Published:Updated:

செய்தி சேகரிப்பு, பத்திரிகை விற்பனையின் அசாதாரணச் சூழல்: காஷ்மீர் விசிட் ரிப்போர்ட்!

காஷ்மீர்
காஷ்மீர்

``அரிய வகை நீலக்கற்கள் (sapphire) சுரங்கமே ஜம்முவில் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதை குறைந்த விலையில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு லீஸுக்கு விடுவதற்கான முன்னேற்பாடுதான் 370-வது பிரிவை நீக்கியது."

விகடன் செய்தி ஆசிரியர் பாலகிஷன், தலைமை போட்டோகிராபர் கார்த்திகேயனுடன் காஷ்மீரின் கள நிலவரத்தை அறிய நேரில் சென்றார். அதன் அனுபவக் குறிப்பில் இருந்து...

``காலையில் ஒரு மணி நேரம்... அதுவும், முக்கிய மார்க்கெட் பகுதியில் மட்டும் கிடைக்கும்'' என்றார்கள். அப்படி அலைந்து திரிந்து வாங்கிய பத்திரிகை, 'காஷ்மீர் டைம்ஸ்' ஆங்கிலப் பத்திரிகை. காஷ்மீரின் பிரபல நாளிதழ் இது. காஷ்மீர் விடுதலையை ஆதரிக்கும் கட்டுரைகளே அதில் பிரதானமாக இடம்பெறுகின்றன. உருது, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. அதில் இருந்த தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டேன். நம்மைச் சந்திக்க நேரம் ஒதுக்கிய அதன் ஆசிரியர் பிரபோத் ஜம்வால், ``இங்கே வரும் முன், ஸ்ரீநகர் பத்திரிகையாளர்கள் செய்தி அனுப்புவதற்கான மீடியா சென்டரைப் பார்வையிட்டு வாருங்கள்'' என்றார்.

காஷ்மீர்
காஷ்மீர்

இதற்கு முன்பு சன்வார் ஏரியாவில் இயங்கிவந்த மீடியா சென்டர், அன்றுதான் மாநில அரசின் செய்தித்துறை இயக்குநர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டிருந்தது. புகைப்படம் அனுப்புவதற்கு தனிக்கூட்டம், நியூஸ் அனுப்ப தனிக்கூட்டம் என நிரம்பி வழிந்தது. அங்கே பத்து கம்ப்யூட்டர்கள் இருந்ததுதான் ஒரே ஆறுதல். நீண்ட நேரமாகக் காத்திருந்த நிருபர்கள், தங்கள் நிலைமையை என்னிடம் சோகத்துடன் சொன்னார்கள். பிரஸ் காலனி இருக்கும் ஏரியாவுக்குச் சென்றேன். காஷ்மீரின் முக்கிய பத்திரிகை அலுவலகங்கள் அங்கேதான் இருக்கின்றன. திருவல்லிக்கேணி போல் குறுகலான தெரு அது. காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகை அலுவலகமும் அங்கேதான் இருக்கிறது. நமக்காகக் காத்திருந்த ஆசிரியர் பிரபோத் ஜம்வால், சூடான தேநீர் கொடுத்து உபசரித்தார்.

பத்திரிகை வாங்க அலைந்து திரிந்த விஷயத்தைச் சொன்னதும், ``பத்திரிகையை விற்பதற்கே இத்தனை சிக்கல் என்றால், அதைத் தயாரிப்பதற்கும் செய்தி சேகரிப்பதற்கும் நாங்கள் படும் சிரமங்களை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இத்தனை நாள்களாக, இந்த மாநிலத்தில் ஸ்ரீநகரைத் தவிர்த்து மற்ற ஊர்களில் உள்ள நிருபர்களிடம் போனில்கூட பேச முடியாத நிலை இருந்தது. பிறகு செய்தி சேகரிப்பது எப்படி? இப்போதுதான் அதற்கான தடையே நீங்கியிருக்கிறது. இன்னும் இன்டர்நெட் தடை நீங்கவில்லை. அச்சடித்த பத்திரிகையை எடுத்துச் செல்ல வாகனங்கள் கிடைப்பதில்லை. நீங்கள் மீடியா சென்டர் போனீர்களா? ரேஷன் கடையைவிட அதிகமாக அங்கே கூட்டம் நிற்கும். எல்லோரும் அவரவர் பத்திரிகைக்கு நியூஸ், போட்டோஸ் அனுப்ப க்யூவில் நிற்பார்கள். காரணம், அங்கு மட்டும்தான் இன்டர்நெட் வசதி இருக்கிறது. இதைவிட்டால் டெல்லிக்கு நேரில் சென்றுதான் செய்திகளைப் பதிவேற்றம் செய்யவேண்டும். இதுதான் எங்கள் நிலைமை'' என்றார்.

