Published:Updated:

``முதல் தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆன வருடம் இது ஆனால்...!'' #MayDay

உலகம் முழுவதும் 130 ஆண்டுகளுக்கு மேலாக கோடிக்கணக்கான தொழிலாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றுவரும் மே தின வரலாற்றில் இந்த ஆண்டு மிகப்பெரிய மாற்றங்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகம் முழுவதும் தொழிலாளர்கள் நேரம் காலமின்றி பல மணி நேரம் வேலை வாங்கப்பட்டு கசக்கிப்பிழியப்பட்டனர். அதற்கு எதிராக, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் 18-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. ரத்தம் தோய்ந்த வரலாறு கொண்ட அந்தப் போராட்டங்களின் விளைவாகத்தான் 8 மணி நேர வேலை என்ற உரிமை உலகத் தொழிலாளர்களுக்கு கிடைத்தது.

சிங்காரவேலர்
சிங்காரவேலர்

இந்தியாவில் முதன் முதலாக மே தினத்தைக் கொண்டாடியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். 1923-ம் ஆண்டு சென்னையில் அவர் மே தினத்தைக் கொண்டாடினார். விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் ஒரு கட்சி தொடங்கப்பட வேண்டும் என்று அப்போது சொன்ன சிங்காரவேலர், தொழிலாளர்களுக்கு சங்கம் வைக்கும் உரிமை, எட்டு மணி நேர வேலை, பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆறு மணி நேர வேலை, சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஆறு மணி நேர வேலை, தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு தீர்ப்பாயங்கள், குறைந்தபட்சம் ஊதியம் என்று அடிப்படையான கோரிக்கைகளை அன்றைய தினம் வெளியிட்டார்.

மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி... சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்ததினப் பகிர்வு!

சிங்காரவேலரால் இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு நூறு ஆண்டுகளைத் தொடப்போகிற நிலையிலும், இன்னும் அவற்றில் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பாடில்லை. ஏராளமானோர் உயிர்த் தியாகம் செய்து பெற்ற எட்டு மணி நேர வேலை என்ற உரிமை, இந்தியாவில் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. 8 மணி நேர வேலை என்பதை 12 மணி நேரமாக அதிகரிப்பதற்கு மத்திய பா.ஜ.க அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இத்தகைய சூழலில் இந்த ஆண்டு மே தினம் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக, உலகத் தொழிலாளர் தினமான மே 1-ம் தேதியன்று, நாடு முழுவதும் தொழிலாளர்கள் ஆங்காங்கே ஆயிரக்கணக்கில் திரண்டு பேரணி செல்வதும், பொதுக்கூட்டங்கள் நடத்துவதும் வழக்கம். ஆனால், தற்போது கொரோனா பிரச்னையால் நாடு முழுவதும் ஊரடங்கில் இருக்கும் சூழலில், தொழிலாளர்கள் ஒன்றுகூடுகிற வாய்ப்பு இல்லாத நிலையில் மே தினம் கொண்டாடப்படுகிறது. இது குறித்து இந்திய தொழிற்சங்க மைய (சி.ஐ.டி.யூ) அகில இந்திய துணைத் தலைவரான ஏ.கே.பத்மநாபனிடம் பேசினோம்.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்

``மே தினம் என்பது சர்வதேச ஒருமைப்பாட்டு தினமாக, உலகத் தொழிலாளர் தினமாக சர்வதேசமும் எழுச்சியுடன் கொண்டாடப்படும் மிக முக்கிய நிகழ்வு. 1886–ல் தொடங்கி இன்றுவரை ராணுவத்துடன், காவல்துறையினருடன் மோதி மே தினத்தைக் கொண்டாடும் அனுபவங்கள் பல நாடுகளில் உண்டு. தமிழ்நாட்டிலும் பல முறை மே தின நிகழ்ச்சியின்போது தொழிலாளர்கள் மீது தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு போன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றையெல்லாம் எதிர்கொண்டுதான் மே தின ஊர்வலங்களை நடத்தியிருக்கிறோம். இந்த மே தினத்தைப் பொறுத்தவரை, இப்படியொரு சூழல் உலகம் முழுவதும் உருவாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த ஆண்டுதான், இந்தியாவில் மே தினத்தை பெருமையுடன் கொண்டாடியிருக்க வேண்டும். ஏனென்றால், இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி ஆரம்பிக்கப்பட்டு, இந்த ஆண்டுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1920-ம் ஆண்டு ஏ.ஐ.டி.யூ.சி ஆரம்பிக்கப்பட்டது. அந்த அமைப்பிலிருந்து பிரிந்துவந்துதான் 50 ஆண்டுகளுக்கு முன்பு சி.ஐ.டி.யூ ஆரம்பிக்கப்பட்டது. எனவே, சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தது, தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியது என்ற வகையில் சி.ஐ.டி.யூ-வுக்கும் நூற்றாண்டுப் பாரம்பர்யம் உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து 130 ஆண்டுகளுக்கு முன்பாகத் தொழிலாளி வர்க்கம் போராடியது. 130 ஆண்டுகளுக்குப் பிறகு, எட்டு மணி நேரம் வேலை என்கிற அதே கோரிக்கைக்காகப் போராட வேண்டியிருக்கிறது. பா.ஜ.க ஆட்சியில், 12 மணி நேர வேலை என்று சட்டத்தைத் திருத்த ஆரம்பித்துவிட்டார்கள்” என்ற ஏ.கே.பத்மநாபனிடம், ``ஒரு காலத்தில் சென்னை, கோவை, மதுரை போன்ற பகுதிகளில் மிகுந்த எழுச்சியுடன் மே தின ஊர்வலங்கள் நடைபெறும். கடந்த பல ஆண்டுகளாக அந்த எழுச்சியைக் காண முடியவில்லையே?” என்று கேட்டோம். அதற்கு, ``கோயம்புத்தூர் பகுதியில் ஏராளமான பஞ்சாலைகள் இயங்கின. ஏராளமான இன்ஜினீயரிங் தொழிற்சாலைகள் இயங்கின. அந்தப் பஞ்சாலைகளில் பெரும்பாலானவை இன்றைக்கு இல்லை. இன்ஜினீயரிங் தொழிற்சாலைகள் பிரிந்து பிரிந்து கிராமங்களுக்குப் போய்விட்டன. பஞ்சாலைகள் அதிகமாக இருந்து, தொழிலாளர்களின் போராட்டங்கள் அதிகமாக நடைபெற்றபோது, அந்த நிலைமையே வேறு. காலப்போக்கில் சில மாற்றங்கள் வந்துள்ளன. இந்தக் காலகட்டம் என்பது மீண்டும் தொழிலாளர்களின் பிரச்னைகள், சமூகப் பிரச்னைகள் ஆகியவற்றை முன்னெடுத்துக் கொண்டு செல்ல வேண்டிய காலகட்டம் என்பதை நினைவுபடுத்துவதாக இந்த ஆண்டின் மே தினம் உள்ளது.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்

எம்.ஆர்.எப் தொழிலாளர்கள் போராட்டம் 114 நாள்கள் நடைபெற்றது. சிம்சனில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. எண்ணூர் ஈ.ஐ.டி பாரியிலிருந்து ஆரம்பித்து, பெருங்களத்தூரில் ஸ்டாண்டு மோட்டர்ஸ் வரை பெரும் போராட்டங்கள் நடைபெறும். விம்கோ போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். 1980-களில் தொழிலாளர்களின் போராட்டங்களால் சென்னை கொந்தளிப்பாக இருக்கும். இன்றைக்கு அவற்றில் பல தொழிற்சாலைகள் இல்லை. அன்றைக்கு, இருந்த உரிமைகளைவிட மேலும் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. உலக மயமாதல் என்ற தாக்குதலுக்குப் பிறகு, இருக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தைத்தான் நடத்த வேண்டியிருக்கிறது” என்றார் ஏ.கே.பத்மநாபன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிற்சங்கமான தொ.மு.ச பேரவையின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சண்முகத்திடம் பேசினோம். ``ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக, பெரும்பாலும் உடல் உழைப்பைக் கொண்ட தொழிலாளர்கள் இருந்தனர். வாழ்வாதாரத்துக்காகவும், உரிமைகளுக்காகவும் எப்போதும் போராடிக்கூடிய சூழலில் அவர்கள் இருந்தனர். உலகமயமாக்கலுக்குப் பிறகு, எல்லாவற்றுக்கும் எந்திரங்கள் வந்துவிட்டன. அதனால், தொழிற்சாலைகளின் போக்கு மாறியது. உடல் உழைப்பைச் சார்ந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தொழில்நுட்பங்களைக் கையாளக்கூடிய தொழிலாளர்கள் வேலைக்கு வைக்கப்பட்டனர். அத்தகைய சூழலில், தொழிற்சங்கங்களை நசுக்கும் வேலை தொடங்கியது.

குழந்தை தொழிலாளர்கள்
குழந்தை தொழிலாளர்கள்

பெரும்பாலான தொழிலாளர்கள் முறைசாரா தொழில்களில் உள்ளனர். அவர்கள் கடுமையாக சுரண்டப்படுகிறார்கள். சமூகப் பாதுகாப்பு ஏதுமற்றவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக வெளிமாநிலங்களிலிருந்து வரும் புலம்பெயர்த் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இத்தகைய சூழலில், போராடிப் பெற்ற உரிமைகளை ஆட்சியாளர்கள் அபகரிக்கிறார்கள். எட்டு மணி நேர வேலை என்பதை 12 மணி நேரமாக மாற்றுகிறார்கள். இது, தொழிலாளர்களின் மீதான மிகப்பெரிய தாக்குதல். இதற்கு எதிராகப் பெரும் போராட்டங்களைத் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது” என்றார்.

ஐ.என்.டி.யூ.சி சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவரான கதிர்வேலிடம் பேசினோம். "தனியார் மயம் அதிகரித்த பிறகு, நிரந்தரத் தொழிலாளர்களைவிட தற்காலிகத் தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் தினக்கூலித் தொழிலாளர்களும்தான் அதிகளவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தவித சமூகப் பாதுகாப்பும் கிடையாது. அனைத்தும் எந்திரமயம் என்று ஆகிவிட்டதால், பணிகள் எளிதாகியுள்ளன. எந்த வேலையையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால், தொழிற்சங்கத்துக்கு வருவதற்கு அத்தகைய தொழிலாளர்கள் விரும்புவதில்லை. தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்னை என்று நீதிமன்றத்தை நாடினால், அதற்கு தீர்ப்பு வர 30 ஆண்டுகள், 35 ஆண்டுகள் ஆகின்றன. இதனால், இன்றைக்கு தொழிலாளர்களும் தொழிற்சங்கத்தினரும் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறார்கள்” என்றார்.

உழைப்பின் சின்னம்
உழைப்பின் சின்னம்
̀`தொழிலாளர்களின் வரலாற்றில் புதிய அத்தியாயம்!' - மே தின சிறப்புப் பகிர்வு

எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், எத்தனையோ சவால்களைச் சந்தித்துவருகிற போதிலும் தங்கள் உரிமைகளுக்காகத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடிவருகிறார்கள். ஊரடங்கு சூழலிலும், புலம்பெயர்த் தொழிலாளர்களின் பிரச்னைகள் உள்ளிட்ட தங்களின் உரிமைகளுக்காக டிஜிட்டல் தளத்தில் தங்கள் போராட்டங்களை அவர்கள் நடத்திவருகிறார்கள். அந்த வகையில், மே தினத்தன்று முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தொழிற்சங்கத் தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். தொழிலாளர்கள் தங்களின் வீடுகளின் முன்பாக நின்றுகொண்டு தங்களின் கோரிக்கைள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து முகநூலில் பதிவிடுகிறார்கள். கடல் அலைகள் ஒருபோதும் ஓயாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு