அலசல்
Published:Updated:

அதிகரிக்கும் தமிழக அரசின் கடன் சுமை... நெருக்கடியில் சிக்குமா தி.மு.க அரசு?

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

என்ன செய்கிறது பொருளாதார நிபுணர் குழு?

‘வரலாறு காணாத கடன் சுமையில் தமிழகம் தத்தளிக்கிறது. இதிலிருந்து தமிழகத்தை மீட்க நடவடிக்கை எடுப்போம்’ என்பது 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கொடுத்த வாக்குறுதி. ஆனால், ஏற்கெனவே அரசின் கடன் அதிகரித்துவரும் நிலையில், மேலும் ரூ.51 ஆயிரம் கோடி கடன் வாங்குவது என்று தமிழக அரசு முடிவெடுத்திருப்பது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

10 ஆண்டுகளில் எகிறிய கடன்!

தமிழ்நாட்டில் கடன் வாங்கி அரசை நடத்துவது, திட்டங்களைச் செயல்படுத்துவது என்கிற போக்கு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதன் பிறகு, பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில், தமிழக அரசின் கடன் சுமை ரூ.5 லட்சம் கோடியாக அதிகரித்தது. அதை, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க கடுமையாக விமர்சித்தது.

என்ன செய்கிறது பொருளாதார நிபுணர் குழு?
என்ன செய்கிறது பொருளாதார நிபுணர் குழு?

இந்தப் பிரச்னையைத் தேர்தல் பிரசாரத்துக்கும் பயன்படுத்திக்கொண்ட தி.மு.க., ‘கடுமையான இந்தச் சூழலிலிருந்து தமிழகத்தை மீட்டெடுப்போம்’ என்று வாக்குறுதியும் அளித்தது. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகும் தமிழக அரசு தொடர்ந்து கடன் வாங்கிவருகிறது. 2023-ல் முதல் காலாண்டுக்கு, கடன் பத்திரங்கள் மூலம் ரூ.51 ஆயிரம் கோடி நிதியைத் திரட்ட தமிழக அரசு முடிவுசெய்திருக்கும் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பா.ம.க தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “2022 - 23 நிதியாண்டின் இறுதியில் தமிழக அரசின் கடன் ரூ.6.53 லட்சம் கோடியாக இருக்கும். நடப்பாண்டில் அதற்கு வட்டியாக மட்டுமே ரூ.48,121 கோடி செலவிடப்படவிருக்கிறது. இது, தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாயான ரூ.1.42 லட்சம் கோடியில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகம். எனவே, தமிழக அரசு கடனைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.

“இப்படித் தொடர்ச்சியாக கடன் வாங்கிக்கொண்டேபோனால், தமிழக அரசு திவால் நிலைக்கு வந்துவிடும்” என்று எச்சரிக்கிறார், பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளரான இராம.ஸ்ரீநிவாசன். இந்த விவகாரம் குறித்து அவரிடம் பேசினோம். “ ‘அ.தி.மு.க ஆட்சியில் அரசின் கடன் ரூ.5 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இதன் மூலம், ஒவ்வொரு தமிழன்மீதும் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கடன் இருக்கிறது’ என்று தி.மு.க-வினர் பிரசாரம் செய்தார்கள். இப்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு தமிழன்மீதும் எவ்வளவு கடன் இருக்கிறது என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். கடன்கள் வாங்கியும் பிரச்னைகளை இவர்கள் தீர்க்கவில்லை. `அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியம் கொடுப்போம்’ என்றார்கள். ஆனால், கொடுக்கவில்லை. `குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை தருவோம்’ என்றார்கள். அதையும் தரவில்லை. பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு உரிய தேதியில் சம்பளம் கொடுக்கப்படவில்லை. கேட்டால், அரசிடம் நிதி இல்லை என்கிறார்கள். அப்படியானால், சொத்து வரி உயர்வு, பால் விலை அதிகரிப்பு என்று மக்களைக் கசக்கிப் பிழிந்து வசூலித்த பணமெல்லாம் எங்கேபோனது?” என்று கேட்கிறார் இராம.ஸ்ரீநிவாசன்.

அதிகரிக்கும் தமிழக அரசின் கடன் சுமை... நெருக்கடியில் சிக்குமா தி.மு.க அரசு?

இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினரான சி.வி.எம்.பி.எழிலரசன், “எந்த ஓர் அரசும் கடன் வாங்குவது தவறல்ல. கடன் வாங்காமல் எந்த அரசும் செயல்பட முடியாது என்பது பொருளாதாரத்தின் அரிச்சுவடி அறிந்த அனைவருக்கும் தெரியும். அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் தமிழக அரசு கடன் வாங்குகிறது. அ.தி.மு.க ஆட்சியைப் பொறுத்தவரை, கடன்களை வாங்கி தேவையற்ற திட்டங்களுக்கு வீணடித்தார்கள்.

உதாரணமாக, தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் புதிய மின் திட்டங்களை உருவாக்க நிதியைச் செலவிட்டிருக்க வேண்டும். அதைச் செய்யாமல், வாங்கிய கடனில் அதிகமாக விலை கொடுத்து வெளியிலிருந்து மின்சாரம் வாங்கினார்கள். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுக்கால தி.மு.க ஆட்சியில், மூலதனச் செலவினங்களுக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மூலதனச் செலவினங்களால் செயல்படுத்தப்படும் திட்டங்களால், சொத்துகள் உருவாகும். அவை, நீண்டகால அடிப்படையில் மக்களுக்குப் பயன்தரும். அதைத்தான், தி.மு.க அரசு செய்துவருகிறது. அதேநேரத்தில், கடனைக் குறைப்பதற்கான முயற்சிகளையும் தி.மு.க அரசு மேற்கொண்டுவருகிறது. வரக்கூடிய ஆண்டுகளில் அது தெரியவரும்” என்கிறார்எழிலரசன்.

அரசு வாங்கும் கடன்கள் ஆளும் கட்சியினரின் சட்டைப்பைக்குள் போகாமல் இருந்தால் சரி!

இராம.ஸ்ரீநிவாசன், சி.வி.எம்.பி.எழிலரசன்
இராம.ஸ்ரீநிவாசன், சி.வி.எம்.பி.எழிலரசன்

2021-ல் தி.மு.க அரசு பதவியேற்றவுடன், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், இந்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் ஜீன் டிரஸ், இந்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலாளர் எஸ்.நாராயணன் ஆகியோரைக்கொண்ட ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டது. ஆனால், கடந்த ஓராண்டுக்காலத்தில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தக் குழு ஆற்றிய பங்களிப்புகள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

இது குறித்துப் பேசிய இராம.ஸ்ரீநிவாசன், “பிரபல பொருளாதார நிபுணர்களைக் கொண்டு குழு அமைப்பதாக ஒரு பில்டப் கொடுத்தார்களே தவிர, அந்தக் குழுவால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பயனும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை” என்றார். இது பற்றி சி.வி.எம்.பி.எழிலரசனிடம் கேட்டபோது, “இந்தக் குழுவில் இருக்கும் அனைவரும், தமிழக அரசிடம் ஊதியம் எதுவும் பெறாமல், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான வழிகாட்டல்களையும் ஆலோசனை களையும் வழங்கிவருகிறார்கள். எந்தத் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், எத்தகைய திட்டங்களுக்கு செலவினங்களை அதிகரிக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகளை நிபுணர்கள் குழு வழங்குகிறது. முதல்வரே அந்தக் குழுவினருடன் நேரடியாகப் பேசவும் செய்கிறார்” என்றார்.