Published:Updated:

ஐ.நா சபை வரையறுத்த நிலையான வளர்ச்சி இலக்குகள்... கேரளா முதலிடம்! தமிழகம்? #SDGGoals

நிதி ஆயோக்
நிதி ஆயோக்

ஐ.நா சபையால் வரையறுக்கப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG), நிதி ஆயோக்கால் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. அதில், கேரளா முதலிடமும் பீஹார் கடைசி இடமும் பிடித்துள்ளன.

ஐ.நா சபையால் வரையறுக்கப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG), நிதி ஆயோக்கால் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. அதில், கேரளா முதலிடமும் பீஹார் கடைசி இடமும் பிடித்துள்ளன. தென் இந்திய மாநிலங்கள் மொத்தமும் பச்சை நிறத்தில் முதல் ஏழு இடங்களை ஆக்கிரமித்துள்ளன. வடக்கிலிருந்து இமாசலப்பிரதேசம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. வளர்ச்சியை அளவிட, அனைத்து நாடுகளுக்கும் ஐ.நா வரையறுத்த பொதுவான வரையறைகளுள் மொத்தம் 232 குறியீடுகள் உள்ளன. இதில் இந்தியாவுக்குப் பொருந்தும் 100 குறியீடுகளை மட்டும் எடுத்துக்கொண்டு கணக்கிடப்பட்ட பட்டியலில், தமிழகம் 4-வது இடம் பெற்றுள்ளது. 16 பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், வறுமையின்மையில் மட்டும் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.

வறுமை இல்லாத மாநிலங்களின் பட்டியல் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மக்கள்தொகை, வீடில்லாதவர்கள் எண்ணிக்கை, சுகாதாரம் மற்றும் தாய் சேய் நலன்களைக் கருத்தில்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகம் முதல் இடம் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை திரிபுரா மற்றும் ஆந்திர மாநிலங்கள் பெற்றுள்ளன. ஜார்க்கண்ட் மற்றும் பீஹார் கடைசி இடங்களைப் பெற்றுள்ளன. மொத்த இந்தியாவிலும் 21.92 சதவிகித மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

ஐ.நா சபையால் வரையறுக்கப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG)
ஐ.நா சபையால் வரையறுக்கப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG)

பசியைப் போக்குதலில் பெரிய அடி வாங்கியுள்ளது தமிழகம். இதில், தமிழ்நாட்டுக்கு 10-வது இடம் கிடைத்துள்ளது. 5,000 ரூபாய்க்குக் கீழ் மாத வருமானம் உள்ள குடும்பங்கள், 4 வயதிற்குக் கீழுள்ள எடை குறைந்த குழந்தைகள், உடல்நலக் குறைபாடுள்ள கர்ப்பிணிப் பெண்கள் சதவிகிதங்களைக் கொண்டு, மொத்த உணவு உற்பத்தியையும் கணக்கிட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது அதில், கோவா, மிசோரம், கேரளா முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன. ஜார்க்கண்ட் டாமன் & டையூ கடைசி இடங்களைப் பெற்றுள்ளன. 50.3% கர்ப்பிணிப் பெண்கள் இந்தியாவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடல்நலம் மற்றும் நல்வாழ்வு எனும் பிரிவில் தமிழகம் நான்காவது இடம்பிடித்துள்ளது. கேரளா, ஆந்திரா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன. கர்ப்ப கால உடல்நலம் மற்றும் இறப்புகள், 50 வயதுக்குள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை, ஹெச்.ஐ.வி பாதிப்பு போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தப் பட்டியலில் நாகாலாந்து, உத்தரப்பிரதேசம் கடைசி இடங்களைப் பெற்றுள்ளன. இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளிலும் 50 குழந்தைகள் ஐந்து வயதிற்குள் இறந்துவிடுவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Representational Image
Representational Image

