Published:Updated:

`வந்தே பாரத்’ திட்டம் மூலம் அழைத்துவரப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்: என்னென்ன முன்னெச்சரிக்கைகள்?

விமானத்தில் இந்தியர்கள்
விமானத்தில் இந்தியர்கள்

சுற்றுலாப் பயணிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உட்பட உலகம் முழுவதும் தவித்துக்கொண்டிருக்கும் இந்தியர்களை சொந்த நாட்டுக்கு அழைத்துவரும் பணி, நேற்று (மே 7) முதல் தொடங்கியது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், பல லட்சம் இந்தியர்கள் இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகப் பல்வேறு நாடுகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கிறார்கள். பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்த இந்தியர்களால், திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், சொந்த நாட்டுக்கு திரும்பிவர முடியாமல் அவர்கள் தவித்துவருகிறார்கள். அதேபோல அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் படித்துவரும் இந்திய மாணவர்களாலும் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியவில்லை. சுமார் மூன்று மாதங்களாக சிக்கித்தவிக்கும் அவர்களை இந்தியாவுக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கு, ‘வந்தே பாரத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்

முதற்கட்டமாக, விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலமாக மே 6-ம் தேதி தொடங்கி மே 13-ம் தேதிவரை இந்தியர்களை அழைத்துவரும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தப் பணியில் 64 விமானங்களும், 14 கடற்படை கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விமானங்களில் அழைத்துவரப்படும் இந்தியர்கள், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் வந்திறங்குவார்கள்.

சுதந்திர இந்தியாவில் இவ்வளவு எண்ணிக்கையிலான இந்தியர்கள் உலகம் முழுவதிலுமிருந்து ஒரே காலகட்டத்தில் வந்திறங்குவது இதுதான் முதல்முறை. இந்த இமாலயப் பணியை மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து மேற்கொள்வதாக, மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சரான ஹர்தீப் பூரி கூறுகிறார்.

ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்

“வெளிநாடுகளிலிருந்து அழைத்துவரப்படும் மக்களுக்குத் தேவையான வசதிகளையும் ஏற்பாடுகளையும் செய்வதாக மாநில அரசுகள் உறுதியளித்த பிறகுதான், இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. மத்திய அரசு, மாநில அரசு, சுகாதாரத்துறை ஆகியோரின் ஒத்துழைப்புடன்தான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில மாநிலங்களுக்கு கொஞ்சம் காலஅவகாசம் தேவைப்படுவதால், இப்போது அவர்கள் இந்தப் பணிக்குத் தயாராக இல்லை. தயாராக இருக்கும் மாநிலங்களைச் சேர்ந்த மக்களைத்தான் முதற்கட்டமாக அழைத்துவருகிறோம்” என்று ஹர்தீப் பூரி கூறியிருக்கிறார்.

மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில், இந்தியத் தொழிலாளர்கள் இரண்டு மூன்று மாதங்களுக்கு மேலாக வேலையில்லாமல் இருக்கிறார்கள். கையில் இருக்கும் பணம் காலியாகி சிரமப்படுபவர்களும் இருக்கிறார்கள். வளைகுடா போர் நிகழ்ந்த சமயத்தில், வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியர்கள் அழைத்துவரப்பட்டார்கள். அப்போது, அவர்களை அழைத்துவருவதற்கான செலவுகளை அரசே ஏற்றுக்கொண்டது.

இந்திய விமானங்கள்
இந்திய விமானங்கள்

ஆனால் இப்போது, ஒவ்வொருவரிடமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை ஒரு மாநிலத்திருந்து இன்னொரு மாநிலத்துக்கு கட்டணமின்றி ரயிலில் அழைத்துச்செல்ல மனமில்லாத ஆட்சியாளர்கள், வெளிநாடுகளில் தவிக்கும் தங்கள் நாட்டின் குடிமக்களை இலவசமாக விமானத்தில் அழைத்துவருவார்களா என்ன? இப்போது ரூ.50,000 முதல் ரூ.1,00,000 வரை இவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

என்னென்ன முன்னெச்சரிக்கைகள்?

கொரோனா ஓர் ஆபத்தான வைரஸ் என்பதால், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்தியா திரும்புவோருக்கு, விமானம் அல்லது கப்பலில் ஏறுவதற்கு முன்பாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அவர்கள் அனைவரும் கட்டாயமாக ஆரோக்கிய சேது செயலியைத் தங்கள் செல்போனில் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பைலட்கள் உள்ளிட்ட விமானப் பணியாளர்களும், கேப்டன்கள் உள்ளிட்ட கப்பல் பணியாளர்களுக்கும் முழுமையாக மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

இந்திய கப்பல்
இந்திய கப்பல்

வெளிநாடுகளிலிருந்து அழைத்துவரப்படுவோர், இந்தியா வந்திறங்கிய பிறகும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதைவிட முக்கியமாக, அவர்கள் அனைவரும் 14 நாள்களுக்கு தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியது கட்டாயம். ஹோட்டல்களிலோ, சுகாதாரமிக்க வேறு இடங்களிலோ அவர்கள் தங்கள் சொந்தச் செலவில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்தியாவிலேயே கேரளாவுக்குத்தான் அதிகமானோர் வரவிருக்கிறார்கள். அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான முழு ஏற்பாடுகளையும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு மேற்கொண்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுமார் இரண்டரை லட்சம் படுக்கைகள் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

இந்திய கப்பல்
இந்திய கப்பல்

பஹ்ரைன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், அமெரிக்க, ஐரோப்பா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் சுமார் 90,000 பேர் இந்தியாவுக்கு வரமுடியாமல் தவிப்பதாக செய்திகள் வந்துள்ளன. இவர்களில், முதற்கட்டமாக சுமார் 15,000 பேர் அழைத்துவரப்படுகிறார்கள். மற்றவர்கள், அடுத்தடுத்த கட்டங்களில் அழைத்துவரப்படுவார்கள் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு