Published:Updated:

யோகா முதல் TJ’s பிராண்ட் வரை... கைதிகளை திகார் திருத்துவது எப்படி?

Tihar Jail Products
Tihar Jail Products

திகார் சிறையின் முக்கியமான பகுதிகளுக்கு தமிழ்நாடு ஆயுதப்படை போலீஸார்தான் பாதுகாப்பு அளிக்கின்றனர். இதற்காக தமிழ்நாடு ஆயுதப்படையைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டவர்கள் திகாரில் தங்கியுள்ளனர்.

'திகார்ல போட்டுடப்போறாங்க பாரு..! ' என்று டெல்லிவாசிகள் ஜாலியாகப் பேசிக்கொள்வார்கள். திகார் என்பது சிறை மட்டுமல்ல, அதற்கும் மேல். சொல்லப்போனால், பலருக்கு அது கல்வி நிலையம். தவறு செய்யும் குழந்தைகளைப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் திருத்துவதுபோல, தவறிழைப்பவர்களைத் திருத்தி சிறந்த குடிமகனாக மாற்றி, நாட்டுக்குத் திருப்பித் தரும் பணியைத்தான் திகார் சிறை செய்கிறது. தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்... திகார் சிறையில் இருந்துகொண்டே ஐஏஎஸ் பாஸாக முயன்றவர்களும் உண்டு.

Prisoners in Painting Training
Prisoners in Painting Training

பி.ஏ முதல் எம்.பி.ஏ பட்டதாரிகளாக மாறியவர்களும் ஏராளம். திகார் சிறையில் இருந்தபோது தொழில்களைக் கற்றுத்தேர்ந்து, வெளியே வந்தபிறகு சிறந்த தொழில்முனைவோர்களாக மாறியவர்களும் இருக்கிறார்கள். ஆகையால், திகார் என்றதும் அது ஒரு மோசமான இடம் என்று கருதுவதை மாற்றிக் கொள்ளவும். தன்னம்பிக்கையுடன் புதிய வாழ்க்கையை எதிர்கொள்ள கைதிகளைத் தயார்படுத்தியே, திகார் சிறை அவர்களை வெளியே அனுப்புகிறது. தெற்காசியாவிலேயே மிகப் பெரிய சிறையான திகாரின் செல்லப்பெயர், திகார் ஆஸ்ரமம்.

டெல்லி மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமே திகார் என்றால் ஒருவித 'கிலி' ஏற்படும். அதிலும் அரசியல்வாதிகளுக்கு அந்தப் பெயரே அலர்ஜி. எமர்ஜென்சி காலத்துக்குப் பின் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே நடக்கும் தில்லுமுல்லுகளைக் கண்டு இந்திரா காந்தி மிரண்டுபோனார். பெண் குற்றாவாளிகளுக்கு எதிராகப் பாலியல் கொடுமைகள் அதிகம் நடந்துகொண்டிருந்தன. 1980-ம் ஆண்டு, இந்திரா காந்தி மீண்டும் ஆட்சியில் அமர்ந்தபோது, திகார் சிறையைச் சீர்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்தார். தனியாகக் குழு ஏற்படுத்தப்பட்டு, படிப்படியாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்று, 'ஆஸ்ரமம்' என்று சொல்லக்கூடிய அளவுக்கு திகார் சிறை மாறியுள்ளது.

Tihar Jail
Tihar Jail

1857-ம் ஆண்டு, டெல்லி சாணக்கியாபுரியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில், 'திகார்' என்ற இடத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் இந்தச் சிறை தொடங்கப்பட்டது. முதலில் பஞ்சாப் மாநில போலீஸ் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தச் சிறை, 1966-ம் ஆண்டு டெல்லி அரசின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது. டெல்லியில் இரண்டு ஜெயில் காம்ப்ளெக்ஸ்கள் உள்ளன. அதில், திகாரில் மட்டும் 9 சிறை வளாகங்கள் இருக்கின்றன. 'ரோகிணி' என்ற இடத்தில் மாவட்டச் சிறை வளாகம் உள்ளது. திகார் சிறையில் மொத்தம் 6,250 பேரை அடைக்க முடியும். ஆனால், 10,000-க்கும் மேற்பட்ட கைதிகள் இங்கே அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 1993-ம் ஆண்டு, கிரண்பேடி சிறைத்துறை டிஐஜி-யாக இருந்தபோது, திகார் சிறைக்கைதிகள் நலனுக்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். கைதிகள், மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகாவில் ஈடுபடுவதற்கும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிறைக் கைதிகள், காலை 6 முதல் 7 மணிக்குள் எழுந்துவிட வேண்டும். காலைக்கடன்களை முடித்தபிறகு, தினமும் பிரார்த்தனை நடைபெறும். பிரார்த்தனையில் பங்கேற்கும் கைதிகள், மனமுருக வேண்டிக்கொள்வதை அங்கே பார்க்க முடியும். காலை உணவுக்குப் பிறகு, கைதிகள் தங்களுக்குப் பிடித்த பணியில் ஈடுபடலாம்.

Bakery Products
Bakery Products

இதற்காக , 2-வது சிறை வளாகத்தில் மிகப்பெரிய தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கே சணல் பைகள், ஆடை தயாரிப்பு, கைத்தறி துணிகள், மரப் பொருள்கள் தயாரிப்பு, கடுகு எண்ணெய் தயாரிப்பு, பேப்பர் கொண்டு தயாரிக்கப்படும் பொருள்கள், ஓவியம் வரைதல், பிஸ்கட், மெழுகுவத்தி, கேக்குகள் தயாரிப்பு என தங்களுக்குத் தெரிந்த பணிகளில் ஈடுபடலாம். கைதிகளுக்கு தொழிற்பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இங்கே, பயிற்சிபெற்ற பலர், வித்தகர்களாக மாறிய கைதிகளும் உண்டு. திகாரில் உற்பத்திசெய்யப்படும் பொருள்கள், TJ’s என்ற பிராண்ட் பெயரில் விற்கப்படுகின்றன. டெல்லியில் டிஜே பிராண்ட் ரொம்பவே பிரபலம்.

ஆயிரக்கணக்கான கைதிகள் இருப்பதால், அவ்வப்போது மோதல்களும் ஏற்படுவதுண்டு. சிறைக்குள் மட்டும் 30-க்கும் மேற்பட்ட கேங்குகள் உள்ளன. கைதுசெய்யப்படும் கேங் லீடர்கள் உள்ளே சென்ற பிறகும், கேங்குகளை ஏற்படுத்தி மோதலில் ஈடுபடுகிறார்கள். கொலைகளும் நடப்பதுண்டு. திகார் சிறையில் இருந்து தப்புவதற்காக, இரண்டு கைதிகள் 10 அடி நீள சுரங்கம் தோண்டினர்.

Charles Sobhraj
Charles Sobhraj

ஒருவர் தப்பி ஓடிவிட, மற்றோருவர் பிடிபட்டார். சீரியல் கில்லரும் சர்வதேச குற்றவாளியுமான சார்லஸ் சோப்ராஜ், திகாரில் இருந்து ஒரு முறை தப்பியிருக்கிறார். 1986-ம் ஆண்டு இந்தச் சம்பவம் நடந்தது. ஆனால், உடனடியாக போலீஸார் மின்னல் வேகத்தில் செயல்பட்டு கைதுசெய்து மீண்டும் சிறையில் அடைத்துவிட்டனர். பிறகு, தண்டனைக்காலம் முடிந்த பிறகே, 1997-ம் ஆண்டு சோப்ராஜ் விடுவிக்கப்பட்டார்.

இந்திய அளவில் பல முக்கியத் தலைகள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, சுரேஷ் கல்மாடி, அன்னா ஹசாரே, அமர்சிங் போன்றவர்கள் திகாரில் இருந்துள்ளனர். சோட்டாராஜனும் இங்கே அடைபட்டுக்கிடந்தார். தமிழகத்திலிருந்து இங்கே அடைபட்டவர்கள் என்று பார்த்தால், ஆ.ராசா, கனிமொழி, டி.டி.வி. தினகரன், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் இந்தச் சிறையில் இருந்துள்ளனர்.

P.Chidambaram
P.Chidambaram

தற்போது இங்கே அடைபட்டுள்ள பிரபலம், ப.சிதம்பரம். திகார் சிறையின் முக்கியமான பகுதிகளுக்கு தமிழ்நாடு ஆயுதப்படை போலீஸார்தான் பாதுகாப்பு அளிக்கின்றனர். இதற்காக, தமிழ்நாடு ஆயுதப்படையைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டவர்கள் திகாரில் தங்கியுள்ளனர். டெல்லி அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தமிழக ஆயுதப்படை இந்தப் பணியை மேற்கொள்கிறது. இங்கு பணியில் ஈடுபடும் சிஆர்பிஎஃப் படை வீரர்களுக்கும் தமிழக ஆயுதப்படை போலீஸார்தான் பயிற்சி அளிக்கின்றனர்.

ப.சிதம்பரம் கைது... அரசியலில் சகஜமா... பழிவாங்கலா?!
- என்ன சொல்கிறார் கார்த்தி சிதம்பரம்?

திகார் சிறைக்கு என்று தனியே ஃபேஸ்புக் பக்கமும் உள்ளது. திகார் சிறை நடவடிக்கைகளை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், இந்த ஃபேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கடைசியாக நாம் பார்த்தபோது, 'நீ என்ன செய்கிறாயோ... அதைப் பொறுத்தே உன் எதிர்காலம் அமைகிறது' என்ற வாசகம் கவர் போட்டோவாக அப்டேட் செய்யப்பட்டிருந்தது.

திகார் சிறை சொல்வது உண்மைதானே!

அடுத்த கட்டுரைக்கு