தரமான கல்வியை வழங்கும் மாநிலங்களில் இமாச்சலப் பிரதேசம் முதலிடத்தையும் கேரளா, கோவா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளன. ஆறிலிருந்து 13 வயதுக்குள் படிப்பை நிறுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை, ஒன்பதாம் வகுப்புக்கு மேல் படிப்பை நிறுத்தும் மாணவர்கள், மாணவர் தேர்ச்சி விகிதங்கள் ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தப் பட்டியலில், தமிழகம் ஐந்தாவது இடம் பிடித்துள்ளது. வழக்கம்போல், இதிலும் பீஹார் கடைசி இடம் பெற்றுள்ளது. இந்தியாவில், 19.89 சதவிகித மாணவர்கள் உயர்நிலை பள்ளிப் படிப்பிலிருந்து வெளியேறுகின்றனர்.

பாலின சமத்துவத்தில் மொத்த இந்தியாவுமே பின்தங்கியுள்ளது. அதிலும், தமிழகம் பதிமூன்றாவது இடம் பெற்று, இந்தியாவின் சராசரியைவிட பின்னடைவைச் சந்தித்துள்ளது. பிறப்பில் பாலின விகிதம், பெண்களுக்கெதிரான குற்ற விகிதம், பொதுத் தேர்தலில் பெண்கள் வெற்றி விகிதம், பாலின விகிதத்தில் நிலவுடைமை ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளும் இந்தப் பிரிவில் தெலங்கானாவும், டெல்லியும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. இந்தியாவில், மூன்று பெண்களில் ஒருவர் தன் கணவரால் வன்முறைக்கு ஆளாகிறார்.

பெண்கள் மீதான வன்முறை
பெண்கள் மீதான வன்முறை

சுத்தமான நீர் மற்றும் சுகாதாரத்தில், டெல்லியைத் தவிர்த்து இந்தியா மொத்தமும் தேர்ச்சிபெற்றுள்ளது. அதிலும், சண்டிகர் 100 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளது. நகரத்தில் கழிப்பறை உள்ள வீடுகள், பெண்களுக்கான கழிப்பறை வசதிகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தப் பட்டியலில், தமிழகம் 7-வது இடத்தில் உள்ளது. 90.7 சதவிகிதம் இந்தியாவில் திறந்தவெளி மலம் கழிப்பிலிருந்து விடுபட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போதுமான மின்வசதியுள்ள மாநிலங்கள் பட்டியலில், ஓரளவுக்கு எல்லா மாநிலங்களுமே நல்ல செயல்பாட்டைக் கொடுத்துள்ளன. சிக்கிம், கோவா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. மின்வசதி பெற்றுள்ள வீடுகள் சதவிகிதம், சுத்தமான சமையல் எரிவாயு பயன்படுத்துகின்ற வீடுகளின் விகிதங்கள் ஆகியவை இதற்காக கணக்கிடப்படும். இந்தப் பட்டியலில், தமிழகம் நான்காவது இடம் பெற்றுள்ளது. 99.99 சதவிகித வீடுகள் இந்தியாவில் மின் வசதி பெற்றுவிட்டன.

கௌரவமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் ஆறாவது இடம் பெற்றுள்ளது. உள்நாட்டு தயாரிப்பின் வருடாந்திர வளர்ச்சி விகிதம், வேலையின்மை விகிதம், வேலையில் ஈடுபடும் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆகியவை கொண்ட இந்தப் பட்டியலில், தெலங்கானா முதலிடத்தையும் ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளன. மணிப்பூர், நாகாலாந்து இதில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளன. இந்தியாவின் நிகர உள்நாட்டுத் தயாரிப்பு (NDP ) வளர்ச்சி விகிதம் 5.66 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

தொழிற்சாலை
தொழிற்சாலை

தொழிற்சாலை முன்னெடுப்புகள் மற்றும் கட்டமைப்புகளில் குஜராத், கேரளா ஆகிய மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன. தமிழகம் 14-வது இடத்தைப் பெற்றுள்ளது. நூற்றுக்கு எத்தனை பேர் கைபேசியைத் தொடர்புக்குப் பயன்படுத்துகிறார்கள், நூற்றில் எத்தனை பேர் கணினியில் இணைய சேவை பயன்படுத்துகிறார்கள் என்பதையெல்லாம் கணக்கில்கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தப் பட்டியலில், தீவுகள் அல்லாமல் மிசோரம் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது. யூனியன் பிரதேசங்களான டெல்லி, டையூ-டாமன், தாத்ரா நகர் ஹவேலி ஆகிய மாநிலங்கள் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.

ஏற்றத்தாழ்வுகளைக் களைதலில் தமிழகம் 16-வது இடம் பெற்றிருந்தாலும், இந்தியாவின் சராசரியைவிட ஒரு புள்ளி கூடுதலாகப் பெற்றுள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையைப் பயன்படுத்திய விகிதம், மலைவாழ் மக்களுக்கான நலத்திட்ட செயல்பாடுகள், திருநங்கைகள் பணியில் ஈடுபடும் விகிதம் ஆகியவை இதற்காக கணக்கில் கொள்ளப்படும். இந்தப் பட்டியலில், தெலங்கானா மாநிலமும் அந்தமான், புதுச்சேரி யூனியன் பிரதேசங்களும் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளன. கோவா மற்றும் அருணாசல பிரதேச மாநிலங்கள் இந்தப் பட்டியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன.

Representational Image
Representational Image

`நிலையான நகரங்களும் சமூகமும்' என்ற பிரிவில், பிரதம மந்திரி வீடு கட்டித் தரும் திட்டத்தின் கீழ் இதுவரை கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை, நகரங்களில் குடிசையில் வாழும் மக்களின் எண்ணிக்கை, கழிவுகள் மற்றும் குப்பை அகற்றும் மேலாண்மை ஆகியவை கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், தமிழகம் 13-வது இடத்தில் உள்ளது. கோவா, இமாசலப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களும் முதலிடத்தில் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து இந்தப் பட்டியலில் பின்தங்கியுள்ளன. இந்தியாவில், 90.99 சதவிகித வீடுகளுக்கு வாசலில் குப்பைகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி வந்துவிட்டது என்கிறது அறிக்கை.

`நிலையான உபயோகித்தலும் அதன் தயாரிப்புகளும்' என்ற பிரிவில், நாகாலாந்து 100 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. மற்ற வடகிழக்கு மாநிலங்களான திரிபுராவும் மணிப்பூரும், அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. கிடைக்கும் தண்ணீரை அளவாகப் பயன்படுத்துதல், திடக்கழிவுகளை அகற்றுதல் போன்றவை அடங்கிய பிரிவில் தமிழகம் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான், டெல்லி இந்தப் பட்டியலில் கடைசியில் உள்ளன. இந்தியாவின் நகர நிலத்தடி நீரில் 63.33 சதவிகிதத்தை நாம் இதுவரை பயன்படுத்தி யிருக்கிறோம்.

காலநிலை நடவடிக்கையில் தமிழகம் பெரிதாகக் கவனம் செலுத்தாததால், மிகவும் பின்தங்கி 17-வது இடத்தில் உள்ளது. லட்சத்தீவுகளைச் சுற்றி கடல் இருப்பதால், நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, இத்துறையில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளது. கர்நாடகா, ஆந்திரா, ஒடிசாவும் இந்தத் துறையில் அதிக கவனம்செலுத்தி முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன. மற்றொரு தீவான அந்தமானும் இந்தத் துறையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இயற்கைப் பேரிடரின் மூலமான உயிரிழப்புகள், LED பயன்பாடுகள் மூலம் சேமிக்கப்படும் கார்பன் டை ஆக்சைடு, சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சார அளவீடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரிவில் ஜார்க்கண்டும் சத்தீஸ்கரும் மிகவும் பின்தங்கி, கடைசி நிலையில் உள்ளன. இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் 35.22 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முறைகளிலிருந்து கிடைக்கிறதாம். புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களில் 24.3 சதவிகிதம் சூரிய ஒளியிலிருந்து தயாரிக்கப்படுகிறதாம்.

Representational Image
Representational Image

கடலோர மாநிலங்களின் கடல்வளப் பயன்பாட்டில், மொத்தம் ஒன்பது மாநிலங்களில் நான்காவது இடம் பிடித்துள்ளது தமிழகம். இதை சிறப்பாகக் கையாண்டதாக ஆந்திரப்பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது. கடல் நீரின் தரம், சதுப்புநிலக் காடுகளின் பாதுகாப்பு ஆகியற்றைக் கொண்டு கணக்கிடப்படும் இந்தப் பட்டியலில், குஜராத் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. சதுப்புநிலக் காடுகளின் பரப்பளவு 3.82 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் என்.ஆர்.சி அமல்படுத்தப்பட்டால் குடியுரிமை எப்படி வழங்கப்படும்? #Walkthrough

நிலம் மற்றும் அதில் வாழும் உயிர்கள் பாதுகாப்பில், ஹரியானாவைத் தவிர மற்ற மாநிலங்கள் அனைத்தும் ஓரளவுக்கு நல்ல முறையில் செயல்பட்டுள்ளன. காடுகளின் பரப்பளவு, வனவிலங்குகள் மீதான தாக்குதல், வழக்குகளின் எண்ணிக்கை ஆகியவை இதில் கணக்கில் கொள்ளப்படும். இதில் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூரும் சிக்கிமும் சிறந்து விளங்கி, முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. யூனியன் பிரதேசங்களான தாத்ரா நகர் ஹவேலியும் லட்சத்தீவுகளும் குறைந்த பரப்பளவு என்பதால், முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. அதேபோல் பரப்பளவில் குறைவான பாண்டிச்சேரி, கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் 21.54 சதவிகிதம் காடுகளால் சூழப்பட்டிருக்கிறதென்று அறிக்கைகள் கூறுகின்றன.

அமைதி, நீதி மற்றும் திடமான உள்கட்டமைப்புகளில், தமிழகம் எட்டாவது இடம் பெற்றுள்ளது. நீதிமன்றங்களின் எண்ணிக்கை, பதியப்பட்ட பிறப்புகள் விகிதம், ஆதாரில் பதிந்தவர்கள் விகிதம் ஆகிவை உள்ளடங்கிய இந்தத் துறையில், ஆந்திராவும் குஜராத்தும் முதலிடம் பிடித்துள்ளன. ஓரளவுக்கு எல்லா மாநிலங்களும் சிறந்த பங்களிப்பைத் தந்திருக்கும் இந்தப் பட்டியலில், அஸ்ஸாம் மட்டும் கொஞ்சம் பின்தங்கியுள்ளது. இந்தியாவில் 86 சதவிகித பிறப்பு மட்டுமே பதியப்பட்டுள்ளது.

மோடி
மோடி
கீழடி பொக்கிஷம் முதல் CAA போராட்டங்கள் வரை... `2019 தமிழகம்' படங்களில்! #VikatanPhotoStory

இந்தியாவில், தமிழ்நாடு 4-வது இடம் பெற்றிருப்பது, தற்போதைய வளர்ச்சிக்கும் கடந்த கால செயல்பாட்டுக்கும் கிடைத்த அங்கீகாரம் என்றாலும், நிதி ஆயோக்கால் இந்தியாவின் மாநிலங்களுக்கு வெளியிடப்பட்ட அறிக்கைபோல, அனைத்து நாடுகளுக்கும் ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் 61.1 மதிப்பெண் பெற்ற இந்தியாவுக்கு 115-வது இடமே கிடைத்துள்ளது. இதை ஒப்பிடுகையில், சமூக அளவில் நம் செயல்பாடுகளும் சமத்துவத்தை நோக்கிய பயணமும், இன்னும் உறுதியடைய வேண்டும் என்றே தோன்றுகிறது. ஐ.நா சபை வெளியிட்ட இந்தப் பட்டியலில், முதல் இடத்தில் டென்மார்க்கும் இரண்டாம் இடத்தில் ஸ்வீடனும், மூன்றாவது இடத்தில் பின்லாந்தும் பிடித்துள்ளன.

- ஜான் ஜே ஆகாஷ்

அடுத்த கட்டுரைக்கு