Published:Updated:

மக்களிடம் மது வாங்க மட்டும் எங்கிருந்து வருகிறது கோடிகள்? - கணக்கும் அரசியலும் - ஓர் அலசல்!

மது
News
மது

'மத்திய மாநில அரசுகள் உரிய நிவாரண நிதி எதுவும் தரவே இல்லை' என்ற புலம்பல்களுக்கு மத்தியில், இரண்டு நாள் டாஸ்மாக் கடைகள் திறந்துபோது, மது வாங்க 300 கோடியைக் கொட்ட முடிந்தது எப்படி?

''ஆந்திரா, கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ளவர்கள் அங்குள்ள மதுக்கடைகளுக்குச் செல்வதால், மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த சிரமங்கள் உள்ளன'' என்கிற காரணத்தைச் சொல்லி, கடந்த ஏழாம் தேதி முதல் மதுபானக் கடைகளைத் திறக்கத் திட்டமிட்டது தமிழக அரசு.

கொரோனா ஊரடங்கின் காரணமாக நாற்பது நாள்கள் மூடிக்கிடந்த மதுபானக் கடைகளைத் திறப்பது குறித்த உத்தரவை, கடந்த நான்காம் தேதி வெளியிட்டது தமிழக அரசு. அந்த அறிவிப்பை எதிர்த்து, உடனடியாக பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அது கடந்த ஆறாம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும்; ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டுமே வழங்க வேண்டும்; மூன்று நாள்களுக்கு ஒரு முறைதான் ஒருவருக்கு மது வழங்க வேண்டும்; அதற்கு மதுபானம் வாங்குபவரின் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர். நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதைத் தொடர்ந்து, கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரு நாள்கள் கடைகள் திறக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. இரண்டு நாள்கள் மட்டும் 300 கோடிக்கும் மேல் மது விற்பனை நடைபெற்றது. ஆனால், 'நீதிமன்ற உத்தரவு முறையாகப் பின்பற்றப்படவில்லை, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்' எனச் சிலர் மீண்டும் நீதிமன்றம் செல்ல மதுக்கடைகள் திறக்க அனுமதி ரத்து செய்யப்பட்டது, ஆன்லைனில் வேண்டுமானால் விற்பனை செய்துகொள்ளலாம் எனவும் அனுமதி வழங்கப்பட்டது. சென்னை உயர்நிதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது தமிழக அரசு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இது ஒருபுறமிருக்க, ''ஊரடங்கின் காரணமாக கடந்த நாற்பது நாள்களாகப் பல்வேறு தொழில்கள், வேலைகள் முடங்கிப் போய் சாப்பாட்டுக்கும் அன்றாடச் செலவுகளுக்கே நிதி போதாமல், மக்கள் சிரமப்படும் வேளையில் மதுக்குடிக்க மட்டும் எப்படி வந்தது பணம்...'மத்திய மாநில அரசுகள் உரிய நிவாரண நிதி எதுவும் தரவே இல்லை' என்ற புலம்பல்களுக்கு மத்தியில், இரண்டு நாள் டாஸ்மாக் கடைகள் திறந்துபோது, மது வாங்க 300 கோடியைக் கொட்ட முடிந்தது எப்படி? - இப்படி எழும் கேள்விகளுக்கு விடை தேடுவதே இந்தக் கட்டுரை.

பால்பர்ணபாஸ்
பால்பர்ணபாஸ்

''மது வாங்க மட்டும் எங்கிருந்து வருகிறது பணம்?'' - பால்பர்ணபாஸ், நுகர்வோர் அமைப்புத் தலைவர்.

''குடியைப் பொறுத்தவரை, வீட்டில் சாப்பாட்டுக்கு வைத்திருக்கும் பணத்தைப் பறித்துக்கொண்டு வந்து குடிப்பார்கள். வீட்டில் உள்ள பொருள்களை அடமானம் வைத்துக் குடிப்பது, வட்டிக்குப் பணம் வாங்கிக் குடிப்பது என குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் குடிப்பதற்காக எந்தளவுக்கு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுப்பார்கள். ஒரு மாத குடும்பச் செலவுக்காக வைத்திருக்கும் பணத்தை ஒரே நாளில் குடித்து குடும்பத்தைப் பசியில் காய விடுவார்கள். இவ்வளவு நாள்கள் மதுக்கடைகளை அடைத்துப் போட்டிருந்த அரசு இரண்டு நாள்கள் திறந்தது மன்னிக்க முடியாத குற்றம். அரசாங்கம் கொடுத்த நிவாரணத்தொகையை, மதுபானக் கடைகளைத் திறந்து அரசே பறித்துவிட்டது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது,''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''மதுவை எதிர்ப்பதற்கான காரணமே இதுதான்'' - வழக்கறிஞர் பாலு!

''மக்கள் வறுமையில் இருக்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை. ஆனாலும் பணம் கொடுத்துக் குடிக்கிறார்கள் என்றால் குடி அந்தளவுக்கு, அவர்களின் கண்ணை மறைத்து விடுகிறது என்றே பொருள். குடும்ப நலன், சமூக நலன் என்பதையெல்லாம் குடி காணாமல் ஆக்கிவிடும். மதுக்கடைகளை மூடவேண்டும் என்று சொல்வதற்கான முழுமுதல் காரணமே இதுதான். மதுபானம் வாங்கும் வாய்ப்பை எட்டாத தொலைவில் வைக்கவேண்டும். பல நேரக் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும். அப்போதுதான் அதன் பயன்பாட்டைத் தடுக்கமுடியும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது. அரசு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம்.''

பாலு
பாலு

''மது அடிமைகள் என்பவர்கள் இவர்கள்தான்'' - மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்!

''இவ்வளவு நெருக்கடியிலும், மது வாங்கியவர்கள் ஒன்று, பொருளாதார ரீதியாக நல்ல வளமானவர்கள். இந்தக் கோரோனா ஊரடங்கு போன்றவற்றால் பெரிய பாதிப்படையாதவர்களாக இருக்கலாம். அடுத்ததாக, பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டாலும், குடியை விட முடியாத குடி நோயாளிகள் வாங்கியிருக்கலாம். இதில் இரண்டாவது வகையினர் பற்றித்தான் நாம் அதிகமாக கவலை கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது, குடும்பத்தின் தேவைகளை கருத்தில் கொள்ளாமல், குடும்பம் எந்தநிலையில் இருந்தாலும், மதுவை விட முடியாத நிலை. அதுபோல உடல் ரீதியாக ஏற்கெனவே பாதிப்புகள் இருந்தாலும் அதைக் கருத்தில் கொள்ளாமல் மதுக்குடிக்க நினைப்பவர்கள், ஆகியவர்களைத்தான் மது நோயாளிகள் (அடிமைகள்) என்று மனநல ரீதியாக வரையறுக்கிறோம். இவர்களுக்குக் கண்டிப்பாக கவுன்சிலிங் தேவை. மது மட்டும்தான் மகிழ்ச்சி என்று வாழும் அவர்களின் மனநிலையை மாற்ற வேண்டும். அதற்கு பல மறுவாழ்வு மையங்கள் உருவாக்கப்படவேண்டும்.''

'' மத்திய அரசு நிதி வழங்காததால்தான் கடைகளைத் திறந்தோம்'' - கோவை செல்வராஜ்!

''தமிழக மக்கள் 1972 இறுதிவரை மது அருந்தாமல்தான் வாழ்ந்து வந்தார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதிதான், மதுக்கடைகளைத் திறந்தார். அதிலிருந்து, இன்றுவரை ஐம்பதாண்டுக் காலம் அது தொடர்கிறது. அதன் மூலம் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி, நோயாளிகளான பலர் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களால் திடீரென மதுவை நிறுத்த முடியாது. அப்படி நிறுத்தினால் உடல் ரீதியாகப் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்கும் 60 லட்சம் பேரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டுதான் மதுக்கடைகள் திறக்கப்பட்டன'' என்றவரிடம்,

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

''இந்த நாற்பது நாள்களில் ஒருவர் கூட மது இல்லாததால் உடல் ரீதியாகப் பாதிக்கப்படவில்லை. அதேபோல அரசு சொன்ன கள்ளச்சாராயமும் பெருகவில்லை, பணத்தை நோக்கமாக வைத்தே மதுக்கடைகள் நடத்தப்படுகின்றன எனத் தமிழக அரசின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறதே” எனக் கேட்டேன்.

''கண்டிப்பாக பொருளாதாரமும் ஒரு காரணம்தான். எந்தத் துறையிலும் இன்று புதிதாக வரி நியமிக்க முடியாது. எல்லா வரிகளும் ஜி.எஸ்.டியில் கொண்டு வரப்பட்டுவிட்டன. மாநில அரசுகளுக்கென தனியாக ஒரு வரியை இனி நியமித்து வசூலிக்க முடியாது. அதேபோல, தமிழகத்துக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி பணமும் இன்னும் வரவில்லை. அதே நேரத்தில் மக்களுக்குப் பல அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டியிருக்கிறது. அரசிடம் மக்களின் எதிர்பார்ப்பு இந்த நேரத்தில் அதிகமாக இருக்கிறது. அதை நிறைவேற்றவே, மதுக்கடைகளைத் திறக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்'' என்கிறார் கோவை செல்வராஜ்.

