஏதும் செய்யவில்லை; பிறகு வந்த பி.ஜே.பி-யும் ஏதும் செய்யவில்லை. 2018 மார்ச் 13-ம் தேதி பி.ஜே.பி அரசு என்ன செய்தது தெரியுமா? FCRA சட்ட விதிகளை முன் தேதியிட்டுத் திருத்தும் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து, அதை காங்கிரஸ் ஆதரவுடன் சத்தமில்லாமல் நிறைவேற்றிவிட்டது. ஸ்டெர்லைட்டிடமிருந்து அவர்கள் வாங்கிய `நன்கொடை’ `புனிதத்துவம்’ அடைந்துவிட்டன.

இப்படி நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறுவது வெட்டவெளிச்சம் ஆவதால்தான் தேர்தல் நிதிப் பத்திரம் என்கிற போர்வையைக் கொண்டு வந்தது மோடி அரசு. கறுப்புப் பணத்தை ஒழிக்க பண மதிப்பிழப்பைக் கொண்டு வந்தது போல கறுப்புப் பணத்தை ஒழிக்கத் தேர்தல் நிதிப் பத்திரத்தைக் கொண்டு வந்திருக்கிறோம் என விளக்கம் கொடுத்தது. ஆனால், இப்போது தேர்தல் நிதிப் பத்திரத்தில் நடந்த தகிடுதத்தங்கள் வெளியாகி சந்திசிரிக்கின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு