Published:Updated:

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிரிப்டோகரன்சி மசோதா; நடப்பு கூட்டத் தொடரில் ஏன் தாக்கல் செய்யப்படவில்லை?

கிரிப்டோகரன்சி
News
கிரிப்டோகரன்சி

தனியார் கிரிப்டோகரன்சிகளைத் தடைசெய்து, அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் வகையில் சட்ட மசோதா ஒன்று நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவிருப்பதாக சொல்லப்பட்டது.

கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, இளைஞர்கள் இதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், முதலீடுகள் ஆகியவற்றுக்கு இந்தியாவில் அரசின் அங்கீகாரம் கிடையாது. அரசின் எந்தவொரு கண்காணிப்பு அமைப்பாலும் இது கண்காணிக்கப்படவில்லை. ஆனால், பல மடங்கு லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பலர் இதில் முதலீடு செய்கிறார்கள். உலகில் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி சந்தைகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.

கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சி

இந்த நிலையில், கிரிப்டோகரன்சி பற்றிய சர்ச்சைகளும், விவாதங்களும் தற்போது அதிகரித்திருக்கின்றன. அதே நேரத்தில், கிரிப்டோகரன்சி சம்பந்தப்பட்ட முறைகேடுகள் பற்றிய செய்திகளும் வருகின்றன. இத்தகைய சூழலில், இந்தியாவில் கிரிப்டோகரன்சி அரசால் அனுமதிக்கப்படுமா, தடைசெய்யப்படுமா, ஒழுங்குபடுத்தப்படுமா என்று கேள்விகள் எழ ஆரம்பித்தன. இப்படியான சூழலில், கிரிப்டோகரன்சிகளை ‘டிஜிட்டல் சொத்து’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தற்போது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இந்த கூட்டத்தொடர் தொடங்கவிருந்த நிலையில், கிரிப்டோகரன்சி தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படவிருப்பதாக செய்திகள் அடிபட்டன. ‘கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை மசோதா, 2021’ என்ற பெயரில் அந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று சொல்லப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் செயல்முறையை வடிவமைப்பது, தனியார் கிரிப்டோகரன்சிகள் அனைத்தையும் தடைசெய்வது ஆகியவை அந்த மசோதாவின் நோக்கம் என்று சொல்லப்பட்டது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

கிரிப்டோகரன்சி மசோதா இறுதிசெய்யப்பட்டு அமைச்சரவையின் பரிசீலனையில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் டிசம்பர்13-ம் தேதி நிதியமைச்சகம் தெரிவித்தது. மேலும், கிரிப்டோகரன்சி மோசடிகள் பற்றிய விசாரணை நடைபெற்றுவருவதாகவும் நிதியமைச்சகம் கூறியது. கிரிப்டோகரன்சி மசோதா பற்றிய செய்திகள் வெளியானவுடன், பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சி சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த மசோதா, தற்போது தாக்கல் செய்யப்படாது என்று செய்திகள் வந்துள்ளன. இது குறித்து கிரிப்டோகரன்சி முதலீட்டு ஆலோசகர்கள் சிலரிடம் பேசினோம். “ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், கிரிப்டோகரன்சியை அரசு தடைசெய்யப்போவதில்லை. இதை முறைப்படுத்தப்போகிறார்கள். அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. எந்த அமைப்பின் மூலமாக இதை முறைப்படுத்தப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி மசோதாவை இறுதிப்படுத்துவதற்கு முன்பாக பல சந்தேகங்களையும் சிக்கல்களையும் ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்று தெளிவடைய வேண்டியிருக்கிறது. ஆகவே, கிரிப்டோகரன்சி சந்தை நிபுணர்கள், தொழில் துறையினர், கல்வியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை முன்னாள் மத்திய நிதி இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு கேட்டறிந்தது.

யாருக்கு அனுமதி கொடுக்கலாம், யாருக்கு அனுமதி கொடுக்கக்கூடாது, அனுமதிக்கான அளவுகோள், பரிவர்த்தனை எப்படி இருக்க வேண்டும், கண்காணிப்பு எப்படி இருக்க வேண்டும், வரிவிதிப்பு எப்படி இருக்க வேண்டும் எனப் பல கேள்விகளுக்கு விடை தேட வேண்டியிருக்கிறது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இந்தப் பணி முழுமையடையாத காரணத்தால்தான், நடப்பு கூட்டத்தொடரில் மசோதாவைத் தாக்கல் செய்ய முடியவில்லை என்று கேள்விப்படுகிறோம். அடுத்த கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு வாய்ப்பு அதிகம்” என்றனர்.

இந்த மசோதாவை நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்வதில் வேறு எதுவும் சிக்கல் இருக்கிறதா என்று பா.ஜ.க-வின் செய்தித்தொடர்பானர் நாராயணன் திருப்பதியிடம் நாம் கேட்டபோது, “கிரிப்டோகரன்சியை முறைப்படுத்துவதற்கான மசோதா நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று யாரும் சொல்லவில்லை. எனவே, மசோதா தாமதமாகிறது என்று கருதத் தேவையில்லை. மசோதா இறுதிசெய்யப்பட்டவுடன் நிச்சயம் தாக்கல் செய்யப்படும்” என்றார்.

இந்த நிலையில், கிரிப்டோகரன்சி மசோதாவில் சில மாற்றங்கள் செய்யவேண்டியிருப்பதால் நடப்பு கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படாது என தகவல் வெளியாகியிருக்கிறது.