இனிவரும் காலங்களில், அரசு ஒரு நிபந்தனையைக் கொண்டு வரலாம். ரேஷன் கார்டுடன் வருபவர்களுக்கு மட்டுமே மது என்று அறிவிக்கவேண்டும். அதில் ஒரு சீல் வைத்துவிடவேண்டும். அந்த சீல் இருக்கும் ரேஷன் கார்டுகளுக்கு அரசின் இலவசத் திட்டங்கள் எதுவும் கிடையாது என்று அறிவிக்க வேண்டும். காலப்போக்கில் குடிப்பழக்கம் குறையும். பாதிக்கப்பட்டவர்களுக்காகத்தான் இலவசத் திட்டங்களே தவிர, குடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு அல்ல. ஆனால், இலவசங்கள் கொடுப்பது என்பது மக்கள் நலன் என்பதைத் தாண்டி, ஓட்டுக்காக என மாறிவிட்டதே அனைவருக்கும் வழங்குவதற்காகக் காரணம்.
வழக்கறிஞர் பாலு

''தமிழகத்தில் குடிநோயாளிகள் பெருகியதற்குக் கருணாநிதிதான் காரணமா?'' - கே.எஸ்.ராதாகிருஷ்ணன்!

''யார் குடிநோயாளிகளாக மாறியிருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் மருத்துவரிடம் அனுமதியோடு தேவையான அளவு மதுவை வழங்கலாமே... அடுத்ததாக கலைஞர் திறந்த மதுக்கடைகளை அவரே மூடிவிட்டாரே. பிறகு மீண்டும் திறந்தது எம்.ஜி.ஆர் தானே? இதுவா இப்போது விவாதம்? பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பு மது வேண்டாம், மதுக்கடைகள் வேண்டாம் என்பதே. அதை நிறைவேற்றுவதுதான், ஒரு நல்ல அரசின் செயல்பாடாக இருக்கமுடியுமே தவிர நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்குச் செல்வது அல்ல.''

கே.எஸ்.ராதா
கிருஷ்ணன்
கே.எஸ்.ராதா கிருஷ்ணன்

''மத்திய அரசு நிதி வழங்காததுதான் காரணமா?'' - வானதி சீனிவாசன்!

''இந்த நேரத்தில் மதுக்கடைகளைத் திறந்ததை தமிழக பா.ஜ.கவின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்ததால்தான் திறந்தோம் என்பது சரியல்ல. மது குறித்த விஷயங்கள் மாநில அரசின் கீழ் வருகிறது. மாநில அரசு வேண்டாம் என்றால் மத்திய அரசு அதில் தலையிட்டிருக்காது'' என்றவரிடம், 'மத்திய அரசு, நிதி வழங்காததுதான் காரணம்?' எனக் குற்றம் சாட்டப்படுவது குறித்துக் கேட்க,

''தேசியப் பேரிடர் ஆணையமும், நிதி ஆயோக்கும் தன்னாட்சி அதிகாரம் உடையன. அந்த அமைப்புகளில் நிலவும் நிதிப்பற்றாக்குறையின் காரணமாக, தமிழகம் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களுக்கும்தான் நிதி ஒதுக்கப்படுவதில் சிக்கல் இருக்கிறது. மாநில அரசுக்கு வருமானம் வரும் வழிகளில்தான் மத்திய அரசுக்கும் வருமானம் வரும். மாநில அரசுக்கு நிதி நெருக்கடி எழும்போது, மத்திய அரசுக்கும் நிதி நெருக்கடி உண்டாகும். ஆனாலும், தங்களால் முடிந்த பல வழிகளில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவி செய்துதான் வருகிறது."

தமிழகத்தின் பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையை மாநில அரசின் ஆவின் நிறுவனம் மற்றும் கூட்டுறவு பால் சங்கங்களின் வழியாகவும் தமிழக அரசே முழுமையாக ஏற்று நடத்தினால், ஆண்டுக்கு 40,000 கோடி வருமானம் கிடைக்கும். தரமான பால் மக்களுக்குக் கிடைக்கும் விதமாகவும், உழவர்களின் கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இருப்பதோடு, அரசு எதிர்பார்க்கும் வருமானத்தை விட இரட்டிப்பு லாபம் அடையலாம்.
லட்சுமி அம்மாள், மகளிர் ஆயம்.

தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், "ஜி.எஸ்.டியில், தமிழகத்துக்கு (2017-18) நிலுவையில் இருக்கும் தொகை 12000 கோடியல்ல, 4073 கோடி மட்டும்தான். அதுவும் தமிழகத்துக்கு மட்டும் நிறுத்திவைக்கப்படவில்லை. அதோடு, மாநில வருவாய்த்துறை அமைச்சர்கள் ஜி.எஸ்.டி கவுன்சிலைக் கூட்ட மத்திய அரசிடம் கோரிக்கை முன் வைக்கலாம்'' என்றார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

''தமிழக அரசு சொல்லும் குற்றச்சாட்டு சரியல்ல'' - பொருளாதார நிபுணர், ஆனந்த் சீனிவாசன்!

''1936-73 வரை டாஸ்மாக் வருமானம் இல்லை. அப்போது, காமராஜர் எந்தப் பொருளாதாரத்தை வைத்து பள்ளிகளை, அணைகளைக் கட்டினார். அப்போது இருந்த, விற்பனை வரி, பத்திர வரி, பொழுதுபோக்கு வரி, பெட்ரோல் டீசல் வரி போன்றவை கடந்த நாற்பதாண்டுகளில் அதிகரிக்கத்தான் செய்திருக்கின்றன. அதனால், சரியாக நிர்வாகம் செய்யத் தெரியாதவர்கள் சொல்லும் காரணம்தான் இது.

மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய 3 லட்சம் கோடி நிலுவையில் இருக்கிறது. ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை பாக்கி இருக்கிறது. ஆனால் இவையெல்லாம், தமிழகத்துக்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் வழங்கப்படவில்லையே? தவிர, தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருக்கிறதே, அந்த வருமானம் எங்கே? 2011-ல் அ.தி.முக ஆட்சிக்கு வரும்போது ஒரு லட்சம் கோடி கடன், இப்போது நாலரை லட்சம் கோடி கடன் இருக்கிறது. போதிய நிர்வாகத் திறன் இவர்களுக்கு இல்லை என்பதே உண்மை.''

''மது விற்பனை மூலம் வருமானம் வருகிறது என்கிறார்கள், மது குடித்து ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டால் அவருக்கு மருத்துவச் செலவு செய்யவேண்டியது அரசுதானே, ஒருவேளை ஒருவர் குடியால் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்தை மறைமுகமாக அரசுதானே கவனிக்கவேண்டும். அந்த செலவை எல்லாம் ஒப்பிடும்போது இந்த வருமானம் மிகக் குறைவுதான். ''
ஆனந்த் சீனிவாசன், பொருளாதார நிபுணர்.

மேற்கண்ட, அனைவரின் கருத்துகளிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. ஒன்று தமிழகத்தில், மதுவுக்கு அடிமையான குடிநோயாளிகள் பெருகிவிட்டனர். அதனால்தான், பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடும்போது கூட இவ்வளவு மது விற்பனை நடந்தேறியிருக்கிறது. அடுத்ததாக தமிழக அரசு இன்னும் வருமானத்துக்காக மதுவை மட்டுமே நம்பியிருப்பது.

கருணாநிதிதான் மதுவைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது, தி.மு.கவினர் பலர் மது ஆலைகள் நடத்திவருகிறார்கள் போன்ற காரணங்களைச் சொல்லி தமிழக அரசு மது விற்பனையைத் தொடர்வது ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 2016 தேர்தலில் ‘`படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டு வருவோம்’’ எனப் பிரசாரம் செய்தார் ஜெயலலிதா. ஆட்சிக்கு வந்ததும் 500 டாஸ்மாக் கடைகளை மூட, கடைகளின் நேரத்தை இரண்டு மணி நேரம் குறைக்க முதல் கையெழுத்தும் போட்டார்.

ஆனந்த் சீனிவாசன்
ஆனந்த் சீனிவாசன்

தொடர்ந்து, எடப்பாடி முதல்வராகப் பதவியேற்றதும் ஜெயலலிதா ஸ்டைலிலேயே 500 மதுபானக் கடைகளை மூட ஆணையிட்டு, கோப்பில் முதல் கையெழுத்திட்டார். ஆனால், ஜெயலலிதா உறுதியளித்த, ‘படிப்படியாக மதுவிலக்கு’ என்ற வாக்குறுதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றவில்லை.

அதேபோல, மது நோயாளிகளை மீட்பதற்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை, கடந்த மூன்று ஆண்டுகளில் தொடங்கியிருந்தாலே இன்று பெருவாரியான குடி நோயாளிகளை மீட்டிருக்கலாம். இப்படியான இக்கட்டான சூழலிலும் அவர்கள் மதுவைத் தேடிச் செல்வதைத் தடுத்திருக்கலாம். அதேபோல, அரசின் வருமானத்துக்குப் பொருளாதார நிபுணர்களும், பல மகளிர் அமைப்புகளும் பல்வேறு மாற்று வழிகளை முன்மொழியும் போதிலும் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாது நாங்கள் டாஸ்மாக் வருமானத்தில்தான் ஆட்சி நடத்துவோம் என விடாப்பிடியாக இருப்பது தமிழக மக்களை இன்னும் படுகுழிக்குத்தான் தள்ளும்... இனிமேலாவது சரியான முடிவுகளை எடுத்து ஒரு வரலாற்றுப் பேரழிவிலிருந்து தமிழக மக்களை மீட்குமா அரசு?

பொறுத்திருந்து பார்ப்போம்!