காஷ்மீர்
காஷ்மீர்

காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தானும் இன்னொரு பகுதியை சீனாவும் பிடித்துவிட்டன. மீதம் இருப்பதுதான் தற்போதைய காஷ்மீர். இது இந்தியாவின் தோல்வி என்பது அவருடைய வாதம். ``சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டிய அவசியம் என்ன... மத்திய அரசின் திட்டத்தின் உள்நோக்கம் என்ன?'' என்றேன். ``இங்கு உள்ள கனிமவளங்களைச் சூறையாடுவதுதான் மத்திய அரசின் நோக்கம். காஷ்மீரில் இதுவரை எடுக்கப்படாத கனிமவளங்கள் நிறைய இருக்கின்றன. என் வீட்டுக்குக் கீழே கிரானைட் கற்கள் இருந்தால், அது எனக்குச் சொந்தம். ஜிப்சம் இருந்தால், அதுவும் எனக்குச் சொந்தம். இப்போது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால், எங்களின் உரிமை பறிபோகிறது. இன்னும் சொல்லப்போனால் பெண்கள், குழந்தைகளுக்குச் சொத்தை மாற்றினால், இதுவரை ஒரு பைசா செலவில்லை. இனி, அதற்கும் வரி கட்ட வேண்டிவரும். இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது? அரிய வகை நீலக்கற்கள் (sapphire) சுரங்கமே ஜம்முவில் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதை குறைந்த விலையில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு லீஸுக்கு விடுவதற்கான முன்னேற்பாடுதான் 370-வது பிரிவை நீக்கியது'' என்றவரிடம், ``காஷ்மீரை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்கிறீர்களா?'' என்றேன்.

- சுனந்தா வசிஷ்ட் விவரிக்கும் காஷ்மீரின் இன்னொரு முகத்தை முழுமையாக அறிய > இரும்புத்திரை காஷ்மீர்! - 10 - "மனித உயிரைவிட மேலான மனித உரிமை எதுவுமில்லை!"

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

``ஓர் உதாரணம் சொல்கிறேன். எங்கள் மாநிலத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை ஒரு யூனிட் இரண்டு ரூபாய்க்கு மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. மின் தட்டுப்பாடு நிலவும் நேரத்தில் எங்களுக்கு 3.50 ரூபாய்க்கு விற்கிறது'' என்றவர், சற்று நிறுத்தி, ``இதைவிட இங்கே இன்னோர் அநியாயம் நடக்கிறது தெரியுமா?'' என்றார். தொடர்ந்து பேசினார் காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் பிரபோத் ஜம்வால். ``மக்கள், வீடுகளுக்குள்ளேயே உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகிறார்கள். அரசு ஊழியர்களில் பெரும்பாலானோர் பணிக்கு வருவதில்லை. முடங்கிக்கிடக்கிறது அரசு நிர்வாகம். மக்களின் அமைதி அச்சமூட்டுகிறது. 2016-ம் ஆண்டில் புர்ஹான் வானி படுகொலை நடந்தபோது, ஆறு மாதங்களாக மக்கள் இதேபோன்று தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். அவர்களை சமாதானப்படுத்தி சகஜநிலைக்குக் கொண்டுவந்தார்கள். அதுபோல்தான் இப்போதும் நடக்கிறது.''

``இத்தனை நாள்கள் எப்படித் தாக்குப்பிடிக்கிறார்கள். சாப்பாடு, உடை, அத்தியாவசியப் பொருள்கள் தேவைப்படுமே?'' ``காஷ்மீரில் குளிர்காலம் வருவதற்கு முன்பு, அடுத்த சில மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களை வாங்கி வைத்துக் கொள்வது வழக்கம். தவிர, பரஸ்பரம் உதவி செய்துகொள்வதில் காஷ்மீரிகளை விஞ்ச முடியாது. அத்தியாவசியப் பொருள்கள் யாருக்கேனும் தேவை எனத் தெரிந்தால், உடனடியாகக் கொடுத்து உதவுகிறார்கள். எங்கள் மாநில மக்கள் ஏழைகள் அல்லர்; மத்திய, மாநில அரசு இயந்திரங்கள்தான் அவர்களின் சுயநலத்துக்காக எங்களை ஏழைகளாகச் சித்திரிக்கின்றன. உண்மையில், நாங்கள் பொருளாதார ரீதியிலும் தொழில்ரீதியிலும் மனதளவிலும் உயர்ந்தவர்கள். காலம்தான் இதையெல்லாம் புரியவைக்கும்'' என்று கண்கலங்கினார்.

இரும்புத்திரை காஷ்மீர்!
இரும்புத்திரை காஷ்மீர்!

பயங்கரவாதத்துக்கு ஒரே முகம்தான். அதன் பெயர், பயங்கரவாதம் மட்டுமே. அது இஸ்லாமிய பயங்கரவாதிகளாக இருந்தாலும் சரி... இந்து பயங்கரவாதிகளாக இருந்தாலும் சரி. இரண்டு முகங்களின் ஒரே நோக்கம் அழிவு மட்டுமே. தற்போது காஷ்மீரில் `இஸ்லாமியர்களை ஒடுக்குகிறார்கள்' என்ற குரல்கள் எழும் அதே சமயம், இந்துக்கள் எப்படியெல்லாம் காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பாதிக்கப் பட்டார்கள் என்றும் குரல்கள் எழுகின்றன. அப்படி சமீபத்தில் எழுந்த குரல், சுனந்தா வசிஷ்ட் என்கிற பத்திரிகையாளருடையது.

- சுனந்தா வசிஷ்ட் விவரிக்கும் காஷ்மீரின் இன்னொரு முகத்தை முழுமையாக அறிய > இரும்புத்திரை காஷ்மீர்! - 10 - "மனித உயிரைவிட மேலான மனித உரிமை எதுவுமில்லை!"

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு