Published:Updated:

`ராணுவ வீரர்கள், மருத்துவப் பணியாளர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள்!'- அகவிலைப்படி நிறுத்தம் சரியா?

ராணுவ வீரர்கள்
ராணுவ வீரர்கள்

ராணுவ வீரர்கள் உட்பட மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய, மாநில அரசுகள் நிறுத்தியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேசமுடக்கம் என்ற உத்தியை இந்திய அரசு கையாண்டுவருகிது. இதனால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 18 மாதங்களுக்கு நிறுத்திவைப்பது, ஈட்டிய விடுப்புக்கான ஊதியத்தை ஓராண்டுக்கு நிறுத்துவது என்ற முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையைப் பின்பற்றி, தமிழ்நாடு உட்பட பல மாநில அரசுகளும் இதே நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இதனால் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் குமுற ஆரம்பித்துள்ளார்கள்.

துரைப்பாண்டியன்
துரைப்பாண்டியன்

இது குறித்து மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் எம்.துரைப்பாண்டியனிடம் பேசினோம். ``அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப் படி எனப்படும் அகவிலைப் படி உயர்த்தப்படுவது வழக்கம். உதாரணமாக, ஜனவரியிலிருந்து ஜூன் மாதம் வரை விலைவாசி உயர்வுக்கேற்ப அகவிலைப் படி உயரும். அதேபோல, ஜூலை மாதத்திலிருந்து டிசம்பர் வரை உயரும் விலைவாசியைப் பொறுத்து அகவிலைப்படி உயர்த்தப்படும்.

அதன்படி கடந்த ஜனவரி 1-ம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய அகவிலைப் படி குறித்து மத்திய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுவிட்டது. இப்போது, கொரோனா பிரச்னையைப் பயன்படுத்தி மத்திய அரசு அதை நிறுத்தியுள்ளது. மொத்தம் 18 மாதங்களுக்கு அகவிலைப் படி நிறுத்தப்படுகிறது. சராசரியாக நான்கு சதவிகிதம் அகவிலைப்படி உயர்கிறது என்றால், 18 மாதங்களுக்கு சுமார் 12 சதவிகிதம் இழப்பு ஏற்படும். இதனால் ஒட்டுமொத்தமாக மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ.36,000 கோடி இழப்பு ஏற்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்கள்

கொரோனா பிரச்னையால் பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கியிருக்கும்போது, நாங்கள் உதவுவதற்கு தயாராக இருக்கிறோம். அதனால்தான் நாங்களாகவே ஒருநாள் ஊதியத்தைத் தர முன்வந்தோம். அப்படியிருக்கும்போது, எங்களுக்கான அகவிலைப் படி உயர்வையும் ஈட்டிய விடுப்புக்கான ஊதியத்தையும் மத்திய அரசு நிறுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் சுமார் 40 லட்சம் பேரும் மத்திய அரசுப் பணிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற சுமார் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்படுவார்கள்.

ராணுவத்தினரை பா.ஜ.க ஆட்சியாளர்கள் பெருமையாகப் பேசுவார்கள். ஆனால், அந்த ராணுவத்தினரும் அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படும் அளவுக்கு ஒரு முடிவை இப்போது மத்திய அரசு எடுத்துள்ளது. ராணுவம், விமானப்படை, கப்பற்படை என முப்படைகளிலும் 14 லட்சம் பேர், இந்தோ திபேத்தியன் படை உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவுகளில் ஒன்றரை லட்சம் பேர் எனப் நாட்டைப் பாதுகாக்கும் பணியில் சுமார் 20 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். மத்திய அரசுப் பணிகளிலிருந்து ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெற்றுவரும் 65 லட்சம் பேரில் 26 லட்சம் பேர் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். அவர்களில், கணவர்களை இழந்த பெண்கள், மகன்களை இழந்த பெண்கள் பலர் உள்ளனர். அவர்கள் அத்தனை பேரும் அகவிலைப்படி உயர்வு ரத்தால் பாதிக்கப்படுவார்கள். தங்கள் உயிரைப் பணயம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள்.

ராணுவ வீரர்கள்
ராணுவ வீரர்கள்

இதில் இன்னுமொரு கொடுமை என்னவென்றால், இதற்கு முன்பாக எந்த ஓர் அரசும் பின்தேதியிட்டு இதுபோன்ற நடவடிக்கையை எடுத்ததே இல்லை. 2021-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கான அகவிலைப்படியை இப்போதே பிடித்துவிட்டார்கள். பொருளாதார நெருக்கடி இருக்கிறது, அரசிடம் பணம் இல்லை என்று மத்திய அரசு காரணம் சொல்கிறது. அப்படியென்றால், அதற்கு மிகச் சிறந்த தீர்வு ஒன்று இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் உட்பட பல லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வாரிவழங்கியது. இப்போது அவர்களிடமிருந்து வசூல் செய்தால், தற்போதைய பொருளாதார நெருக்கடியை எளிதாகச் சரிசெய்துவிடலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் சொல்லிவருகிறார்கள். ஆனால், அந்த யோசனையைக் காதில் வாங்காத ஆட்சியாளர்கள் எங்கள் தலையில் கைவைக்கிறார்கள்.

இது மத்திய அரசு ஊழியர்களுடன் நிற்காமல், மாநில அரசு ஊழியர்களையும் பாதிக்கிறது. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வைப் பின்பற்றுகின்றன. எனவே, மத்திய அரசு அகவிலைப்படியை நிறுத்துவதால், மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தும் முடிவை எடுக்கின்றன. மாநிலங்களில் கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் இதில் பாதிக்கப்படுவார்கள்.

ராணுவ வீரர்கள்
ராணுவ வீரர்கள்

மத்திய அரசு ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.36,000 முதல் ரூ.3.5 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது. இதுபோக, பயணப்படி, வீட்டு வாடகை ஆகியவற்றுக்கான படிகள் உயர்வும் பாதிக்கப்படும். ஈட்டிய விடுப்புக்கான ஊதியமும் காலியாகும். இந்தக் கொரோனா நெருக்கடி காலத்தில், உலகத்தில் எந்த நாடும் அரசு ஊழியர்களின் நலன்களில் கைவைக்கவில்லை. இந்தியாவில் மட்டுமே இந்தக் கொடுமை.

மேலும், இதுபோன்ற முடிவுகளைக் கூட்டு ஆலோசனைக்குழுவில் கலந்தாலோசித்துதான் எடுக்க வேண்டும். 1960-ம் ஆண்டு முதல் அதுதான் நடைமுறையாக இருந்துவந்துள்ளது. மோடி ஆட்சியில்தான் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார்கள்” என்றார் எம்.துரைப்பாண்டியன்.

சீனிவாசன்
சீனிவாசன்

இது குறித்து பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளரான பேராசிரியர் சீனிவாசனிடம் பேசியபோது, ``கொரோனா வைரஸ் பிரச்னையால் எல்லாமே பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிக்கன நடவடிக்கை தேவைப்படுகிறது. நம் நாட்டின் வரிவருவாயில் மிகப்பெரும்பான்மையாக அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கும் ஓய்வூதியத்துக்கும்தான் போகிறது. ஏற்கெனவே அவர்கள் வாங்கிக்கொண்டிருக்கும் சம்பளத்தை நிறுத்தவில்லை. வரப்போகிற அகவிலைப் படியை 18 மாதங்களுக்கும் ஈட்டிய விடுப்புக்கான ஊதியத்தை ஓராண்டுக்கும் நிறுத்திவைக்கும் முடிவைத்தான் அரசு எடுத்துள்ளது. இதற்கு முன்பும் அகவிலைப் படி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, இது முதன்முறை அல்ல. எம்.பி-க்களின் சம்பளத்தில் 30 சதவிகிதம் பிடித்தம், தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தம் போன்ற நடவடிக்கைகள் எடுத்த பிறகே, அரசு ஊழியர்களிடம் அரசு இப்போது வந்துள்ளது.

இதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. ஜி.எஸ்.டி வசூலே இல்லை. அரசுக்கு வரி வந்தால்தான் அரசு இயங்க முடியும். எனவே, இதுபோன்ற சிக்கன நடவடிக்கை தேவைதான். எதிர்காலத்தில் இன்னும் இதுபோல நடவடிக்கைகள் வரும். கம்யூனிஸ்ட் அரசோ, தி.மு.க அரசோ, மம்தா பானர்ஜி அரசோ என யாராக இருந்தாலும் இதுபோன்ற சில முடிவுகளை கனத்த இதயத்துடன் எடுத்துத்தான் ஆக வேண்டும்” என்றார் சீனிவாசன்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

இந்தக் காலகட்டத்தில் மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிப்பது அவசியம். அதனால்தான், ஜன்தன் கணக்கில் மத்திய அரசு பணம் போடுகிறது. அதுபோலவே, மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படி உள்ளிட்ட பணம் கிடைக்கும்போது, நாட்டில் பணப்புழக்கத்தை அது அதிகரிக்கும். அல்லது, அவர்களிடம் பிடித்தம் செய்யப்படும் இந்தப் பணம், அடித்தட்டு மக்களுக்குப் போவது உறுதிசெய்யப்பட்டாலும், அந்த மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயப்பதாகவே அது இருக்கும். மாறாக, ரிசர்வ் வங்கியின் மூலதன இருப்பிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடியை எடுத்து, அதில் ரூ.1.45 லட்சம் கோடியை மிகப்பெரிய கார்ப்பரேட்களின் கையில் கொடுத்ததைப்போல, இதையும் கொடுத்துவிடக்கூடாது. எனவே, இந்தப் பணத்தை என்ன செய்யப்போகிறோம் என்பதையாவது மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு