Published:Updated:

ட்ரம்ப் விசிட்டால் இந்தியாவுக்கு என்ன ஆதாயம்? - ஓர் அலசல்

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

டொனால்டு ட்ரம்ப்பைப் பொறுத்தவரை, இந்தியப் பயணம் முற்றிலும் அரசியல்ரீதியான, ஜாலியான ஒரு விசிட்டாகவே அமையும்.

தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. `இவரெல்லாம் எங்கே அமெரிக்க ஜனாதிபதியாகப் போகிறார்' என்கிற ஏளனப் பார்வை ட்ரம்ப்பின் மீது இருந்தது. ஏனென்றால், ட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்டவர் ஹிலரி கிளிண்டன். ஹிலரியே வெற்றிபெறுவார் என்று எதிர்பார்த்தால், ட்ரம்ப் `திடீர் 'அதிபர் ஆனார். ட்ரம்ப் ஜனாதிபதியானதும், உலக நாடுகள் மத்தியில் அமெரிக்காவின் செல்வாக்கு குறைந்துவிட்டதாகவும் கருத்து பரப்பப்பட்டது. ஆனாலும், அமெரிக்க ஜனாதிபதியாகி 3 ஆண்டுகளை ட்ரம்ப் ஓட்டிவிட்டார். ஈரான் நாட்டிடம் வம்பிழுத்து, அந்த நாட்டு ராணுவத் தளபதியை தீர்த்துக்கட்டினார். அல்பாக்தாதியைக் கொல்ல உதவிய நாய்க்கு விருந்துவைத்து வெற்றியைக் கொண்டாடினார். அதிகார உரிமைமீறல் பிரச்னையை எதிர்கொண்ட மூன்றாவது அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

கடல் சார் வர்த்தகம்
கடல் சார் வர்த்தகம்

அமெரிக்க செனட் சபையில், ட்ரம்ப் மீதான உரிமை மீறல் தீர்மானம் தோல்வியடைந்த அடுத்த நாளே, அவரின் இந்திய சுற்றுப்பயணமும் அறிவிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதிகளில் கணிக்க முடியாத ஒரு நபராக இந்த ட்ரம்ப்பை சொல்லலாம். எப்போது என்ன செய்வார்... என்ன பேசுவார் என எதையும் கணித்துவிட முடியாது. `இந்தியாவில் இருக்கும் நாளில் கூட பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்தையும் வெளியிடக் கூடியவர், ட்ரம்ப்' என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். `இந்தியா எங்களை நன்றாக நடத்தவில்லை... அதிகமாக இறக்குமதி வரி விதிக்கிறது' என்றும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சுமத்துகிறார். கடந்த 1970-ம் ஆண்டு முதல், `அமெரிக்காவின் வர்த்தகத்துக்கு உகந்த நாடு' என்ற அந்தஸ்து இந்தியாவுக்கு இருந்தது. உலகிலேயே வாங்கும் திறன் அதிகம்கொண்ட இந்தியாவின் இந்தச் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்ய எந்த அமெரிக்க ஜனாதிபதிக்கும் துணிவு இருந்தது இல்லை. ஆனால், ட்ரம்ப் இந்த சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்தார். அது முதலே இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் வர்த்தகத்தில் பிரச்னைகள் ஏற்படத் தொடங்கின. இப்படியெல்லாம் தொல்லை தந்துகொண்டே, `இந்தியப் பிரதமர் மோடியை தனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என்னுடைய சிறந்த நண்பர்' என்றும் ட்ரம்ப் கூறிக் கொள்வார்.

யாராலும் கணிக்க முடியாத மனிதரான ட்ரம்ப், முதன்முறையாக இந்தியாவுக்கு நாளை வருகிறார். வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் வாக்குகளைக் குறிவைத்தே இந்தியா வருகிறார். இந்தியாவில் தனக்கு அளிக்கப்படும் பிரமாண்ட வரவேற்பு, உலக நாடுகள் மத்தியில் தன் செல்வாக்கை அதிகரிக்க உதவும் என்றும் ட்ரம்ப் கணக்கு போட்டு வைத்துள்ளார். ட்ரம்ப் வருகையின்போது பாதுகாப்புத்துறை, எரிசக்தி துறையில் மட்டும்தான் இரு தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிகிறது.

ராபர்ட் லைட்திசர்
ராபர்ட் லைட்திசர்
மதுவைத் தொட்டதில்லை... ஒரே நாளில் 12 டயட் கோக்... ட்ரம்ப்பின் சுவாரஸ்ய உணவுப் பழக்கம்!

வர்த்தக ஒப்பந்தம் கிஞ்சித்தும் ஏற்படப்போவதில்லை. ஏனென்றால், அமெரிக்காவின் வர்த்தகத்துறை பிரநிதியான ராபர்ட் லைட்திசர், இந்தியா வரும் ட்ரம்ப் குழுவில் இடம் பெறவில்லை. அதிபரின் தனி ஆலோசகரும் ட்ரம்ப்பின் மருமகனுமான ஜேர்ட் குஷ்னர், அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன், நிதித்துறை செயலர் ஸ்டீவ் நுச்சின், வணிகத்துறை செயலர் வில்பர் ராஸ், எரிசக்திதுறை செயலர் டான் புரியோலிட் ஆகியோர்தான் ட்ரம்ப் குழுவில் இடம் பெற்றுள்ளனர். ராபர்ட் லைட்திசர் குழுவில் இல்லையென்றால், வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை என்றே அர்த்தம்.

அமெரிக்காவுக்கான வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் ராபர்ட் லைட்திசர், 30 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.

டொனால்டு ட்ரம்ப்பைப் பொறுத்தவரை, இந்தியப் பயணம் முற்றிலும் அரசியல்ரீதியான, ஜாலியான ஒரு விசிட்டாகவே அமையும். அமெரிக்காவிடமிருந்து 2.6 பில்லியன் டாலர்கள் மதிப்பில் இந்திய கடற்படைக்குத் தேவையான நவீன ரக ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ள, பாதுகாப்புத்துறை நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுதவிர, எரிசக்தித் துறையில் சில ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. ரோடு ஷோ, நமஸ்தே ட்ரம்ப் போன்ற கண்கவர் நிகழ்ச்சிகளில்தான் பிரதமர் மோடியும் ட்ரம்ப்பும் கவனம் செலுத்துகின்றனர்.

அகமதாபாத்தில் கட்டப்பட்ட சுவர்
அகமதாபாத்தில் கட்டப்பட்ட சுவர்

இரு நாட்டுக்கும் உள்ள உண்மையான விவகாரங்களில் அக்கறை காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ட்ரம்ப்பை இந்தியாவுக்கு அழைத்து ஏதோ கண்கட்டி வித்தையில் பிரதமர் மோடி ஈடுபடுவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது . ட்ரம்ப்பை வரவேற்க 70 லட்சம் பேர் கூடுவார்கள் என்று மோடி ட்விட் செய்ய, இதை நம்பிய ட்ரம்ப், ``என்னை வரவேற்க 70 லட்சம் பேர் வரப்போகிறார்கள்'' என்று மூச்சுக்கு ஒருமுறை கூறி வருகிறார். ஆனால், இப்போது ஒரு லட்சம் பேர்தான் ட்ரம்ப்பை வரவேற்கக் கூடுவார்கள் என்று அகமதாபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு