Published:Updated:

கொரோனா சாவைத் தடுக்கும் போராட்டத்தில் பட்டினிச் சாவுகள் நிகழ இடம் கொடுக்கலாமா?

ஏழைக் குழந்தைகள்
ஏழைக் குழந்தைகள்

கொரோனா வைரஸால் தேசம் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் பல கோடிப் பேர் பட்டினிக் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதனால், பட்டினிச்சாவு என்ற பேரவலம் ஆரம்பமாகியுள்ளது.

கொரோனாவைவிட கொடுமை இது. மஞ்சுவுக்கு 36 வயது. அவளுக்கு ஆர்த்தி (11 வயது), சரஸ்வதி (7 வயது), சிவ சங்கர் (6 வயது), மாதேஸ்வரி (5 வயது), கேசவ் (3 வயது) என 5 குழந்தைகள். வேலைக்குச் சென்றால்தான் உணவு என்ற நிலையில் இருக்கும் அன்றாடம் காய்ச்சி. லாக் டெளன் சூழலால், வேலையும் இல்லை வருமானமும் இல்லை. ஐந்து குழந்தைகளுக்கு உணவளிக்க முடியால் தவித்த மஞ்சு, தன் ஐந்து குழந்தைகளையும் ஆற்றில் தூக்கிவீசிவிட்டு அவரும் ஆற்றுக்குள் குதித்துவிட்டார்.

ஏழைக் குழந்தை
ஏழைக் குழந்தை

உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிராபாத்தில், ஏப்ரல் 12-ம் தேதி காலையில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. குழந்தைகள் ஆற்றில் மூழ்கிவிட்டார்கள். அந்தத் தாய் எப்படியோ நீந்திக் கரையேறியிருக்கிறார். தன் ஐந்து குழந்தைகளுக்கு உணவளிக்க தன்னால் முடியாததால் இப்படியொரு முடிவை எடுத்ததாகக் கதறுகிறார். ‘ஆமாம். சோற்றுக்கு வழியில்லாமல்தான் அவள் இப்படியொரு முடிவை எடுத்தாள்’ என்று எந்த ஆட்சியாளர்களாவது ஒப்புக்கொள்வார்களா? ‘கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சண்டை. அதுதான் காரணம்’ என்று கூறுகிறது உ.பி போலீஸ்.

இதே உ.பி-யில், கடந்த மாதம் ஓர் அதிர்ச்சி சம்பவம். நம் பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில்தான் அந்தச் சம்பவம். கொய்ரிபூர் என்ற கிராமம், வாரணாசித் தொகுதியில் உள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், உண்ண உணவின்றி புல்லைச் சாப்பிட்டு உயிர் வாழ்கிறார்கள் என்று கடந்த மார்ச் 26-ம் தேதி உள்ளூர் நாளேடு ஒன்றில் புகைப்படங்களுடன் செய்தி வெளியானது. அனைவரையும் அதிரவைத்தது அந்தச் செய்தி. சமூக வலைதளங்களில் வைரலானது. பிரதமரின் தொகுதியாயிற்றே… யோகி ஆதித்யநாத் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்குமா? அது ஒரு பொய்ச்செய்தி என்று மாவட்ட நிர்வாகம் மறுத்தது. அந்த நாளேட்டின் ஆசிரியருக்கும் செய்தியை எழுதிய நிருபருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

கொய்ரிபூர் கிராமம்
கொய்ரிபூர் கிராமம்

“அது புல் அல்ல. அது, கோதுமைப் பயிருக்கு ஊடாக விளையும் ‘அங்கரி டால்’ என்ற காட்டுச்செடி. அதில் ஒரு பருப்பு இருக்கும். அந்தப் பருப்பைத்தான் அந்த மக்கள் சாப்பிட்டார்கள்” என மாவட்ட நிர்வாகம் விளக்கம் கொடுத்தது. இது தொடர்பாக, உ.பி-யைச் சேர்ந்த சில பத்திரிகையாளர்களிடம் நாம் பேசியபோது, அவர்களும் அதை ஆமோதித்தார்கள். “சலி என்கிற ஒரு காட்டுச்செடி, பாதையோரங்களில் மண்டிக்கிடக்கும். அதன் விதைகள் பருப்பு போன்று இருக்கும். பெரும்பாலும் யாரும் அதைச் சாப்பிட மாட்டார்கள். லாக் டெளன் காரணமாக உணவு கிடைக்காமல், அந்த மக்கள் அதைச் சாப்பிட்டுள்ளார்கள். செய்தி வெளியாகி பிரச்னை ஆனவுடன், அந்த மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் உணவு ஏற்பாடு செய்துள்ளது” என்று அவர்கள் கூறினார்கள்.

தனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டாலும், தன் செய்தி முற்றிலும் உண்மை என்பதில் அந்த நிருபர் உறுதியாக இருக்கிறார். “அது உண்மை என்பதற்கான புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ளேன். கடந்த சில நாள்களாக, உணவு இல்லாமல் அந்தக் கிராம மக்கள் பெரும் துயரத்தில் இருந்தனர். தங்கள் வீடுகளில் உணவுப்பொருள் எதுவுமே இல்லை என்று காலியான பாத்திரங்களையெல்லாம் எடுத்துவந்து என்னிடம் காண்பித்தார்கள்” என்று அந்த நிருபர் கூறுகிறார். அந்த மக்கள் உணவின்றி பட்டினி கிடக்கவில்லை என்பது பொய் என்றால், எதற்காக அவர்களுக்கு அவசர அவசரமாக மாவட்ட நிர்வாகம் உணவு ஏற்பாடு செய்ய வேண்டும்?

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

ஒன்று மட்டும் உறுதி. வரக்கூடிய நாள்களில் இதுபோன்ற துயரச் செய்திகள் அதிகம் வரக்கூடும். தேசம் முடக்கப்பட்டுள்ள சூழலில், கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்து தவிக்கிறார்கள். கையில் இருந்த கொஞ்சநஞ்ச பணமும் கடந்த மூன்று வாரங்களில் செலவாகிவிட்டது. அன்றாடம் காய்ச்சிகளிடம் என்ன சேமிப்பு இருக்கப்போகிறது? வீட்டில் உணவுதானியங்கள் இல்லை. அவர்கள் பட்டினிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு ஆரம்பத்திலேயே உரிய நடவடிக்கைகளை எடுக்காததும், நிலைமை தீவிரமான பிறகு அவசர அவசரமாக ஊரடங்கு அறிப்பை பிரதமர் வெளியிட்டதுமே இந்த நிலைமைக்குக் காரணங்கள் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

ஆரம்பக் கட்டத்தில் அரசு இந்தப் பிரச்னையை எப்படி அணுகியது? பிப்ரவரி 23-ம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியா வந்தார். அதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பாகவே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நோயாளி இந்தியாவுக்கு வந்துவிட்டார். ஆனால், ‘நமஸ்தே ட்ரம்ப்’ விழாவை வெகு விமரிசையாக நடத்துவதில் மட்டுமே மத்திய அரசு கண்ணும் கருத்துமாக இருந்தது. அந்த அவசரத்தில், வைரஸின் வருகையைக் கவனிக்க ஆட்சியாளர்களுக்கு நேரமில்லாமல் போய்விட்டது. ட்ரம்ப் போன பிறகாவது கொரோனா மீது கவனத்தைத் திருப்பியிருக்கலாம். எதிர்க்கட்சிகளும்கூட கொரோனா குறித்து மார்ச் முதல் வாரத்திலேயே நாடாளுமன்றத்தில் எச்சரித்தன. அவர்களின் குரல் ஆட்சியாளர்களை அப்போது அசைக்கவில்லை.

ட்ரம்ப்புடன் மோடி
ட்ரம்ப்புடன் மோடி

சரி, அரசு இப்போது பல நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறதே… இப்போது ஏன் பழசைக் கிளற வேண்டும் என்ற ஆவேசக் கேள்வி சிலருக்கு எழலாம். ஆனால், 5 ட்ரில்லியன் அமெரிக்கப் பொருளாதாரத்தை விரைவில் எட்டிப்பிடிக்கவிருந்த ஒரு தேசத்தில், இன்றைக்கு உண்ண உணவின்றி மடியும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்களே என்ற பதைபதைப்புதான் பழைய ஞாபகங்களைக் கிளறிவிடுகிறது. ஆரம்பத்தில் அசட்டையாக இருந்துவிட்டு, நிலைமை கைமீறிப்போக ஆரம்பித்ததும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முடிவை ஆட்சியாளர்கள் கையாண்டார்கள். அதாவது, எவ்வித திட்டமிடலும் இல்லாமல் தேசத்தைத் திடீரென முடக்கியது எவ்வளவு பெரிய பாதகங்களை ஏற்படுத்திவருகிறது...

லட்சக்கணக்கான மக்கள், மந்தை மந்தையாக 500 கி.மீ, 1,000 கி.மீ என்று நடந்துசென்ற அவலத்தைக் கண்டு நாடே பதைபதைத்தது. மூட்டை முடிச்சுகளைத் தூக்குவதா, தங்கள் பிஞ்சுக் குழந்தைகளைத் தூக்குவதா என்ற துயரம் ஒருபுறம்… சோறுதண்ணி இல்லாமல் கால்களில் ரத்தம் வழிய நொண்டிக்கொண்டே மைல் கணக்காக நடந்தார்கள் சிலர். அப்படி நடந்துசென்றவர்களில் 117 பேர் மரணமடைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. வெளியே வராத கணக்குகள் எத்தனையோ!

புலம்பெயர்த் தொழிலாளர்கள்
புலம்பெயர்த் தொழிலாளர்கள்

ஒரு நாள் ‘மக்கள் ஊரடங்கு’ என்ற அறிவித்தபோது, மகத்தான மருத்துவ சேவையில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் உள்ளிட்டோரின் சேவையைப் பாராட்டும் வகையில், மாலை 5 மணிக்கு பால்கனிக்கு வந்து கை தட்டுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். அதனால் ‘உற்சாகமடைந்த’ ஒரு தரப்பினர், கும்பல் கும்பலாக கரண்டிகளுடனும் சாப்பாடுத் தட்டுகளுடனும் வீதிக்கு வந்தவர்கள், வெறித்தனமாக தட்டுகளை அடித்து நொறுக்கினார்கள். அவர்களின் செயலைக் கண்டு பிரதமரே நொந்துபோனார். இது ஓர் இந்தியா. இந்த இந்தியாவின் பிரஜைகள் சகல சௌகரியங்களுடன் இருக்கிறார்கள். ஆனால், இன்னோர் இந்தியாவின் பிரஜைகளோ உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கிறார்கள்.

சரியாக 20 நாள்களுக்குப் பிறகு, ஏப்ரல் 12-ம் தேதி, அதே போன்றதொரு தட்டொலி இந்தியாவில் கேட்டது. உணவின்றி உண்டி சுருங்கியவர்கள் எழுப்பிய தட்டொலி இது. ‘பட்டினியால் நாங்கள் சாகக்கிடக்கிறோம். எங்களுக்கு உணவு தாருங்கள்’ என்று சாப்பாட்டு தட்டுகளால் இவர்கள் ஒலியெழுப்பினார்கள். இந்த ஒலியில் பதற்றமும் பயமும் நிறைந்திருந்தது.

தட்டொலி எழுப்பும் ஏழைகள்
தட்டொலி எழுப்பும் ஏழைகள்

‘சமூக இடைவெளி’, ‘தனிமனித இடைவெளி' என்ற வார்த்தைகள் இப்போது பிரபலமாகியிருக்கின்றன. வீட்டுக்குள்ளே இருங்கள் என்ற அரசின் அறிவுரையைக் கேட்பதற்கு நாங்கள் ரெடி… ஆனால், எங்களுக்கான உணவை உத்தரவாதப்படுத்த நீங்கள் ரெடியா என்று ஏழைகள் கேட்கிறார்கள். ‘கை தட்டுங்கள்’, ‘விளக்கேற்றுங்கள்’ என்பதுடன் பிரதமர் ஒதுங்கிக்கொண்டார். நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அளவிலான திட்டங்களை அறிவித்தார். ஆனால், அதில் ரூ.30,000 கோடி மட்டுமே புதிய திட்டங்கள் என்று சொல்லும் பொருளாதார வல்லுநர்கள், இந்த அறிவிப்பின்படி பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் வெறும் ரூ.112 தான் கிடைக்கும் என்று ஒரு கணக்கைச் சொல்கிறார்கள். அதுவும்கூட இன்னும் அனைத்துப் பயனாளிகளுக்கும் போய்ச்சேரவில்லை என்று செய்திகள் வருகின்றன.

பீகார் மாநிலத்திலிருந்து அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று சில நாள்களுக்கு முன் வந்தது. அங்கு, ஆரா மாவட்டத்தில் உள்ள முஷஹர் டோலா என்ற ஊரில் ‘லாக் டெளன் ’ சூழல் காரணமாக உணவு கிடைக்காமல் 11 வயது சிறுவன் இறந்துவிட்டான் என்பதுதான் அந்தச் செய்தி. பட்டினியால்தான் அவன் இறந்தான் என்பதை ஆட்சியாளர்கள் ஒப்புக்கொள்வார்களா? “உடல்நிலை சரியில்லாமல்தான் அவன் இறந்தான்” என்று மாவட்ட நிர்வாகம் மறுத்தது.

இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளரான கவிதா கிருஷ்ணனிடம் பேசினோம். அவரின் அமைப்பைச் சேர்ந்தவர்கள், பட்டினியால் இறந்த அந்தச் சிறுவனின் குடும்பத்துக்கு உதவிசெய்துள்ளார்கள். “குப்பை சேகரித்து உயிர் வாழ்கிற குடும்பம் அது. கடந்த சில நாள்களாவே அவர்கள் பட்டினியால் கிடந்துள்ளனர். இதுகுறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்றும், அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் அந்தச் சிறுவன் இறந்தான். அந்தக் குடும்பத்துக்கு எங்கள் தோழர்கள்தாம் உணவு ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள்’ என்றார் கவிதா கிருஷ்ணன்.

தட்டொலி எழுப்பும் ஏழைகள்
தட்டொலி எழுப்பும் ஏழைகள்

தொடர்ந்து பேசிய கவிதா கிருஷ்ணன், “21 நாள்கள் லாக் டெளன் முடிவதற்கு முன்பாகவே பட்டினிச் சாவுகளும் பட்டினியால் நிகழும் தற்கொலைகளும் ஆரம்பித்துவிட்டன. மக்களிடம் வீடுகளில் உணவுப்பொருள்கள் இல்லை. சில இடங்களில் உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டாலும் எரிபொருள் இல்லை. கிராமப்புற மக்களும் நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகளில் இருப்பவர்களும்தாம் கடுமையான உணவுப் பிரச்னையில் இருக்கிறார்கள். அவர்கள் தினக்கூலிகள். உணவையோ, உணவுப்பொருள்களையோ அவர்களுக்கு உடனடியாக வழங்கவில்லையென்றால், அவர்களால் உயிர்பிழைப்பது சிரமம். அத்தகைய நெருக்கடியான சூழலில்தான், ‘எங்களை நீங்கள் புறக்கணிக்க முடியாது’ என்று ஆட்சியாளர்களுக்கு சொல்லவே, சாப்பாட்டுத் தட்டை வைத்து ஒலியெழுப்பும் போராட்டத்தை இந்தியா முழுவதும் ஏப்ரல் 12-ம் தேதி மக்கள் நடத்தியிருக்கிறார்கள். மக்களுக்கான உணவை உத்தரவாதப்படுத்தாமல், எந்தப் பலனையும் லாக் டெளன் நடவடிக்கை தரப்போவதில்லை” என்றார்.

முன் தயாரிப்பு இல்லாமல் திடீரென லாக்-டெளன் அறிவிப்புக்குப் போனதால்தான், பல பிரச்னைகள் ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் சொல்லிவருகிறார்கள். முன்கூட்டியே கொஞ்சம் திட்டமிட்டிருந்தால், வெளிமாநிலங்களில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்க முடியும். மகாராஷ்டிராவில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த மாநிலத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 1,500 பேருக்கு உதவுவதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார், விழுப்புரம் தொகுதி எம்.பி-யான ரவிக்குமார்.

ரவிக்குமார்
ரவிக்குமார்

அவரிடம் பேசியபோது, “அந்தேரி, கோரேகான் பகுதிகளில் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த உதவியையும் அந்த மாநில அரசு செய்யவில்லை. கையில் இருந்த பணத்தை வைத்து இத்தனை நாள் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். சாலையோரம் டென்ட் அடித்து அவர்கள் தங்கியுள்ளார்கள். இன்னும் சில நாள்களில் அங்கு மழைக்காலம் வரப்போகிறது. செய்வதறியாமல் அவர்கள் தவிக்கிறார்கள். நானும் இங்குள்ள அதிகாரிகள் மூலம் அவர்களுக்கு உதவிசெய்ய பலரிடம் பேசிவருகிறேன். எதுவும் நடக்கவில்லை. நாடாளுமன்ற மக்களவைச் செயலாளரிடம் பேசியும் அவர்களுக்கு எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை. லாக் டெளன் இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீடித்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நினைக்கும்போது பதைபதைப்பாக இருக்கிறது” என்றார்.

இந்தப் பிரச்னைக்கு இரண்டு விஷயங்களைத் தீர்வாக முன்வைக்கலாம். ஒன்று, கேரளா மாடல். இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மொத்த முகாம்களில், பாதிக்கும் மேற்பட்ட முகாம்கள் கேரளாவில் இருப்பவை. புலம்பெயர் தொழிலாளர்கள் அங்கு ஏராளமாக இருக்கிறார்கள். லாக் டெளன் அறிவிக்கப்பட்டவுடன், எல்லா பகுதிகளிலும் பள்ளிக்கூடங்களைத் திறந்துவிட்டு, புலம்பெயர் தொழிலாளர்களை அங்கு தங்குவதற்கு பினராயி விஜயன் அரசு ஏற்பாடு செய்துள்ளது. அவர்களுக்கு உணவு ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது. ரேஷன் அட்டை இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற பாகுபாடு பார்க்காமல், அனைவருக்கும் உணவுப்பொருள்களை அந்த அரசு வழங்குகிறது. சமைக்க முடியாதவர்களுக்கு ‘கம்யூனிட்டி கிச்சன்’ என்று எல்லா பகுதிகளிலும் ஏற்படுத்தி, உணவு சமைத்துக்கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். எல்லாவற்றையும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவே அந்த அரசு செயல்படுத்துகிறது. இதுபோல அனைத்து மாநிலங்களிலும் செய்யுமாறு மத்திய அரசு ஒரு வழிகாட்டல் உத்தரவை வழங்கினால், மக்களைப் பாதுகாத்துவிட முடியும்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இன்னொரு ‘தைரியமான’ நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். இந்திய நாட்டின் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் வியர்வை சிந்தி உழைத்து உற்பத்திசெய்த அரிசியும் கோதுமையும் இந்திய உணவுக்கழகத்தின் குடோன்களில் மலைபோல குவிந்துகிடக்கின்றன. கொஞ்சம்நஞ்சமல்ல… ஏழரைக் கோடி டன் உணவுதானியங்கள் நம்மிடம் இருப்பு உள்ளன. கஞ்சிக்கு வழியில்லாமல் மக்கள் செத்துக்கொண்டிருக்கும் நிலையில், அந்த உணவுதானியங்களை எலிகள் தின்றுகொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸைவிட பசி கொடுமையானது. அந்த ஏழரைக் கோடி டன் உணவுதானியங்களை எடுத்து ஏழைகளுக்கு விநியோகியுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர்களும் பொருளாதார வல்லுநர்களும் கடந்த சில நாள்காளாகக் கதறிக்கொண்டிருக்கிறார்கள். இதில் முடிவெடுப்பதில் தங்களுக்கு இருக்கும் தயக்கத்தை உடைத்து, மக்களின் பசியைப் போக்க நல்ல முடிவை உடனே எடுங்கள் பிரதமர் அவர்களே!

அடுத்த கட்டுரைக்கு