Published:Updated:

மதிக்கப்படாத சட்டங்கள்... தோல்வியில் முடிந்த முயற்சிகள்... சுஜித் கற்றுத் தந்த பாடம் என்ன?

சுஜித்துக்கு அஞ்சலி செலுத்தும் முதல்வர்
சுஜித்துக்கு அஞ்சலி செலுத்தும் முதல்வர் ( Vikatan )

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை ஏன் நம்மால் காப்பாற்ற முடியவில்லை?

சிறுவன் சுஜித் மரணம் நிகழ்வதற்கு ஒரு வாரம் முன்பு.

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் சூடுபிடித்த நேரம். பனமலைப்பேட்டை என்ற இடத்தில் ஒயிலாட்டக் கலைஞர்களோடு உற்சாகமாக நடனம் ஆடி பிரசாரம் செய்துகொண்டிருந்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இந்த வேலுமணிதான், `அனுமதியில்லாமல் ஆழ்துளைக் கிணறு தோண்டினால் 7 ஆண்டு சிறை' என்கிற சட்ட மசோதாவை 2014 ஆகஸ்ட் 11-ம் தேதி சட்டசபையில் கொண்டுவந்தவர்.

வேலுமணியின் ஒயிலாட்டம்...
வேலுமணியின் ஒயிலாட்டம்...

ஐந்தாண்டுகளுக்கு முன்பு கொண்டுவந்த இந்த மசோதாவும் அரசும் தூங்கி வழிந்திருக்கிறது என்பதற்குச் சாட்சியாகி இருக்கிறான் சுஜித்.

வேலுமணி கொண்டுவந்த இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, ஆழ்துளைக் கிணற்றில் 10 நாள்களில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. `இனி இப்படி ஒரு சம்பவம் ஏற்படாமல் இருக்கத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என அன்றைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவு போட... அன்றைய தலைமைச்செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் தலைமைச் செயலகத்தில் 2014 ஏப்ரல் 17-ம் தேதி கூடியது.

சட்ட மசோதா
சட்ட மசோதா
`விரைவில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!’ - சுஜித் விவகாரத்தில் திருச்சி ஆட்சியர்

உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா, டி.ஜி.பி ராமானுஜம், தீயணைப்புத்துறை அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில்தான், ஆழ்துளைக் கிணறுகளை அமைக்க அரசின் அனுமதி பெறுவது தொடங்கி ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்குப் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் வரையில் பல்வேறு நிபந்தனைகளை உருவாக்கினார்கள். பிறகு சட்ட மசோதாவாகவும் அது உருப்பெற்றது. அவை அத்தனையும் அரசாங்க கோப்புகளில் தூங்கி வழிகின்றன. சுஜித்தையும் கொன்றிருக்கின்றன.

2002-ம் ஆண்டு சென்னை, மண்ணடி ஆடியபாதம் தெருவில் சிறுவன் தமிழ்மணி பலியான நேரத்தில், அன்றைக்கு இருந்த ஜெயலலிதா அரசு விழித்துக்கொண்டு, `தமிழ்நாடு நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் மேலாண்மை சட்டம்’ என்கிற பெயரில் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது.

தமிழக தலைமைச் செயலகம்
தமிழக தலைமைச் செயலகம்
``நாங்க பட்ட நரக வேதனையை சுஜித் நினைவுபடுத்திட்டான்!’’ -  கிருஷ்ணகிரி குணாவின் பெற்றோர் வேதனை

இதன்படி, `ஆழ்துளைக் கிணறுகள் தோண்ட வேண்டுமென்றால் அரசின் அனுமதி பெற வேண்டும்; குடிநீர் வழங்கல் துறை உட்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்; ஆழ்துளைக் கிணறுகள் தோண்டும் பணிகள் முடிந்தாலும் தண்ணீர் கிடைக்காமல் போனாலும் அதுபற்றி தகவலைத் தெரிவிக்க வேண்டும்; குழியைச் சரியாக மூடாமல் போனாலோ பணியைப் பாதியில் விட்டுச் சென்றாலோ சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரிய வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றெல்லாம் சொன்னது அந்தச் சட்டம். இதையும் ஆட்சியாளர்கள் மறந்தார்கள்.

மதிக்கப்படாத சட்டங்கள்... தோல்வியில் முடிந்த முயற்சிகள்... சுஜித் கற்றுத் தந்த பாடம் என்ன?

ஆழ்துளைக் கிணறுகள் தொடர்பாக 2014 ஜூனில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று போடப்பட்டது. தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு பதில் மனுத் தாக்கல் செய்த அ.தி.மு.க அரசு, `ஆழ்துளைக் கிணறுகள் பற்றி உச்சநீதிமன்றம் பிறப்பித்த விதிமுறைகளை அரசு செயல்படுத்தி வருகிறது, கலெக்டர்களுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஆழ்துளைக் கிணறுகளின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. 15 நாள்களுக்குள் ஆழ்துளைக் கிணறு அமைக்க விண்ணப்பிப்பது, கிணற்றின் அளவு உள்ளிட்ட அம்சங்களை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது' எனத் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவும் குழந்தைகளின் உயிர்களுக்கு உத்தரவாதம் தரவில்லை.

சுஜித் மீட்புப் பணிகள்...
சுஜித் மீட்புப் பணிகள்...
விகடன்
`சுஜித் உடலைக் காட்டாதது ஏன்?' - கும்பகோணம் தீ விபத்தைச் சுட்டிக்காட்டிய ராதாகிருஷ்ணன்

கர்நாடகா, சூலிகேரி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது திம்மண்ணாவை ஒரு வாரம் கழித்து பிணமாகத்தான் மீட்டார்கள்.

மீட்புப் பணி நடந்துகொண்டிருந்த நேரத்தில் திம்மண்ணாவின் தந்தை அனுமந்தஹட்டி மீடியாவிடம் சொன்ன வார்த்தைகள் சோகத்தின் உச்சம். ``விவசாயத்துக்குத் தண்ணீர் இல்லாததால்தான் போர்வெல் தோண்டினேன். அதில் தண்ணீர் வராததால், மீண்டும் ஒரு ஆழ்துளைக் கிணறு அமைத்தேன். இப்படி மூன்று இடங்களில் தோண்டியதால் 10 லட்சம் ரூபாய் செலவானது. அத்தனையும் கடன். மகனை மீட்கும் முயற்சியில் என் நிலத்தைக் குழிதோண்டி பாழ்படுத்துகிறார்கள். ஏற்கெனவே பட்ட நஷ்டமும், கஷ்டமும் போதும். இனியும் தாங்கும் சக்தி எனக்கு இல்லை. குழி தோண்டி திம்மண்ணாவை மீட்க வேண்டாம். என் இரண்டு மகள்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மீட்புப் பணிகளை நிறுத்த வேண்டும்'' எனக் கதறினார்.

திம்மண்ணா
திம்மண்ணா

பிள்ளைகளைப் பெற்ற அப்பன்களின் நிலை இது. வறுமை வாழ்வாதாரத்தை மட்டுமல்ல... பிள்ளைகளையும் சேர்த்தே பறிக்கிறது. திம்மண்ணாவின் தந்தைக்கு ஏற்பட்ட நிலைதான் சுஜித்தின் அப்பாவுக்கும். ஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க முடியவில்லை என்கிற உண்மையை மட்டும் சுஜித் சொல்லிவிட்டுப் போகவில்லை. நீர் மேலாண்மை, விவசாயிகளின் வாழ்வாதாரம், அதிகாரிகளின் அலட்சியம் என அனைத்தையும் விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறான்.

ஹரியானா மாநிலம் குர்ஹானைச் சேர்ந்த ஐந்து வயது மஹிக்கு அன்றைக்குப் பிறந்தநாள். உறவினர்கள் கொண்டுவந்த கேக்குகளாலும் இனிப்புகளாலும் மஹியின் வயிறு நிரம்பியிருந்தது. கொண்டாட்டம் முடிந்து வீட்டின் அருகே இரவில் விளையாடிக்கொண்டிருந்தபோது ஆழ்துளைக் கிணறு மஹியை விழுங்கியது. 86 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அழுகிய நிலையில்தான் வெளியே வந்தாள் மஹி. 2012-ம் ஆண்டு ஜூனில் நடந்த இந்தச் சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. மஹியின் மரணத்தைத் தொடர்ந்து போடப்பட்ட பொதுநல வழக்கில், ஆழ்துளைக் கிணறுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுதான் இன்றுவரையில் வேதமாக இருக்கிறது.

மஹி
மஹி
``என் மகனே கடைசியாக இருக்கட்டும்!’’ - கலங்கும் சுஜித் வில்சனின் தாய் கலாமேரி

`ஆழ்துளைக் கிணறு தோண்டுபவர்கள் 15 நாள்களுக்கு முன்பு உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும்; போர்வெல் நிறுவனம் நில உரிமையாளரின் பெயர், முகவரி, அடங்கிய அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும்; பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளை அதன் அடி வரை மண்ணைக் கொண்டு மூட வேண்டும்; இந்த வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை, கலெக்டர்கள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கண்காணித்து, மக்கள் அறியும் வகையில் நாளிதழ், தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண்டும்; இது தொடர்பான ஆவணங்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் கட்டாயம் இருக்க வேண்டும்; ஆபத்தான, பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை உடனே மூட வேண்டும்; ஒவ்வொரு மாதமும் கலெக்டர்கள் கூட்டத்தில் நடைமுறைகளை மீறுகிற நில உரிமையாளர்கள், ஆழ்துளையிடும் ஒப்பந்தக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றெல்லாம் அன்றைக்கு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம்.

உயிரைக் கொடுத்து மஹி கொண்டுவந்த இந்த உத்தரவுகள் சுஜித் உயிரைக் காப்பாற்றவில்லை. ஆழ்துளைக் கிணறுகளுக்காக ஆள்வோர் போட்ட சட்டங்களும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளும் பிஞ்சுகளின் உயிர் காக்க உதவவில்லை. ஆழ்துளைக் கிணற்றைத் தோண்டி வைத்த சுஜித்தின் அப்பா மட்டும்தான் குற்றவாளியா? இல்லை உச்சநீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்திய ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கத்தினரும்தானே!

சுஜித் பெற்றோரிடம் ஆறுதல் சொல்லும் எடப்பாடி, பன்னீர்...
சுஜித் பெற்றோரிடம் ஆறுதல் சொல்லும் எடப்பாடி, பன்னீர்...
விகடன்
`மனசாட்சியை  தொட்டுப்பார்த்தால் இப்படி பேசியிருக்கமாட்டார்!’ -சுஜித் விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி

ஆழ்துளைக் கிணறுகளுக்குக் குழந்தைகளை விலையாகக் கொடுத்து பாடம் கற்றும், நாம் இன்னும் திருந்தவில்லை. ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் சிக்கி மீட்புப் பணியை மேற்கொள்ளும்போது செய்யப்பட்ட உத்திகள், பணிகள், தவறுகள், தேவைப்படும் பொருள்கள், நிபுணர்கள் விவரம், அவர்களது முகவரி, வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள், நவீன கேமரா ஆகியவை தொடர்பான கையேடோ (Manual Guide), பயனர் வழிகாட்டியோ (User Guide) அரசு இதுவரை உருவாக்கி வைத்திருக்கவில்லை. ஆழ்துளைக் கிணற்றில் அடுத்த குழந்தை விழும்போது பதற்றத்தோடு பல முயற்சிகளைப் பரிசோதித்துப் பார்க்கிறோம். ஒரு முயற்சி தோற்ற பிறகு அடுத்த முயற்சிக்குத் தாவுகிறோம். சுஜித் விவகாரத்தில் அதுதான் நடந்தது. நீரியல் வல்லுநர், நில அமைப்பியல் நிபுணர், பேரிடர் மேலாண்மை அதிகாரி எனப் பல தரப்பும் சேர்ந்து உழைக்க வேண்டிய தருணம் அது.

ஆழ்துளை கிணறு
ஆழ்துளை கிணறு

2013-ம் ஆண்டு அரவக்குறிச்சிக்கு அடுத்த சூரிபாளியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 7 வயது சிறுமி முத்துலட்சுமி பரிதாபமாகப் பலியானாள். 700 அடி ஆழ்குழாய் கிணற்றில் 12 அடியில்தான் முத்துலட்சுமி சிக்கியிருந்தாள். ரொம்ப தாமதமாகத்தான் பக்கத்தில் குழி தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சிகள் மேற்கொண்டார்கள்.

செல்லூர் ராஜூவும் சுஜித்தும்
செல்லூர் ராஜூவும் சுஜித்தும்
விகடன்

தாமதமாகத் தகவல் அளிக்கப்பட்டதால் மதுரையிலிருந்து ரோபோ கருவியைத் தாமதமாகத்தான் கொண்டுவர முடிந்தது. அதற்குள் குழந்தையின் மேல் மணல் பரவிவிட்டது. அதனால் முத்துலட்சுமியை ரோபோ கருவியால் மீட்க முடியாமல் போனது. முத்துலட்சுமி குழிக்குள் விழுந்த அன்று தமிழ்நாட்டிலேயே அதிக அளவாகக் கரூரில்தான் மிக அதிகமாக 103 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. பூமிக்கடியில் இதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். இந்த சீதோஷண நிலையையும் கணிக்கத் தவறினார்கள் மீட்புக் குழுவினர். மீட்பு முயற்சிகள் நடந்துகொண்டிருந்தபோதே வெப்பத்தைத் தணிக்க அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை. தேவைப்படும் பட்சத்தில் லாரி லாரியாக தண்ணீரை ஊற்றி ஏரியாவையே குளிர வைத்திருக்கலாம். ஆழ்துளைக் கிணற்றுக்குள் குளிர்ந்த காற்றை டியூப் வழியாக அனுப்பியிருக்கலாம். இவையெல்லாம் அன்றைக்கு முத்துலட்சுமி சொல்லிவிட்டுப் போன பாடங்கள்.

முத்துலட்சுமி மீட்புபணியின் போது...
முத்துலட்சுமி மீட்புபணியின் போது...
விகடன்
`85 அடியில் நான் கேட்ட மூச்சு சத்தம்...!' - சுர்ஜித் நினைவால் கலங்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்

ஆனால், அதிலிருந்து ஒன்றையும் நாம் கற்றுக்கொள்ளவில்லை. முறையான திட்டமிடல், தவறான அறிவுரைகள், நிரூபிக்கப்படாத மீட்பு முறை எனக் குழப்பச் சிக்கலில் அரசு இயந்திரம் சுஜித் விஷயத்தில் சிக்கித் தவித்தது. சுஜித் அம்மாவே மீட்புத் துணி தைத்துக் கொண்டிருந்தார். அதிகாரிகளே... அடுத்த சம்பவம் நடக்கக் கூடாது; அப்படி நேர்ந்தால் தையல் இயந்திரத்தையும் உங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

2014-ம் ஆண்டு மத்தியப் பிரதேசம் லிதோராவில் 14 மாத குழந்தை கிருஷ்ணா ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து இறந்தான். வெறும் 18 அடி ஆழத்தில் விழுந்த கிருஷ்ணாவை உயிருடன் மீட்க முடியாமல் போனதற்குக் காரணம் அந்தப் பகுதியில் இருந்த பாறைகள்தான். சுஜித்தை உடனடியாக மீட்க முடியாமல் போனதற்குக் காரணமும் பாறைகள்தான். அந்தப் பகுதியின் நில அமைப்பியல் என்ன என்பது போர்வெல் போடுகிறவனுக்கூட தெரியும்.

சுஜித்துக்கு அஞ்சலி...
சுஜித்துக்கு அஞ்சலி...
விகடன்

நில அமைப்பியல் நிபுணரிடம் ஆலோசனைப் பெற்று, முன்கூட்டியே ரிக் இயந்திரத்தைக் கொண்டு வந்திருக்க முடியாதா? கடந்தகால படிப்பினைகளை அதிகார வர்க்கம் அலசிப் பார்க்கவில்லை. சம்பவம் முடிந்ததோடு சரி. அடுத்த வேலையைப் பார்ப்போம் என்கிற அலட்சியம் அதிகாரிகளிடம் இருக்கிறது. அடுத்த ஒரு சம்பவம் நடக்கும்போது முழிக்க ஆரம்பிப்பார்கள். ஆழ்துளைக் குழாயை மூடாமல் போன அலட்சியத்தைவிடப் பாடம் கற்றுக்கொள்ளாத அதிகாரிகளின் அலட்சியம் பெரிய ஆபத்து.

கடந்த 17 ஆண்டுகளில் நடந்த ஆழ்துளைக் கிணறு மரண சம்பவங்களில் உயிரோடு மீட்கப்பட்டது இரண்டு குழந்தைகள் மட்டும்தான். அதுவும் சுமார் 20 அடி ஆழத்துக்குள் விழுந்த குழந்தைகள் அவை. முதல் முறையாகத் தமிழகத்தில் ரோபோ மூலம் குழந்தை மீட்கப்பட்டது திருநெல்வேலியில்தான். 2014-ம் ஆண்டு சங்கரன்கோவில் அருகே குத்தாலபேரியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது ஹர்ஷன் உயிரோடு மீட்கப்பட்டான்.

மணிகண்டன்
மணிகண்டன்
குழந்தை சுர்ஜித் உடல் நல்லடக்கம்! - கண்ணீர்மல்க விடைகொடுத்த மக்கள்

``சங்கரன்கோவில் சம்பவத்தில், காலை 10 மணிக்குத் தகவல் கிடைத்ததும் மதுரையிலிருந்து கிளம்பி மதியம் 1 மணிக்கு சங்கரன்கோவில் வந்துவிட்டோம். 20 அடி ஆழத்தில் சிக்கியிருந்த ஹர்ஷனை மீட்க முடிந்ததற்கு இரண்டு முக்கியக் காரணங்கள்... ஒன்று, தாமதமின்றி சென்று சேர்ந்தது. இன்னொன்று குழிக்குள் மண் மூடவில்லை. ஆனால், திருவண்ணாமலையில் விழுந்த குழந்தையை மீட்க நாங்கள் செல்வதற்குள் குழந்தை மீது மண் மூடிவிட்டது'' என்று அன்றைக்குச் சொன்னார் ரோபோ உருவாக்கிய மணிகண்டன்.

கர்நாடகா பிஜாப்பூர் மாவட்டம், நாகத்தானாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நான்கு வயது அக்ஷதாவின் மரணம் கொடூரமானது. நாய் ஒன்று துரத்தப் பயந்து ஓடியபோது, திறந்திருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்டார். 50 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு சடலமாகத்தான் மீட்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் இன்னொரு கொடூரமும் அரங்கேறியது. ரோபோ உதவியுடன் அக்ஷதாவை மீட்க மணிகண்டனை வரவழைத்திருந்தார்கள். ரோபோவின் கரங்களை வைத்து குழந்தையைக் கவ்விப் பிடிக்க முயன்றார் மணிகண்டன். ஆனால், ரோபோவின் கரங்களில் மணல் கவ்வப்பட்டது. காரணம் அக்ஷதா விழுந்த உடனேயே ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி முண்டியடித்த கூட்டத்தால் குழந்தை மீது மணல் விழுந்தது.

மீட்பு பணியும் சுஜித்  தாயும்
மீட்பு பணியும் சுஜித் தாயும்
விகடன்

இப்படி வேடிக்கை பார்க்கவும் ஆர்வத்திலும் கூடும் பொதுமக்களால் ஆழ்துளைக்குள் விழும் குழந்தைக்கு அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை அக்ஷதா உலகுக்கு உணர்த்திவிட்டுப் போனாள். ஆனாலும் நாம் பாடம் கற்கவில்லை. சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தபோது பதற்றத்தில் அவனை மீட்பதற்காக ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு பக்கத்தில் குழி தோண்டியிருக்கிறார்கள். ஜே.சி.பி இயந்திரம் அதிர்வை உண்டாக்கக் கூடியது. அதன் அதிர்வால் சுஜித் மீது மண் விழுந்ததோடு, மணல் தளர்ந்து 28 அடியிலிருந்து படிப்படியாக 88 அடிக்குப் போய்விட்டான் சுஜித். நிறைய முயற்சிகள் எடுத்தோம். ஆனால், சரியான நேரத்தில் சரியான முயற்சியை எடுக்கத் தவறிவிட்டோம்.

சுஜித்தை மீட்பதற்காக ரிக் இயந்திரம் குழி தோண்டிக் கொண்டிருந்தபோது எவ்வளவு ஆழம் தோண்டப்பட்டிருக்கிறது என்பதைக் குழிக்குள் ஒருவர் இஞ்ச் டேப் போட்டு அளந்து கொண்டிருந்த காட்சி டிவி-யில் ஓடிக்கொண்டிருந்தது. இஞ்ச் டேப் இல்லாமல் அளப்பதற்கு லேட்டஸ்டாக லேசர் மெசர் டேப் மார்க்கெட்டில் 700 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இப்படி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தெரியாத அளவுக்குப் பல்லிளிக்கிறது அரசின் மீட்புக்குழு.

சுஜித் உடல்
சுஜித் உடல்
ஆழ்துளைக் கிணறு விபத்துகள்... பஞ்சாப் செய்ததும், தமிழகம் செய்ய வேண்டியதும்!

ரிக் இயந்திரம் மூலம் பல மணி நேரம் தோண்டத் தொடங்கி அது முடிவடையாத நிலையில்தான் ``துர்நாற்றம் வீசுகிறது'' என சொன்னது மீட்புக் குழு. கடைசியில் சுஜித் விழுந்த ஆழ்துளைக் கிணறு வழியாகவேதான் சுஜித் உடலை மீட்டிருக்கிறார்கள். ஆழ்துளைக் கிணற்றிலிருந்து ஏர் லாக் மூலம் பிடித்திருந்த குழந்தையை மேலே தூக்கியிருக்கிறார்கள். அப்படியென்றால் ரிக் இயந்திரம் மூலம் நடந்த நடவடிக்கைகள் அத்தனையும் கண்துடைப்பா? அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு நடந்த நாடகத்தைப் போலவே இருந்தன அந்தக் காட்சிகள். அதுவரையில் வெளிப்படையாக நடந்த மீட்பு நடவடிக்கைகள் திரைமறைவுக்குப் போய்விட்டன. ரிக் குழியையும் ஆழ்துளைக் கிணற்றையும் மறைத்து பாலீதின் கவரால் மறைத்துவிட்டு சுஜித் உடலை எடுத்திருக்கிறார்கள். அதற்குப் பின் மறைந்துள்ள, மறைக்கப்பட்டுள்ள பல கேள்விகளுக்கு விடை தெரிந்தவர்கள் மிகச் சிலரே.

வைகை நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மாகோல் விடுவதும்; ``எடப்பாடி முதல்வராக இருப்பதால்தான் அதிக மழை பொழிகிறது'' என்பதும் ``மக்கள் அதிகமாகச் சோப்பு போட்டுக் குளிப்பதால் நொய்யல் ஆற்றில் அதிகமாக நுரை தளும்புகிறது'' எனச் சொல்வதும் ``வீட்டு வாசலில் சாணம் தெளியுங்கள், டெங்கு கொசு வரவே வராது'' என முழங்குவதும் ``திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது'' என்கிற அறிவியல் விஞ்ஞானிகள் நிரம்பிய ஆட்சி சுஜித்தைக் காப்பாற்றவில்லை.

தெர்மாகோலுடன் செல்லூர் ராஜூ
தெர்மாகோலுடன் செல்லூர் ராஜூ
விகடன்

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் உள்ள ஹர்சிங்புரா என்னும் கிராமத்தில் ஐந்து வயதுச் சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்துவிட்டதாக செய்தி நம் மனதை கனக்கச் செய்கிறது.

`சுஜித்தை மீட்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டவில்லையா?' என்ற கேள்வியோடு பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ ஏ எஸ் அவர்களைத் தொடர்பு கொண்டோம்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

``சமூக வலைதளங்களில், சுஜித் விவகாரம் தொடர்பான பொய்யான செய்திகள் பரவி, உண்மையான பிரச்னையைத் திசைதிருப்பி வருகின்றன. ஒரு குழந்தையின் உயிரைக் காக்க, ஏறத்தாழ 600 பேர் இணைந்து பணியாற்றியுள்ளோம். மாவட்ட கலெக்டருடன் பல்வேறு உயரதிகாரிகள், ஒரே குழுவாகச் செயல்பட்டுள்ளோம். சுஜித் விவகாரம் தொடர்பான வதந்திகள் குறித்து ஏற்கனவே பதிலளித்துள்ளேன். எனினும் புதிய வதந்திகளுக்குப் பதில் தர முடியாது.

மாநில அளவிலான அதிகாரியான நான் பெரிய இயந்திரங்களை ஏற்பாடு செய்வதில் மும்முரமாக இருந்தேன். ஆழ்துளைக் குழாய் வெறும் நான்கரை இன்ச் அளவில் இருந்ததாலும், பாறைகள் அதிகமாக இருந்ததாலும் செயல்படுவது கடினமாக இருந்தது. என்.எல்.சி, ஓ.என்.ஜி.சி, எல்&டி உள்ளிட்ட நிறுவனங்களின் நில அமைப்பியல் வல்லுநர்கள் எங்களுடன் இருந்தனர்.

இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்க, அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் துரிதமாக, மக்கள் உதவியோடு பணிகளைச் செய்துவருகிறோம். தற்போது விபத்துகளைத் தடுக்க, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” என்று நம்மிடம் தெரிவித்தார் அவர்.

ஆழ்துளை கிணறு
ஆழ்துளை கிணறு

அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் மட்டும் நோக்கி நம் விரல்களை நீட்டாமல், நம் பொறுப்பையும் உணர்ந்து செயல்படவேண்டியது, நம் கடமை மட்டுமல்ல... அவசியமும் கூட!

அடுத்த கட்டுரைக்கு